13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தலும் ….., சமஷ்டியை நோக்கிய நகர்வும்!
— அழகு குணசீலன் —
“கூடக்கேட்டால்தான் குறைத்தாவது தருவார்கள்”. இந்த வாசகம் தமிழ் தேசியத்தின் பழங்கதைமட்டுமன்றி, பெரும்கதையும்கூட. வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தனிநாட்டிற்கான எந்த வழிமுறையும் அற்ற தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் மூலைமுடுக்கு எங்கும் பேசிக்கொண்ட ஏமாற்று அரசியல் இது. இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதமும் அதையே நினைவூட்டுகிறது.
தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையான முரண்பாடுகளை மட்டும் கடிதம் மக்களுக்கு அம்பலப்படுத்தவில்லை, அத்துடன் உள்ளடக்க முரண்பாடுகளையும், தெளிவற்ற அரசியல் சித்தாந்தத்தையும், இராஜதந்திரமற்ற தமிழ்த்தேசிய இரட்டை நாக்கு அரசியலையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது.
13ஐ நடைமுறைப்படுத்தக்கோருவதும், சமஷ்டிக் கோரிக்கையும் இருவேறு துருவங்கள். ஒன்று இந்திய, இலங்கை ஒப்பந்தமும், பின்னர் இறுதியாக நல்லாட்சி காப்பாளர்களும் சுட்ட பலகாரம். இவர்கள் பெருமைப்படும் அளவுக்கு கூறிக்கொள்ளும் “பிரிக்கப்படமுடியாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு.”
மற்றையது தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் காணும் 75 ஆண்டு கால கனவு. சர்வஜன வாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை சார்ந்த சமஷ்டித்தீர்வு. இது இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும்? பழுக்கும்….. பழுக்கும்….. என்று காத்திருக்கும் இலவுகாத்த கிளியின் கதை. புதிய அரசியல் அமைப்பு பழுத்தால் 13 அல்லது அதற்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதியினர் நிலத்திலும், புலத்திலும் உரத்துக் குரல் கொடுக்கின்ற இன்றைய “கடிதச் சூழலில்” சமஷ்டிவரை நகர்தல் என்பது சாத்தியமா? அப்படியானால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் என்ன?
இந்தியாவையும் ,அமெரிக்காவையும் இந்த இடியப்பச் சிக்கலுக்குள் கூவி அழைத்தும், சீனாவுக்கு கறுப்புக்கொடி காட்டியும் இதைச் சாதிக்கலாம் என்றால் அது, பூச்சிய அரசியல். இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் தீர்வு கேட்டு நிற்பவர்கள் திடீரென்று ஜனாதிபதி தனது உரையில் இனப்பிரச்சினை தொடர்பாக எதையும் பேசவில்லை என ஆவேசம் அடைகின்றனர். நீங்கள் யாரிடம் கேட்டீர்களோ அவர்களிடம் வாங்கிக் கோள்ளுங்கள் என்று முகத்தில் அடித்துள்ளார் ஜனாதிபதி. தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் தங்களின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதைக்கூட விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது அவர்களின் “இராஜதந்திரத்திற்கு “கிடைத்த பரிசு.
ஆக, இந்தக் கடிதம் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக்கோரும் அதைவேளை, சமஷ்டி பற்றி பேசுவதற்கான காரணம் நிலத்திலும், புலத்திலும் இருந்து தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு எதிராக எழும்குரலை ஆசுவாசப்படுத்துவதற்காகவே. சுமந்திரன் தனது அமெரிக்க, ஐரோப்பிய பயணங்களின் போது புலத்தை நாடிபிடித்துப்பார்த்துள்ளார். அவருக்கான எதிர்ப்பும் அதைத்தான் சொன்னது. இதனால்தான் ரெலோவின் 13ஐக் கோரும் கடிதத்தில் மாற்றம் செய்து சமஷ்டிகோரி தமிழ்பேசும் கட்சிகளையும், மக்களையும் ஏமாற்றி தமிழரசு தமது அரசியலை தற்காக்க முயற்சிக்கிறது.
