என் செய்வோம்! என் செய்வோமே!

என் செய்வோம்! என் செய்வோமே!

அன்புடை நண்பன் ‘கனக்ஸ்‘ 

ஆவியைத் துறந்த செய்தி 

இன்றெமை அடைந்த போது 

இதயத்தால் துடித்துப் போனோம்! 

பண்புடை மனிதன் என்றும் 

பழகநல் இனிய நண்பா! 

இன்றுனை இழந்தோம்! ஐயோ! 

என்செய்வோம்! என்செய்வோமே ! 

அம்பாறைத் தமிழர் வாழ 

அடிக்கடி அழைத்துப் ‘போன்‘ இல் 

உம்பாரம் திட்டம் சொல்வாய்! 

ஊருக்காய் உழைத்த செம்மல்! 

‘அம்பாறை மக்கள் மன்றம்‘ 

அமைத்து நற் சேவை செய்தாய்! 

எம்பாரம் இறக்கி வைக்க 

இனியென்ன செய்வோம் நண்பா! 

கவிஞனாய் ஆகிக் ‘கல்கி 

‘தாசன்‘ ஆய் மிளிர்ந்தாயன்றோ! 

புவியினில் வாழ்ந்த மட்டில் 

போற்றநற் பணிகள் செய்தாய்! 

குவியநற் குணங்கள் உன்னில் 

குவலயம் தன்னில் வாழ்ந்தாய்! 

கவியவே சோகம் நெஞ்சில் 

கண்ணீரால் அஞ்சலித்தோம்! 

—  செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் 

(மட்டக்களப்பு, இலங்கை) 

18.01.2022