— அழகு குணசீலன் —
தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மக்களின் தலைவிதியை – தலையெழுத்தை நிர்ணயிப்பதில் கையெழுத்துக்களின் வரலாற்று வகிபாகத்தை இலகுவாக கடந்து செல்லமுடியாது. அகிம்சைப்போராட்ட பாராளுமன்ற அரசியல், ஆயுதப்போராட்ட அரசியல், போருக்குப் பின்னரான சமகால பாராளுமன்ற அரசியல் என்ற தமிழ்தேசிய வரலாற்றுப் பாதையில் தலையெழுத்தும், கையெழுத்தும் எப்போதும் பேசுபொருளே. விதியை மதியால் வெல்லலாம் என்ற நம்பிக்கையூடாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மதியால் வெல்ல கையெழுத்துப்போட்ட விதியின் சதுரங்க விளையாட்டில் தமிழர் அரசியல் சிக்கித்தவிக்கிறது.
இந்த சதுரங்க ஆட்டங்கள் காலக்கண்ணாடியில் விம்பமாக விழும் காட்சிகள் இவை.
(*) . சிங்கள தேசியவாதத்திற்கும் தமிழ்தேசியவாதத்திற்கும் இடையிலான கையெழுத்து விளையாட்டு.
(*) சிங்கள தேசியவாதத்திற்கும், பிராந்திய இந்திய மேலாண்மை வாதத்திற்குமான கையெழுத்து ஆட்டம்.
(*) தமிழ்கட்சிகள், தமிழீழ போராட்ட அமைப்புக்களுக்கு இடையிலான கையெழுத்து பித்தலாட்டம்.
(*) தமிழ்த்தேசிய, முஸ்லீம், மலையக கட்சிகளுக்கு இடையிலான ஆட்சிமாற்ற அதிரடித் கையெழுத்தாட்டம்.
தமிழ் – சிங்கள இருதரப்பு கையெழுத்து .
————————————————-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக, தமிழ்மக்களின். அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாக இரு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஒன்று 1957 யூலை 26ம் திகதி ஒப்பமிடப்பட்ட பண்டா -செல்வா ஒப்பந்தம். இது சிங்கள பேரினவாதிகளின் எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டது . மற்றையது 1965 மார்ச் 24ம் திகதி டட்லி -செல்வா ஒப்பந்தம். இதற்கும் அதேகதிதான். ஆகக் குறைந்த பட்சம் இருதரப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான ஒரு வரலாற்று ஆவணவரலாறாகவே இவற்றைக் கொள்ள முடியும். அதற்கு அப்பால் எதுவும் இல்லை.
இந்த வரலாறுகளையும், அதற்குப் பின்னரான முயற்சிகளையும் நினைவூட்டியதாக இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்படும் தமிழ், முஸ்லீம் கட்சிகளின் ஆவணம் அமையவேண்டும் என்பதே தமிழரசுச்கட்சியினதும், சுமந்திரனதும் வாதமாகும். இதுவே சமகால கூட்டுக் கட்சிகளின் பேச்சுக்களில் “தலைப்பு மாற்றம்” என்று பேசப்படுவதுடன், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ரெலோவின் முக்கிய கருப்பொருளை சற்று திரையிட்டு மூடுபனிக்கூடாக இந்தியாவுக்கு காட்ட எடுக்கும் முயற்சியாக உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை இந்த வரலாறு தெரியாமலா 1983 முதல் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் தலையிட்டு வருகிறது? சொல்லப்போனால் இன்று தமிழ்த்தேசியம் பேசும் பல பாராளுமன்ற அரசியல்வாதிகளை விடவும் இந்த விபரங்கள் இந்தியாவுக்கு மிக நன்றாகவே தெரியும். அந்தளவுக்கு பலவீனமான வெளியுறவுக் கொள்கையையும், இராஜதந்திரத்தையும் கொண்ட நாடு அல்ல இந்தியா என்பதை இவர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களா? அல்லது மூக்கை நேரடியாகத் தொடாது சுற்றுகிறார்களா?
“பிரிக்கப்படமுடியாத ஒற்றையாட்சிக்குள் “தீர்வைத் தேடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 13ஐ மூடிமறைத்து வரலாற்றை முதன்மைப்படுத்த வேண்டியதேவை என்ன? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட கொள்ளவில்லை என்று நிராகரிக்கிறார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாங்கள் அப்படிச் சொல்லவில்லை 13ஐ ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளத்தயார் என்று கூறுகின்றது. 13 ஆரம்பப்புள்ளி என்றால் அதற்கு முந்திய காலாவதியான பூச்சியப்புள்ளி எதற்கு? ஏன்? இந்த தலைப்பு மாற்றம்? இது இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பை தமிழ்த்தரப்பே அழுத்தமாகச் சொல்லாமல் அடக்கி வாசிப்பதாக உள்ளது.
