செருப்படியும், தீவைப்பும்..!      மெல்லப் பதின்மூன்று  இனி:  தப்பிப்பிழைக்குமா..?   சாகுமா..? காலக்கண்ணாடி – 73 

செருப்படியும், தீவைப்பும்..! மெல்லப் பதின்மூன்று இனி: தப்பிப்பிழைக்குமா..? சாகுமா..? காலக்கண்ணாடி – 73 

 —- அழகு குணசீலன் —-

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நல்லாசியுடன் ஆட்சியில் அமர்ந்த நல்லாட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரவிருந்த புதிய அரசியல் அமைப்பு காலத்தால் கனியவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறிவருகிறது. ஒரு நாடு ஒரே சட்டம் பேசும் இன்றைய  அரசாங்கம் மற்றொரு புதிய அரசியல் அமைப்பு பற்றி ஆரம்பத்தில் இருந்தே பேசிப் பேசி தற்போது  அந்த முயற்சி ஒரு  குழு வரை ஆமை வேகத்தில் நகர்ந்திருக்கிறது. 

புதிய அரசியல் அமைப்பு  குறித்த சிபார்சுகளைச் செய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குழு இது. அரசியல் கட்சிகள்,பொது அமைப்புகள்,  குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு சிபார்சுகளைச் செய்வதே இக்குழுவின் கடமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ்பேசும் தேசிய இனங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பலவும்  இனப்பிரச்சினைக்கான ஒரு நீண்ட கால தீர்வை   அடைவதில் முரண்பாடான கொள்கைகளைக் கொண்டுள்ளன. அதுவும் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த,இந்திய -இலங்கை சமாதான உடன்பாட்டின் ஒருபங்காளியான  இந்திய மத்திய அரசை பெரும்பான்மையான தமிழ்தேசியக் கட்சிகள் கோரியிருக்கின்றன.   

இக் கடிதத்திற்கான உடனடிக்காரணம் புதிய அரசியல் அமைப்பில் 13ஐ அகற்றிவிடுவார்கள்  என்ற தமிழ்தேசியத்தரப்பின் அச்சமாகும். இந்தச் சூழலில் அரசியல் அமைப்புக்குழுவின் நியமனம் வெளிவந்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. நிலத்திலும், புலத்திலும் தமிழ்பேசும் தரப்புக்களுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் இந்த முக்கியத்துவத்தை மேலும் கனதியாக்குகின்றன.  

இந்த முரண்பாடுகள் உண்மையில் இந்தியாவின் அனுசரணையுடன் அடையக்கூடிய இலக்குக்கும்,அடையமுடியாத இலக்குக்கும் இடையிலான முரண்பாடாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது . மறுவார்தைகளில் வடித்தால் தமிழ்த்தேசியத்திற்குள்நடக்கும் ஒற்றையாட்சிக்கும், சமஷ்டியாட்சிக்கும் இடையிலான  ஒரு கருத்துப்போர்  எனலாம். இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இந்தியா 1980களில் இருந்து கூறிவருவது என்ன? என்பது இலங்கை அரசியல் அறியாத ஒன்றல்ல. 

தமிழ்பேசும் கட்சிகள்புலம்பெயர்ந்த அமைப்புக்களின் நிலைப்பாடுகள்  

1. அரசாங்கத்தின் பங்காளித் தமிழ்க்கட்சிகளான,ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. என்பன 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்ற  உறுதியான நிலைப்பாட்டை எப்போதும் கொண்டுள்ளன. 2009யுத்தம் முடிவுக்கு முன்னர் இருந்தே இவர்கள் இதைக் கோரிவருகிறார்கள். கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட சமகால  பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சி.சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னிப்பேச்சில் இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். கடற்றொழில் அமைச்சரும்,யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.டக்ளஸ் தேவானந்தா தான் பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்தது முதல் “மத்தியில் கூட்டாட்சி, மாகாணத்தில் சுய ஆட்சி”  என்று கூறிவருகிறார். 

2. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளட் என்பனவும்,விக்கினேஸ்வரனின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக்கோரி இந்தியப்பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். புலிகள் இருக்கும் வரையும்  மாகாணசபையை தீண்டத்தகாத ஒரு அதிகாரப்பகிர்வு அலகாக இவர்கள் கருதினர் என்பது வேறுவிடயம். இந்தியாவின்  பக்கம் தலைவைத்து படுக்கக்கூட இவர்கள் அன்று பயந்தனர். 

3. தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி என்ற திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராகக்கொண்ட கட்சியினர் மாகாணசபையையும், 13வது திருத்தத்தையும் வெறும் பூச்சியம் எனநிராகரித்து “ஒரு நாடு இரு தேசம்” தீர்வை கோருகின்றனர். இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கட்சிகள் இந்திய முகவர்கள் என்றும், 13 வது திருத்தத்தை மக்கள் நிராகரிக்கவேண்டும் என்றும் எதிர்வரும் 30ம் திகதி பேரணி நடாத்தவுள்ளனர். 

4. முஸ்லீம் காங்கிரஸ், தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சிகள் உட்கட்சி சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில் பொதுவாக 13 ஐ ஆதரித்தாலும்,மாகாணசபை கட்டமைப்புக்கள்  கிழக்கு முஸ்லீம் மக்களின் விகிதாசாரம், தனியலகு குறித்த சிந்தனையில் உள்ளனர். நிபந்தனைகளுடன் 13 ஐ இவர்கள் ஆதரிப்பார்கள் என்று கொள்ளலாம். அவர்கள் எதிர்பார்த்த உறுதி தமிழ்தரப்பில் வழங்கப்படாததால் மோடியின் கடிதத்தில் முஸ்லீம்கள் தரப்பில் ஒப்பமிடப்படவில்லை. 

5. மலையக தமிழ்க்கட்சிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் 13 ஐ ஆதரிக்கும் நிலையிலையே உள்ளனர். 13 க்கு அப்பால்- சமஷ்டிவரை என்றதால்தான் இவர்கள் மோடியின் கடிதத்தில் ஒப்பமிடவில்லை. இந்த கட்சிகள் இந்தியாவுடன் முரண்படப்போவதும் இல்லை. 

இதுதான் நிலத்தின் அரசியல் என்றால், புலத்திலும் அதே நிலைதான் காணப்படுகிறது. நிலத்திலும்,புலத்திலும் ஒரு பகுதியினர் 13 ஐ ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள, மறு பகுதியினர் முற்று முழுதாக நிராகரிக்கின்றனர். அண்மையில் லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் “13 ஆரம்பப்புள்ளி அல்ல புதைகுழி” என்று கோசமிடப்பட்டது.  

இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை.சேனாதிராசா போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு “தமிழ்த்தேசியத்தின் துரோகிகள்” என  கூக்குரல் இடப்பட்டது. தமிழ்தேசியத் தலைமைகளின் படங்களை காலால் உதைத்து, துவைத்து,  கிழித்து,செருப்பால் அடிக்கும் காட்சிகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.  இந்திய பிரதமர் மோடிக்கு கையளிக்கப்பட்ட  7 பக்க கடிதம் டென்மார்க்கில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 2009 மே 18 க்குப் பின்னர் தமிழ்தேசிய பாராளுமன்ற அரசியல் எதிர்நோக்கும் மிகப்பெரிய  எதிர்ப்பும் நெருக்கடியும்  இது. இதற்கு யார் பொறுப்பு?பின்னணியில் செயற்படுபவர்கள் யார்? 

1. புலம்பெயர்ந்த நாடுகளில் ஒருகாலத்தில் விடுதலைப்புலிகளின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இயங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு  ஐரோப்பிய நாடுகளில் இருந்து 13ஐ நிராகரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன் ஆதரவுடனேயே விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் பின்னணியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடும் இதுதான் என்று தெரியவருகிறது.  

2. பிரித்தானிய தமிழ் மக்கள் பேரவையை உள்ளடக்கிய உலக தமிழ் மக்கள் பேரவை சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டுகின்ற நிலையில் 13 ஐ ஆதரிக்கும் என்றே கொள்ளவேண்டியதாக உள்ளது. ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இவர்கள் சாதகமாகப் பார்த்துள்ளனர். இந்த அமைப்பையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதரவாளர்கள் சிறிலங்கா அரசின் கையாட்கள் என்கின்றனர்.  

