தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

    — வி.சிவலிங்கம் — 

–           பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன. 

–           இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது. 

–           பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன. 

–           ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது. 

–           தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது. 

–           அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது. 

மாற்றத்திற்கான தேவைகள் 

தமிழ் அரசியல் தனது எதிர்காலம் குறித்து மிக ஆழமான விவாதத்திற்குள் செல்வது தவிர்க்க முடியாதது. உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக தடையற்ற திறந்த பொருளாதாரக் கொள்கைகளும், கொரொனா நோயின் தாக்கங்களும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப் பின்னணியில் இனவாத, பெருந்தேசியவாத சிந்தனையை முன்னெடுத்த சிங்கள பௌத்த தீவிரவாதம் தற்போது அதன் தோல்வியை நோக்கி பின்வாங்கிச் செல்கிறது. சர்வதேச அணுகுமுறைகளும் உள்நாட்டு அரசியலும் பாரிய மாற்றங்களுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. இக் காலகட்டத்தில் மிகவும் பலவீனமான நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளும், அவற்றின் அரசியல் கோட்பாட்டுக் கூறுகளும் உள்ள நிலையில் எதிர்கால மாற்றங்களைச் சந்திக்கும் ஆற்றலைப் படிப்படியாக இழந்து வருகின்றன. இப் பலவீனங்களைப் பயன்படுத்தி நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்களை நசுக்க பௌத்த சிங்கள பெருந் தேசியவாத இனவாத தீவிரவாத சக்திகள் ராணுவ உதவியுடன் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் ஜனநாயக கட்டுமானங்கள் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுவதால் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான இறுதிப் பாதுகாப்புகளும் உடைந்து வருகின்றன. அரசுக் கட்டுமானங்களின் உயர் அடுக்குகளில் ராணுவ அதிகாரிகள் உட்கார்ந்துள்ளார்கள். தேர்தல் நடத்தப்படுமானால் தோல்வி நிச்சயம் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். இருப்பினும் பாதையை மாற்றத் தயாராக இல்லை. இவை யாவும் மியன்மாரில் (பர்மா) இடம்பெற்ற சம்பவங்களை, ஜனநாயகத் தேர்தல் முடிவுகளை மறுத்து, ராணுவப் பாதைக்கான கூறுகளின் செயற்பாட்டை நினைவு கூருகின்றன. இவ்வாறான ஆபத்து நிலமைகளை உடனடியாகத் தடுக்கும் உபாயங்கள் தோற்றுவிக்கப்படாவிடில் இதைவிட பல கஸ்டமான பயணங்களை நாடு எதிர்நோக்கலாம். இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் அவ்வாறான நிலமைகள் ஏற்படுவதை அனுமதிக்காது என எமக்குள் சில சமாதானங்களை முன்வைக்கலாம். ஆனால் உள்நாட்டு நிலமைகள் அதற்கான வாய்ப்புகளை வழங்கும்போது நிலமைகள் வேறுவிதமாக மாற வாய்ப்பு உண்டு.   