சிறிமா – சாஸ்த்திரி / ஜே.ஆர் -ராஜீவ் கையெழுத்து
1964இல் உடன்பாட்டின் படி 9,75,000 மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிவு செய்யப்பட்டது. 6 இலட்சம் மக்களை மீள அழைக்க இந்தியா இணங்கியது. இலங்கை 3 இலட்சத்து 75 ஆயிரம் பேருக்கு குடியரிமை வழங்க இணக்கம் காணப்பட்டது. இவற்றை எடுத்த எடுப்பில் பல்வேறு காரணங்களினால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. படிப்படியாகவே அது சாத்தியப்படுகிறது.
இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் ஒரு உடன்பாட்டை எடுத்த எடுப்பில் வரிக்குவரி நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச்சிக்கல்கள் ஏற்படும், காலக்கெடுவுக்குள் செய்து முடிக்கமுடியாமல்போகும், மற்றும் இருதரப்பும் எதிர்பாராத, அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதாகும்.
இது எல்லா உடன்படிக்கைகளிலும் இடம்பெறுகின்ற ஒரு பின்னடைவு. ஆனால் இங்கு முக்கியம் என்னவெனில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மறுபரிசீலனையையும், மாற்றுவழிமுறைகளையும் கையாண்டு ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகும். மலையக மக்களைப் பொறுத்தமட்டில் இது நடைபெற்றிருந்தாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்த அணுகுமுறை சம்பந்தப்பட்டவர்களால் கைக்கொள்ளப்படவில்லை. ஆனால் மறுபக்கத்தில் அரசியல் அநாதைகளாக, நாடற்றவர்களாக இருந்த மலையக மக்களின் தலையெழுத்தை அங்கு போடப்பட்ட கையெழுத்துக்கள் முற்றாக கோட்டைவிடவும் இல்லை.
மலையக மக்களின் குடியுரிமை விவகாரத்தை தவிர்த்துப் பார்த்தால் அடுத்த அரசியல் ரீதியான உடன்பாடு இனப்பிரச்சினைக்கான தீர்வான இந்திய -இலங்கை சமாதான உடன்பாடு. 1987 யூலை 29ம் திகதி கொழும்பில் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் கையெழுத்தானது.
அன்றைய காலத்தில் பிரதான போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளின் அங்கீகாரம் இதற்கு பெறப்பட்டிருக்கவில்லை.
புலிகள் அமைப்பு அடிப்படையில் இதனை நிராகரித்திருந்தது. கட்டாயப்படுத்தலின் கீழ் காலச்சூழலின் கைதியாக அவ்வமைப்பு ஆரம்பத்தில் மௌனமாய் இருந்தது.
இத்தனைக்கும் இலங்கை அரச இயந்திரத்திற்கு எதிராக போராடிய மறுதரப்பாக புலிகள் இருந்தார்கள். இங்கு மீண்டும் மாற்றாரின் கையெழுத்துக்கள் தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கின்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. தவறானவர்கள், தவறான ஆவணத்தில், தவறான நேரத்தில் இட்ட கையெழுத்தின் முடிவாக இந்திய இலங்கை சமாதான உடன்பாடு தோல்வியில் முடிந்தது. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க ஒப்பமிட்ட இருதரப்பும் தங்கள் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்ற முன்வரவில்லை. விளைவு, இன்றுவரை 13வது திருத்தம் பேசுபொருளாக உள்ளதுடன், அதன் எதிர்காலம் குறித்து சந்தேகங்களும் எழுகின்றன.
