புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!! (பாகம் 20) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)

புளொட்டின் உடைவு – தீப்பொறி வெளியேற்றம்!!! (பாகம் 20) (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்!)

— தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் —

(அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 20 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கண்ணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.)

பாகம் 20:

தேசம்: நாங்கள் ஏற்கனவே கதைத்த மாதிரி 84, 85 காலகட்டங்களில் அரசியல் மிக வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. எப்படி நடந்ததோ தெரியல. புற அரசியலில் நியாயமான மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. ஏனென்றால் 85 ஆம் ஆண்டு ரெலோ ட்ரைனை அடித்து புரட்டியது. நான் நினைக்கிறேன் அது அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய தாக்குதல் என்று. அதுல 45 தொடக்கம் 50 வரையிலான ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். சாவகச்சேரி பொலீஸ் ஸ்டேஷன் அடிபடுது. அதுக்குப்பிறகு அனுராதபுரத்தில் புலிகள் போய் பொதுமக்களை கொல்கிறார்கள். கிட்டத்தட்ட 140 பேர் அதில் சாகினம்.
பிறகு குமுதினிப் படுகொலை அதுவும் அந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான தாக்குதலாக இருக்குது. அதோட ஈழ தேசிய விடுதலை முன்னணியின் இயக்கங்களின் இணைவுக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. திம்புப் பேச்சுவார்த்தை இப்படி அந்த காலகட்டம் அரசியல் ரீதியாக மிக வேகமாக துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இது அவ்வளவு தூரம் உணரப்படவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குள்ள உட் பிரச்சனை மிக தலைதூக்குற கால கட்டமாக இருக்குது. அந்தக் காலகட்டத்தில்தான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: புளொட்டைப் பொறுத்தவரையில் ஒரு பார்வை இருந்தது. முதலில் அதைப்பற்றி கதைத்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மக்கள் மயப்படுத்தலுக்கு பிற்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்று. மக்கள் இராணுவம், மக்கள் யுத்தம், வெகுஜன அரசியல், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கே புளொட் முன்னுரிமை கொடுத்தது. அதன் கோட்பாடும் அதாகத்தான் இருந்தது. ஏனென்றால் வெறுமனமே இராணுவத்தின் மீதான இப்படியான தாக்குதல்கள் மக்களுக்கு பெரிய தீங்கை கொடுக்கும். ராணுவத்தைப் பலப்படுத்தவும்,  எமது மக்களை இராணுவம் கொன்று குவிக்கவும் இவ்வாறான தாக்குதல்கள் வழிசமைத்து விடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. அதுதான் நடந்தது. மக்கள் யுத்தத்துக்கான முதல் தயார்படுத்தல் என்பது மக்களை அரசியல் மயப்படுத்தல் மக்கள் மத்தியிலிருந்து மக்கள் ராணுவத்தை கட்டி எழுப்புதல். மரபுரீதியான ராணுவத்தை எழுப்புவது அல்ல ஒரு போராட்டம்.

தேசம்: குறிப்பாக தளத்தில் நீங்கள் அரசியல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தபடியால் இதுவும் ஒரு பெரிய அழுத்தமாக இருந்திருக்கும் என. மற்ற அமைப்புகள் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நீங்கள் அப்படி முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெரிய அழுத்தங்களை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.  

அசோக்: மக்கள் மத்தியில் போய் வேலை செய்யும் போது அப்படியான எதிர்பார்ப்புகள் வரும். ஆனால் அந்த தாக்குதல்களால் ஏற்படுகின்ற எதிர் நடவடிக்கைகள் மக்களை பார்க்கும்போது அவர்கள் உணர்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தீங்கானது என்று சொல்லி. அப்போ நாங்கள் விளங்கப்படுத்துகிறோம். பூரணமான விடுதலை என்பது இது அல்ல. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டுவரும். நிறைய முரண்பாடுகள் ஏற்படுத்தும். பலமான சக்தியாக ராணுவம் பலம் பெறும் என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலங்களில் புலிகளின் சுத்த இராணுவவாதத்தை, அரசியல் அற்ற போக்கை பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். கடைசி காலங்களில் எல்லா இயக்கங்களும் அவர்களால் அழிக்கப்பட்ட பின்பு மக்கள் நிலை கையறு நிலைக்கு வந்த பின்  மக்களால் என்ன செய்யமுடியும். புலிகளை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லைத்தானே. புலிகள் திட்டமிட்டே இவ்வாறு செய்தார்கள்.

