கடவுள்: ஒரு கருத்து மோதல்! (காலக்கண்ணாடி – 69)

கடவுள்: ஒரு கருத்து மோதல்! (காலக்கண்ணாடி – 69)

— அழகு குணசீலன் — 

2020 ம் ஆண்டு  நவம்பர் 23 ம் திகதி ஏக காலத்தில்  ஜேர்மனி, சுவிஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட ஆவணத்திரைப்படம் “கடவுள்”. 

ஆஸ்திரியாவின் வியன்னாவில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் காரணமாக அன்றையதினம் அங்கு திரையிடமுடியவில்லை. 2021 மார்ச்சில் கடவுள் அங்கு தோன்றினார்.   

இப்படம் குறித்து பொதுவாக மேற்குலகிலும், சிறப்பாக ஜேர்மன்மொழி பேசும் ஐரோப்பிய தளத்திலும் அதிகம் பேசப்படுகிறது. அந்தளவுக்கு வாழ்வரிமையையும், மரண உரிமையையும் கேள்விக்குட்படுத்துகின்றது “கடவுள்”. பிறப்பும், இறப்பும், இடைப்பட்ட மனித வாழ்வும் பேசப்படும்போது எப்போதும் கடவுளும் கூடவே இருக்கிறார் என்பதுதானே மதங்கள் தரும் நம்பிக்கை. 

மத்திய ஐரோப்பாவில் கிறிஸ்த்தவ நெறிமுறைகளின் படி நவம்பர் மாதம் இறந்தவர்களை நினைவுகூரும் மாதம். அந்த வகையில்  ஒரு சமூகத்தின் வாழ்வியல் நெறிமுறைகள் பண்பாடு, பாரம்பரியங்கள் சார்ந்த ஒன்றாக அமைகின்றது கடவுளின் ஒளிபரப்பு. 

நெறிமுறைகளை மதமும் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களும் மற்றும் சமூக பொருளாதார அரசியல் அம்சங்களும் நிர்ணயிக்கின்றன. 

சமூக இயங்கியல் நிலைப்பாட்டில் இவை அசைக்கமுடியாத அம்சங்கள் அல்ல. சமூகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்கள் உள்வாங்கப்படுகின்றன. 

உள்ளீடுகள் மாற்றம் அடையும்போது அதனூடான வெளியீடும் மாறுபடும். 

இந்த மாறுபட்ட வெளியீடே இங்கு கருத்தியல் மாற்றங்களால் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் கருத்தியல் மாற்றங்கள் ஏற்படும்போது அது பன்மைத்தன்மை கொண்ட மாற்றுக் கருத்துக்களுக்கான களமாகி கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றது. அதைக் கச்சிதமாகச் செய்கிறார் “கடவுள்”.  

“கடவுள்”! தற்கொலைக்கு தனது குடும்பவைத்தியரிடம் உதவிகோரும் ஒரு வயோதிபரின் கதை. வாழ்வா?, சாவா? குறித்த பல்வேறு தளங்களிலான பார்வையையும், கருத்துக்களையும் காட்டுகின்ற ஒரு படைப்பு. இங்கு சட்டம், மதம், மனிதாபிமானம், சமூகப்பொறுப்பு, தனிமனித உரிமை போன்றவை பேசுபொருளாக உள்ளன. 

கடவுளின் கதைச் சுருக்கம் 

அந்த முதியவருக்கு வயது 78. ஒரு கட்டிடகலைஞர். பொதுவாக ஐரோப்பாவில் வாழவேண்டிய வயது.  சாவுக்கானதல்ல. 

அவரது மனைவி மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்து விடுகிறாள். 

தனித்து வாழும் அவரை  தனிமை வாட்டுகிறது.  

மனைவியின் நினைவுகள் துரத்துகின்றன. 

முக்கியமாக மனைவி மரணத்தறுவாயில் பட்ட கஷ்டங்களையும், வேதனைகளையும் சித்திரவதையாகக் கண்ட அவருக்கு அந்த வதைகளுக்கு முன் சென்று விடவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. 

