கடிதம் எழுதும் முயற்சி: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதை

கடிதம் எழுதும் முயற்சி: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதை

—  கருணாகரன் — 

தமிழ்பேசும் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம், இப்பொழுது வடக்குக் கிழக்கிலுள்ள சில தமிழ்க்கட்சிகள் மட்டும் இணைந்து கொடுக்கும் கடிதமாக மாறியுள்ளது. சில கட்சிகள் இதிலும் இல்லை.  

தமிழ்த்தேசியப் பசுமைக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழர் ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, அகில இலங்கைத் தமிழர் மகாசபை போன்றவை இணைத்துக் கொள்ளப்படவில்லை. 

இதைத் தவிர, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் இதில்லை. இவை இரண்டும் இந்த முயற்சிக்கு அப்பாலனவை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வடக்குக் கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் 13ஐ பொருட்படுத்தவே இல்லை. இது ஒரு கோமாளிக் கூத்து. 13 என்பதே செத்துப் போன பிணம் என்று அது காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. 

ஆகவே இவற்றை இதில் சேர்த்துக் கொள்ளாதது தவறில்லை. 

மற்றும்படி பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகள்தான் இதில் இணைக்கப்பட்டுள்ளன என்றால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (EPRLF) தமிழ்த்தேசியக் கட்சியும் எப்படி இணைக்கப்பட்டன என்ற கேள்வி எழுகிறது? 

ஏனெனில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தமிழ்த்தேசியக் கட்சியும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. இவை அங்கத்துவம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் விக்கினேஸ்வரனே பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர். ஆனால் விக்கினேஸ்வரனுக்குத் தனியாக ஒரு கட்சி (தமிழ் மக்கள் கூட்டணி) உண்டு. 

வடக்குக் கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், இனப்பிரச்சினைத் தீர்வு, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியாவின் பங்கேற்பையும் ஆதரவையும் தமிழ்த்தேசியப் பசுமைக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழர் ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, அகில இலங்கைத் தமிழர் மகாசபை போன்றவையும் ஏற்றுக் கொண்டுள்ளன. 

இதில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி மட்டும் அரசாங்கத்தோடு இணைந்திருக்கிறது. ஏனையவை அரசாங்கத்துக்கு “வெளியில்” இருப்பவை. 

இங்கே ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் குறிப்பிட வேண்டும். இதிலே உள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) இன்னொரு பிரிவாகும். இந்தப் பிரிவினர் முன்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் (EPRLF) இருந்தபோது மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொண்டு அதிலே பங்கேற்றவர்கள். வடக்குக் கிழக்கு மாகாணசபையை ஏற்று ஆட்சி நடத்தியவர்கள். அதற்காக பெரும் விலைகளைக் கொடுத்தவர்கள். நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள். இன்னும் அதனுடைய தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள். இவர்கள் இந்தக் கடிதத்தை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் நிச்சயமாகப் பங்கேற்கும் சூழல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தரப்பை இந்தக் கடித விடயத்தில் மறந்ததும் மறுப்பதும் நியாயமற்றது. 

இதற்குப் பின்னே ஆழமான ஒரு “துடக்கு மனநிலை” செயற்பட்டுள்ளது. தமிழர்களுடைய அரசியலில் ஒரு பெரிய பண்பாகவும் விளைவாகவும் வளர்ச்சியடைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் “தீண்டத்தகாத –துடக்கு மனநிலை” யின் வெளிப்பாடே இதுவாகும். இவ்வாறு சில கட்சிகளைத் தவிர்த்து, சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பயணிக்க முற்படுவது முட்டாள்தனமானது. 

இந்தப் போக்கு ஒரு போதுமே வெற்றியளிக்கப் போவதில்லை. ஜனநாயக நெறிமுறைக்குரியதுமல்ல. ஜனநாயகப் போதாமை உள்ள எதுவும் வெற்றியளிப்பதும் இல்லை. அது நீண்டகால வளர்ச்சிக்குக்குரியதுமல்ல. இதைத் தமிழ் அரசியலாளர்களும் சரி, ஆய்வாளர் என்போரும் சரி, தமிழ் ஊடகங்கள், ஊடகவியலாளரும் சரி புரிந்து கொள்வதே இல்லை. இதனால்தான் தமிழ்ச்சமூகம் எப்போதும் நெருக்கடிப் பட்டுக்கொண்டேயிருக்கிறது. (இது பற்றி விரிவாக எழுத வேண்டும்). 

இப்பொழுது இந்தக் கடிதம் இந்தியப் பிரதமரிடம் கொடுப்பதற்கு முன்பே சந்தித்த துயரக் கதைகளைப் போல, கொடுத்த பிறகும் இன்னும் என்னென்ன சோதனைகளைச் சந்திக்கப் போகிறதோ! என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், கடிதத்தை திட்டமிட்டவாறு இந்தியத் தூதரிடம் ஒப்படைப்பதற்கு முதலே அதன் உள்ளடக்கம் வெளியே கசிந்தமை தொடர்பாக சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இதை விட இந்தக் கடிதம் எழுதத் தொடங்கிய காலத்தில் சேர்க்கப்பட்டிருந்த பல தரப்புகள் இறுதி வரைவில் இல்லாமல் போய் விட்டன. 

இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்தக் கடிதம் தொடர்பாக இந்தியாவுடன் உரையாடல் ஏதும் நடக்க வாய்ப்பிருந்தால், அதில் என்னென்னவெல்லாம் நடக்கும்? அதுவரையிலும் கூட இதில் ஒப்பமிட்டவர்களிடையே இந்தக் கடிதம் தொடர்பாக ஒற்றுமையும் ஒருமித்த நிலைப்பாடும் இருக்குமா என்பது கேள்வியே! 

ஏற்கனவே இதில் மலையகக் கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தன. தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆரம்ப கட்டச் சந்திப்புகளில் பங்கேற்றிருந்தது. இறுதிக்கட்டம் வரையில் அதனுடைய ஒத்துழைப்பிருந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைக் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என்று பேசப்பட்டது. அந்தளவுக்குப் பேசப்பட்ட சங்கதி, ஒடுங்கி, தமிழ் முற்போக்குக் கூட்டணியைக் கூட தொடர்ந்து அனுமதிக்காத நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. 

அதற்கான அகப் புற நிலைமைகளை வடக்குக் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தக் கட்சிகள் புரிந்து கொண்டு இடமளிக்கவில்லை. இது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும். ஆனாலும் “வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு எப்போதும் செயற்படும். அதற்கான ஆதரவை தமிழ் முற்போக்குக் கூட்டணி வழங்கும்” என்று அது பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளது. 

இந்தக் கடித உருவாக்கத்தில் இணைந்து செயற்பட்ட இன்னொரு தரப்பாகிய முஸ்லிம் கட்சிகளும் இடை விலகியுள்ளன. குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவை பங்கேற்றிருந்தன. பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விலகியது. அதைத் தொடர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் விலகியது. இதற்குப் பிரதான காரணம், வடக்குக் கிழக்கு இணைப்பை இவை ஏற்றுக் கொள்வில்லை என்பதும் முஸ்லிம்களுக்கான விசேட அதிகாரம் குறித்த கரிசனையுமாகும். 

இப்படி பல சில்லெடுப்புகளுக்குள்தான் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தக் கடிதத்தில் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய தமிழ்க்கட்சிகளின் பங்கேற்புமில்லை. முஸ்லிம் கட்சிகளின் பங்கேற்பும் இல்லை. சிறுபான்மைத் தேசிய இனத்தினர் என்ற வகையில் தமிழ், மலையக, முஸ்லிம் சமூகங்களின் முழுமையான பங்கேற்பும் இல்லை என்ற நிலையே உள்ளது. 

ஆகவே இந்தக் கடிதத்தின் பெறுமதி என்னவாக இருக்கும்? 

இதை இந்தியத்தரப்பு எப்படி நோக்கப்போகிறது? 

இதை அது எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது? 

இதை இலங்கை எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது? 

சர்வதேச சமூகம் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது? என்ற பல கேள்விகள் உள்ளன. 

ஆனால் தொடர்ந்தும் இதற்குள் நடந்த –நடந்து கொண்டிருக்கும் இழுபறிகள் கொஞ்சமல்ல. இதுதான் பெரும் பலவீனம். 

இது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், தமிழ்க் கட்சிகளுக்குள்ளேயே புரிந்துணர்வும் இல்லை. நேர்மைத்தனமும் இல்லை. தமது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவும் உறுதியும் இல்லை. அர்ப்பணிப்பும் இல்லை. ஏன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டாலே, அதற்குள் எப்போதுதான் ஒற்றுமை இருந்திருக்கிறது? ரெலோவும் தமிழரசுக் கட்சியும் புளொட்டும் இழுபறிப்படுவதொன்றும் ரகசியமுமல்ல. புதியதமல்ல. 

இந்தக் கடிதத்தில் கூட ரெலோவும் தமிழரசுக் கட்சியும் எத்தனை தடவை இழுபறிப்பட்டன? தமிழரசுக் கட்சி இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்ற மாதிரி நடந்து கொண்டது. சுமந்திரன் இந்த முயற்சியைப் பற்றி எள்ளலாகக் கதைத்தார். தனக்கு எதுவுமே தெரியாது என்ற மாதிரி நடந்து கொண்டார் மாவை. 

இப்படி ஏராளம் சிக்கல்கள், சில்லெடுப்புகள். 

எப்படியோ ஒரு கடிதம் இந்தியத்தூதுவருக்கூடாக இந்தியப் பிரதமருக்குச் சென்று சேரப்போகிறது. ஆனால், இதில் மகிழ்ச்சியடைவது சிங்களத் தரப்பும் அரசாங்கமுமே. உண்மையில் தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகள் அனைத்தும் இணைந்த ஒரு கட்டமைப்பும் கோரிக்கையும் எழப்போகிறது. அது எதிர்கால அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறது என்ற ஒரு யோசனையும் எதிர்பார்ப்பும் (அச்சமும்) அரசாங்கத்துக்கும் சிங்களத் தரப்புக்கும் இருந்தது. 

அதை இந்தக் கடிதமும் கடித முயற்சியும் சிம்பிளாக இல்லாமல் செய்துள்ளன. மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்களுக்குள் உள்ள பலவீனத்தையும் தெளிவாக்கியுள்ளது. 

இதைத்தான் இந்தியாவும் கவலையோடு நோக்கும். 

இலங்கையில் உண்மையான மாற்றத்தை விரும்புவோரும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் நலனில் அக்கறையுள்ளோரும் கூட இந்தத் துக்கத்தையே கொள்கிறார்கள். 

இது பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதைதான்.