3. இந்தியாவில் உள்ள ஈழ ஆதரவாளர் அமைப்புக்கள் மௌனம் காக்கின்றன. காசி ஆனந்தன் மோடிக்கு அனுப்பிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எதிராக புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வெளிவந்த எதிர்ப்புக்குரல் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்புண்டு. அது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முழுமையாக பேசவில்லை என காசி ஆனந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டது. காசி ஆனந்தன் மோடியின் இந்துத்துவ தீவிர சக்திகளுடன் இணைந்து செயற்படுகிறார் என்பதும்  மற்ற ஒரு குற்றச்சாட்டு.  

4. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப்பகிர்வை கோருகின்ற சிவில் அமைப்புக்களில் கிழக்கில்  செயற்படும் அதிகாரப்பகிர்வு இயக்கம் முக்கியமானது. அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையின் பங்களிப்புடன் மற்றைய கட்சிகளையும்,அமைப்புக்களையும் இணைத்து செயற்படுகிறார்கள். இந்த அமைப்பு  13 இல் உறுதியாக உள்ளது. 

5. வேறு சிவில் அமைப்புக்கள் என்று நோக்கினால் பிருபி, வாழ்வரிமை இயக்கம், வடக்கு கிழக்கு ஆயர்கள் அமைப்பு, அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள்  ஆட்சிக்குழு  போன்ற வற்றைக்குறிப்பிடலாம். இவர்கள் அண்மைக் காலங்களாக தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை சுயவிமர்சனம் செய்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் இன்று தமிழ்த்தேசியம் நிலத்திலும், புலத்திலும்  இந்த விவகாரத்தில் இரு கூறுகளாக பிரிந்து நிற்கின்ற நிலையில் “நமக்கேன் வீண் வம்பு” என்ற நிலைதான்  இவர்களின் நிலைப்பாடு. (?.) 

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் கரங்கள் நிலத்திலும், புலத்திலும் நீண்டிருக்கின்ற இன்றைய சூழலில்,  30ம்திகதி நடைபெறவுள்ள பேரணிக்குப் பின்னாலும்,  தொடரப்போகும் நிகழ்வுகளுக்கும் பின்னாலும், புலத்தில் இடம்பெற்றுவரும் 13 க்கு எதிரான அறிக்கைகள், கருத்துவெளிப்பாடுகள்,ஆர்ப்பாட்டங்கள், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பின்னாலும் புலிகளின் அரசியல்  பிரிவு உள்ள நிலையில் நிலத்தில்  இந்த அமைப்புக்களிடம் இருந்து வழமைக்கு மாறாக தமிழ்மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் மௌனம் எப்போதும் சம்மதமாக அமைவதில்லை இல்லையா?.  

தமிழ்பேசும் பாராளுமன்ற அரசியல் முன் உள்ள கேள்விகள்…? 

இந்த இனப்பிரச்சினை  தீர்வு அரசியலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்களால் ஜனநாயக ரீதியாக  தெரிவு செய்யப் பட்டவர்களினதும், அவர்களின் கட்சிகளினதும் எதிர்கால நகர்வு எவ்வாறு அமையும்? என்ற கேள்வி எழுகிறது. 

 (*) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்மக்கள் தேசிய முன்னணி 13 முற்றாக நிராகரிக்கிறது. அது ஒரு நாடு, இரு தேசத்தை – முழுமையான சமஷ்டியைக் கோருகிறது. புதிய அரசியல் அமைப்பில் 13 முற்றாக நீக்கப்பட்டால் இந்திய -இலங்கை ஒப்பந்தம் செயலிழக்கும், மாகாணசபைமுறைமை இல்லாது ஒழிக்கப்படும். அப்போது அதை ஆதரித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? அதேபோன்று புதிய அரசியல் அமைப்பு அவர்கள் கோரும் தீர்வை எட்டவில்லை என்றால் இவர்களின் நிலைப்பாடு என்ன? அதாவது பாராளுமன்றத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு  குறைந்த பட்சத் தீர்வைக்கூட காணமுடியாது என்றாகிறது. ஆக, சிறிலங்கா பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இருக்க்கூடிய வேலை என்ன? 

