“காக்கா கத்திது ஆரோ வரப்போறாங்க…..”! (காலக்கண்ணாடி- 98) 

“காக்கா கத்திது ஆரோ வரப்போறாங்க…..”! (காலக்கண்ணாடி- 98) 

       — அழகு குணசீலன் — 

வீட்டு வாசலில் காகம் இடைவிடாது கரைந்தால் நம்மவர் சொல்லும் மரபுவழி எதிர்வு கூறல் இது. காக்கா கத்திது ஆரோ வரப்போறாங்க. இலங்கை அரசியலில் இப்பொழுது காக்கைகள் கத்தத் தொடங்கியுள்ளன.  

 நாட்டுக்கூத்தில் ராஜாவும், ராணியும் கொலு வருவதற்கு முன் கட்டியக்காரன் வந்து கட்டியம் கூறிச்செல்வதும் ஒரு மரபு. அந்தவகையில் அரசியல்வாதிகள் பலரும் கட்டியக்காரனாக கூத்தாடுகிறார்கள். 

காகம்கத்திது, கட்டியக்காரன் கட்டியம் சொல்கிறான். அவர் வருவாரா….? மாட்டாரா….? என்ற பட்டிமன்றம் இன்னொருபக்கம் நடக்கிறது. ஒட்டிப்பேசுகிறது ஒரு கூட்டம், வெட்டிப்பேசுகிறது மறுகூட்டம். 

வரப்போகின்ற அந்த விருந்தாளி  யார்?இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவே அவர். அவர் வரத்தான் போகிறார். எப்போது என்பதுதான் கேள்வி. அது 24 ஆகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எனினும் கட்டியக்காரன் முன்னாள் ரஷ்யத் தூதுவரின் தாளக்கட்டு ஒலி உரத்தே கேட்கிறது. 

சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் சதுரங்கத்தில் கோத்தபாயாவின் “BACK TO HOME” தவிர்க்க முடியாதது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று சொல்லியிருக்கிறார். மற்றைய கோத்தா ஆதரவு, எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் அவர் நாடு திரும்புவதற்கான உரிமையை வலியுறுத்திப் பேசுகின்றனர். 

இரண்டரை ஆண்டுகள் தற்காப்பிற்காக பொதுஜன பெரமுனவின் தாளத்துக்கு ஆடவேண்டிய நிலையில் ரணில் உள்ளார். சர்வகட்சி அரசாங்கம் என்ற அவரது வியூகம் ஒருவகையில் பொதுஜன பெரமுனவை சற்று தள்ளி வைப்பதற்கானது. ஆனால் அதுவும் முதற்கோணல் முற்றும் கோணலாகவே உள்ளது.  

ரணில் பலபக்க அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது. விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார போன்ற சுயாதீனமாக இயங்குபவர்களின் அணி, தலஸ் அழகப்பெரும – பீரிஷ் அணி, சஜீத் அணி, சஜீத் எதிரணி, சிறுபான்மைக் கட்சிகள் என்று பல கோணத்தாக்குதல் ரணிலுக்கு ஏற்படுகிறது. 

இதன் பின்னணியில் பல்வேறு விடயங்கள் உள்ளன. 

1. கோத்தாவினால் மேற்குலக நாடொன்றுக்கு செல்லமுடியவில்லை. 

2. “நாங்கள் சிறிலங்காவின் நண்பர்கள்” என்று கூறிவரும் பிராந்திய நாடுகள் எதிலும் அவர் இப்போதைக்கு “விருப்பப்படாத விருந்தாளி”. 

3. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் அரசியல் சூழல் ஆரோக்கியம் பெறவில்லை. 

4. பொதுஜன பெரமுன கோத்தாவின் வருகையை விரைவுபடுத்த முனைகிறது. முடியுமானால் அவருக்கு மீண்டும் அரசியலில் வாய்ப்பளிக்கவும் அது தயார். 

5. எதிர் தரப்பு எதுவும் கோத்தாவின் வருகையை எதிர்க்கவில்லை. மாறாக  நாடு திரும்புவதற்கு அவருக்குள்ள “மனித உரிமைகள்” பற்றியே பேசுகிறார்கள். 

6. காலிமுகத்திடல் கூட அவரின் வருகைக்கு குறுக்கே நிற்கமுடியாது செயலிழந்து விட்டது. 

ஒட்டு மொத்தத்தில் கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ரணில் உள்ளும், வெளியிலும் இருந்து கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறார். காகத்தின் மூக்குச் சாத்திரம் பொய்ப்பட வாய்ப்பில்லை. 