பெருந்தேசியவாதம் சிதைகிறது 

இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தாம் நாட்டின் பஞ்ச மகா பலவேகய என அழைக்கப்படும் தொழிலாளர், விவசாயிகள், மகாசங்கம், ஆசிரியர், ஆயர்வேத வைத்தியர் என்ற சமூகப் பிரிவுகளே தமது அடிப்படைகள் எனக் கூறிவந்தன. சமீப காலமாக ராணுவத்தையும் அச் சமூகப் பிரிவுக்குள் இணைத்தே பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே நாட்டின் நிலமைகளைக் கட்டுப்படுத்த ஹிட்லர் போன்ற ஒருவர் குறைந்தபட்சம் சிறிது காலத்திற்காவது தேவை என்ற கருத்துக்கள் உயர் மட்டங்களிலிருந்து சாதகமான ஊடகங்கள் மூலம் கசிய விடப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறான கனவுகளைக் கலைக்கும் விதத்தில் நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவும், அத் தீர்மானங்களை மேற்கொண்ட அரசின் உயர்மட்ட தலைமைகளின் தவறுகளும் எச் சமூகப் பிரிவினரைத் தமது ஆதரவு சக்திகள் எனக் கருதினார்களோ அதே சமூகப் பிரிவுகள் இன்று அரசுக்கு எதிராகத் தெருவில் இறங்கியுள்ளன. இம் மக்கள் அரசின் அணுகுமுறைகளை மாற்றும்படி கோரியும் அவை  சாத்தியப்படவில்லை. இத் தவறுகளுக்கான பிரதான காரணம் அரசாங்கத்தின் கொள்கைகளை அரச அதிகாரிகள் தவறாகப் புரிந்து கொண்டதன் விழைவு எனவும் வியாக்கியானப்படுத்தி தற்போது அரசாங்கத்தின் கவனம் அரச அதிகாரிகளுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஏனெனில் அரச அதிகாரத்தினை நாட்டின் சட்டவிதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தி செல்வங்களைச் சுருட்டும் போக்கிற்குத் தடையாக அரச அதிகாரிகள் இருப்பதாகக் கருதுகின்றனர். அரச அதிகாரிகள் அரசுக்கு விரோதமாகச் செயற்படுவதாக அல்லது நாட்டின் பெருமளவு வருமானத்தை விழுங்குவதாகக் கூறி அதனைக் குறைக்க வேண்டும் என்கின்றனர். இந்த அதிகாரிகள் யார்? அரசும், அரசாங்கமும் வெவ்வேறானவை. அரசாங்கம் அரசு அதிகாரிகள் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்துமாயின் அல்லது தனது ஊழல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாக உணர்வார்களாயின் இவை குறித்துப் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.  

அரசும்அரசாங்கமும் 

இந்த அரச அதிகாரிகள் மக்களிலிருந்து நாட்டின் சட்ட விதிப்படி செயற்பட தெரிவானவர்கள். மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருபவர்கள். அரசாங்கம் மாறினாலும் அரசின் செயற்பாடுகளை அரசியல் யாப்பு நெறிகளின் அடிப்படையில் மக்களின் நலன்களை நோக்கித் தொடர்ந்து எடுத்துச் செல்பவர்கள். இவர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு பலமுள்ள தொழிற்சங்கங்களில் உள்ளதாலும், அவை அரசாங்கத்தின் தன்னிச்சையான, அரசியல் மயப்படுத்தப்பட்ட கொள்கைகளை, செயற்பாடுகளை எதிர்த்து வருவதால் அவை தமது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதி அவர்களின் பலத்தைக் குறைக்கவே இப் புதிய விவாதம் முன் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறானால் நாட்டின் தேவைக்கு அதிகமாக உள்ள ராணுவத்தினரையல்லவா முதலில் குறைக்க வேண்டும்! அதனைக் குறைக்க அரசு ஏன் முயற்சிக்கவில்லை? இங்குதான் உள்நோக்கம் தெளிவாகிறது. அரச அதிகாரிகளின் பலத்தைக் குறைத்து அந்த இடங்களில் ராணுவத்தை நிறுத்தத் திட்டம் வகுக்கப்படுகிறது. வெளிப்படையான ராணுவ ஆட்சி காணப்படாவிடினும், அரசின் சகல மட்டங்களிலும் சிவிலியன்களுக்குப் பதிலாக ராணுவம் உள்ளது.  

ராணுவமயமாகும் அரசுக் கட்டுமானம் 

அவ்வாறானால் நாடு எங்கு செல்கிறது?பாகிஸ்தான் அல்லது மியன்மார் போன்ற ராணுவ ஆட்சியை நோக்கி நாடு செல்கிறதா? அவ்வாறாயின் அரசியல் யாப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தும் ஆபத்துகள் உள்ளதா? என ஆராயும்போது நிராகரிக்க முடியாத நிலை உள்ளது. புதிய அரசியல் யாப்பு என்ற பெயரில் ராணுவ ஆட்சியைப் பின் கதவால் கொண்டுவரும் எத்தனிப்பாக நாம் ஏன் கருத முடியாது? ஜனவரி மாத ஆரம்பத்தில் ராணுவத்தினர் தமது இலச்சினைகள், செயற்பாடுகள் என்பவை குறித்த விபரங்களை உள்ளடக்கிய டயரிகள், கலன்டர்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். ராணுவம் நாட்டின் பல தேவைகளை நிறைவேற்றும் ஆற்றலுடையது என்பதை கொரெனா நோய்த் தடுப்பு, விவசாய உற்பத்தி, சேதனப் பசளைகள் தயாரிப்பு,கள்ளக் கடத்தல் தடுப்பு, போதை வஸ்து தடுப்பு, தேசத்தின் பாதுகாப்பு போன்றவற்றில் காத்திரமான வகையில் செயற்படுவதாகக் கூறும் வகையில் அந்த அன்பளிப்புகள் இருந்தன. இதன் பின்னணி என்ன?  

