தமிழ்த்தேசிய வீட்டுக்கு வெள்ளை அடிப்பதல்ல மாற்றுவழி… புல்டோசர் கொண்டு  தகர்ப்பதே மாற்றுவழி..! (மௌன உடைவுகள் 05) 

தமிழ்த்தேசிய வீட்டுக்கு வெள்ளை அடிப்பதல்ல மாற்றுவழி… புல்டோசர் கொண்டு  தகர்ப்பதே மாற்றுவழி..! (மௌன உடைவுகள் 05) 

       — அழகு குணசீலன் — 

அண்மையில் அரங்கம் வாசகர் வட்டத்தில் ஒரு பதிவைப் படித்த போது “இலவுகாத்த கிளி”  கதைதான் நினைவுக்கு வந்தது. இது ஜெனிவா ஏமாற்றம் குறித்த ஒரு பதிவு – நம்பி ஏமாந்த கிளியின் கதையைப் போன்றது. அந்தப் பத்தியை எழுதியிருப்பவர் பத்தோடு பதினோன்றாக விரலை மடித்து எண்ணக்கூடிய ஊடகவியலாளர் அல்ல. மாறாக ஊடகவியலாளராக நீண்டகால அனுபவங்களைக் கொண்ட, தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய அரசியல் பேசிவரும் நிலாந்தன்தான் அவர்.  

நிலாந்தனா? தமிழ்த்தேசிய கொழும்பு அரசியலில் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று கேட்கத்தோன்றுகிறது. அப்படியானால் சாதாரண தமிழ் மக்களை ஏமாற்றுவதில் – நம்பவைப்பதில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது. பாராளுமன்ற அரசியலை நிராகரித்த அன்றைய அரசியலின் ஊடகவியலாளர் இவர் என்பது இன்னும் மோசமானது. 

அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களில் மௌன உடைவுகள் முரண்படுகிறது. இதன் வெளிப்பாடே இந்தப்பதிவு.  

“கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோ அக்டிவ் – proactive ஆக அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை. அது ரியாக்டிவ் -reactive ஆகத்தான் அதாவது பதில்வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது”. 

“ஜெனிவாத்தீர்மானம் 2022 தமிழ் அரசியலின் இயலாமை?”  

என்று இன்றும் கேள்விக்குறி போடும் நிலையில்தான் அவர் உள்ளாரே அன்றி அது தோல்விதான் என்று அடித்துச் சொல்ல தயங்குகிறார். தமிழ்த்தேசிய அரசியல் ஜெனிவாவில் சந்தித்ததெல்லாம் தோல்வியே அன்றி வேறில்லை என்பதை “அரங்கம்” பதிவுகள் பலவும் அடுத்தடுத்து அடித்துச் சொல்லிச் சொல்லி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. 

“அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர்தரப்புக்கு எதிர் வினையாற்றும் தற்காப்பு அரசியலாகத்தான் மாறியிருக்கிறது. மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும், வெளி அரசியல் எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்புக்கும் இல்லை கூட்டமைப்பின் எதிரணிகளுக்கும் இல்லை” என்ற மகுடத்துடன் தொடர்கிறது நிலாந்தனின் பதிவு. 

அவரின் எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் நந்திக்கடலில் தொலைத்ததை ஆரிய குளத்தில் தேடுவது தான் வேடிக்கை. 

யாழ்.மேட்டுக்குடி தமிழ்த்தேசிய அரசியலில் அவர் புரோஅக்ரிவ்வைத் தேடுகிறார், தேச நிர்மாணிப்பை தேடுகிறார், நிறுவனங்களின் உருவாக்கத்தை தேடுகிறார். அரசியலில் நாம் ஒன்றை எதிர்பார்க்கும்போது யாரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், எங்கு தேடுகிறோம் என்ற ஆகக் குறைந்த பட்ச விபஸ்தையாவது இருக்கவேண்டும். 

தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் எப்போது புரோஅக்ரிவ்வாக இருந்தது, எப்போது நிறுவனங்களை கட்டியமைத்தது, திரட்சியைக் கொண்டதாக இருந்தது என்று நிலாந்தன் சொல்வாரா?   

தமிழ்க் காங்கிரஸ், தமிழ் அரசு என்பனவற்றின் தோற்றங்கள் மட்டுமன்றி அதன் பின்னரான தொடர் கட்சி பெயர்மாற்ற அரசியலும், உடைந்து சிதறும் தமிழ்தேசிய ஐக்கியமும் வெறும் reactive அரசியலே. இது மேட்டுக்குடி தமிழர் அரசியல் வரலாறு. 

