2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு

2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு

  — வி. சிவலிங்கம் — 

நாம் இப்போது கடந்து செல்லும் 2021ம் ஆண்டு உலக மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது. கொரொனா நோயின் தாக்கத்தினை மட்டுமல்ல, பொருளாதார அடிப்படைகளில் பாரிய வெற்றி பெற்றதாக மார்பு தட்டிய பல அரசுகள் தத்தமது பொருளாதாரக் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொரொனா நோயின் தாக்கம் பொருளாதாரக் கட்டுமானங்களின் பலவீனங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சுகாதாரத்துறையின் சீர்கேடுகள் காரணமாக மிக அதிக அளவிலான மக்கள் மரணமடைந்தார்கள். இம் மரணத்தில் அகப்பட்டோரில் பலர் பொருளாதார அடிப்படையில் சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினராக இருந்தார்கள். அவ்வாறாயின் வளர்ச்சியடைந்த நாடு எனப் பீத்திய அமெரிக்காவில் வெள்ளையரல்லாத மக்களில் அதிகமானோர் இக் கொடிய நோயினால் காவு கொள்ளப்பட்டார்கள். இதற்குப் பிரதான காரணம் வருமானப் பற்றாக்குறை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மனிதர்களாக இச் சமூகத்தினர் காணப்பட்டுள்ளார்கள். இவற்றை அவதானிக்கும்போது நாம் கடந்து செல்லும் ஆண்டு பல வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆண்டாகக் கொள்ள முடியும்.  

இப் பின்னணியிலிருந்தே இலங்கையின் இன்றைய நிலமைகளையும் கவனத்தில் கொள்வது தேவையாகிறது. இலங்கையின் அரசியலை நாம் இரண்டு தரப்பாக வைத்து அணுகுவது பொருத்தமானது. அதாவது தென்னிலங்கை என்பதாகவும். மற்றும் வடக்கு,கிழக்கு அமைந்த தமிழ் அரசியல் என்பதாகும். தென்னிலங்கை அரசியல் இன்று ஓர் அடிப்படை மாற்றத்தை நோக்கியதாக செல்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் கட்டமைப்பு படிப்படியாக மாற்றமடைந்து ஓர் குழு ஆதிக்க அல்லது குடும்ப ஆதிக்க அரசியலாக மாற்றமடைந்துள்ளது. இம் மாற்றங்கள் போரின் வெற்றியோடு இணைத்து எடுத்துச் செல்லப்பட்டதால் ராணுவத்தின் பங்களிப்பு அரச தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு மாற்றமடைந்துள்ளது. தேர்தல்முறை மாற்றங்களும், அரசியல் யாப்பு மாற்றங்களும் பாராளுமன்றத்தின் செயற்பாட்டை முடக்கி ஜனாதிபதியின் ஏகபோக அதிகாரத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளது.  

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம், போர் வெற்றியின் முழக்கங்கள் என்பனவற்றுடன் ராணுவ வாதமும் இணைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு என்பது பெரும் ஆபத்தில் இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள் ஆரம்பத்தில் முஸ்லீம் தீவிரவாத சக்திகளின் செயற்பாடாக ஊடகங்களும், நாட்டின் ஒருதலைப்பட்ச ராணுவ செயற்பாடுகளும் அடையாளம் காட்டி ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் நாட்டின எதிரிகளாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் பலமான இரும்புக் கரங்கள் அவசியம் என ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட வகையில் பிரச்சார உத்திகளுடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பல உண்மைகளை மிகவும் மறைத்தே சென்றது. கொரொனா நோய் தீவிரமாக பரவிய வேளையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிய அரசியல்வாதிகள் தற்போது நோயின் தீவிரம் குறைந்த வேளையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தயங்குகின்றனர். 

உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காணுவதை விடுத்து அல்லது அதற்கான விசாரணைகளை நடத்துவதைத் தவிர்த்து தொடர்ந்து சாட்சியங்களைத் தேடுவதாக சாக்குப்போக்குச் சொல்லி விசாரணைகள் இன்னமும் இல்லை. ஆனால் இச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணைக்குழவின் அறிக்கையின் முக்கிய பகுதிகள் அரச தரப்பால் பாதுகாப்புக் காரணங்களை அடிப்படையாக வைத்து உண்மைகளை மூடி மறைக்க எண்ணுவதாக சந்தேகங்கள் பலமாக எழுந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு சம்பவங்களால் பலனடைந்த ஆட்சியாளர்களே இச் சம்பவங்களின் பின்னணியில் செயற்படுவதாக எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் தற்போது சந்தேகங்களை வெளியிடுகின்றனர். ஆனால் அரச தரப்பினர் வெளிநாடுகளை உதாரணம் காட்டி உண்மைகளை மறைக்க எண்ணுகின்றனர். உதாரணமாக,அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல வருடங்கள் எடுத்ததாகக் கூறி அதேபோன்ற நிலை இலங்கையிலும் இருப்பதாக நியாயம் கற்பிக்கின்றனர்.  

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. பொதுமக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களுக்காக கடைகளின் முன்னால் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அகற்றப்பட்டுள்ளதால் விலையேற்றம் வானைத் தொட்டுள்ளது. அரசி, மாவு, பருப்பு, மரக்கறி வகைகள் என உணவுப் பொருட்களும் எரிபொருள், எரிவாயு மற்றும் விவசாய பசளை வகைகளும் விலை அதிகரித்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு 2022 இல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன. 

தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு ராணுவத்தின் மூலம் மக்களின் குரல்வளைகளை நசுக்கத் தயாராகி வருகிறது. எவ் வேளையிலும் ராணுவ ஆட்சி ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. எதிர் தரப்பு அரசியல்வாதிகள் தமக்கு உயிராபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை ஆட்சியை அகற்றுவோம் என்ற அச்சத்துடன்கூடிய உரைகளை தற்போது விதைத்து வருகின்றனர். மாணவர், ஆசிரியர், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் வீதியில் இறங்கியுள்ளனர். தேசத்தின் பல பிரிவு மக்களும் ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளதாகக் கூறி பதவியிலிருந்து விலகும்படி கோரி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் இப் பிரச்சனைகள் தற்காலிகமானது எனவும், ஆறு மாதங்களில் நிலமை சீராகிவிடும் எனக் கூறி அதிகாரத்தில் தொடர்ந்து குந்தியிருக்கின்றனர்.  

நாட்டின் இன்றைய நிலை மிக மோசமானது. நாட்டின் ஆட்சிமுறை பலவீனமடைந்துள்ளது. மந்திரிசபை உறுப்பினர்களே தமது அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் நிலை காணப்படுகிறது. பாராளுமன்ற அதிகாரம் முற்றாகவே பறிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைத்த பின்னரும் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அரசிற்கு வாக்களித்த மக்கள் பதவி விலகுமாறு கோரும் அளவிற்கு மாற்றங்கள் காணப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்ற போர்வையில் அரச ஆதரவாளர்கள் நாட்டின் வழங்களை மிக அப்பட்டமாகவே சூறையாடும் நிலை உள்ளது. அரசாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் மிகவும் வெளிப்படையாகவே ஊழலில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாமான்ய மக்கள் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். நாட்டில் வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை மிகவும் அதிகரித்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், யந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள், எரிபொருள் என்பன இறக்குமதி தடைப்படுத்தப்பட்டுள்ளது.  

