— அழகு குணசீலன் —
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் உள்ளிட்ட பல்வேறு சமூக,பொருளாதார, அரசியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும், கல்வியாளர்களும், புத்திஜீவிகளும் இந்த “கண்கொள்ளாக் காட்சிகள்” குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது ஒரு புரட்சி என்றும், புரட்சியின் ஆரம்ப அறிகுறி என்றும், இவ்வாறான ஒரு போராட்டத்தை இலங்கை கண்டதேயில்லை என்ற கருத்துக்கள் ஊடகங்கள், காணொளிகள், முகநூல்கள் எங்கும் நிரம்பி வழிகின்றன. இவர்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்று வெள்ளத்தில் ஒரு துளியையாவது திரும்பிப்பார்ப்பது நல்லது.
அது மட்டுமன்றி அவர்கள் பேசுகின்ற போராட்ட உதாரணங்கள் பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற இலங்கைக்கும், இன்றைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கும் பொருத்தமற்றவை. அனைவருக்கும் பொதுவான பிரச்சினை பொருளாதார நெருக்கடி. ஆனால் எழுப்பப்படும் கோஷம் அரசியல் தலைமை தலையணை மாற்றம்.
பொருளாதார நெருக்கடி தேசிய இனப்பிரச்சினையோடு இரண்டறக் கலந்தது. தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் அபிலாஷைகள் வேறுபட்டவை என்பதனால் பொதுவான அரசியல் மாற்றம் அந்த அபிலாஷைகளை நிறைவு செய்ய வாய்ப்பில்லை. நிலவுகின்ற அரசியல் அதிகாரம் இரட்டைத் தன்மையானது. பெரும்பான்மையினருக்கு ஆளவும் சிறுபான்மையினருக்கு அந்த வாய்ப்பை மறுதலிப்பதாகவும் இருக்கையில் காலிமுகத்திடல் அரசியல்தலைமை மாற்றக்கோரிக்கையை சிறுபான்மையினர் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது ?
மிக மிக குறைந்தளவான பதிவுகளே காலிமுகத்திடல் செயற்பாடுகள் குறித்து மறுபக்கத்தை பேசுவனவாக உள்ளன. பெரும்பாலானவை கூட்டத்தோடு கோவிந்தா அல்லது ஊரோடு ஒத்தோடு என்றவகையில் கேள்விக்கு உட்படுத்தாத, பகுத்தாய்வற்ற, அரசியல் அறிவூட்டமற்ற வெறும் காட்சிப்படுத்தல்கள். கோஷங்கள். இவை சிங்கள, பௌத்த தேசியத்தை பாதுகாக்கும், பதிலீடு செய்யும் முயற்சிகளே.
பிரான்ஸ்சில் படித்த, தாயையும், தகப்பனையும் பிதமர்களாக, பெற்றோராகக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவே காலிமுகத்திடலை பிரான்சிய புரட்சியுடன் ஒப்பிடுகிறார் என்றால் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் நிலையை என்ன சொல்வது.