மறுபக்கத்தில் மனைவியின் மரணசோகம் தாங்கொண்ணா கவலையாக, தூக்கமுடியாத சுமையாக நெஞ்சை அழுத்துகிறது. 

இத்தனைக்கும்  அவர் மனநோயாளியோ, உடல்நோயாளியோ அல்ல என்கிறார்கள் வைத்தியர்கள். அவரின் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் அவரின் வயதுக்குரிய பொதுவானவை. 

ஆனால் அவரோ இனி வாழ்வதில்லை என்ற முடிவில்  உறுதியாக இருக்கிறார்.. 

கருணைக்கொலை ஐரோப்பாவில் ஒன்றும் புதிய விடயமல்ல. சுவிஸில் போட்டிபோட்டு கருணைக்கொலை செய்து உழைக்கும் நிறுவனங்கள் ஒன்றல்ல  பல உண்டு. அதற்கு சட்டம் இடமளிக்கிறது. பல நாடுகளில் இந்த வாய்ப்பு இல்லை. சுவிஸில் கருணைக்கொலைக்கு வருடாவருடம் ஆயிரக்கணக்கானோர் உலகின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள். இவர்கள் கருணைக்கொலை விருந்தினர். ஒரு வகையில் இதுவும் உல்லாசப்பிரயாணம் போன்று ஒரு வருமான மூலம். 

முதியவருக்கு வெளிநாடொன்றில் சென்று தன் உயிரை மாய்த்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை. தன் தற்கொலைக்கு உதவிசெய்யுமாறு குடும்ப வைத்தியரை நாடுகிறார் அவர். 

வைத்தியரின் பதில் என்ன…..?  படம் தொடர்கிறது. 

எனது உயிர் யாருக்கு சொந்தம்….? எனக்கா…? கடவுளுக்கா…? இது முதியவர் எழுப்பும் கேள்வி!  

அரசியல் அமைப்புச் சட்டம் பேசுகிறது, மதம் பேசுகிறது, மனிதாபிமானம் பேசுகிறது, வைத்தியதார்மீகம் பேசுகிறது, இறுதியில் வயோதிபரும் பேசுகிறார். கருத்துக்கள் மோதுகின்றன, விவாதம் தொடர்கிறது. 

பதிலைத் தேடுகிறது  படம். 

பதில் தேடும்  படலம்! 

ஜேர்மனியின் அரசியல் அமைப்பு நீதிமன்றம் “ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மரணத்தை தீர்மானிக்கும் உரிமை உண்டு” என்று கூறுகிறது. 

“டாக்டர்கள் வாழ்க்கையில் களைத்துப்போன ஒருவருக்கு மருந்துத்சீட்டு எழுதுவதைத் தவிர்த்து, மரணச்சீட்டு எழுதி, அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா”? என்ற கேள்வி மனிதநேயத்தின்பால் எழுப்பப்படுகிறது. 

“ஒரு டாக்டர் நோயைக் குணப்படுத்துபவரே அன்றி சாகடிப்பவர் அல்ல” என்று வைத்தியத்தரப்பு வாதிடுகிறது. 

“வாழ்க்கை புனிதமானது. கடவுள் எமக்கு அதை வழங்கியுள்ளார். அவரால் மட்டுமே அதை மீளப்பெறமுடியும்” என்று மதம் பேசுகிறது. இந்த இடத்தில் “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானோ” என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல்  நினைவைத்தட்டுகிறது. மற்றும்  “தற்கொலையானது மனிதத்திற்கும், சமூகநியதிக்கும் மாறானது” என்றும் மதம் சார்ந்து வாதிடப்படுகிறது. 

“ஒருவரின் மரணத்திற்கு உதவி செய்வது தேசிய சோஷலிசம்” என்று கூறும் கத்தோலிக்க ஆயர் அது சமூகத்தின் விழுமியங்கள், அடிப்படைகள் கொண்ட பாதுகாப்பு அணையை உடைப்பதற்கு சமமானது என்று வாதிடுகிறார். இளையோர், முதியோர், ஆரோக்கியமானவர்கள், ஆரோக்கியமற்றவர்கள் எவராகினும் தற்கொலை தவறானது என்று வாதிடுகிறார் அவர். 