யாழ்.மேட்டுக்குடி தலைமைகளின் அரசியல் கட்சிகளின் உருவாக்கமும், அரசியல் பிரவேசமும் முழுக்க முழுக்க reactive அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டவை. அதுவே அவற்றின் அரசியல். இதனை அடித்தளத்தை தகர்த்து புதிய நிர்மாணத்தை செய்யாமல், பூசி மெழுகி திருத்தங்களைச் செய்வதன் மூலம் எப்படிச்சாதிப்பது.?. நிலாந்தனை எந்த மேட்டுக்குடி அரசியல் இலவுகாத்த கிளியாக்கியதோ அதே அரசியலில் அவர் நிவாரணத்தையும் தேடுவது முரண்பாடானது. அதுவும் சம்பந்தர், மாவை, சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் தலைமைகளின் கீழ் இத்தனை ஆண்டுகாலம் பெற்ற அனுபவங்களையும் தட்டிக்கழித்து எதிர்பார்ப்பது இன்னும் வேடிக்கையானது. 

தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலில் proreactive ஒரு மறுவாக -அடையாளமாக சிறப்போடு ஒட்டியிருக்கிறது. ஜேர்மன் மொழியில் பிறப்பால் ஏற்படும் மறு “MUTTERMAL” என்ற அழகான வார்த்தைக்குரியது. இதன் அர்த்தம் தாயின் கருவறையில் இருந்தே ஏற்பட்ட ஒரு பிறப்படையாளம். யாழ். மேட்டுக்குடி அரசியலின் பிறப்பில் இருந்து proreactive மறு ஒட்டியுள்ளது. இது மிக நீண்ட கால வரலாற்றைக்கொண்டது இந்த வரலாற்றைப் புலிகளும் ஒருவகையில் பாதுகாத்துள்ளனர். 

ஆக, தமிழ்த்தேசிய “வீடு” புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட வேண்டும். அதுவே மாற்று அரசியலுக்கான கட்டமைப்பை புதிய அத்திவாரத்தில் அமைப்பதற்கான வழியாகும். இதைத் தவிர்த்து இருக்கின்ற இத்துப்போன வீட்டுக்கு பூசி, மெழுகி, வெள்ளையடிப்பதால் நிலாந்தன் தான் கூறுகின்ற “இலட்சிய இலக்கை” எப்படி அடையப்போகிறார். கோப்பிசத்தோடு வீடு மக்கள் மீது வீழ்வதற்கு முன், மக்களைக் காப்பாற்ற உள்ள ஒரேவழி புல்டோசர் கொண்டு வீட்டை அடித்தளத்தோடு தகர்ப்பதுதான். 

நிலாந்தன் தனது “இலட்சிய இலக்கை” பொடிவைத்து பேசுகிறார். அந்த இலட்சிய இலக்கு என்ன?வட்டுக்கோட்டை தீர்மானமா?சமஷ்டியா? பிரதேசசுயாட்சியா? வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையா? வடக்கு, கிழக்கு இரு மாகாணசபைகளா? இவற்றில் வடக்கு, கிழக்கு முஸ்லீம், சிங்கள மக்களின் அந்தஸ்து என்ன? இவை தெளிவாகும் போதே அதற்குரிய அரசியல் அணுகுமுறை பற்றி பேசமுடியும். இல்லையேல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்று “ஒரு நாடு இருதேசம்” பேசி அதே ஏமாற்று வித்தையைத்தான் “இலட்சிய இலக்கு” என்று நிலாந்தனும் காதில் பூ வைக்கிறாரா? 

விடுதலைப்புலிகள் கூட இத்துப்போன யாழ் மேலாதிக்க, சமூக நீதியற்ற சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் கைவைக்கவில்லை. இருந்த கட்டமைப்போடு முரண்படாதவாறும், தங்கள் “ஆட்சிக்கு” பங்கம் ஏற்படாதவாறும் ஆயுதம் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள். அவர்களின் proactive ஆயுதம் சார்ந்தே அமைந்திருந்தது. நிறுவனமயப்படுத்தல் வெறும் ஆயுத அரசியல் சார்ந்தே அமைந்திருந்தது. மக்கள் விடுதலை சார்ந்து அமையவில்லை. தேசநிர்மாணம், மக்கள் திரட்சி போன்றவை எல்லாம் ஆயுதத்தை முதன்மைப்படுத்தியே அமைந்தன.  