அரசியலில் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. ராஜபக்சாக்கள் மட்டுமல்ல சந்திரிகாவும் இன்றைய சூழலை படிப்பினையாகக் கொள்ள வேண்டும். குடும்ப அரசியலை பண்டாரநாயக்க, சேனநாயக்க குடும்பங்கள்தான் ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை இன்று காலிமுகத்திடலில் கூடி வேடிக்கை பார்க்கும் இளைய தலைமுறை அறிந்திருக்கவேண்டும். பண்டாரநாயக்க குடும்பத்தினைத் தொடர்ந்த அரசியல் வாரிசாகத்தான் ராஜபக்ச குடும்பம் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கூடாரத்தில் வாடி அடித்துக்கொண்டார்கள்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற அனைத்தும் பண்டாரநாயக்க – ரத்வத்த குடும்பத்திற்குள் முடங்கி இருந்தகாலமும் ஒன்று இருந்தது. இது ஓரளவுக்கு இன்று காலிமுகத்திடலில் குரல் எழுப்பும் தமிழ், முஸ்லீம், மலையக குடும்ப வாரிசு அரசியல்வாதிகளுக்கும் பொருத்திப் போகின்ற ஒன்று. சந்திரிகா உட்பட இவர்கள் அனைவரும் அம்மாவையும் அனேகமாக அப்பாவையும், பாட்டன், பூட்டனையும் அரசியலுக்கு முதலிட்டவர்கள். அந்த முதலீட்டு இலாபத்தை பாராளுமன்றத்தில் அனுபவித்துக் கொண்டு குடும்ப வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
ராஜபக்ச குடும்பம் கோ ஹோம் கோசம்போடும் இவர்கள் அவர்களோடு சேர்ந்து போகத்தயாரா? அல்லது அதற்கு முன்னுதாரணமாக பதவி துறக்கத்தயாரா? அப்படியானால் முதலில் போகவேண்டியவர் “நான் பிரேமதாசாவின் மகன்” என்று போற இடமெல்லாம் பிரேமதாசாவை விற்கும் சஜீத் இல்லையா..? கஜேந்திரகுமார் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இல்லையா…? ஜீவன் தொண்டமான் இல்லையா..? பாக்கீர் மார்க்கார் இல்லையா..? ஏனெனில் வாரிசு அரசியல் வரிசையே காலப்போக்கில் குடும்ப ஆட்சிக்கு காலாகிறது.
பிரான்சிய புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத சமூக, பொருளாதார, அரசியல் கோட்பாட்டை சந்திரிகா வெறும் வார்த்தையாடல்களையும், பாதைகளையும், மூன்று இனத்தவர்களும் கூடி இருப்பதையும் வைத்து மதிப்பிட்டிருப்பது குறித்து அவர் மீது அனுதாபப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
அதே புரட்சித்திடலில்(?) தமிழில் தேசிய கீதம்பாடியதற்கு பௌத்த பிக்குவின் எதிரொலி பிரான்சிய புரட்சிக்குரியதா..? அடுப்பே எரிய வழியில்லையாம் சீஸ் இல்லை என்ற விளம்பரம் பிரான்ஸ்சியப் புரட்சிக்குரியதா.? கட்சி முக்கியஸ்தர்கள் பதவிக்காகாக அங்கும் இங்கும் ஓடி மக்களின் துயரில் சுற்றிவளைப்பது பிரான்ஸ்சிய புரட்சிக்குரியதா..?
மகிந்தவுக்கும் பிரதமர் வேண்டும், வீரவன்சவுக்கும், ரணிலுக்கும், மைத்திரிக்கும், அநுரகுமாரவுக்கும் மற்றவர்களுக்கும் அதுவே வேண்டும்.
நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் வெற்றிபெற்றாலும் தான் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அரிது என்பதால் பிரேரணையைக் கொண்டுவரவும் முடியாமல், ஒரு சரியான முடிவையும் எடுக்கவும் முடியாமல் எதிர்கட்சி தலைவர் பதவியை தீர்வு முயற்சிகளைத் தடுப்பதற்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறார்.
மேற்குலக முகவர் நிறுவனங்களில் ஒன்றான யூனிசெப் 15 வயது சிறுவனின் சீஸ் சாப்பிடமுடியவில்லை என்ற கவலையை விளம்பரப்படுத்துவதில் உள்ள வர்க்க அரசியல் என்ன? இதே போன்றுதான் மனித உரிமை, ஜனநாயகம், சுற்றாடல், மாற்றுக்கொள்கை என்ற மகுடங்களைத்தாங்கி மேற்குலக முகவர்கள் காலிமுகத்திடலில் களத்தில் நிற்கிறார்கள்.
இவர்கள் இலங்கை மக்களில் எந்தப்பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? உதவித் திட்டங்கள் என்ற பெயரில் பெறப்படும் நிதியில் குளிரூட்டப்பட்ட வசிப்பிடம், குளிரூட்டப்பட்ட வாகனம், மேற்குலக உணவும் மதுவும், நிர்வாகச் செலவு சம்பளம் என்று ஏப்பம் விட்டுவிட்டு எஞ்சிய ஒரு சிறுபகுதியே மக்களுக்கு உதவியாக பயன்படுத்தப்படுகிறது.