மறுபக்கத்தில் “ஒருநாடு இருதேசத்திற்கும்” நாங்களும் 24 கரட்தான் என்றும், உங்களைவிடவும் சளைத்தவர்கள் அல்ல என்றும் பதிலளித்துள்ளது தமிழரசு. இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தத்தைக்கொடுப்பதற்கு நிலத்தில் கஜந்திரகுமார் அணியையும், புலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவையும், அண்மையில் ஐரோப்பாவில் ஒன்றிணைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையில் புலிகளின் தலையீட்டை வெளிப்படுத்துவதாக அமையும்.
13 பேசும் கிழக்கின் தனித்துவ அரசியல்….?
13வது அரசியல் அமைப்புத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் தமிழ்தரப்பு எதைப்பேசுகிறது? 13 வது திருத்தத்தின் அத்தியாயம் 1 இன் சரத்து இது.
1.1 : DESERVING TO PRESERVE THE UNITY, SOVEREIGNITY AND TERRITORIAL INTEGRITY OF SRILANKA .
1.4 : ALSO RECOGNISING THAT THE NORTHERN AND THE EASTERN PROVINCES HAVE BEEN AREAS OF HISTORICAL HABITATION OF SRILANKAN TAMIL SPEAKING PEOPLE, WHO HAVE AT ALL TIMES HITHERTO LIVED TOGETHER IN THIS TERRITORY WITH OTHER ETHNIC GROUPS.
ஆக. இலங்கையின் ஐக்கியம், இறைமை, ஆட்புலம் என்பன உறுதிசெய்யப்படுவதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வரலாற்று ரீதியாக தமிழ்பேசும் மக்களின் வாழ்விடங்கள் என்று அங்கீகரிக்கப்படுவதுடன், இந்த ஆட்புலத்தில் அவர்கள் மற்றைய இனக்குழுக்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இதன் அர்த்தம் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சியையும் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களுடன் மற்றையவர்களும் வாழும் பூமி என்று தெளிவாக அங்கீகரிக்கக் கோருவது.
பாரம்பரியமாக வாழ்கின்ற இனங்களுக்குத்தான் வடக்கு கிழக்கு உரித்தானது என்பதல்ல என்பதுடன் மற்றைய வர்களுக்கும் வாழ்வுரிமை உண்டு என்று பேசுகிறது 13. அது மட்டுமன்றி தமிழ்த்தரப்பு வடக்கும் கிழக்கும் தமிழர்தாயகம் என்று தமிழ்பேசும் முஸ்லீம்களை தட்டிக்கழிக்கும் அல்லது அவர்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தமிழர்களுக்குள் கரைக்கும் தமிழ்த்தேசிய அரசியலை 13 நிராகரிக்கிறது. அதாவது 13 வடக்கு கிழக்கு முஸ்லீம்களினதும் அல்லது தமிழ்பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதி செய்கிறது.
2.3 : THRE WILL BE A REFERENDUM ON OR BEFORE 31st DECEMBER 1988 TO ENABLE THE PEOPLE OF THE EASTERN PROVINCE TO DECIDE WHETHER :
a) THE EASTERN PROVINCE SHOULD REMAIN LINKED WITH THE NORTHERN PROVINCE AS ONE ADMINISTRATIVE AND CONTINUE TO BE GOVERNED TOGETHER WITH THE NORTHERN PROVINCE AS SPECIFIED IN PARA 2.2.
OR
b) THE EASTERN PROVINCE SHOULD CONSTITUTE A SEPARATE ADMINISTRATIVE UNIT HAVING ITS OWN DISTINCT PROVINCIAL COUNCIL WITH A SEPARATE GOVERNER, CHIEF MINISTER AND BOARD OF MINISTERS.
இங்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசுகின்ற சர்வஜன வாக்கெடுப்பு எது பற்றியது? சுயநிர்ணயம் சார்ந்த தனியரசுக்கானதா? அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சம்பந்தமானதா? விக்கினேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் பிடி கொடுக்காமல் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்.