இந்தப் படமானது FERDINAND VON SCHIRACH என்ற கதாசிரியரின் நாடகத்தை தழுவி LARS KRAUMEயின் நெறியாள்கையில் வெளிவந்துள்ளது. கதாசிரியர் குறித்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ள போதும் முக்கியமான ஒரு விமர்சனம் அங்கு எழுப்பப்படும் ஆரோக்கியமான ஒருவரைக் கொல்லமுடியமா? என்ற கேள்வியே தவறானது என்று வாதிடப்படுகிறது. பார்வையாளர்களின் அனுதாபத்தை முதியவர்மீது குவிக்கும் வகையில் படத்தின் நகர்வுகள் அமைகின்றன என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. 

கடவுள் பேசும் ஜதார்த்தம்  

ஜேர்மனியிலும், சுவிஸிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட “கடவுளை” சுமார் நான்கு மில்லியன்  பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். இவர்களில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் 5,46,000 பேர். 

கருத்துக்கணிப்புக்காக பார்வையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைகள் இவை. 

“எங்கள் வாழ்க்கை யாருக்கு சொந்தமானது? 

கடவுளுக்கா? 

திருச்சபைக்கா ?   

வைத்தியர்களுக்கா?  

அரசுக்கா? 

அல்லது  

எங்களுக்கா….? 

ஒவ்வொருவரும் தாங்கள் சுயமாக தங்கள் மரணத்தை தீர்மானிப்பதற்கு எதிராக உள்ள காரணங்கள் எவை? 

என்ற வினாக்களைக் கருத்தில் கொண்டு, இறுதியாக இந்த வினாவுக்கு விடையளிக்குமாறு பார்வையாளர்கள் கேட்கப்பட்டார்கள். 

வினா:  1 . ஒரு ஆரோக்கியமான நபருக்கு அவரை கொல்லுவதற்கான மருந்தை கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? 

வினா :  2. நீங்கள் ஒரு வைத்தியராக இருந்தால் அதைச் செய்வீர்களா..? 

 பார்வையாளர்களில் 70.8 வீதமானோர் ஆரோக்கியமான வயோதிபரின் கருணைக்கொலைக்கு ஆதரவாகவும், 29.2வீதத்தினர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். வாக்களிப்பு ஒன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக இடம்பெற்றது. 

மேற்குலகில் மதம்சார்ந்த பார்வையும், வாழ்வியல் குறித்த இலக்கும் பாரிய மாற்றங்களை உள்வாங்கி உள்ளன. வயோதிபர் இல்லங்களில் சுய இயக்கத்தன்மையை இழந்த நிலையில் வெறும் சடமாக வாழ்வதை மக்கள் விரும்பவில்லை. அதிகரித்து வரும் ஞாபகமறதி, நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களோடு வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஆயுளை வைத்தியத்தின் மூலம் செயற்கையாக நீடிப்பதை சமூகம் நிராகரிக்கிறது. 

வேதனைகள் அற்ற வாழ்க்கையோடும், சுயநினைவுகளோடும், சுயவிருப்புடனும் தங்கள் வாழ்வை இவ்வுலகில் முடித்துக் கொள்ள விரும்புகிறது மூத்த சமூகம். 

இன்று எப்போது பிறக்கவேண்டும் என்பதை மட்டும் அல்ல ஒருவர் எப்போது இறக்கவேண்டும் என்பதையும்  சுயமாக திகதி நிர்ணயம் செய்யும் நிலை நோக்கி சமூகம் நகர்கிறது.  

பிறப்பு, வாழ்வு, மரணம் குறித்த புதிய அணுகுமுறைகளை, நடைமுறை மக்கள் வாழ்வியலை, சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு திரையில் இருந்து மறைந்து போகிறார் “கடவுள்” .