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை…! 

இன்றைய பூகோள அரசியலில் கோத்தபாயவுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கக்கூடியவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே. இவர்களுக்கு பின்னால் மேற்குலக சக்திகளும் உள்ளன. கோத்தபாயவுக்கு எதிராக போர்க்குற்றங்களை சுமத்தி சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதுதான் இவர்களின் தாகம். ஆனால் அமெரிக்கக் குடியுரிமையை மீளக்கையளித்துள்ள அவருக்கு எதிராக இதனை நகர்த்துவது அவ்வளவு இலகுவானதல்ல. இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும், சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும். 

சிங்கப்பூர் சட்டத்துறை ஏற்கனவே இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

புலம்பெயர்ந்த தமிழர்களை திசை திருப்பும் நோக்கிலேயே அவர்களதும், அமைப்புக்களதும் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இது வருகின்ற ஜெனிவா பெருநாளை ஒட்டியது என்று தெரிந்தும் ஒருபகுதி புலம்பெயர்ந்த சமூகம் தடைநீக்கத்தை வரவேற்றுள்ளது. இவர்கள் ஏற்கனவே கோத்தபாயா விடுத்த அழைப்பையும் சாதகமாகப் பரிசீலனை செய்தவர்கள். இந்தத் தடை நீக்கம் புலம்பெயர்ந்த சமூகத்தின் கோத்தபாய மீதான அழுத்தத்தை சிறிய அளவிலேனும் குறைத்துள்ளது. 

உண்மையில் இது ரணில் விக்கிரமசிங்க விரும்பி, சர்வதேச நல்லெண்ணத்திற்காக செய்தேயன்றி, தமிழ்த்தேசியம் இதற்கு உரிமைகோரி அடிபடுவது போன்று அவர்களால் நடந்ததல்ல. இது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை.  

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது ஜனநாயகப் போராளிகள் அமைப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பத்தொகுதியில் உள்ள வெல்லாவெளிக் கிராமத்தை தலைமையக முகவரியாகக்கொண்ட இந்த அமைப்பு இந்த வாழ்துப்பாவை ரணிலுக்கு பாடியிருந்தது.  

இந்தப் பாடலுக்கு பின்னணியில் வெல்லாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளரும், கோத்தபாயவிடுத்த அழைப்பை ஏற்றிருந்த புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் பங்கும் முக்கியமானது. இவர்கள் கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவை மீள் அமைத்து ஜனநாயக வழிக்கு திரும்ப முடிவு செய்திருந்தனர்.  

இதில் இன்னொரு முக்கிய விடயம் கவனிக்கத்தக்கது. மட்டக்களப்பில் பட்டிருப்பு தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துப்படுத்தும் எம்.பி. சாணக்கியன். இவரின் வெற்றிக்குப் பின்னால் முன்னாள் புலிகள் இருந்தார்கள். சாணக்கியன் தாறுமாறாக ரணிலை பாராளுமன்றத்தில் வசைபாடியிருந்த நிலையிலும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை எதிர்த்து (?) வாக்களித்திருந்தபோதும், புலம்பெயர்ந்த புலிகளின் அரசியல் பிரிவின் சகோதர அமைப்பான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு ரணிலுக்கு வாழ்த்துப்பாடியிருப்பது தான். சாணக்கியன் சுமந்திரனின் வாயாக மட்டும் அல்ல வாலாகவும் இருப்பதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரியவருகிறது. 

எதிரியின் எதிரி எனக்கு நண்பன் …..! 

சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கையானது அந்த நாட்டை சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஆப்பிழுத்த குரங்கின் கதையாக்கி இருக்கிறது. கோத்தா மாலைதீவுக்கு போனால் என்ன?தாய்லாந்துக்கு போனால் என்ன அதற்குப் பின்னணியில் இந்த இரு நண்பர்களுமே இருந்தார்கள். ஆசியான் அமைப்பின் பிராந்திய வல்லரசின் ஏற்பாடுதான் கோத்தாவின் முதல் தரிப்பிடம் மாலைதீவு என்றால், சீனாவின் ஏற்பாடுதான் இரண்டாவது தரிப்பிடம் தாய்லாந்து. 