இவ்வாறான ஒரு பின்னணியில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அரசாங்கத்தை மாற்றவேண்டுமென ஒரு சாராரும், இன்னொரு சாரார் நாட்டின் அரசுப் பொறிமுறையில் மாற்றங்கள் அவசியம் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. இவ் விவாதம் தொடர்பாக நாம் ஆழமான கவனத்தைச் செலுத்துதல் அவசியம். அரசாங்கத்தை மாற்றுவதாயின் மாற்று அரசாங்கம் எவ்வாறானது?என்ற வாதம் அவசியமானது. மாற்று அரசின் கொள்கைகள் குறித்த விபரங்கள் இல்லாமல் ஆட்சியை மாற்றுவது என்பது 2005இல் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஸ 2015 இல் மைத்திரி தலைமையில் அகற்றப்பட்டார். எதுவித திட்டங்களுமில்லாமல் பதவியைக் கைப்பற்றிய மைத்திரி – ரணில் அரசு உள் முரண்பாடுகளால் தோல்வி அடைந்தது. 2015 – 2019ம் ஆண்டுவரை இந்த ஆட்சியாளர்களால் நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியவில்லை. ஒரு புறத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடிகள், மறு பக்கத்தில் ஐ தே கட்சிக்குள் நெருக்கடிகள், இன்னொரு பக்கத்தில் ஐ தே கட்சி, சுதந்திரக் கட்சி நெருக்கடிகள் என பிரச்சனைகள் அதிகரித்துச் சென்றன. மைத்திரி – ரணில் அரசினால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஈற்றில் எந்த ஆட்சியாளரை 2015இல் மக்கள் தோற்கடித்தார்களோ அதே ஆட்சியாளரை மீண்டும் 2019இல் பதவியில் அமர்த்தினார்கள். தற்போதைய நிலமைகளை அவதானிக்கையில் 2015இல் மக்களே தோல்வி அடைந்தார்கள். தற்போது 2021 இலும் மக்களே தோல்வி அடைந்துள்ளார்கள். எனவே ஆட்சியை மாற்றுவதால் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என்பதை மக்கள் நன்கு உணர்கிறார்கள்.  

இங்கு எமக்கு முன்னால் உள்ள கேள்வி எதுவெனில் இன்றுள்ள ஆட்சியாளரை மாற்றுவது மட்டுமல்ல, ஆட்சிப் பொறி முறையையும் மாற்றும் ஓர் அரசியல் வேலைத் திட்டம் தேவை என்பது தற்போது மக்களால் மிகவும் உணரப்பட்டு வருகிறது. இதுவே இன்று சிங்கள அரசியலில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகிறது. மிகவும் ஊழல் மயப்படுத்தப்பட்டு அரச பொறிமுறை பழுதடைந்த நிலையில் முற்றான மாற்றம் ஒன்றை நோக்கிச் செல்வதே மிக அவசியமானது என்ற வாதங்கள் எழுந்துள்ளன. எனவே புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றிற்கான, நாட்டின் சகல மக்களும் தாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கிய பாதையில் அழைத்துச் செல்வதற்கான புதிய அரசியல் செல்நெறி குறித்த வாதங்களே தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.  

நாட்டின் சகல பிரஜைகளும் தாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கிச் செல்வதாயின் பலமான விட்டுக் கொடுப்புகள் மிக அவசியமானவை. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் பின்பற்றப்பட்டு வந்த அரசியல் கலாச்சாரம் தனி இரவில் மாற்றமடைய முடியாது. அதே போலவே புதிய அரசியல் கலாச்சாரத்தையும் தனி இரவில் கொண்டுவந்துவிடவும் முடியாது. ஆனால் புதிய பாதை என்பது மக்கள் மனதில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளைத் தோற்றுவிக்கும் அடிப்படைகளை ஆரம்பத்தில் கொண்டிருப்பது அவசியமாகிறது. இலங்கை என்பது பல்லினங்கள், பல மதங்கள் பின்பற்றப்படும் பன்மைத்துவ நாடு என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நாட்டில் பல்லினங்கள் வாழுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அச் சமூகங்களின் தனித்துவ அடையாளங்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. அவற்றைப் பாதுகாக்கவும், வளர்க்கவுமான ஏற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறான ஆரம்ப அடிப்படைகள் சகல மக்கட் பிரிவினராலும் ஏற்கப்படுவது அவசியமாகிறது. இவ்வாறான அடிப்படை மாற்றங்களை நோக்கிய வாதங்கள் சிங்கள அரசியலில் தற்போது மிகவும் வெளிப்படையாகவே விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இங்கிருந்தே நாம் தமிழ் அரசியலின் ஆரம்பத்தையும் தொடங்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் என்பது பிரிவினை அரசியல் அடிப்படைகளிலேயே இயங்கியது. மத்திய அரசோடு அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் அதன் இயக்கம் என்பதன் மையவிசை பிரிவினையாகவே இருந்தது. இப் பிரவினை அரசியலின் பிரதான அம்சமாக தமிழ் தேசியம் என்ற பெயரில் ஒரு குறுந்தேசியவாதமே செயற்பட்டது. போரின் தோல்வியும், அதன் விளைவாக கிடைத்த சர்வதேச பெறுபேறுகளும் பிரிவினைவாத அரசியலின் இயலாமையை அடையாளப்படுத்தின. இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு யுத்தம் என்பது இரண்டு வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் நடந்தது. அதாவது ஒரு புறத்தில் இந்திய உதவிகள், மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்கள். இவையிரண்டுமே இன்று இடையூறாகவும் உள்ளன. இந்தியா பிரிவினைக்கு ஆதரவாக இல்லை. புலம்பெயர் தமிழர்களில் ஒரு பிரிவினர் புலிகளின் தோல்வியைத் தமது தோல்வியாக கருதி குறைந்தது புலம்பெயர் தேசங்களிலாவது தமது கற்பனைத் தமிழீழத்தை நிர்மாணிக்கும் கனவில் வாழ்கிறார்கள்.  

