— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு 12.08.2022 அன்று உரையாற்றும்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,
“இலங்கை- இந்திய ஒப்பந்தம் தொடக்கம், அதை ஏற்றவர்கள் ஏற்காதவர்கள் உட்பட வரலாறெங்கும் இதுவரை காலம் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்புகள் யாவும் பன்றிகளுக்கு முன்னால் போடப்பட்ட முத்தாகவே கடந்து போய் விட்டன. இன்று கனிந்துள்ள அரிய வாய்ப்பையாவது சுய லாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து சரிவர பயன்படுத்த முன்வருமாறு சக தமிழ் தரப்பினருக்கு மீண்டும் நான் பகிரங்க அழைப்பு விடுகின்றேன்” எனக் கூறியுள்ளார்.
‘பன்றிகளுக்கு முன்னால் போடப்பட்ட முத்து’ எனும் பொருத்தமான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தையும்- தவறான போக்கையும்- சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்தாத மதியீனத்தையும் மிகச் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார்.
‘வாக்குமூலம்’ எனும் தலைப்பிலான இவ் ‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடரின் 22 ஆவது அங்கத்தில் (வாக்குமூலம்-22 இல்) நான் கூறியிருந்ததை மீண்டும் இங்கு பதிவிடுகின்றேன்.
“…………இது விடயத்தில் அதிகாரப்பகிர்வு இயக்கம் தயாரித்துள்ள’ அரசியலமைப்பின் 13 வது அரசியல் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான வழிகாட்டி (A GUIDE FOR FULL IMPLEMENTATION OF THE 13TH AMENDMENT) எனும் தலைப்பிலான ஆங்கில மொழி மூல ஆவணம் சிறந்த வழிகாட்டியாகும். தடைகளையெல்லாம் தாண்டிச் சர்வகட்சி அரசாங்கம் அமையுமானால். இந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தை அமுல் செய்வதை நிபந்தனையாக விதித்து அதற்குக் காலக்கெடுவும் கொடுத்து உத்தேச சர்வ கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் பங்காளர்களாக இணைந்து கொள்ள முன்வர வேண்டுமென்று இப்பத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும்வேண்டிக் கொள்கிறது” (அரங்கம்’, 18.07.2022)
தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற- வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளை வரிசைப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசு கட்சி-10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்-02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (முன்னாள் ஈபிஆர்எல்எப் -01), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரிஎம்விபி-01)என மொத்தம் ஐந்து தமிழ்க் கட்சிகளும்அக்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம்பதினாறு பாராளுமன்றஉறுப்பினர்களும் உள்ளனர்.
இவற்றில், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ பி டி பி) இப் பாராளுமன்றத்தின் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைந்திருப்பது. அதேபோல்தான் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் (ரி.எம்.வி.பி.). இந்த இரு தமிழ்க் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமையுமானால் அதிலும் பங்காளிகளாக இருக்கும். இந்த இரு கட்சிகளுமே 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் முழுமையான- முறையான அமுலாக்கத்தை எப்போதும் அவாவி -கோரி நிற்பவை. அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில்தாம் பங்காளிகளாகவுள்ள அரசாங்கங்களுக்கு அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அளவுக்கு அரசியல் வலுவற்றவை. அதாவது இக்கட்சிகளுக்கிருக்கும் மக்கள் அங்கீகாரம் போதாது. இதனால் இக்கட்சிகள் இது விடயத்தில் பெருமளவில் முயற்சிகளை மேற்கொள்ள இயலாதிருந்தன என்பதே யதார்த்தம்.
டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரை அவர் ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய செயற்பாடுகளின் ஆரம்பப்படியாக 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல்தான் இருக்கவேண்டுமென்பதில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருந்துவருபவர். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவரது கட்சி முன்வைத்துள்ள பத்து அம்சக்கோரிக்கைகளில் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலும் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
சிவனேசதுரை சந்திரகாந்தனைப் (பிள்ளையான்) பொறுத்தவரை அக்கட்சி இதுவரை எழுத்து மூலமாக அப்படியொரு கோரிக்கையைப் புதிய ஜனாதிபதியிடம் முன் வைத்ததாகச் செய்திகள் வெளிவரவில்லையாயினும், கடந்த வருடம் 09.04.2021 இல் ஆரம்பித்து 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தினை முழுமையான அமுலாக்கல் செய்வதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுவரும் அதிகாரப் பகிர்வு இயக்கத்தின் (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) ஐந்து பங்காளி கட்சிகளில் ஒன்றாக அவர் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் (ரி.எம்.வி.பி ) உள்ளது.