அடுத்தது நீங்கள் கேட்டது சந்ததியார் வெளியேற்றம். சந்ததியார் வெளியேற்றம் 85 நடுப்பகுதியில் தான் நடந்தது. காலங்களை சரியாக என்னால் ஞாபகம் கொள்ள முடியாதுள்ளது. 85 நடுப்பகுதியில் மத்தியகுழு கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதில் தோழர் சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. எனவே நான் நினைக்கிறேன் 85 நடுப்பகுதியில் சந்ததியார் வெளியேறி இருப்பார் என.

தேசம்: சந்ததியார் எப்போது கடத்தப்படுகிறார்…

அசோக்: இந்த மத்தியகுழு கூட்டத்திற்கு பிற்பாடு தான் சந்ததியார் கடத்தபட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த மத்தியகுழு கூட்டம் நடந்த பின்புதான் ரகுமான் ஜான் தோழர், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறுகின்றார்கள்.

தேசம்: பாலஸ்தீன பயிற்சி முடித்து தோழர் ரகுமான் ஜான் வந்துவிட்டாரா?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் பாலஸ்தீன பயிற்சி முடித்துவந்த பின் நாங்கள் ஒன்றாக கூடிய மத்தியகுழுகூட்டம் இதுதான். இந்த மத்திய குழு கூட்டம் முடிந்து வரும்போது தான் சொல்கிறார்கள் தாங்கள் வெளியேறப்போவதாக.

தேசம்: அதாவது நீங்கள் சொல்லுற மத்திய குழுக் கூட்டம் சந்ததியார் கடத்தப்பட்ட நேரம் நடக்கிற மத்தியகுழு கூட்டமா அல்லது அதற்கு முதலா…

அசோக்: இந்த மத்திய குழுக் கூட்டம் தோழர் சந்ததியார் வெளியேறிய பின்னர் நடந்த மத்தியகுழு கூட்டம். இக் கூட்டம் நடைபெறும் போது தோழர் சந்ததியார் வெளியேறி இருந்தாரே ஒழிய அந்த நேரம் கடத்தப்படவில்லை. இந்தக் கூட்டம் நடை பெற்ற பின்னர்தான்  தோழர் சந்ததியார் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றார். காலங்கள் சொல்ல முடியாதுள்ளது. சரி பார்க்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சந்ததியார் தொடர்பான விவாதம் நடந்தது. சந்ததியார் வெளியேற்றம் தொடர்பாக கேட்டபோது முகுந்தன் சந்ததியார் என்ன காரணத்திற்காக வெளியேறினார் என தனக்கு தெரியாது என்றும் அதற்கான காரணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்கின்றார்.

தேசம்: யார் இந்த கேள்விகளை எழுப்பியது?

அசோக்: தோழர் ரகுமான் ஜான் தான் சந்ததியார் தொடர்பான பிரச்சனையை அங்கு வைத்தவர்.  தோழர் ரகுமான் ஜானின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் முகுந்தனால்  பதில் அளிக்கமுடியவில்லை. முகுந்தனுக்கும், அவரின் விசுவாசிகளுக்கும் பெரும் டென்சன். கூட்டத்தில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சந்ததியார் தொடர்பாக பயங்கர விவாதம். முகுந்தனோட பெரிய முரண்பாடு.  முகுந்தன் தனக்கும் சந்ததியார் வெளியேற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார்.  கூட்டம் முடிந்து வெளியே வந்த பின், தோழர் ரகுமான் ஜான், தோழர் கேசவன், கண்ணாடி சந்திரன் சொல்கிறார்கள் இயக்கத்தை விட்டு  வெளியேறப்போறாம், உங்களின் நிலைப்பாடு என்ன என்று எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்றால் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னரே  அவங்க தீர்மானித்துவிட்டாங்க தாங்க வெளியேறுவது என்று. முதலே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா எங்ககிட்ட சொல்லவில்லை. நாங்கள் தளத்திலிருந்து அந்த மத்திய குழு கூட்டத்துக்கு போறோம். இவர்களின் நோக்கம் எதுவுமே எங்களுக்கு தெரியாது.  