இது கிழக்கை, வடக்கோடு இணைப்பது என்றால் இங்கு வடக்குக்கு வேலையில்லை. வடக்கு மாகாணத்தோடு இணையவிரும்புகிறார்களா? இல்லையா என்பதை தனியாக கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் நடாத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பில் அங்கு வாழும் அனைத்து இன மக்களும் தீர்மானிப்பர். கிழக்கு மாகாண மக்களுக்கான, சுய தீர்மானம் எடுக்கின்ற அடிப்படை உரிமையை மறுத்து தமிழ்த்தேசியம் வாய்க்கு வந்தவாறு வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது.
இது கிழக்கு மக்களின் தனித்துவ உரிமை. அதை எந்த மேலாதிக்கத்திடமும் அடவு வைக்க மக்கள் தயாரில்லை. எந்த மேட்டுக்குடிக்கும் அவர்களின் விரும்பத்திற்கு மாறாக அவர்களை கட்டிப்போடுகின்ற உரிமையும் கிடையாது .
2.6: A SIMPLE MAJORITY WILL BE SUFFICENT TO DETERMINE THE RESULT OF THE REFERENDUM.
சாதாரண பெரும்பான்மை வாக்குகளின் மூலம் சர்வஜன வாக்கெடுப்பு முடிவு தீர்மானிக்கப்படும்.
இன்றைய கிழக்கு மாகாணசபையின் நிலையானது சர்வஜன வாக்கெடுப்பில் கிழக்கு மக்கள் வடக்கோடு இணையாது வாழ்வதற்கான முடிவை எடுத்ததற்குச் சமமான ஒரு நிலையிலேயே காணப்படுகிறது. தனி ஆளுனர், தனிமுதலமைச்சர், தனி அமைச்சரவை, தனி நிர்வாகக்கட்டமைப்பு. இவை வடக்கும், கிழக்கும் தனித்தனியாக இயங்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளன.
கிழக்குமாகாண முஸ்லீம் மக்களது அபிலாஷைகளையும், மலையக மக்களின் அபிலாஷைகளையும் ஓரங்கட்டி தமிழ்பேசும் என்ற குடைக்குள் இடம்பெற்ற நிகழ்வுகளே ரவூப் ஹக்கீம், மனோகணேசன் தரப்பினர் ஒப்பமிடுவதில் இருந்து விலகிக்கொண்டதன் காரணம். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
முஸ்லீம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படுமானால் முஸ்லீம்களின் விகிதாசாரம் குறைந்துவிடும் என்று அஷ்ரப் காலத்தில் இருந்தே கூறிவருகிறது. முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்பும் மாற்றுத்திட்டம் ஒன்றை முஸ்லீம் மக்களுக்கு முன்வைக்காமல் ஒப்பமிடக்கோருவது எந்த வகையில் அரசியல் அறம். அண்மையில் புகலிட இணையம் ஒன்றில் வெளியான பதிவில் சாணக்கியனிடம் இதுவரை தமிழ் -முஸ்லீம் இனஉறவை வளர்க்க அவர் செய்தவை எவை? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரூபி இல் முஸ்லீம்கள் கலந்து கொண்டதையும், ஆதரவளித்ததையும் தமிழ் அரசியல்வாதிகள் தவறாக விளக்கம் கற்பிக்கின்றனர். அது அன்றைய ஜனாஸா அரசியலின் ஒரு உடனடி தற்செயல் நிகழ்வு. இங்கு பேசப்படுவது கிழக்கு மாகாணத்தின் இன ஐக்கியமும், நீண்டகால இணைந்த அரசியல் பயணத்தை தொடர்வதற்குமான உத்தரவாதம்.
இதை விடுத்து சில சம்பவங்களுக்கு மன்னிப்புக் கோருவதால் மாத்திரம் ஒரு சமூகத்தை ஏமாற்றி விட முடியாது. 1983 வன்முறைக்கு சந்திரிகா மன்னிப்பு கோரினார் அதற்காக தமிழர்களின் எதிர்காலத்தை தமிழ்த்தேசியத் தலைமைகள் விட்டுக்கொடுத்தனரா?
கடிதத்தின் பின்னணியில்……..!