இம் மாற்றங்கள் தமிழ் அரசியலில் பிரதிபலிக்கவில்லையே ஏன்? 

இந்த ஆபத்துகள் மிக அண்மித்து வரும் பின்னணியில் தமிழ் அரசியல் இந்த ஆபத்துகளைக் கவனத்தில் கொண்டு பாரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை நோக்கிய பார்வையே இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 

சுதந்திரத்திற்குப் பின்னதான கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்ப்பது இங்கு அவசியமானது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலமைகள் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு,அதிகார பரவலாக்கம் என்பவற்றின் அடிப்படையில் புதிய அணுமுறையை நோக்கி தமது அரசியல் பார்வையைத் திருப்பியுள்ளதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையிலேயே 2009 இன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளையும் அளித்தனர். இருப்பினும் 2009 இல் எடுத்த இந்த முடிவுகள் தமிழ்க் கட்சிகள், மக்கள் மத்தியில் காத்திரமான வகையில் போய்ச் சேரவில்லை என்பதனை கடந்த 10 வருடகால தமிழ் அரசியலின் போக்குகள் உணர்த்துகின்றன. இதற்குப் பிரதான காரணம் ஒரு புறத்தில் மிகவும் உக்கிரத் தன்மையுள்ள சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமும், மறு பக்கத்தில் 30 வருட ஆயுதப் போராட்டத்தில் பிரிவினைவாதம் செலுத்திய ஆதிக்கமும் மாற்றங்களை நோக்கிய பாதைகளைத் தடுத்து வருகின்றன.   

தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டு வடிவங்கள் 

இவை குறித்து தெளிவான பார்வை அவசியம். உதாரணமாக, தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை ஆராய்ந்தால் இவை நன்கு புலப்படும். தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்பது பழமைக்கும், புதுமைக்குமான போட்டியாக நாம் வர்ணிக்க முடியும். இக் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்பது பழமை வாதத்தை அல்லது பிரிவினை உள்நோக்கங்களை முன்வைக்கும் மாவையை அப் பிரிவின் முகவராகவும், போரின் பின்னர் கட்சியில் இணைந்து தற்போது அதன் முன்னணிப் பேச்சாளராகச் செயற்படும் சுமந்திரனின் விவாதங்களை அவதானிக்கும்போது குறிப்பாக பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற சமஷ்டி அடிப்படைகளில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுதல் என வரையறுக்கும் விவாதங்களாகும்.  

இவ் விவாதங்கள் என்பது கட்சிக்குள் ஜனநாயக அம்சங்கள் வலுவாக செயற்படுமானால் மிக ஆரோக்கியமான போக்கைத் தரலாம். ஏனெனில் இக் கருத்துக்கள் ஒரு புறத்தில் கடந்தகால சந்தேகங்களின் எச்சரிக்கை ஒலியாகவும், நவீன அணுகுமுறைகள் தோல்வியடையாமலும், அதேவேளை மாற்றங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் விதத்திலும் உறுதுணையாக அமையும். அத்துடன் இவ்வாறான ஜனநாயக அடிப்படையிலான விவாதங்கள் உட்கட்சி மட்டத்தில் நிலவுமானால் அவை சிங்கள பெருந்தேசியவாதிகளுக்கு மிகவும் சிக்கலான நிலமைகளைத் தோற்றுவிக்கும். அதாவது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் கோரி நிற்கும் சக்திகளுக்கு ஏற்றவாறான வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படாவிடில் அவை பிரிவினைவாத சக்திகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்ற சமிக்ஞை கிடைக்கும். ஆனால் இவ்வாறான புரிதல் அக் கட்சிக்குள் உள்ளதா? என்பது பெரும் சந்தேகமே. ஏனெனில் தமிழ் அரசியலில் தொடர்ச்சியாகக் காணப்படும் வாக்குவங்கி அரசியல் அணுகுமுறை இவ்வாறான விளக்கங்களை நிராகரிக்கவே செய்யும். இதற்கான ஆரோக்கியமான வழிமுறை எதுவெனில் தமிழ் சமூகத்தில் உள்ள சிவில் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரிவினரைப் பலப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்படுவதுதான்.              