தேசம்: இந்த மத்திய குழுக் கூட்டத்துக்கு முற்பாடு இதைப்பற்றி எதுவும் கதைக்கல…

அசோக்: எதுவும் கதைக்கேல, நாங்கள் பின் தளத்தில் இருக்கவில்லை தானே. நாங்கள் இரண்டு மூன்று நாளுக்கு முதல் தான் மத்திய குழுக் கூட்டத்துக்கு போறோம். எங்களை சந்தித்தவர்கள் இதைப் பற்றி கதைக்கவும் இல்லை.

தேசம்: அப்போ இந்த மத்திய குழுவில் இருந்து வெளியேறும் ஆட்கள் யார்?

அசோக்: தோழர் ரகுமான் ஜான், கேசவன்,கண்ணாடி சந்திரன்

தேசம்: சலீம்?

அசோக்: சலீம் தோழர் இந்த காலத்தில் இலங்கையில் சிறையில் இருந்தவர். அப்போ வெளியேறுவது என்று சொல்லி முடிவெடுத்து அவர்கள், கூட்டம் முடிந்து  வெளியில் வந்த சொன்னவுடன் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக போய்விட்டது.  எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்கள் வெளியேறினால் எங்களையும் முகுந்தன் ஆட்கள் சந்தேகிப்பார்கள் பெரும் ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். தோழர் குமரன் குழம்பி விட்டார். குமரனுக்கு இவர்களோடு வெளியேறும்  எண்ணம் இருந்தது. நான் குமரனுக்கு சொன்னேன். நாங்கள் நாலு பேரும் நாட்டில் இருந்து வந்திருக்கிறோம். நாட்டுக்கு போறோம். நாட்டுக்குப் போய் பின்தள பிரச்சினையை சொல்லுறோம். அங்கு போய் நாம் முடிவு பண்ணுவோம் என்று. கூட்டத்தில் பல்வேறு கொலைகள் தொடர்பாக எல்லாம் கதைக்கப்பட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார். மத்திய குழுக் கூட்டத்தில் கடைசியும் முதலுமாக உட் கொலை பற்றி கதைக்கப்பட்டது அன்றைக்குத்தான்.

தேசம்: அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும்…

அசோக்: கதைத்து பிரச்சனைப்பட்டு அவங்கள் வெளியேறிவிட்டாங்க. நாங்களும் அவங்களோட சேர்ந்து கதைத்து பிரச்சனைபட்டு விட்டோம்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன் .  2 ,3 நாட்களுக்கு பிறகு அவங்க வெளியேறிவிட்டாங்க. எங்களை நம்பி, எங்க கதைகளை நம்பி போராட்டத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களும், தோழர்களும் நாட்டில இருக்காங்க. அத்தோட நாங்க பயிற்சிக்காக பின் தளம் அனுப்பிய தோழர்களின் நிலை என்னவாகும். நாங்க வெளியேறிய பின் அவர்களின் நிலை மிக மோசமாகி சந்தேகப்பட்டு அவர்களின் நிலமை கொடுமையாகிவிடும். அதனால தளத்திற்கு போய் நிலமையை சொல்வோம் என்று நாங்க முடிவு பண்ணினோம். இவங்க வெளியேறிய பின்பு எங்களின் நிலை ஆபத்தாகி விட்டது.

தேசம்: நாங்க என்று சொல்லி யாரை சொல்லுகின்றீர்கள்?