இந்த சூழ்நிலையில் சமாந்தரமாக வட்டமேசை மாநாடுகள், சந்திரிகாவின் தீர்வுப்பொதி, பிராந்திய, சர்வதேச சமாதான முயற்சிகள், நோர்வே சமாதான முயற்சிகள் எனப்பல வந்தன. ஆனால் சமாதானம் மட்டும் வரவில்லை. இவை முழுமையான சமாதான ஒப்பந்த வடிவைப் பெறாவிட்டாலும் ஆங்காங்கே பல்வேறு ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு இருதரப்பாலும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
யுத்தம் முடிந்தது முதல் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தல் குறித்து பேசப்படுகிறது, நல்லாட்சியில் புதிய அரசியல் அமைப்பு குறித்து பேசப்பட்டது. மகிந்த ராஜபக்ச 13+ பற்றி பேசினார். இப்போதும் இன்னொரு அரசியல் அமைப்பு பற்றி கதையாடல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் தமிழ்தேசியக் கட்சிகள் தங்களுக்குள் “கையெழுத்து சண்டையை” எப்போதும் போன்றே இப்போதும் தாராளமாக நடாத்துகின்றன. இதில் தெளிவான அரசியல் இருப்பதாகத் தெரியவில்லை.
இயக்கத்தலைமைகள் இட்ட கையெழுத்து…..!
இலங்கையில் சிங்களத்தைதலைவர்கள் இட்ட கையெழுத்துக்களை மட்டும் தான் நம்பமுடியாது என்றல்ல. தமிழ்தரப்பு தமக்குள்ளே இட்ட கையெழுத்துக்களையும் சரியாக மதித்து கனவான்களாகச் செயற்படவில்லை. அன்றைய தமிழர்கூட்டணி அமைக்கப்பட்டது முதல் இன்றைய தமிழ்தேசியக்கூட்டமைப்பு வரையும், அதற்கும் அப்பால், சமகாலத்தில் ஊடகங்களுக்கு தீனிபோடுகின்ற தமிழ்பேசும் கூட்டும் இந்த வழியில் தான் நகர்கிறது.
இந்தியாவுக்கான ஆவணத்தில் ஒப்பமிடுதல்வரை கையெழுத்துச் சமர் தான் நடக்கிறது. இதில் இருவகையுண்டு. ஒன்று கையெழுத்து இட்டபின் குத்துக்கரணம் அடித்தல் மற்றது கையெழுத்து இடுவதற்கே இணங்காது குறுக்ககாகவும், நெடுக்காகவும் தனிக்காவடியாடுதல். ஜெனிவாவுக்கான ஆண்டுத் திதிக்கும் இதுதான் நிலை.
13 ஆரம்பப் புள்ளியே இல்லை என்று கூறுகின்ற சைக்கிள்காரர் கிழக்கில் வீட்டுக்குள் சவாரி செய்து மாகாணசபைத் தேர்தலுக்கு தயாரிப்பு செய்கிறார்கள். அது வெறும் ஆரம்பப் புள்ளி தான் என்பவர்களும் அதையே செய்கிறார்கள். இப்படி தமிழ்மக்களின் தலையெழுத்து இவர்களின் கையெழுத்துச் சண்டையில் சாகடிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இவர்கள் அனைவரும் மக்களின் அபிலாஷைகளை விடுத்து மற்றவர்களின் விருப்பை நிறைவேற்ற முண்டியடிக்கிறார்கள்.
1984 ஏப்ரலில் ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கின. இதில் 1985இல் விடுதலைப்புலிகளும் இணைந்து கொண்டு 1985, ஏப்ரல் 10ம் திகதி நான்கு இயக்கத்தலைமைகளும் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் ஐந்து அம்சங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
1. சிறிலங்கா அரசின் ஆதிக்கத்தில் இருந்தும், அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறைமையையும் வென்றெடுத்தல்.
2. இலங்கை வாழ் தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனியரசைத் தவிர்ந்த வேறெந்த குறைந்த பட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை.
3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப்போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.
4. தேசிய சுதந்திரம் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திரக் தாய் நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
5. உலக ஏகாதிபத்திய, நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தை பூரணமாக விடுவித்து அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.
இந்த உடன்பாட்டில் வே.பிரபாகரன், சிறிசபாரெத்தினம், நா.பத்மநாபா, மற்றும் வே.பாலகுமார், சங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழர்கள் கட்சி அரசியலில் மட்டுமன்றி, விடுதலைப் போராட்டத்திலும் தாங்கள் இட்ட கையெழுத்தைக் காப்பாற்றவில்லை என்பது வரலாறாகும். இந்த நிலையானது ஈழத்தமிழர் போராட்டத்தை நகர்த்திய திசை எல்லோரும் அறிந்ததே.
இந்தக் கையெழுத்துக்கள் மக்களின் தலையெழுத்தை கொய்தவை.