(*)  மோடிக்கு கடிதம் எழுதிய தரப்பினரின் நிலை என்னவாகும். 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இவர்கள் கோரிநிற்க அரசாங்கம் அதை முற்றாக ஒழித்து மாகாணசபைக்கான அதிகாரப்பகிர்வை மறுத்தால் கொள்கைப்படி அதை அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பார்கள் (?). மறுபக்கத்தில் புதிய அரசியல் அமைப்பு மீண்டும் ஒற்றையாட்சியை முதன்மைப்படுத்தி  ஒருநாடு ஒருசட்டம் பேசினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், சகாக்களினதும் நிலைப்பாடு என்ன? 

அது  தமிழ்த்தேசிய  பாராளுமன்ற அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?  அரசியல் அஸ்த்தமனம் அல்லது தற்கொலையாக அமையலாம். 

இந்த வினா முஸ்லீம் கட்சிகளுக்கும், மனோகணேசன் தரப்பினருக்கும் பொதுவானதாக அமைகிறது. ஆனால் பதில் ஒன்றல்ல. 

(*)  புதிய அரசியல் அமைப்பு 13 நீக்கி, இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழி ஒன்றை முன் மொழியாத நிலையில் எதிர்தரப்பில் தேசியகட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் கட்சியின் நிலைப்பாட்டோடு திருப்தி அடைவார்களா? ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மக்கள் சக்தி போன்றனவும் 13 நீக்கப்படுவதை விரும்பி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புண்டு. 13ஐ முதலில் நிராகரித்தவர் சஜீத்தின் தந்தை பிரேமதாசா என்பதை மறுப்பதற்கில்லை.   

(*)  அரசாங்கத்தரப்பை நோக்கினால் ஈ.பி.டி.பி.யும், ரி.எம்.வி.பி.யும் தாம் கோருகின்ற 13ஐ நீக்கி மாகாணசபைகளை இல்லாமல் செய்தால் பிள்ளையானும், டக்ளஸும் இதற்கு எதிராக வாக்களித்து தமது நிலைப்பாட்டின்  உறுதியை வெளிப்படுத்துவார்களா? பிராந்தியத்தில் சுயாட்சியைப் பேசிய டக்ளஸ் இடமும், பிராந்திய அரசியலே எனது மூச்சு என்ற சாரப்படி கூறிவரும் பிள்ளையானிடம் இருந்தும் மக்கள் இதையே எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லையேல் அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு மாகாணசபைக்கு மாற்றான ஒரு அதிகாரப்பகிர்வு அமைப்பை முன் வைக்கவேண்டும் என கோரும் பொறுப்பு இவர்கள் இருவருக்கும் உண்டு. 

(*) அரசாங்க கட்சியைச் சார்ந்த வியாழேந்திரன், அங்கயன், சுரேன் இராகவன்  ஆகியோரின் நிலைப்பாடு என்ன? இவர்கள்  பிராந்திய அரசியல் பற்றி நாம் கணக்கில் எடுக்கவில்லை, தேசிய அரசியல் ஊடாக உரிமையையும், அபிவிருத்தியையும் பெறத் தொடர்ந்து செயற்படுவோம் என்று பிரகடனம் செய்யப்போகிறார்களா?  

அப்படியானால் உரிமையும், அபிவிருத்தியும் பேசுகின்ற டக்களஸ் தேவானந்தாவும், சிவநேசதுரை சந்திரகாந்தனும் அப்படியொரு முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல. ஏனெனில் இவர்கள் பிராந்திய, மாவட்ட கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நிலையில் மலையக, மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு சமமான அணுகுமுறையையும், தந்திரோபாயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக இருக்கும். 

உண்மையில் இது தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்பதாகவும்  அமையும். இலங்கையின் சிறிய கட்சிகளின் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதிதும் அல்ல முதன்முதலும் அல்ல. 