சமீப காலமாக வட பகுதியில் தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் தேசியம் என்பது இன்னமும் வாழுவதாக நம்பவைக்கப்படுகிறது. ஆனால் அது எவ்வகையானது? அதன் பரிமாணம், ஆற்றல் குறித்து யாரும் கூறுவதாக இல்லை. அது மட்டுமல்லாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் இன்றுவரை தொடர்கிறது எனில் அதன் தோல்வி அல்லது வெற்றி பற்றிப் பேசவேண்டும். நாம் கடந்த 70ஆண்டுகளுக்கு மேலான தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை நோக்கும்போது அது வாக்குவங்கி அரசியலாக மாற்றம் பெற்றுச் சென்றதாகவே முடிவடையும். இத் தமிழ்த் தேசியம் என்பது முற்போக்குக் குணாம்சங்களைக் கொண்டிருக்குமாயின் அது தமிழ்ச் சமூகத்தின் சகல பிரிவினரையும் தன்னகத்தே அணைத்துச் சென்றிருக்க வேண்டும். நாட்டின் இதர தேசிய இனங்களுடன் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒன்றிற்கொன்று இணைந்து சென்றிருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியவாதம் படிப்படியாக இனவாதமாக மாறி சிங்கள சாமான்ய மக்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்க அல்லது உடன்பட்டுச் செல்லத் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவுதான் போரும், அதனைத் தொடர்ந்த விளைவுகளுமாகும்.  

தமிழ் அரசியல் தற்போது தனது அரசியல் மற்றும் சமூக, பொருளாதாரக் கண்ணோட்டத்தினை மாற்றி அமைத்தல் அவசியமானது. ஏனெனில் சிங்கள அரசியலும் தன்னகத்தே பல முரண்பாடுகளுக்கு ஊடாக நாட்டின் அரசியல் பொறிமுறை மாற்றம் ஒன்றின் தேவையை நோக்கிச் செல்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் கோர முகங்களை அம் மக்கள் மிகவும் நிதர்சனமாகக் காணுகின்றனர். சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அதிகார குவிப்பையும், ராணுவ ஆட்சியையும், ஒரு குழுவினரின் கைகளில் ஒப்படைக்கும் நிலமையை நோக்கிச் செல்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாட்டை மிகவும் அப்பட்டமாகக் கொள்ளையடிப்பதை நாட்டு மக்களே பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு போதும் நடந்ததில்லை. மக்கள் தமது வாக்குப் பலத்தை இப்போது மிகவும் பலமாக உணர்கிறார்கள். தாம் நாட்டின் பாதுகாப்பின் பேராலும், பௌத்த இனவாத சந்தர்ப்பவாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளதை மிகவும் வெளிப்படையாகக் காண்கிறார்கள்.  