மோடிக்கான கடிதம் கையளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது தொடர்பான கருத்தாடல்கள் தொடர்கின்றன. இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், இன்றைய கல்வி அமைச்சருமான தினேஷ்குணவர்த்தன சொன்னவை இவை…
“வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்கும் மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் தமிழ்பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது. இலங்கை
எனும் எமது நாட்டில் உள்ளகப்பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதியில்லை.” இது வழமையாக மற்றநாடுகளின் தலையீட்டிற்கு எதிராக நாடுகள் கூறுகின்ற கருத்துத்தான்.
ஆனால் இதில் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு விடயம் முக்கியம். இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் சம்பந்தமாக மட்டுமே இந்தியா பேசமுடியும், ஆனால் இந்தியாவே தனது நாட்டில் வழங்காத சமஷ்டி பற்றி இங்கு பேசப்போவதில்லை. சமஷ்டியை வலிந்து உள்ளடக்கியதன் மூலம் 13 குறித்த இந்திய நகர்வுக்கு குறுக்கே நிற்கின்றன தமிழ்த்தேசிய கட்சிகள்.
“இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னொரு நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா? என்பதனை இந்தியாதான் தீர்மானிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார் சிறிதரன் எம்.பி. இதில் வேடிக்கை என்னவென்றால் சீனாவின் தலையீட்டை எதிர்க்கும் சிறிதரன் இந்தியாவைக் கூப்பிடுகிறார். மேலாதிக்கங்களை கையாளுவதற்கு எந்த வெளியுறவு இராஜதந்திர கொள்கைத் திட்டமும் அற்று திணறுகிறது தமிழரசு. இதுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தை இந்த நிலையில் கொண்டு நிறுத்திய அரசியல்.
இவை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து செயற்பட்ட மனோகணேசனின் கருத்து கவனிக்கத்தக்கது.
“13 முதல்படி கூட கிடையாது, அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்” என்பவர்கள் மாற்றுப் போராட்டப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். என்று கஜந்திரகுமார் அணியைச்சாடும் மனோ கணேசன், சுமந்திரன் அணியையும் விட்டு வைக்கவில்லை.
“13க்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் “ஊடகச்சந்திப்புக்களுக்கு அப்பால்” செல்லவேண்டும். ஊடகங்களைப் சந்தித்து அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டுவருகிறான், ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான் என்று அறிக்கை விடுவதெல்லாம் போராட்டம் அல்ல.” என்று சுமந்திரன் பக்கம் திரும்புகிறது இவர் பார்வை.
உண்மையில் சுமந்திரனின் அமெரிக்க பயணத்திற்கு எதிராக சமகாலத்தில் இந்தியா ரெலோவுக்கு நீட்டிய கைதான் இந்தக் கடிதக்கதையின் ஆரம்பம். ரெலோவை இந்தியா முதன்மைப்படுத்துகிறது என்பதை ஏற்கமுடியாத சுமந்திரன் ரெலோவின் கடிதத்தில் தலைப்பு மாற்றம் என்று உள் நுழைந்து காரியத்தை கையில் எடுத்து அமெரிக்காவில் தான் விழுங்கிய சமஷ்டிக்கருத்தை உள்ளடக்கத்தில் சேர்க்கிறார். 13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரல் என்று தொடங்கி சமஷ்டியில் கொண்டு முடித்ததுடன், மலையக மற்றும் கிழக்கு முஸ்லீம்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்படாமல் தமிழ்த்தேசிய அபிலாஷைகள் கடிதத்தை நிரப்பியதால் மலையக, முஸ்லீம் தலைமைகள் கையோப்பமிடமறுத்தன.
இரு தரப்பினதும் நியாயமான இந்த மறுப்பை இருதரப்பையும் கைகழுவி விடுவதற்கே தமிழ்த்தேசியம் கையில் எடுத்துக் கொண்டது.
ஆக, முதற்கோணல் முற்றும் கோணலாக முடிந்தது கடிதவிவகாரம்.
மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் தமிழ்தேசியத்தில் இருந்து மற்றொரு பாடத்தை கற்றுக் கொண்டனர்.
தமிழ்த்தேசிய அகராதியில் கூட்டு என்பது குழிபறித்தல்….. என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது…….!