அசோக்: நான், ஈஸ்வரன், குமரன், முரளி. நாங்கள் அதற்கு பிறகு ஒரு வாரம் அங்கேயே நின்றோம். நாட்டுக்கு போவதற்கான நடவடிக்கைகளை எடுத்து எங்களுக்கான போக்குவரத்து boat வசதி எதையும் முகுந்தன் ஆட்கள் செய்து தரவில்லை.

தேசம்: நெருக்கடி தரேலயா…

அசோக்: நெருக்கடி தரேல. ஆனால் கண்காணிக்கப்பட்டோம். மத்திய குழுக் கூட்டம் நடந்து சுமார் ஒரு மாதம் நாங்க அலைக்கழிக்கப்பட்டோம்.

தேசம்: மத்திய குழுக் கூட்டம் நடந்து ஒரு மாதம் வரை நீங்கள் பின் தளத்தில் தான் இருக்கீங்க?

அசோக்: எங்களை நாட்டிக்கு போவதற்காக கோடியாக்கரைக்கு போக சொன்னாங்க. கரைக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்களுக்கான எந்த வசதியும் செய்து தரப்பட இல்லை. பிறகு பார்த்தால் புதிதாக இரண்டு பேர் எங்கள் பாதுகாப்புக்கு என்று  நாங்க தங்கி இருந்த இடத்திற்கு அனுப்பப்பட்டாங்க. பிறகு காலப்போக்கில் அவங்களில் ஒருவர் சொல்லி விட்டார் எங்களை உளவு பார்க்கத்தான் முகுந்தன் தங்களை அனுப்பியதாக.

தேசம்: யார் ஆள் அது…

அசோக்: அந்தத் தோழர் குமரனுக்கு தெரிந்தவர். பெயர் ஞாபகம் இல்லை. குமரனிட்ட எல்லாம் சொல்லிட்டார் உங்களை உளவு பார்க்க தான் தங்களை அனுப்பினது என்று. அப்போ எங்களுக்கு தெரிந்தது நெருக்கடியான கட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று. பிறகு நாங்களாகவே வோட்  ஒழுங்கு பண்ணி நாட்டிக்கு போகலாம் என்று சொல்லி இருக்கும் போதுதான் முகுந்தன் boat ஒழுங்கு பண்ணி போறதுக்கு ஏற்பாடு செய்தவர்.

தேசம்: அதற்கு பிறகு நீங்கள் அவர்களை சந்திக்கவில்லையா?

அசோக்: அதன் பிறகு தோழர் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடிச் சந்திரன் யாரையுமே நாங்க சந்திக்க முடியவில்லை. அவர்களும் எங்களை சந்திக்க முயலவில்லை. அதன்பின் பல காலங்களின் பின் நான் இங்கு வந்த பின்தான் தொடர்பு கிடைத்தது.

தேசம்: நீங்கள் அவர்களை கேட்கவில்லையா உங்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கு…

அசோக்: இதை பற்றி உரையாடல் நடந்தது. நாட்டிக்கு வரும்படி கேட்டோம். அவர்கள் வெளியேறி அப்படியே தளத்திற்கு வந்திருக்க முடியும். வந்திருந்தால் தளத்தில் இருந்த தோழர்களோடு  இணைந்து உட்கட்சிப்போராட்டத்தை நடாத்தி புளொட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடிந்திருக்கும். அதற்கான திறமையும் ஆற்றலும் ரகுமான் ஜான் தோழரிடம் இருந்தது. புளொட்டில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் ஆற்றல் கொண்டவராக இருந்த ஒரே ஒரு ஆள் என்றால் அது ரகுமான் ஜான் தோழர்தான். ஆனா அவங்க முயற்சிக்கவில்லை.

தேசம்: பொறுங்கோ வாரேன். நீங்கள் சொல்லுற இந்த உரையாடல் மத்திய குழுவில் நடந்ததா மத்திய குழுக்கு வெளியில் நடந்ததா?

அசோக்: வெளியில் நடந்தது. காந்தன் இங்க பிரான்சிக்கு வந்தபோது நான் இந்த கேள்வியை கேட்டேன். ஏன் நீங்கள் எங்களோட தளத்திற்கு வரல. வந்திருந்தால் எப்படியாவது ஒருமாற்றத்தை கொண்டு வந்திருக்கமுடியும் என்று.  

