திறன்நோக்கு (நூல் மதிப்பீடு) “கிழக்கின் சிறுகதைகள்” (நோக்கு- 02)

திறன்நோக்கு (நூல் மதிப்பீடு) “கிழக்கின் சிறுகதைகள்” (நோக்கு- 02)

— செங்கதிரோன்— 

02) பித்தன் (31.07.1921- 15.12.1994) எழுதிய ‘பாதிக் குழந்தை’ (சுதந்திரன்-1952) பக்கம் 09-14  

கலந்தர் லெப்பை முகமது ஷா (கே.எம்.ஷா) எனும் இயற்பெயர் கொண்ட மர்ஹும் பித்தன் எழுதிய கதை. 

சுபைதா தற்போது தான் வாழும் குடிசைக்கு வரும்பொழுது தனியாகத்தான் வந்தாள். வந்த சில நாட்களில் கிழவி (சுபைதாவுக்கு அடைக்கலம் அளித்த கிழவி) காலை நீட்டி விட்டாள். இப்பொழுது சுபைதா தனிமைக்கும் அந்தக் குடிசைக்கும் சொந்தக்காரியாகிவிட்டாள். 

சுபைதா இந்த உலகத்திற்கு வந்து பதினாலு வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எட்டு வருட வாழ்க்கைதான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. தாய் தந்தையர்கள் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இருந்தாள் அவள். தாயின் மடியில் உறங்கிய குழந்தை கண் விழிக்கும்பொழுது தொட்டிலில் கிடப்பதை உணர்வதைப் போல் சுபைதாவுக்கு ஞாபகம் தெரிந்த பொழுது ஹாஜியார் உமருலெவ்வையின் வீட்டில் வேலைக்காரியாக இருந்தாள். 

செல்வம் படைத்தவர் ஹாஜியார் உமருலெவ்வை ஒருமுறை ‘மக்கா’வுக்குப் போய் வந்தவர். 

சுபைதாவுக்குப் பதினாறு வயதாகி பூர்த்தியாகி இளமை பூரித்த நேரத்தில் ஹாஜியாரின் மனைவி காலமாகிவிடுகிறார். 

ஒருநாள் ஹாஜியார் சுபைதாவைக் கெடுத்துவிடுகிறார். அதனால் கருவுற்ற சுபைதாவை ஹாஜியார் வீட்டை விட்டுவெளியேற்றி விட்டார். 

இப்போது தனியாகத் தான் வசிக்கும் அந்தக் குடிசையில் (ஒரு கிழநாயுடன்) தனது உடலில் உருவான புது ஜீவனைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனையில் அவள் தனியே கிடந்து அவதியுறுகிறாள். 

இதுதான் கதையின் ஆரம்பம். 

சுபைதாவால் எழுந்து விளக்கேற்ற முடியாத நிலையில் இருட்டு அவள் குடிசைக்குள் புகுந்து வெகுநேரமாகிவிட்டது. இரவு ஏழு மணியிருக்கும். 

கதையின் பிரதான கட்டங்கள் பித்தனின் எழுத்தில் பின்வருமாறு அமைகின்றன. 

“மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள் சுபைதா. பாதி திறந்திருந்த கதவின் வழியாக வானத்தில் சிதறிக்கிடந்த நட்சத்திரங்கள் தெரிந்தன அவளுக்கு. பிரசவ வேதனைஅதிகரித்துக் கொண்டே இருந்தது. உடல் மெதுவாக அசைந்தது. ‘உம்மா’ என்று முனகினாள் அவள்”. 

“பிரசவ வேதனை நிமிசத்துக்கு நிமிசம் முன்னேறிக்கொண்டிருந்தது. மார்பின் மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்ததுபோலிருந்தது அவளுக்கு. வாயைத் திறந்து மூடினாள் அவள். உடலை அசைக்க முடியவில்லை. எண்ணங்கள் தடைப்பட்டன. பிணம் போல் கிடந்தாள். இதயம் துடித்துக் கொண்டிருந்தது துண்டிக்கப்பட்ட புழுவைப்போல.” 