புலிகள் காலத்தில் இடம்பெற்ற தேசநிர்மாணம், திரட்சி என்பன மக்கள் விடுதலை சார்ந்தவையாய்  proactive வாக அமைந்திருந்தால் ஆயுதங்கள் மௌனித்தபின் இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆயுதம் அற்ற இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் பலவீனம் புலிகளும் வெள்ளை அடித்ததை உறுதிசெய்கிறது. ஒரு விடுதலை (?) இயக்கம் அதன் அரசியல் பொறுப்பை தரகு முதலாளித்துவ தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் கையளித்த பெருமை தேசிய விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் ஈழத்தில் தான் இடம்பெற்றது. புலிகளின் அரசியலும் வெறும் proreactive அரசியல்தான் என்பதை பட்டியலிட பல அரசியல் நிகழ்வுகள் உண்டு. 

 இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் மார்க்ஸிய, லெனினிஷ இடதுசாரி சிந்தனைகளை உள்வாங்கியிருந்ந ஈரோஸின் அரசியல் கட்டமைப்பை சிதைத்து, பச்சை முதலாளித்துவ சக்திகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வளர்த்து விட்டதாகும். இது விடுதலைப்புலிகள் அரசியலில் விட்ட வரலாற்றுத்தவறு. புலிகளின் அரசியல் பலவீனம். அரசியல் அற்ற ஆயுதபூஜையின் விளைவு. தமிழ் மக்களின் இன்றைய அரசியல் அனாதை நிலைக்கு புலிகளும் பொறுப்பாளிகள். இன்று புலிகள் வளர்த்துவிட்ட கடா – தமிழ்தேசியக் கூட்டமைப்பு மக்கள் மார்பில் பாய்கிறது என்பதுதான் உண்மை. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் “ஏகபோகம் -தனியுரிமை” சரிந்துவிட்டதாக கவலைப்படுகிறார் அவர். இந்த கவலையும், எதிர்பார்ப்பும் புலிப்பாணி. ஜனநாயக விழுமியங்களுள் ஒன்றான மனித உரிமைகளைப் பேசுகின்ற அவரது ஆக்கம் மறுபக்கத்தில் ஜனநாயக பன்மைத்துவ அரசியலை நிராகரிக்கிறது. புலிகள் கொண்டிருந்த தனியுரிமை அரசியலை கூட்டமைப்பு இழந்துவிட்டது என்பது அவர் கவலை. கூட்டமைப்பு தானாக விரும்பி அதை இழக்கவில்லை. தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி கூட்டமைப்பின் அரசியலில் உடன்பாடின்மையால் ஜனநாயக ரீதியாக தோற்கடித்துள்ளனர். இதை ஜீரணிப்பதில் அவருக்கு ஒவ்வாமை இருக்கிறது. அதன் வெளிப்பாடே அவரின் ஜனநாயக மறுப்பு ஒரு கட்சி ஆட்சி. தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் ஆணையைப் பெற்றது என்று வாதாடும் அவர், அவர்கள் ஆணைபெறாத மறுபாதியை வசதிகருதி மறந்து விடுகிறார். 

தேர்தல் மைய அரசியலை தேசத்தை கட்டி எழுப்பும், தேசத்திரட்சி அரசியலாக மாற்றவேண்டும் என்பது நிலாந்தனின் எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பில் தவறில்லை ஆனால் அதை எந்தக் கூட்டத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார் என்பதுதான் கேள்வி. கூட்டமைப்பில் proactive இல்லை என்று நிறுவும் நிலாந்தன், மறுபக்கத்தில் வெளியுறவுக் கொள்கை ஒன்றை வேண்டி நிற்கிறார். தமிழ்தேசிய பாராளுமன்ற அரசியல் எப்போதாவது துறைசார் கொள்கைகளை வகுத்து செயற்பட்டிருக்கிறதா? வெறும் தேர்தல் மைய தமிழர் அரசியலில் சமூக, பொருளாதார துறைசார் கொள்கை வகுப்பும், கட்டமைப்பும் ஒருக்காலும் இருந்ததில்லை. சட்டங்களை வைத்து சட்டாம்பிள்ளை அரசியல் நடத்துவதுதான் அவர்களின் தொழில். 