சந்திரிகாவே காலிமுகத்திடலில் நுனிப்புல் மேய்கையில் சாதாரண இலங்கைக் குடிமக்களின் நிலை என்ன? புதினம் பார்க்க பிள்ளைகளோடு வந்து எட்டு, பத்து வயதுப் பிள்ளைகள் கோத்தபாயாவை “கள்ளன்” என்று திட்டும் காட்சியைப் படம் எடுத்து முகப்புத்தகங்களில் பதிவிட்டு பெருமைப்படும் பிள்ளை வளர்ப்பு, கல்வியூட்டும் பொறுப்பணர்வை என்ன என்பது …?
நூலகம், அங்கவீனப்பட்ட இராணுவ வீரர்கள், மூன்று மொழியிலுமான எழுத்துப்பிழையற்ற பதாகைகள், பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றுதல், இடம்பெற்ற அரசியல் கொலைகள் பற்றி விழிப்பூட்டுவதில் தவறில்லை. ஆனால் இன்றைய பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு இதன் தீர்வு என்ன? பிரான்சிய புரட்சியின் அடிப்படையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் அதிகாரப் பரவலாக்கம், மொழி, மதம், கலாச்சார, பண்பாட்டு உரிமைகள் பற்றி பேசாது கடற்கரையில் கூடியிருக்கும் மக்கள் தொகையை மட்டும் பார்த்து அதன் சமூக, பொருளாதார, அரசியல் உள்ளடக்கத்தை பார்க்கத்தவறுகிறோம்.
தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற கட்டமைப்பில், மரபு ரீதியான இடதுசாரிகளும், அவர்களின் கொள்கைகளும் ஒட்டுமொத்த சமூகத்தை நோக்கிய பார்வையைக் கொண்டுள்ளனர். இதனால் சமூகத்திற்குள் உள்ள பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார பண்பாட்டு, பிரதேச வேறுபாடுகளை அவர்கள் பார்க்கத்தவறுகின்றனர். அல்லது பார்த்தாலும் பொருளாதார வர்க்கங்களான முதலாளி, தொழிலாளி வேறுபாட்டை மட்டுமே அவர்கள் நோக்குகின்றனர். அந்த முதலாளிக்குள்ளும், தொழிலாளிக்குள்ளும் இருக்கின்ற சமூக, பண்பாட்டு கலாச்சார உள்ளக வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
இவர்களே மரத்தை, மரத்தொகுதியை பார்க்கத்தேவையில்லை காட்டைப்பாருங்கள் என்று அறைகூவல் விடுகின்றனர். ஆனால் இந்த “காட்டைப் பார்த்தல்” அணுகுமுறை தோல்வியடைந்தும் காலாவதியுமாகிய ஒன்று. காட்டை நாம் பாதுகாக்க வேண்டுமானால் மரத்தையும், மரக்குழுமத்தையும் தவிர்த்து அதைச்செய்யமுடியாது. தனிமரம் இல்லாமல், பல்வேறு வகைப்பட்ட மரத்தொகுதிகள் இல்லாமல் காடு இல்லை.
இலங்கையைப் பொறுத்தமட்டில் எப்போது காட்டைப்பார்த்து கொல்வின் ஆர்.டி.சில்வா குடியரசு அரசியலமைப்பை வரைந்தாரோ, அதற்கு முன் பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தாரோ அன்றே காட்டைப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரி அரசியல் கவிழ்ந்துவிட்டது.
என்.எம்.பெரேரா, பீற்றர் கெனமன் போன்றவர்களும் காட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜே.வி.பி .யும் அதையே செய்கிறது. இதனால்தான் சண்முகதாசன், வி.பொன்னம்பலம் போன்றவர்கள் காட்டைப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. வி.பொன்னம்பலம் காட்டுக்குள் புகுந்து கண்ட தனித்துவ இனக்குழு அடையாளமே செந்தமிழர் இயக்கம். இதற்கு முன் அவர் காட்டைப்பார்த்தே காங்கேசன்துறையில் தந்தை செல்வாவை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
காலிமுகத்திடலில் “காட்டைப்பார்ப்பது” என்பது அடிப்படைகள் அற்ற அற்புதமான நுனிப்புல் மேய்தல் அரசியல். ஆனால் அந்தக்காட்டுக்குள் உள்ள மரங்களையும், மரத்தொகுதிகளையும் தேடுவதே ஜதார்த்த அரசியல். அந்தக் காடு சிங்கள பொளத்த தேசியவாதக்காடு. அதற்குள் தமிழ், முஸ்லீம், மலையக சமூகங்களைச் சார்ந்தவர்கள் மரங்களாகவும், மரத்தொகுதிகளாகவும் நிற்கிறார்கள். ஆனால் அவர்களின் தனித்துவமான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், அதை அடைவதற்கான வழிமுறைகள் அங்கு பேசப்படவில்லை என்பதே எழுகின்ற ஆதங்கமாகும்.