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மக்களால் ஒருபோதும் அனுபவிக்கப்படவில்லை. முற்றிலும் புதிதானவை. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக நுகர்வோராக மாற்றப்பட்டுள்ள மக்கள் இறக்குமதித் தடைகளாலும், உள்நாட்டு உற்பத்திக் குறைவினாலும் தமது வாழ்க்கைத் தரம் கிடுகிடுவென இறங்குவதை உணர்கிறார்கள். பணவீக்கம் காரணமாக பணக்காரர்களும் தமது பணத்தின் பெறுமதி குறைவதைக் காண்கிறார்கள். இளைஞர் சமூகம் ஆயிரக் கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறத் தயாராகிறார்கள்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சமிக்ஞைகள் புதிய செய்தியை மக்களுக்கு வழங்குகிறது. அதுவே ஆட்சிப் பொறிமுறை மாற்றம். இதனை தமிழ் அரசியல் காண மறுக்கிறது. நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு ஆட்சிக் கட்டுமானம் தோல்வி அடையும் நிலைக்குச் செல்லும் நிலையில், இதனைப் பயன்படுத்தி தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டம் போடாமல் 13வது திருத்தம் பற்றிப் பேசுகிறது. மத்தியில் ஜனநாயக ஆட்சி அற்ற நிலையில் மாகாணங்களில் எவ்வாறு சுயாட்சி சாத்தியமாகும்? தமிழ் அரசியல் தற்போது பாராளுமன்ற அரசியலிலிருந்து தனது கவனத்தை மாற்றி மாகாண அரசியலை நோக்கித் திரும்பியிருக்கிறது. ஏனெனில் பாராளுமன்றத்திற்கான ஆசனம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாகாணத்திற்குள் அதிகாரத்தைச் செலுத்தும் வாக்குவங்கி அரசியல் ஆரம்பித்துள்ளது.  

நாம் இங்கு சில கேள்விகளை முன்வைத்து நோக்கலாம். தற்போது 13வது திருத்தத்தின் நிலை என்ன? இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த யோசனைகள் இன்றும் உள்ளனவா? மூன்றாவது அட்டவணையில் குறிப்பிட்ட பகுதிகளைக் காரணம் காட்டி மாகாணங்களின் அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை நிவிர்த்தி செய்ய முடிந்ததா? விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது அதிகாரம் போதவில்லை என்றுதானே கூறினார்? இப்போ அவரது நிலைப்பாடு என்ன?  13வது திருத்தம் தொடர்பாக இன்றைய அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களால் மாகாணசபைகளை இயக்க உதவ முடியுமா? 13வது திருத்தத்தை ஆரம்பமாகக் கொள்ளலாம் என்றால் எங்கிருந்து ஆரம்பமாகக் கொள்வது? இன்றுள்ள நிலை ஆரம்பமாக இருக்குமா?  

தற்போது இலங்கையில் அரசினால் மட்டுமல்ல இதர தரப்பினராலும் புதிய அரசியல் யாப்புப் பற்றிப் பேசப்படுகிறது. ஆட்சிப் பொறிமுறை தோல்வியடைந்துள்ளதாக விரிவான விவாதம் நடக்கிறது. மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந் நிலையில் தமிழர் அரசியல் 13வது திருத்தத்திற்குள் முடங்கியிருப்பதன் நோக்கமென்ன? பிரிக்கப்படாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல் அடிப்படையில் தீர்வுகளைக் காண விரும்புவதாக தெரிவித்த கூட்டமைப்பினர் புதிய அரசியல் யாப்பு பற்றிய விவாதங்கள் குறித்து மௌனமாக இருப்பதன் காரணமென்ன? இங்கு 13வது திருத்தம் தேவையா?தேவையில்லையா? என்பதை விட நாடு முழுவதற்குமான அரசியல் யாப்பு மாற்றம் ஒன்றிற்கான விவாதங்கள் நிகழ்கையில் தமிழ் தலைமைகள் 13வது திருத்தம் பற்றி மட்டும் பேசுவதன் உள் நோக்கம் என்ன?  

இலங்கை அரசியல் தற்போது பாரிய அடிப்படை மாற்றங்களை நோக்கிச் சென்றுள்ளது. நாடு முழுவதும் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டு. இனவாதிகள் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சகல சமூகங்களும் ஐக்கியப்பட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களை தமிழ் அரசியல் புறக்கணித்துச் செல்லும் நோக்கம் என்ன? அமெரிக்காவும், இந்தியாவும் தீர்வுகளைத் தரும் என இலவுகாத்த கிளி போல் போலி அரசியல் செய்யும் நோக்கமா? 