பேராசிரியர் ஜூட் லால் அவர்களை மேற்கோள் காட்டி “தமிழ் மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெறமுடியவில்லை. வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித்திருப்திப்படலாம்” என்கிறார். போராட்ட நெருப்பு அணைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. வடக்கு கிழக்கில் நீறுபூத்த நெருப்புக்கூட இல்லை. வெறும் சாம்பல்தான் உள்ளது. மக்களின் மனதில் ஒரு உள்ளக்குமுறல் இருக்கிறது. அதை தமிழர் அரசியல் தமது இருப்பை தக்கவைக்க புரோஅக்ரிவ் ஆக அப்போதைக்கு அப்போது பயன்படுத்திக் கொள்கிறது. காணாமல் ஆக்கப்பட்வர்கள், அரசியல் கைதிகள் தொடர்பான போராட்டங்கள், மாவீரர், திலீபன் நினைவு தினங்களில் எல்லாம் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் “அடிதடி” அவருக்கு நெருப்பாக எரிகிறதா? . 

“ஒரு தேசத்தை கட்டி எழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை (ROAD MAP) தயாரித்து முன் செல்லும் போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து போய்விடுவார்கள்” என்பது அவரின் அங்கலாய்ப்பு. இதற்கும் புலிகளின் அரசியலுக்கும் இடையே வேறுபாடில்லை. நிலாந்தன் எதிரிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறார். அரசியலில் மாற்றுக்கருத்தாளர்கள் அவருக்கு எதிரியாகத்தெரிகிறார்கள். மீண்டும் புலிகளின் ஏகபோக அரசியலையே வலியுறுத்துகிறார். எந்த ஏகபோகத்தை வேண்டி புலிகள் மாற்று அமைப்புக்களை தடை செய்தார்களோ, அந்த அமைப்புக்கள்தான் தமிழ் தேசியத்தை இன்று சுமக்கிறார்கள். இதில் உள்ள புலிகளின் அராஜக அரசியல் தீர்க்கதரிசனம், இராஜதந்திரம் என்ன? இன்னொரு வகையில் புலிகளின் வார்த்தைகளில் சொன்னால் துரோக அரசியலில் proactive எதிர்பார்க்கப்படுகிறது. 

இறுதியாக ……! 

தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் என்றால் இ.அங்கஜயன், டக்ளஸ் தேவாநந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் மக்களின் ஆணையை பெறவில்லையா?  

தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகளின் குறைந்தபட்ச proreactive அரசியலை நிர்ணயிப்பவர்களாக வடக்கில் அங்கஜனும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருக்கிறார்கள். கிழக்கில் இராஜாங்க அமைச்சர்கள் சிவநேசதுரை சந்திரகாந்தனும், சதாசிவம் வியாழேந்திரனும் இருக்கிறார்கள். இவர்களின் செயற்பாடுள்தான் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலின் வீதிவரைபடமாக – Road map ஆக அமைகிறது.  

உண்மையில் proactive அரசியலுக்கு TMVP, JVP, EPDP யில் இருந்து தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் விரும்பியோ, விரும்பாமலோ கற்றுக் கொள்வதற்கு நிறையவே உண்டு. இது மேட்டுக்குடி அரசியல் கல்வி அல்ல, ஒரு போராளிகளாக, மக்களோடு வாழ்ந்து கற்றுக்கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. 

தேர்தல் மைய அரசியலுக்குள்ளும் மக்கள் மைய, நிறுவனவாக்க, மக்கள் திரட்சி அரசியலை வழிநடத்தமுடியும் என்பதற்கு கிழக்கில் T.MVP யும், தெற்கில் J.V.P.யும் சிறந்த உதாரணம். இன்னும் இவை ஜதார்த்தமானவை. மற்றைய ஏமாற்று அரசியலுக்கு மாற்று வழியாக அமையக்கூடியவை. ஆனால் மாற்றுவழியாகுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்களின் “ஒளித்து விளையாடும் இலட்சிய இலக்கு” எது என்பது முதலில் தெளிவுபடுத்தப்படவேண்டும்.  

வடக்கும், கிழக்கும் முன்னாள் போராளிகளையும், பல்துறை செயற்பாட்டார்களையும் வேண்டி நிற்கிறது. இவர்களால் தான் மக்களுக்கு அருகில் இருந்து அரசியல் செய்யமுடியும். தமிழ்தேசிய மரபுவழி அரசியலுக்கும் மக்களுக்கும் உள்ள தூரம் மிகவும் அதிகமானது. 

தமிழ்பேசும் மக்கள் ஜதார்த்த அரசியலுக்கு திரும்ப வேண்டும். அதுதான் மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு. இந்த நேர்கோட்டில் முன்னாள் போராளிகளைக் கொண்ட பல அரசியல் நிறுவனங்கள் / கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஓரணியில் நெருங்கி வருவது தெரிகிறது இது ஊக்குவிக்கப்படவேண்டும் இதுதான் இன்றைய தேவையாய் உள்ள proactive.