தமிழ்பேசும் கட்சிகளின் கூட்டு
இந்தியப் பிரதமர் மோடியிடம் ஆவணம் ஒன்றை கூட்டான இணக்கப்பாட்டுடன் சமர்ப்பிக்க முடியாத நிலையில் தமிழ் முஸ்லீம் கட்சிகள் தடமாறுகின்றன.
இவர்கள் போட்டோவுக்கு போஸ்ட் கொடுக்க ஹொட்டல்களில் கூடிக்கலைகிறார்கள்.
சுமந்திரன் தலைப்பை மாற்றப்போய், வரலாற்றை ஆவணப்படுத்தி 13ஐ பின்னுக்கு தள்ள நினைப்பது யாரின் நலன் சார்ந்தது. தென் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றை மேற்கின் விருப்பிற்கேற்ப ஏற்படுத்தும் “நல்லாட்சி -2” நோக்கிய நகர்வா இது?
ஏனைனில் மனோகணேசன், சுமந்திரன், ஹக்கிம் அடிக்கடி ஆட்சிமாற்றம் பற்றியே பேசுகிறார்கள். அமெரிக்காவும் மனோகணேசனை ஊருக்கு அழைத்திருக்கிறது. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த கோரும் ஆவணத்தில் காணிப்பிரச்சினை, பயங்கரவாதச்சட்டம், 13வது திருத்தம், அரசியல் கைதிகள் விடுதலை என்பன முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலையக, முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் பின் இணைப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. சுமந்திரன் விரும்பும் தீர்வுத்திட்ட வரலாறுகளை பின் இணைப்பாக்கி, தமது மக்கள் சார் விடயங்களை உள்வாங்க வேண்டும் என மலையக, முஸ்லீம் மக்கள் தரப்பு கருதுகிறது. இதனால் இத்தரப்புக்கள் கையெழுத்திட இன்னும் தயாராய் இல்லை.
மறுபக்கத்தில் வரலாற்றில் முதல்தடவையாக ஹக்கீம், ரிஷாட் தலைமைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏழு எம்.பி.க்கள் பேச்சுக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கின்றனர். இந்த இடத்தில் இந்திய -இலங்கை ஒப்பந்தம் விட்ட தவறை நினைவுகூருகிறார்கள் அவர்கள்.
ஹரிஷ் எம்.பி. தனது ஊடகச் சந்திப்பில் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணசபைகளாக, முழு அதிகாரங்களுடன் இயங்க வேண்டும் என்பதை ஆவணத்தில் உள்ளடக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அல்லது முஸ்லீம்களுக்கான மாற்றுத்திட்டம் என்ன? என்று தமிழ் தலைமைகளைக் கேட்கிறார்.
மறுபக்கத்தில் மலையகமக்களின் திருப்தியின்மையை
ஏழுபக்க ஆவணத்தில் மலையகமக்கள் பற்றி எதுவும் இல்லை என்று குறைபட்டுள்ளார் மனோ.
ஆக, தமிழர் அரசியல் நோயான சமத்துவம் அற்ற கூட்டு. அரசியல் ஏப்ப உணவுச்சங்கிலி. இதுதான் சிங்களதேசம், இந்தியா, சர்வதேசம், மட்டுமன்றி தமிழரே தமிழருக்கும், சக இனத்தவருக்கும் அப்பம் பங்கிட்ட குரங்கின் கதையாகத் தொடர்கிறது.
புலத்தில் இருந்து……..!
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்பது புதிதாக உருவாக்கம் பெறவுள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழ்த்தேசம் அங்கீகரிக்கும் தோற்றத்தை உருவாக்கிவிடும் பேராபத்தை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் வலியுறுத்தி நிற்கிறோம்”. என்று அந்த அறிக்கை கோருகிறது.
இதன்படி தமிழரசின் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வையும்., 13ஐயும் கூட்டாக நிராகரிக்கிறது ஒருங்கிணைப்புக்குழு.
இதனால்தான் கையெழுத்தாளர்கள் உள்ளடக்கத்தை விடவும் தலையைமாற்றி தலையெழுத்தை மாற்றப்பார்கிறார்களா?
“13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரல்” என்பது ஒரிஜினல்.
பின்னர் அதை சுமந்திரன் “தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கான ஆட்சி அதிகாரப்பகிர்வு” என்று மாற்றினார்.
இப்போது அடிபடும் தலைப்பு
“தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும், இந்திய இலங்கை ஒப்பந்தமும்” என்று தெரியவருகிறது.
ஆக, மொத்தத்தில்……..
மோதகம்………!
கொழுக்கட்டை…….!!
சுருட்டப்பம்…………!!!.