நண்பர்கள் கோத்தா விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு இலங்கை அரசியலில் பாதகமான சூழலை தமக்கு ஏற்படுத்த விரும்பவில்லை. அன்றைய காலிமுகத்திடல் வன்முறை அலையில் நண்பர்களுக்கு அது மிகப்பாதகமானதாக அமைந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய இராஜதந்திரப் பிழையாக இருந்திருக்கும். விளைவுகள் பாரதூரமானதாக அமைந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றுக்கோ அல்லது அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியாவுக்கோ இன்றைய நிலையில் கோத்தபாய செல்லமுடியாது. ஒருபகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருப்பார்கள். சட்டரீதியான நெருக்குவாரமாக அது கோத்தாவுக்கு அமையும். சர்வதேச சட்ட ஓட்டைக்குள் கோத்தா வீழ்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். 

இதனால் கோத்தாவுக்கு இருக்கின்ற வழி அமெரிக்க, மேற்குலகிற்கு எதிரான சக்திகளுடன் இணைவதே. உக்ரைன் போர் இதனை உலக வரைபடத்தில் ஓரளவுக்கு அடையாளப்படுத்தி உள்ளது. அமெரிக்க ஆலோசனையை நிராகரித்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. வில் வாக்க்களிக்காத – நடுநிலை என்று அறிவித்த நாடுகளே அவை. சீனா, இந்தியா, தென் ஆபிரிக்கா, வடகொரியா, சிரியா, பெலாருஷ், எதியோப்பியா இவற்றோடு ரஷ்யாவும் இணைந்து கோத்தபாயாவை காப்பாற்றும் சூழல் இருக்கிறது.  

போர்க்குற்றம் ஐ.நா.வரை போனால் ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தென் ஆபிரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கால்பதித்திருப்பதால் அரசாங்கம் ஆதரவாக இருந்தாலும் இந்திய வம்சாவளி மக்களின் எதிர்ப்பை சந்திக்கவேண்டி இருக்கும். ஆனால் சர்வதேசத்தில் தென் ஆபிரிக்காவின் முடிவு சீன-ரஷ்யச் சார்பாகவே அமையும். 

 ராஜபக்சாக்களின் எதிர்காலம்….!  

முன்னாள் ஜனாதிபதி நாடுதிரும்பிய பின்னர் அரசியலில் ஈடுபடுவாரா? ஈடுபடமாட்டாரா? என்று பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக பொதுஜன பெரமுனவுக்குள்ளும் பேசப்படுகிறது. இதில் விரும்பிய முடிவை எடுப்பதற்கான உரிமை இலங்கைப் பிரஜையாக அவருக்கு உண்டு. அவர் விரும்பினால் அவரின் அரசியல் செயற்பாடுகளை இப்போதைக்கு எந்த சக்திகளாலும் தடுத்து நிறுத்த முடியாது. 

கோத்தாவுக்கு எதிராக நிர்வாக துஷ்பிரயோகம், நிதி துஷ்பிரயோகம், தவறான சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள், ஊழல், மனித உரிமைகள் மீறல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியுமா என்பது சட்டத்துறை சார்ந்த விடயம். ஆனால் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுப்பதில் தோல்வியடைந்தாலும் அவரை நீதிமன்றத்திற்கு இழுத்து அவமானப்படுத்துவதே பலருக்கு முக்கியமானதாக தெரிகிறது. 

இன்றைய நிலையில் நீண்டகால நோக்கில் கோத்தபாயவுக்கான பாதுகாப்பான நாடு சிறிலங்காவைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

அவரின் தவறான (?) ஆட்சிக்காக நீதிமன்றத்தில் சந்தேக நபராக நிறுத்தப்பட வாய்ப்புண்டு. ஆனால் அரசியல் அமைப்பின்படியான சட்டங்களின் படி அவரின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுமா? என்பது சுமத்தப்படும் குற்றங்களையும், நீதிமன்ற தீர்ப்பையும் பொறுத்தது. 

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியில் பறிக்கப்பட்டதும், அவரால் எட்டு ஆண்டுகள் அரசியலில் ஈடுபடமுடியாமல் போனதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. ஆனால் சிறிமாவோ மீண்டும் வந்தார்..! மகள் சந்திரிகா வந்தார் .. அநுராவும் அரசியலில் இருந்தார். 

கோத்தபாய, மகிந்த, சாமல், பஷீல், நாமல் இந்த வரிசையில் இன்னும் யாரோ…..? 

ராஜபக்சாக்களை சிறிலங்கா அரசியலில் இருந்து அகற்றுவது அவ்வளவு இலகுவானதாக இருக்கப்போவதில்லை . 

பண்டாரநாயக்க குடும்ப அரசியல் சூத்திரம் ராஜபக்சாக்களுக்கும் பொருந்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.