தேசம்: காந்தன் என்று சொல்லுறது?

அசோக்: ரகுமான் ஜான் தோழரை. அப்பவே நாங்கள் கேட்டோம் நீங்கள் வாங்கோ எங்களோடு. நாங்கள் போவோம். நாட்டுக்குப் போய் சகல பிரச்சினைகளையும் கதைப்போம். ஏனென்றால் எங்களை நம்பி நிறைய தோழர்கள் முகாமில் இருக்கிறார்கள். தளத்திலும் இருக்கிறார்கள். விட்டுட்டு நாங்கள் வெளியேற இயலாது. ஏனென்றால் நாளைக்கு அவங்களுக்கு ஆபத்து. நாங்கள் சொன்னோம், நாங்கள் போய் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடத்துவோம் இங்கேதான் நடத்த முடியாதே.

தேசம்: அதற்கு அவர்களுடைய பதில் எப்படி இருந்தது?

அசோக்: இதை இனி திருத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.  பிரயோசனமில்லை. நீங்கள் போறது என்றால் போங்கள் என்று சொல்லி. உண்மையிலேயே இவங்கள் வந்திருந்தா ஃபைட் பண்ணி இருக்கலாம்.

தேசம்: திருத்துவதற்கு வாய்ப்பில்லை என்றால் இதற்கு முதலும் இதைப்பற்றி கதைக்கவே இல்லை தானே. ஒரே கூட்டத்தில் நீங்கள் திருத்த ஏலாது தானே அமைப்பை.

அசோக்: இதை வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் எல்லாரிலையும் பிழை இருக்கு. அதை யாரும் உணர்ந்ததாக இல்லை. இயக்கத்தின் அடிப்படை பிரச்சனையே உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனதுதான். அதனை நாங்க உறுதியாக நிலை நிறுத்தி இருக்கவேண்டும். அத்தோடு அரசியல் கல்வி மேல்மட்ட தோழர்களுக்கு, நிர்வாகிகளுக்கு இல்லாமை. இது பற்றி முன்னமே கதைத்திருகிறோம்.

புளொட்டின் ஆரம்ப உருவாக்கமே தனிநபர்களின் விருப்பங்களில் தன்னிச்சையான போக்குகளினால்தான் கட்டமைப்படுகின்றது. எல்லா அதிகாரங்களையும் முகுந்தன் வைத்துக் கொண்டது. தனிநபர் அதிகாரங்களை நாங்க இல்லாமல் செய்திருக்கவேண்டும். கூட்டுமனநிலை கூட்டுசெயற்பாடுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக நடந்த அந்த மத்தியகுழு கூட்டத்தில் ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்திக் கொண்டதே மிச்சம். நாங்க முகுந்தன் ஆட்களை குற்றம்சாட்ட அவர்கள் எங்களை குற்றம்சாட்ட எந்தவித நியாங்களும் தீர்வுகளும் இன்றி அந்த கூட்டம் முடிஞ்சி போய் விட்டது குறைந்தபட்சம் பரஸ்பரம் சுயபரிசீலனை செய்ய யாரும் தயார் இல்லை நான் உட்பட. இதுல முகுந்தன் உட்பட எல்லாரும் குற்றவாளிகள். புளொட் உடைவில எல்லாருக்கும் பாத்திரம் இருக்கு. புளொட் ஆரோக்கியமான அமைப்பாக கட்டி அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. ஆரோக்கியமான திசை நோக்கி போகவேண்டிய அமைப்பை இந்த அளவுக்கு பாழ்படுத்தியதற்கு எல்லாருக்கும் பங்கு இருக்கு.

தேசம்: குறிப்பாக நான் நினைக்கிறேன் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டு குழுவிலும் இருந்தவைக்கு பெரும் பொறுப்பு இருக்கு. ஏனென்றால் முகுந்தன் இவ்வளவு அதிகாரத்தோடு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை தானே.