மூலோபாயதந்திரோபாய வழிமுறைகளின் அவசியம் 

இக் கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்டவாறான மூலோபாய மற்றும் தந்திரோபாய மாற்றங்கள் என்பது தமிழ் அரசியலின் வரலாற்றுப் போக்கில் காணப்படும் பிரதான மாற்றங்களை அடையாளப்படுத்தி அவற்றின் அடிப்படையில் இன்றைய அரசியல் செயற்பாடுகளில் புதிய உபாயங்களை வகுப்பதாகும். இந்த உபாயங்கள் என்பது மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். இலங்கையின் 40 ஆண்டுகால பொருளாதார கட்டுமான மாற்றங்களும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி அரசியல் கட்டுமானமும், 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரும் தேசிய அளவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்விலும் பாரிய தாக்கங்களை அவை ஏற்படுத்தியுள்ளது. இம் மாற்றங்களுக்கு ஏற்றவாறான காத்திரமான அரசியல் அணுகுமுறை மாற்றம் இதுவரை ஏற்படவில்லை.  

இதற்கான அடிப்படைக் காரணிகள் ஆராயப்பட வேண்டும். தமிழ் அரசியலில் காத்திரமான பங்களிப்பினை வழங்கிய மத்திய தர சமூகப் பிரிவினர் தற்போது புலம்பெயர்ந்துள்ளதாலும், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினரே வாக்காளர்களாகவும், அரசியல் போக்கைத் தீர்மானிப்பவர்களாகவும் மாறியுள்ளதால் தமிழ் அரசியல் என்பது தீர்மானகரமான சக்தியாக வளர முடியவில்லை. உதாரணமாக, இன்றைய தமிழ் அரசியல் சூழலில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களே இன்றைய அரசியலைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் இயக்க அரசியலைத் தேர்தெடுத்தமைக்குப் பிரதான காரணம் அப்போதிருந்த மிதவாத அரசியல் தலைமைகளின் பொருளாதார அடிப்படைகளை உள்ளடக்காத வெறும் உணர்ச்சி அரசியலின் பெறுபேறுகளாகும். அவை இன்னமும் இந்த அரசியல் கூறுகளில் பிரதிபலிப்பதை நாம் காணலாம். பொருளாதாரப் பற்றாக்குறை, வருமானப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு பிரச்சனைகள் என்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து இன்று வரை தெளிவான திட்டமற்ற அணுகுமுறை காணப்படுவதும், தொடர்ந்தும் அரசியல் தேவைகளுக்கும், பொருளாதாரத் தேவைகளுக்குமிடையே தெளிவான கோட்பாட்டு அடிப்படையிலான தெரிவுகள் இல்லாமலிருப்பதும், தமிழ் அரசியல் இயங்கு சக்திகள் மத்தியில் இணக்கமற்ற போக்குகள் அதிகரித்து வெறும் உதிரிகளாக மாற்றமடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான அரசியல் பிளவுகளுக்கான பிரதான காரணம் நாட்டில் செயற்பாட்டிலுள்ள நவதாராளவாத திறந்த பொருளாதாரமாகும்.       