சமீப காலமாக தமிழ் அரசியலில் சீனா தொடர்பான விவாதங்களும் இடம்பெற்று வருகிறது. இதனை அவதானிக்கும்போது தமிழ் அரசியல் சர்வதேச அரசியலிற்குள் தனது காலைப் புதைத்திருப்பது தெரிகிறது. சீனாவுக்கு எதிராக பேசுவதன் மூலம் தம்மை இந்திய விசுவாசிகளாக அடையாளப்படுத்தும் முயற்சியே நடக்கிறது. தமிழரசுக் கட்சி இவ்வாறாக சீனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது இதுவே முதற்தடவை. தமிழர் பிரச்சனையில் அல்லது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை. அவ்வாறு தலையிட்டால் இந்தியாவினால் அதனைக் கையாள முடியும். தமிழர் தயவு தேவையில்லை. இங்கு எமது கவனம் எதுவெனில் தமிழ் மக்கள் தொடர்பாக சீனா எவ்வித தலையீடும் செய்யாத நிலையில் தமிழ் மக்களை தேவையற்ற விதத்தில் சீனாவுக்கு எதிராக நிறுத்துவதன் நோக்கமென்ன? சீனாவின் உதவிகள் தமிழருக்குத் தேவையில்லை என்பதா? பூகோள அரசியல் குறித்து எவ்வித கொள்கையும் இல்லாத தமிழரசுக் கட்சி தற்போது சீனாவுக்கு எதிராக பேசுவது பூகோள அரசியல் போட்டிக்குள் தமிழ் மக்களை இணைத்துவிடும் ஆபத்தாகவே தெரிகிறது. சீனாவின் தலையீடுகள் இலங்கையின் அல்லது இந்தியாவின் இறைமைக்கு ஆபத்து எனில் இரண்டு நாடுகளும் பேசி முடிவு செய்யலாம். இல்லையேல் கட்சிக்கு ஒரு வெளிநாட்டுக் கொள்கை இருந்திருக்க வேண்டும். இதில் இன்னொரு அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதாவது அதிகார பரவலாக்கம் தொடர்பாக நாம் ஆராய்ந்தால் சீனாவில்தான் பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்குலக நாடுகளை விட சீனாவில் உள்ளக சுயநிர்ணய உரிமை அதிகம் செயற்படுத்தப்படுகிறது. தற்போதைய அரசியல் நிலையில் சீனாவை உதாரணம் காட்டுவதும் சீன சார்பு எனக் கொள்ளப்படும் நிலை ஏற்படலாம். எனவே தமிழ் மக்களை இந்தியாவுக்கு ஆதரவாக எடுத்துச் செல்வதை விட சீனாவுக்கு எதிரிகளாக தேவையற்ற விதத்தில் எடுத்துச் செல்வது தமிழ் மக்களுக்கு மிகவும் பாதகமானது.                 

தமிழ் அரசியல் தனது நிலைப்பாட்டை மாற்றி புதிய பாதையை நோக்கித் திரும்பவது அவசியமானது. இலங்கைத் தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் குறித்த விவாதங்கள் நிகழ்கையில் அதில் கலந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்களில் ஈடுபடுவது பிரிவினைவாத அரசியலின் நிழலாகவே தெரிகிறது. உலகம் முழுவதிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தமது அடையாளங்களைத் தொலைத்தே வாழ்கிறார்கள். இதர இனங்களுடன் இணைந்தே வாழ்கிறார்கள். பொது அடையாளத்தை ஏற்றே வாழ்கிறார்கள். எனவே இலங்கைத் தீவில் பன்மைத்துவ ஜனநாயக அரசியல் கட்டுமானத்தைப் பலப்படுத்தி சகல தேசியங்களும் தத்தமது அடையாளங்களைப் பேணும் வகையில் சுயாட்சி ஆட்சிக் கட்டுமானங்களை நிறுவி மத்தியில் பலமான ஜனநாயக அரசை நிறுவுவதற்கான விவாதங்களில் தமிழ் அரசியல் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என வற்புறுத்த விரும்புகிறோம்.