அசோக்: அதிகாரத்தை முகுந்தன் குவித்ததற்குக் காரணம் எங்களுடைய பலவீனம். நாங்கள் மத்திய குழுவில் தவறுகளை சுட்டிக்காட்டி ஆரம்ப காலத்திலேயே ஃபைட் பண்ணி இருந்தால். ஏனென்றால் நீங்களும் முகுந்தனுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மௌனமாக இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு உள்ள முரண்பாடு வரும் போது தான் சிக்கல் வருகிறது.

தேசம்: மற்றது இந்த காலகட்டம் வரைக்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படுகொலைகளைப் பற்றி ஏதாவது வைக்கப்பட்டதா?

அசோக்: முன்னர் கதைக்கப்படவில்லை. ஒரு தடவை நான் கதைத்து முகுந்தன் என்னிடம் ஆதாரம் கேட்டு டென்சன் ஆனதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். யாரும் கதைத்ததில்லை. ஆனால் இந்த மத்தியகுழு கூட்டத்தில் கதைக்கபட்டது. கதைத்த எங்களிடம் உறுதியான எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கொலைகள் தொடர்பாக எந்த ஆதாரத்தோடையும் யாரும் கதைக்கவில்லை. எவிடன்ஸ் ஒருத்தருட்டையும் இல்ல. பொதுவாகவே பி கேம்ப் (B – Basic Camp) பில் ரோச்சர் நடக்குது  கொலை என்று சொல்லப்பட்டது. அப்போ முகுந்தனுக்கு ஒரு சாதகமாக போயிட்டு. முகுந்தன் எப்பவுமே ஆதாரம் கேட்பார்.

தேசம்: எத்தனை பேரின் பெயர்கள் வைக்கப்பட்டது?

அசோக்: பெயர் எதுவும் சொல்லவில்லை. படுகொலைகள் நடக்குது கேம்பில் ரோச்சர் நடக்குது என்ற அடிப்படையில்தான் பிரச்சனை விவாதம் நடந்தது. அது ஆரோக்கியமான உரையாடலுக்கான நியாமான சூழலாக இருக்கல்ல. ஒரே டென்சனாகவே இருந்தது.

தேசம்: அப்போ அதுவும் ஒரு வதந்தியாக தான் வைக்கப்பட்டது.

அசோக்: வதந்தியாக தான் கதைக்கபட்டது. எல்லாத்தையும் முகுந்தன் மறுத்துக் கொண்டிருந்தார்.

தேசம்: அப்போ ஆதாரங்கள் ஒன்றும் இருக்கல.

அசோக்: ஆதாரங்கள் ஒன்றுமில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் கொல்லப்பட்டவர்களது பெயர்கள் ஏதாவது பேசப்பட்டதா?

அசோக்: பிற்காலத்தில் நிறைய பெயர்கள் வந்திருக்கு. குறைந்தது 25 பெயராவது வெளியில வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயர்களை ஞாபகம் இல்லை. ஆனால் தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். டார்ச்சர், படுகொலைகள் பின் தளத்தில் நடந்திருக்கு அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசம்: எப்ப இருந்து எப்ப வரைக்கும்?

அசோக்: 84இல் இருந்து 85 வரைக்கும் நடந்திருக்கு.

தேசம்: 84 முடிவு பகுதியில் இருந்தா?

அசோக்: B camp போட்டதிலிருந்து. B camp என்றால் basic camp. அந்த கேம்பில தான் சித்திரவதைகள், கொலைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. காலங்களை சரியாக சொல்லமுடியாதுள்ளது.