“மெல்ல மெல்ல உலகம் தெளிவடைந்து கொண்டிருந்தது. இருள் மங்கை தன் முந்தானையை இழுத்து தன்னை மறைத்துக் கொள்ள முயன்றாள். குடிசை வாயிலில் படுத்துக்கொண்டிருந்த நாய் தனது நாலு காலையும் நீட்டி உடம்பை நெளித்தது. அப்பொழுது அதற்கு ஒரு புது வாசனை மூக்குவரை வந்து மோதியது. மோப்பம் பிடித்துக்கொண்டே சுபைதாவை நெருங்கியது அந்த நாய். சுபைதாவின் படுக்கை நீரால் நனைந்திருந்தது. நாய் அவள் முகத்தைத் தாழ்த்தி முகர்ந்து பார்த்தது. அதற்கு என்ன தோன்றியதோ? உறுமிக் கொண்டே தன்னிடத்தில் வந்து படுத்துக் கொண்டது.” 

“சுபைதா மரக்கட்டையாகிக்கொண்டிருந்தாள். அவளது வேதனைக்கும் நீண்ட இரவுக்கும் காரணமாக இருந்த அந்த புது ஜீவன் உதயமாகிக்கொண்டிருந்தது.” 

“குழந்தை பிறக்கும் வரை சுபைதா காத்துக் கொண்டிருக்க வில்லை. முடியவில்லை அவளால். குழந்தையின் உதயத்திற்காக உயிரைப் பிடித்துக்கொண்டிருந்தாள் அவள். ஆனால்! உயிர் அவள் பிடியிலிருந்து பாய்ந்துவிட்டது. சுபைதா பிணமாகிவிட்டாள். குழந்தை கழுத்தை நீட்டி எட்டிப் பார்த்தது. இந்த உலகத்தைப் பற்றி என்ன நினைத்ததோ? பாதி வழியிலேயே தங்கிவிட்டது. பூமியில் குதிக்காத குழந்தை வந்த வழியே போகமுடியாமல் தத்தளித்தது. முடிவு…..? பிறப்பதற்கு முன்பே பிணமாகிவிட்டது அந்தப் பாதிக் குழந்தை”.  

“சிருஷ்டித் தத்துவத்தின் சீர்கேட்டைப்பார்த்து சிரித்திருக்க வேண்டும் அந்த நாய். அது தன் தலையைத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது”  

பொழுது விடியும் வைகறைப் பொழுதைச் சுட்டுவதற்கு “இருள் மங்கை தன் முந்தானையை இழுத்து தன்னைமறைத்துக்கொள்ள முயன்றாள்.” என்று பித்தன் எழுதியுள்ள வரிகள் சிறந்த படிமமாகும். 

இந்தக் கதையின் ஓட்டமும் உத்தியும் கவனிப்புப் பெறுபவை. கதை நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்காக இல்லாமல் முதலில் சுபைதாவின் பிரசவ வேதனையின் ஆரம்பத்தைக் காட்சிப்படுத்திப் ‘பிளாஷ்வாக்’ (Flash back)கில் கதையைச் சொல்லிப் பின்கதையின் இறுதிக் கட்டத்திற்கு வரும் உத்தி கதைக்கு ஒரு கனதியைக்கொடுக்கிறது.  

கதையின் கரு, சுபைதா தன் வயிற்றில் சுமக்கும் கருவையே குவிமையமாகக்கொண்டுள்ளதால் சுபைதாவின் தாய் தந்தையர் யார்? அவளின் குடும்பப்பின்னணி என்ன? தனது முதலாளியால் (எஜமானால்) இம்சிக்கப்பட்டுத் தனது வயிற்றில் அவரின் குழந்தையைச் சுமக்கும் சுபைதா எவ்வாறு அவரின் வீட்டை விட்டு வெளியேறினாள்?சுபைதாவுக்கும் அவளுக்கு அடைக்கலம் அளித்த கிழவிக்குமுள்ள உறவு என்ன? அவர்கள் எங்கே சந்தித்தார்கள்? குடிசைக்கு எப்படிக் குடி வந்தாள்? எவ்வாறு வாழ்க்கையை ஓட்டினாள்? என்பது பற்றியெல்லாம் அனாவசிய விளக்கங்களைத் தவிர்த்து சிறுகதைக்குரிய இறுக்கம் பேணப்பட்டிருக்கிறது. கதையோட்டம் தொய்வில்லாமல் கனகச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

கதையின் உச்சம் (Climax) அதன் இறுதி வரிகள்தான். 