காட்டுக்கு காவல்காரனை மாற்றினால் காட்டுக்குள் உள்ள பல்வேறு இன மரங்களினதும், செடிகொடிகளினதும் அவற்றின் தொகுதிகளினதும் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பது பின் நவீனத்துவம் சார்ந்த புரட்சிகர சிந்தனைகளை மறுத்து,மழுங்கடித்து செய்யப்படுகின்ற எதிர்ப்புரட்சி.
இதுதான் காலிமுகத்திடல் காட்சி..!
சிங்கள மக்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வாக கோத்தா கோ ஹோம் பாடுவது மற்றொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசை பதிலீடு செய்வதற்கான … கெதறட்ட யண்ட…!
கிறிஸ்தவ சமூகம் கோத்தா கோ ஹோம் பாடுவது ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பொறுப்பாளிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு. இதன் ஒரு வெளிப்பாடே சிறிசேனவுக்கு இடைக்கால அரசில் இடம்கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை …!
முஸ்லீம் மக்கள் ஜனாஸா எரிப்புக்கும், ஈஸ்டர்தாக்குதலால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், ரிஷாட்பதியூதீன் வீட்டு வேலைக்காரி தொடர்பாக அந்தச் சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும், இஸ்லாமிய சட்டவிவகாரங்களுக்காகவும், இனவாத அணுகுமுறைக்காகவும் கோத்தா அரசுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறார்கள். அதற்காக கோத்தா கோ ஹோம்…!
மலையக மக்கள் இந்த அரசாங்கம் இனவாத பாரபட்சத்தை, இணங்கிய ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கவில்லை, மலையக பல்கலைக்கழகம் அமைக்கப்படாமை, தோட்ட குடியிருப்பு காணிகள் பறிக்கப்படுதல், பிரதேச செயலக கட்டமைப்பு வழங்கப்படாமை என்ற காரணங்களால் வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள்..,..!
ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கும், அதற்கு பின்னரான அரசியல் தீர்வின்மைக்கும், உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு முன் சில உறுதிமொழிகளை புதிய ஆட்சியாளர்களிடம் கோரிநிற்கிறார்கள் ….!
ஆக, காலிமுகத்திடல் வெறும் காட்டுவிவகாரம் அல்ல. பொது பொருளாதார நெருக்கடியையும் விஞ்சிய வேறு தனித்துமான பல தேசிய இனங்களின் பிரச்சினைகள் இங்கு செல்வாக்கு செலுத்துகின்றன .
மரத்தையும், மரக்தொகுதிகளையும் கவனியாது புறக்கணித்து கடந்து சென்று காட்டை மட்டும் முதன்மைப்படுத்தியதன் சமூக பொருளாதார விளைவு இது.
காட்டுத்தலைவனை / காவல்காரனை வீட்டுக்கு அனுப்பலாம். ஆனால் வருகிற புதிய தலைவன் பௌத்த சிங்கள தேசிய காட்டை மட்டுமல்ல அதற்குள் உள்ள தனித்துவ பன்மைத் தேசிய இனங்களான மரம், செடி, கொடி அனைத்தையும் சமமாகப் பார்ப்பான் /பராமரிப்பான் தாவரவியல் வேற்றுமையையும், பன்மைத்தன்மையையும் பாதுகாப்பான் என்பதற்கு காலிமுகத்திடலில் பதிலைத் தேடுகிறார்கள் சிறுபான்மைத் தேசிய இனங்கள்.