தேசம்: நானறிந்த வரைக்கும் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் புளொட்டில் ஆட்கள் கதைத்த அளவுக்கு அல்ல ஒரு கொலை என்றாலும் கொலைதான். ஒரு கொலை என்றாலும் அது மனித உரிமை மீறல் தான். ஆனால் வெளியில் கதைக்கப்பட்டது அப்படி என்றால் 20 – 25 பேருக்குள்ள அல்லது ஆகக் கூடியது 50 பேர் வரை கொலைகள் நடந்து இருக்கு என்று. அதற்கான சாட்சியங்களை ஏன் அதை எடுத்தவர்கள் வைக்க இயலாமல் போனது. சாட்சியங்கள் இருக்கலாம் மத்திய குழுவில் நீங்கள் வைத்து தானே இருக்க வேண்டும். மத்திய குழுவில் 20 பேரில் உமா மகேஸ்வரன் சங்கிலி வேற யார் அந்தப் பக்கம் இருந்தார்கள்

அசோக்: மாணிக்கதாசன் போன்ற ஆட்கள்தான்.  ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பதில் அளிப்பார். இவங்க அவரோடு சேர்ந்து ஆமா போடுவார்கள். மத்தியகுழுவில் நாங்க சமநிலை  கொண்டிருந்தம். ஆனால் எங்களிட்ட எந்த அதிகாரமும் பலமும் இல்லைத்தானே. முகுந்தன் நினைத்திருந்தால் அன்றைக்கு  எங்களை கொலை செய்திருக்க முடியும். அந்த அளவிற்கு திமிர்த்தனமும் ஆணவமும் அவங்களிடம் இருந்தது. நாங்க வெறும் எண்ணிக்கைதானே ஒழிய எங்களிடம் எந்த பவரும் இல்லை.

தேசம்: மற்றது உங்கட பக்கத்துலயும்…. ட்ரைனிங் எடுத்த ஆட்கள் இருந்திருக்கிறீர்கள். ஆரம்பகால உறுப்பினர்கள் இருந்திருக்கிறீர்கள். அடுத்தது தளம் முழுமையாக உங்கட கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அசோக்: தளத்தின் நிலமை வேறு. பின்தளம் அப்படியல்ல. அதிகாரமும் ஆயுதமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்திகள். பின்தளத்தில் நாங்கள் எல்லோரும்வெறும் நபர்கள்தான். உண்மையில் ரகுமான் ஜான், கேசவன் எல்லாரும் எஙகளோடு தளம் வந்து உட்கட்சிப்போரட்டம் நடாத்தி இருந்தால் முகுந்தன் ஆட்களால் எதுவுமே செய்திருக்க முடியாது. ஆரம்ப காலத்திலேயே இந்த தவறுகளுக்கு எதிராக உட்கட்சிப்போராட்டத்தை இவர்கள்  பின்தளத்தில்  நடாத்தி இருந்தால், ஃபைட் பண்ணி இருந்தால் அதனுடைய தாக்கம் தளத்திலும் இருந்திருக்கும்.  தளத்தில் நாங்கள் சப்போர்ட் பண்ணி இருப்போம். முகாமில் தோழர்களும் சப்போர்ட் பண்ணி இருப்பாங்க. இவர்கள் யாரும் ஃபைட் பண்ணவில்லை. நான் கலந்து கொண்ட மத்திய குழு அதாவது 84 ஜனவரியிலிருந்து இவங்கள் வெளியேறும் வரைக்கும் மத்திய குழுக் கூட்டங்கள் எதிலேயும் வந்து உட் கொலைகள், இயக்க பிரச்சனைகள் தொடர்பாக கேட்டு ஃபைட் பண்ணினது இல்லை. வெளியேற்றத்திற்கு அன்றைக்கு நடந்த ஃபைட் தான் கடைசியும் முதலுமான  பைட்.

தேசம் : நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது அதை ஆதாரபூர்வமாக வைக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டை மக்கள் முன்னிலையிலும் கொண்டுபோய் இருக்கலாம் தானே. மக்கள் அமைப்பு தானே. மற்றது தளம் முழுதாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கிற அல்லது உங்கட பக்கம் நிக்குது. அப்படி இல்லா விட்டாலும் அதை உங்கட பக்கம் எடுத்திருக்க வேண்டும்.

