— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உட்பட அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவுகள் பலவற்றை உள்ளடக்கிய வரைவு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துகம பண்டார பா.உ. இனால் தனிநபர் பிரேரணையாகச் சபாநாயகர் அவர்களிடம் 21.04.2022இல் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கிப் 19ஐ உள்வாங்கும் விடயமும் அடங்கியுள்ளது. அதேவேளை, அரசாங்கத் தரப்பிலிருந்து விலகிப் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு 21ஆவது திருத்தம் தொடர்பான வரைபைச் சபாநாயகரிடம் 22.04.2022 அன்று கையளித்தது. அது ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளும் அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியேறிய பங்காளிக் கட்சியினரும் அதிருப்தியாளர் அணியும் இணைந்து இம் முன்மொழிவுகள் கையளிக்கப்படாது தனித்தனியே சமர்ப்பிக்கப்படுவதால் இம் முன்மொழிவுகள் எவ்வாறு வெற்றியைத் தரும் என்பது கேள்விக்குரியதாகிறது.
அதேவேளை தற்போது நடைமுறையிலுள்ள 20ஐ நீக்கி ஏற்கெனவே அகற்றப்பட்ட 19இன் ஷரத்துக்களை உள்வாங்கிப் புதிதாக இலங்கை அரசியலமைப்புக்கு 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆளும் தரப்பே கொண்டுவர 18.04.2022 அன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இப்புதிய திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கத் தரப்பில் பாராளுமன்றத்தில் தானே முன்மொழியவிருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 19.04.2022 அன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய 28.04.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் உத்தேச 21ஆவது அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார். பிரதமரின் முன் மொழிவுகளை ஆராய்ந்து அதற்குரிய வரைபைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவின் வரைவு அது இறுதிப்படுத்தப்படுவதற்காகப் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உண்மையில் இது ஜனாதிபதி தரப்பின் காலத்தை விழுங்கும் தந்திரோபாயமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள 20ஐத் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு 19ஐ மீளக் கொண்டு வாருங்கள் (அதாவது 21ஐக் கொண்டு வரும்படி) 19.04.2022 அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவும் இதைத்தான் ஆதரிக்கிறார். நிறைவேற்று ஜனாதிபதியின் தற்போதைய அதிகாரங்களை மட்டுப்படுத்தக் கூடிய உத்தேச 21ஆவது திருத்தத்தையும் அதற்கும் மேல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதையும் ஜே.வி.பி.யும் ஆதரிக்கிறது.
இந்தப் பின்னணியில் உத்தேச 21ஆவது திருத்தச் சட்டத் திருத்தமென்றாலும் சரி அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதென்றாலும் சரி எதிரணியினரால் ஒற்றுமைப்பட்டுக் கூட்டாக இன்னும் முன்மொழிவுகளை ஏன் வைக்கமுடியவில்லை? தற்போது ஜனாதிபதியிடம் குவிந்துள்ள அதிகாரங்களை குறைத்து அவற்றை மட்டுப்படுத்தும் வகையில் எதிரணியினர் கூடி ஒற்றுமையாக ஒரு பிரேரணையை சபாநாயகரிடம் சமர்பித்துப் பாராளுமன்றத்தில் அதுகுறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரும் நடைமுறையை கவனத்தில் கொள்ளாது, ஆளுக்கொரு தனிநபர் பிரேரணைகளை கையளிப்பது இவ்விவகாரத்தை இழுத்தடிப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய தரப்புக்கு உதவுவதாகவே உள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது, தற்போதுள்ள 20ஐ நீக்கி மீண்டும் 19இன் சரத்துக்களை உள்வாங்கி ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து மட்டுப்படுத்தும் உத்தேச 21ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் இந்த நாட்களில் நிறைவேறுவதற்குரிய அறிகுறி தெரியவில்லை.
மட்டுமல்ல, எதிரணியினர் கூறுவது போல அனைத்துக் கட்சிகளும் அடங்கிய புதிய அரசாங்கத்தை (இடைக்கால அரசாங்கத்தை) அமைப்பதாயின் முதலில் இவ்வணியினர் பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை (குறைந்தபட்சம் 113) யல்லவா நிரூபிக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஆட்சிமாற்றம் வேண்டுமென்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் இல்லை.
அத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையை உறுதி செய்யாமல் எதிரணியினர் அரசியலமைப்புக்கான திருத்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதிலும் அர்த்தமில்லை.
இவை ஒரு புறமிருக்க இந்த விவகாரங்களைத் தமிழர் தரப்பிலிருந்து நோக்குவதே இப்பத்தியின் நோக்கமாகும்.
சுதந்திர இலங்கையில் 1972இல் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடியரசு அரசியலமைப்பு வரைக்கும் சுமார் இருபத்தி நான்கு வருடங்கள் (1947/48–1972) அமுலிலிருந்த சோல்பரி அரசியலமைப்பின் கீழ்தான் தமிழர்களுக்கெதிரான பாரபட்சமான சட்டங்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்களும் நாடளாவிய இனக் கலவரங்களும் (1958) நிறைவேறின. இவற்றைச் சோல்பரி அரசியலமைப்பால் சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்கவென 29ஆவது ஷரத்து அரசியல் அமைப்பில் உள்ளடக்கியிருந்தபோதிலும் கூடத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதாவது அதிகாரம் படைத்த பாராளுமன்றத்தால் (அப்போது ‘செனட்’ சபையும் இருந்தது) தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜனாதிபதிப் பதவி (தேசாதிபதி) அப்போது அதிகாரங்கள் அற்ற சம்பிரதாயபூர்வமான பதவியாகவே இருந்தது.