ஜே.வி.பி…. புலிகள்… பிரேமதாசா…. தந்த பாடம்.! 

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும், வடக்கு கிழக்கில் கஜேந்திரகுமார் தரப்பாலும் இந்தியாவுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையானது இந்திய இராணுவமும் புலிகளும் முரண்பட்டுக்கொண்ட அன்றையகாலத்தின் காட்சியை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்விக்கு எம்மைத் தள்ளிவிடுகிறது. 

இந்தச் சூழல் சிங்கள இனவாத ஜே.வி.பி. உடன் கைகோர்த்து புலிகளும் பிரேமதாசாவுக்கு துணைபோன துயரத்தை நினைவூட்டுவதாகும். இது சிறிபெருந்தூர்  ஊடாக முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்த  ஆயுத அரசியல். 13ஐ முற்று முழுதாக அடையாமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இது மிகவும் முக்கியமான காரணம் என்பதை மறுதலிப்பது கஷ்டம். 

இந்த நிலையில் சிங்கள இனவாதிகளின்  கரங்கள் தென் இலங்கையில் ஓங்கி இருக்கின்ற இன்றைய நிலையில், மாகாண சபையை ஒழியுங்கள் என்று கோரிக்கை விடுத்துவருகின்ற நிலையில் மீண்டும் தமிழ்த்தரப்பின் ஒருபகுதி  அவர்களோடு கைகோர்த்து மாகாணசபை முறைமையை, 13ஐ முற்றாக ஒழிக்கப்புறப்பட்டிருக்கிறது. 

எப்படி பிரேமதாசாவுக்கு மிகவும் இலகுவாக நாம் அந்த வாய்ப்பை வழங்கினோமோ அவ்வாறே மீண்டும் அதேவாய்ப்பை ராஜபக்சாக்களுக்கு வழங்கப்போகிறோமா? தமிழ் தரப்பு தங்கள் விரலை எடுத்து தங்கள் கண்களிலேயே குத்திக்கொள்ளப்போகிறதா?. 

13ஐ நிராகரித்தால் சமஷ்டியை அடைவதற்கான வழி என்ன? 

இல்லை ஒரு நாடு இருதேசம் என்றால் அதை அடைவது எப்படி? அகிம்சைப் போராட்ட வழிமுறையா? ஆயுதப்போராட்ட வழிமுறையா?இரண்டு வழிமுறைகளையும் கையாண்டும்  75 ஆண்டுகளாக. இலக்கை அடைய முடியாததற்கான காரணங்கள் என்ன? தனியே சிங்கள தேசியத்திடம் மட்டும் பழியைப்போட்டு தமிழ்த்தரப்பு தப்ப முடியாது.   

அரசியல் கட்சி பேதங்களை, கொள்கைகளை  ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டு சகல  சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. இந்தப் பாரிய பொறுப்பு 13ஐ ஏற்றுக்கொள்கின்ற அனைத்துத் தரப்பிற்கும் உண்டு. கஜேந்திரகுமாரை ஓரம்கட்டி மற்றைய தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். 

 தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இதற்கான தார்மீகப்பொறுப்புண்டு. தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி, அதற்கு அரசாங்க, எதிர்தரப்பில் உள்ள தமிழ்பேசும் உறுப்பினர்களையும் உள்வாங்கி அதிகாரப்பகிர்வுக்கான புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதுவே இந்தியாவுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும். இன்றைய முதல்  தேவை 13ஐ காப்பாற்றுவது மட்டுமே. அதைக் கைநழுவ விட்டால் விட்டதுதான். 

13ஐ தப்பிபிழைக்க வைப்பதே இன்றைய அரசியலின் ஒன்று பட்ட குரலாக ஒலிக்கவேண்டும் ! 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்… அந்தச் சுவர்தான் 13…!! 

 இல்லையேல், 

 ஒப்பரேசன் சக்சஸ் நோயாளி மரணம்.. என்ற நிலைதான் ….!!! 

                                 *…….இருந்ததையும்  இழந்தாய் போற்றி………*