அசோக்: இப்ப யோசித்தால் நாங்கள் ஆதாரபூர்வமாக நாங்கள் முதலில் ஃபைட் பண்ணி இருந்தால் புளொட்டை சரியான திசைவழியில் எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். இல்லாட்டி இவங்கள் எங்களோடு வந்து இருந்தாலும் கூட, குறிப்பிட்ட ஆட்களை வெளியேற்றி போட்டு நாங்களே புளொட் என்று சொல்லி உரிமை கோரி புளொட்டை வழிநடாத்தி இருக்கமுடியும். ஏனென்றால் நாங்கள் கடைசியில் தளத்தில் உட்கட்சிப் போராட்டம் ஒன்று நடத்தி தானே வெளியேறினோம்.

தேசம்: புளொட்டில் உமாமகேஸ்வரனில் குற்றம்சாட்டி வெளியேறின ஆட்களும் கறைபடிந்த கைகள் தான். நான் உங்களை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை. கண்ணாடி சந்திரன் சில கொலைகளுக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் கொலைகளை மேற்கொண்ட மல்லாவி சந்திரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதுல என்ன தார்மீகம் இருக்கு எவ்வாறானதொரு நியாயம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அசோக்: விமர்சனத்திற்கு உரிய விடயம் தான். நிறைய தோழர்களுடன் கதைக்க வேண்டும். சந்ததியார் இறந்துட்டார். கேசவன் இறந்துட்டார். இப்ப இருக்கிறது நான், முரளி தோழர் இருக்கிறார். குமரன் இறந்துட்டார். மத்திய குழுவில் இருந்த சரோஜினி இருக்கிறார். கண்ணாடி சந்திரன் இருக்கிறார். ரகுமான் ஜான் இருக்கிறார். அடுத்தது பாபுஜி, ராஜன்  இருக்கிறார்கள். இவர்கள் கதைக்க வேணும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக.  உண்மைகளை கதைக்க வேண்டும்.

தேசம்: இது ஒரு சில நபர்கள் சம்பந்தப்பட்டது இல்லை. கிட்டத்தட்ட மிகப் பெரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய அமைப்பு. சில நூறு, சில ஆயிரம் உறுப்பினர்கள். இவர்களுடைய செயற்பாடுகளால் அல்லது இவர்களுடைய முடிவுகளால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவ்வளவு தூரம் பொறுப்பு கூறாமல் போக இயலாது.

அசோக்: சரியான திசையை நோக்கி போயிருந்தால் பிற்காலத்தில் புளொட். இடதுசாரி இயக்கம் என்ற  ஒன்றிக்கு முன்மாதிரியாக இருந்திருக்க முடியும். அது இல்லாமல் போய்விட்டது.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த பிரிவுக்கு பிறகு அங்க பெருசா செய்ய ஒன்றுமில்லை. பிறகு எப்போ சந்ததியார் மத்திய குழுவுக்கு வராமல் விடுகிறார். பிறகு கடத்தப்பட்டதாக சொல்லப்படுது.

அசோக்: நான் நினைக்கிறேன் 85 செப்டம்பரில் கடத்தப்படுகிறார். சரியாக ஞாபகம் இல்லை.

தேசம்: கடத்தப்பட்ட சில நாட்களிலேயே ….

அசோக்: ஓம். கடத்தப்பட்ட சில நாட்களிலேயே கொல்லப்படுகிறார். அதுக்குப் பிறகு ஒரு மத்திய குழுக் கூட்டம் நடக்கிறது.

தேசம்: சந்ததியார் கொல்லப்பட்டதற்கு  பிறகு…

அசோக்: ஆம். அந்த மத்திய குழுக் கூட்டம் எப்படி என்றால் நாங்கள் நாட்டில் போய் தள மாநாடு நடத்தி, அதில் தீர்மானங்கள் எடுத்து பின் தளத்தில் பிரச்சனைகளை கதைப்பதற்கான தள கமிட்டி தெரிவு செய்யப்பட்டு அந்த தோழர்களோடு பின்தளம் வந்த பின் நடந்த மத்திய குழு கூட்டம் அது.  

தேசம்: அதைப்பற்றி பிறகு கதைப்போம்.

அசோக்: அதுதான் இறுதியாக நாங்கள் கலந்து கொண்ட கூட்டம்.