பின்னர் 1972 இலிருந்து, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் 1978இல் நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பை நிறைவேற்றும் வரைக்கும் சுமார் ஆறு வருடங்கள் அமுலிலிருந்த குடியரசு அரசியலமைப்பின் கீழ்தான் அதாவது பாராளுமன்றத்திடம் முழு அதிகாரமும் இருந்தபோதுதான் 1972-1978 காலப்பகுதியில் (இக் காலப்பகுதியில் ‘செனட்’ சபையும் இருக்கவில்லை. ஜனாதிபதிப் பதவியும் இருக்கவில்லை.) தமிழர்களுக்கெதிரான அத்தனை பாரபட்சங்களும் (1977 நாடளாவிய இனக்கலவரம் உட்பட) நிறைவேறின.
பின்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது 2010இல் கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்படும் வரைக்கும் அமுலிலிருந்த 1978இல் கொணரப்பட்ட ஜே.ஆரின் நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பின் கீழ்த்தான் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் (1978-2010) தொடர்ந்தும் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் (1979இல் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் 1983 நாடளாவிய இனக்கலவரம் உட்பட) தமிழர்களுடைய உரிமைப் போராட்டங்களை நசுக்குவதற்கான அரசின் இராணுவ நடவடிக்கைகளும் அதிகரித்தன. அதாவது தற்போது உள்ளதைவிட ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்படத் தமிழர்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. (ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1978/1988, ரணசிங்க பிரேமதாஸ 1988/1991, டி.பி. விஜயதுங்க 1991/1994, சந்திரிகா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா 1994/2004, மஹிந்த ராஜபக்ச 2005 இலிருந்து 18வது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட 2010 வரை அதாவது 1978ல் இருந்து 2010 வரைக்கும் முப்பத்தியிரண்டு வருடங்கள்)
பின்னர் ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் (2010/2014) தமிழர்களுடைய விவகாரத்தில் எதிர்மறையான விளைவுகளே நடந்தேறின.
2015 ஜனவரி 08இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு 2015 ஓகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘நல்லாட்சி’க் காலத்திலும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த) தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை.
பின் 2019 நவம்பரில் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகி 20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்ட இதுவரையிலான காலத்திலும்கூட தமிழர்களுக்கெதிரான பாரபட்சங்கள் குறையவில்லை.
இந்தப் பின்னணியில், முழு அதிகாரங்களையும் கொண்ட பாராளுமன்ற அரசியலமைப்பு முறை அமுலிலிருந்தாலும் சரி- மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி முறை அரசியலமைப்பு அமுலிலிருந்தாலும் சரி- அதிகாரம் அதிகரிக்கப்பட்ட ஜனாதிபதி பதவியிலிருந்தாலும் சரி இவையெதுவும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்புத் தரவில்லையென்ற அனுபவத்தையே தமிழர்கள் பெற்றுள்ளனர்.
ஆனால், நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இருந்தபோதுதான் பாராளுமன்றத்திற்கு வெளியே இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால்தானும் 1987இல் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் தற்றுணிவோடு அவரால் கைச்சாத்திட முடிந்தது என்பதையும் தமிழர்கள் மறப்பதற்கில்லை.
எனவே, அரசியல் ரீதியாகத் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலோ -ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரங்களிலோ- ஆட்சி மாற்ற நடவடிக்கைகளிலோ தங்கள் கவனத்தைக் குவிக்கத் தேவையில்லை.
இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதற்கும் அவர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்கும் இனப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதற்கும் பெரும்பான்மைப் பௌத்த சிங்களத் தரப்பு உளப்பூர்வமாக விரும்பும் வரைக்கும், அதாவது பெரும்பான்மைப் பௌத்த சிங்களச் சமூகத்தின் இனவாதப் போக்கு மாறாத வரை எந்த ஆட்சி மாற்றமோ அல்லது எந்த அரசியலமைப்புத் திருத்தமோ அல்லது புதிய அரசியலமைப்போ தமிழர்களுக்கு உதவப் போவதில்லை.
அதேவேளை ‘ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்காது’ என்பதற்கிணங்கத், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் யாவும் தத்தம் தனித்தனிக் கோரிக்கைகளைத் தள்ளிவைத்துவிட்டு ஒன்றிணைந்து ஒற்றைக் குரலில் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்யும்படி இலங்கை அரசாங்கத்தின் மீதும் இந்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுக்கும்படியான மக்கள் பேரியக்கத்தை வடக்கு கிழக்கில் காலம் தாமதியாது ஆரம்பிப்பதே தமிழர்களுக்குத் தற்போதைய சூழ்நிலையில் உதவக்கூடிய ‘உபாயம்’ ஆகும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கின்ற நடைமுறை அரசியல்தான் தமிழர்களுக்குத் தேவை.