இந்தப் பின்னணியில், டக்ளஸ் தேவானந்தா 12.08.2022 அன்று பாராளுமன்றத்தில் விடுத்துள்ள அழைப்புக் குறித்துத் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்சிகளாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுமே (முன்னாள் ஈ பி ஆர் எல் எப்) உள்ளன. இவற்றில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி.விக்னேஸ்வரன் ஆரம்பத்திலிருந்தே சர்வகட்சி அரசாங்கத்திற்குப் பச்சை கொடி காட்டி வருபவர். எனவே, சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதில் அவருக்கும்-அவரது கட்சிக்கும் பாரிய பிரச்சனைகள் இருக்க மாட்டாது. ஏனெனில், அவர் இப்போது தலைமை வகிக்கும்- அவரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய-கட்சி ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ எனப் பெயர் மாற்றம் பெற்ற முன்னாள் ஈ பி ஆர் எல் எப் ஆகும். ஈ பி ஆர் எல் எப்பைப் பொறுத்தவரை, இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிந்து அனுசரித்துப் போய் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை அமுல் செய்வதற்காக அதன் முன்னாள் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்படப் பல தோழர்களை உயிர்ப்பலி கொடுத்த பாரம்பரியத்தையுடைய கட்சியாகும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) பற்றிப் பிரஸ்த்தாபிப்பதில் பிரயோசனமில்லை. தமிழ் அரசியல் பொதுவெளியில் அக்கட்சியும் அதன் தலைவரான அவரும் ‘சொல்கேளாப் பிள்ளை’ (குலத்துக்கீனம் என்பது போல). எவரோடும் சேரவே மாட்டார்கள்.
எனவே, தீர்மானம் எடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு பெரும்பான்மையான வடக்குக் கிழக்குத் தமிழர்களால் -அதன் சரி பிழைகளுக்கு அப்பால் -அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே (தமிழரசுக் கட்சி) விளங்குகிறது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய இரு பங்காளிக் கட்சிகளுமான ‘ரெலோ’வும் ‘புளொட்’டும் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை அனுசரித்துப் போகக்கூடியவை. தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்திற்குத் தடையாக இருக்கமாட்டாதவை. ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து இயங்கும் மனப்போக்குடையவை.
ஆகவே, பந்து இப்போது தமிழரசுக் கட்சியிடமே அதுவும் யதார்த்தபூர்வமாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடமே உள்ளது. தமிழ் மக்களின் எதிர்காலம் கருதி இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் தீர்மானத்தை அவர் மேற்கொள்ளவேண்டும்.
அவர் தற்போது செய்ய வேண்டியது இதுதான்…
கட்சி அரசியல் வேறுபாடுகளையும் -தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ பி டி பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி எம் வி பி), மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (முன்னாள் ஈ பி ஆர் எல் எப்) ஆகியவற்றுடன் சினேகபூர்வமாகப் பேசி (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விட்டு விடுங்கள். அவர் வழிக்கு வர மாட்டார் என்பதால் அவரில் ‘மினக்கடுவது’ வீண்) நான்கு கட்சிகளும் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ பி டி பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி எம் வி பி) மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (முன்னாள் ஈபிஆர்எல்எப்) என்பன இணைந்து 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் முழுமையான-முறையான அமுலாக்கலை ஒற்றை நிபந்தனையாக-கோரிக்கையாக வைத்து (பல நிபந்தனைகளை-கோரிக்கைகளை வைத்தால் விடயம் ஐதாகிவிடும்) அதற்குக் காலக்கெடுவும் கொடுத்து இரா.சம்பந்தன் தலைமையிலே மேற்கூறப்பெற்ற நான்கு கட்சிகளும் இணைந்து ஜனாதிபதியுடன் பேசி உத்தேச சர்வ கட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக வேண்டும். ஆயின், 13 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கான அரசியல் அழுத்தத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்க முடியும். தேவை தமிழ்க் கட்சிகளுக்கிடையேயான இணக்கப்பாடு மட்டுமே. அப்படியே நடைபெறுமாயின் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்செய்வதற்கான அரசியல் களவேலைகளைச் செய்ய அதிகாரப்பகிர்வு இயக்கம் நிச்சயம் முன்வரும்.இவ்வரிய சந்தர்ப்பத்தைத் தனது வாழ்க்கைப் பயணத்தின் அந்திமக்காலத்தில் இருக்கும் இரா.சம்பந்தன் தவறவிடக்கூடாது. இதுவரை அவரால் இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளுக்கு இது பிராயச்சித்தமாகவும் அமைதல்கூடும். இந்தியாவும், ஐ.நா. வும் கூட இம்முயற்சிக்கு ஆதரவு தரும்.