2009ம் ஆண்டின் பின்னதான மாற்றங்களின் பின்னணி 

2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் எடுத்த முடிவுகள் தற்செயலானது அல்ல, அதற்கு ஒரு வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னதான தமிழ் அரசியலை நோக்கினால் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் பங்களித்துள்ளார்கள். சிங்களப் பாராளுமன்றம் என்றும், அங்கு தீர்வுகளைப் பெற முடியாது என விவாதங்கள் இருந்த போதிலும் மக்கள் பாராளுமன்ற வாக்களிப்பில் பங்களித்துள்ளார்கள். போர்க் காலத்தில் ஏற்பட்ட தடைகளைத் தவிர சகல தேர்தலிலும் அபேட்சகர்கள் போட்டியிட்டுள்ளனர். ஏதோ ஒரு வகையில் அரசுடன் பேசியே வந்துள்ளனர். எனவே தமிழ்த் தேசியத்திற்கான தனியான தனித்துவமான சுயாதீனமான தேர்தல் அணுகுமுறை இருந்ததில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியில் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசியல் கட்சிகளின் வடிவங்களும், அதன் செயற்பாடுகளும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே செயற்பட்டன. போர்க் காலங்களிலும் இலங்கைப் பாராளுமன்றத்தை நோக்கிய அரசியல் அணுகுமுறைகளே செயல் வடிவங்களாக இருந்தன. அதாவது இலங்கைப் பாராளுமன்ற செயற்பாடுகள் தீர்வைத் தராது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்குப் புறம்பான மாற்று அணுகுமுறைகள் பலம்பெறவில்லை.    

தமிழ் தேசியவாதத்தின் பலவீனங்கள் 

இன்று பலர் தமிழ்த் தேசியம் குறித்து சிலாகித்து வருகின்ற போதிலும் இத் தமிழ் தேசியத்திற்கே உரித்தான அல்லது தனித்துவமான சமூகக் கட்டுமானங்கள் எதுவும் இன்று வரை இல்லை. குறிப்பாக,தமிழ் அடையாளங்களைப் பேணும் அல்லது வளர்க்கும் சமூக, கலாச்சார, நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லை. அரசியலுக்கு வெளியில் சுயாதீனமான தமிழ் கலை, கலாச்சாரம், மொழியியல் போன்றவற்றை வளர்க்கும் நிறுவனங்கள் இல்லை. அதாவது அரச கட்டுப்பாடுகளுக்கு வெளியில் மக்களின் பங்களிப்பில் உருவான உள்நாட்டு சுயாதீன கட்டுமானங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் காணப்பட்ட சனசமூக நிலையங்கள்கூட இன்று இல்லை. அதே போலவே தனித்துவமான பொருளாதாரக் கட்டுமானங்களும் இல்லை. உதாரணமாக, கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள், கடற் தொழிலாளர் சங்கங்கள், நெசவாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் என உள்ளுர் அளவிலான சுயாதீன அமைப்புகள் செயற்பட்டன. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியை எவ்வாறு எட்ட முடியும்?  

தமிழ் தேசியவாதத்தின் விளைவுகள் 

இவற்றிற்குப் பதிலாக அரச கட்டுமான இணைப்புகள் மிகவும் பலமான விதத்தில் வளர்ந்து வருகின்றன. உதாரணமாக நாட்டின் பிராந்தியங்கள் பெருந் தெருக்களின் மூலம் இணைக்கப்பட்டுப் பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, சந்தை நடவடிக்கைகளும் துரிதமடைந்துள்ளன. தொலைத் தொடர்பு சாதன வளர்ச்சி காரணமாக நாட்டின் வர்த்தகம், உல்லாசப் பயணத்துறை போன்றன ஒன்றுடன் ஒன்று இணைந்து வருகின்றன. மொத்தத்தில் தெருப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு வளர்ச்சி, இணைக்கப்பட்ட சந்தை ஏற்பாடுகள், பொதுக் கல்வித் திட்டங்கள், வர்த்தகம் மற்றும் தேசிய கொள்கை அமுலாக்கம் போன்றன காரணமாக மிகவும் இறுக்கமாக வலைப் பின்னல் போல பிராந்தியங்கள் ஒன்றில் ஒன்று தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய பிரதான அம்சம் எதுவெனில் தமிழ்ப் பகுதிகளில் அதற்கே உரித்தான தனித்துவமான, சுயாதீனமான சமூகக் கட்டுமானங்கள் என்பன படிப்படியாக அருகி ஒன்றிணைந்த இலங்கை என்ற பரந்த தேசிய கட்டமைப்பிற்குள் வலுவாக இணைந்துள்ளது. அரசியல் கலாச்சரம் என்பது ஒன்றிணைந்த இலங்கைத் தேசிய கட்டமைப்பிற்குள் மத்தியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் அமைகின்றன.  

( தொடரும் )