அந்த நாயின் குரலோடு ஒரு மோட்டார் காரின் ஊதுகுழல் சத்தமும் வந்து கலந்து கொண்டது” 

“சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நாலைந்து கார்கள் அந்த வழியேபறந்தன. அதில் முதலாவது காரில்உமறு லெப்பை ஹாஜியார் இரண்டாவதுமுறை மக்கத்து போகின்றார்.” 

கதை இவ்வாறு முடிகிறபோது, இந்த இடத்திலிருந்து வாசகனின் சிந்தனைகள் தூண்டப்பெறுகின்றன. இதுவே சிறந்த கதையொன்றுக்கான அளவீடு. 

இக்கதையின் இறுதி வாக்கியமான ‘……… உமறுலெவ்வை ஹாஜியார் இரண்டாவதுமுறை மக்கத்து போகின்றார்‘ என்பதே இக் கதையைத் தூக்கி விடுகிறது. 

இன்னொருவரின் ஏழ்மையைச் சாதகமாக்கி இன்பம் துய்க்கும் பணக்காரப் போலிப் பிரமுகர்களை இப்’பாதிக் குழந்தை’ கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதெனினும், இக்கதையை முஸ்லிம் அல்லாத ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதியிருந்தால் முஸ்லிம்களின் தரப்பிலிருந்து பலத்த கண்டனங்கள் எழுந்திருக்கும். 

மார்க்க சம்பிரதாயங்கள் -சமாச்சாரங்கள் இன்று போலல்லாது மிகவும் இறுக்கமாகவிருந்ததொரு காலகட்டத்தில் (1952 இல்) முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படியானதொரு கதையைப் படைப்பதற்கு ஓர் ஓர்மம் வேண்டும். அது பித்தனிடம் இருந்திருக்கிறது. 

கிழக்கின் 100 சிறுகதைகளுக்குள் மட்டுமல்ல, இலங்கையின் முதல் நூறு சிறந்த சிறுகதைக்குள் ‘பாதிக் குழந்தை’யையும் உள்ளடக்கலாம். 

இக்கதையின் களம் திட்டவட்டமாகச் சொல்லப்படாவிட்டாலும்கூட கதாசிரியர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதாலும் (மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் பிறந்தவர்) -இப்படி ஒரு சம்பவம் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமமொன்றில் நடப்பதற்கான சாத்தியம் இருப்பதாலும் புனைவு மொழியில் மட்டக்களப்பு மாநில மண்வாசனை அடிப்பதாலும் இதனைக் ‘கிழக்கின் சிறுகதை’ எனக் கொள்வதில் எதுவும் குறைந்து விடப்போவதில்லை. 

அடிக்குறிப்பு  

* இக்கதை முதன்முதலாகச் ‘சுதந்திரன்’ 28.12.1952 இதழில் பிரசுரமானது. 

* டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகைப் பந்தல் (பத்தாவது) வெளியீடாக வந்த ‘பித்தன் கதைகள்’ (1995) நூலில் முதலாவது கதையாக இக்கதை இடம் பிடித்துள்ளது. 

* மட்டக்களப்பு வாசகர் வட்டம் வெளியிட்ட பித்தன் நினைவு மலரில் இக்கதை மீள்பிரசுரிக்கப்பட்டது. 

* இது பின்னர் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ‘செங்கதிர்’ மார்கழி 2009 (வீச்சு – 24) இதழில் மீளவும் பிரசுரம் கண்டது.