— அழகு குணசீலன் —
தேர்ந்து எடுக்கப்பட்ட நூறு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத்தொகுப்பை கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் “ஒவ்வொரு முழுமையிலும் பல கூறுகள் அல்லது பகுதிகள் காணப்படும். அவ்வப்பகுதிகள் தத்தமக்கென தனித்துவமான பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும்…” என்று தனது வெளியீட்டு உரையில் குறிப்பிடுகிறார் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.சரவணமுத்து நவநீதன்.
கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார, அரசியலின் அடித்தளமும், தனித்துவமும் இதுதான். இது கலை இலக்கிய வடிவங்களில் நீண்டகாலமாகப் பேசப்பட்டுவந்த ஒட்டுமொத்த தமிழும் சைவமும், தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாடு சார்ந்த – பெரும்பாக அணுகுமுறையில் இருந்து விலகி சமூகங்களின் தனித்துவ வாழ்வியல் ஜதார்த்தங்களை, உட்கட்டமைப்புக்களை திரும்பிப்பார்க்க வைக்கின்ற நுண்பாக அணுகுமுறை. இது பின்நவீனத்துவம் பேசுகின்ற சமூக, பொருளாதார, அரசியல் நிதர்சனம். ஆனால் சிலர் பேசுகின்றதுபோல் இதை சோஷலிச வறட்சியின் வெளிப்பாடாக அடையாளப்படுத்த முடியாது.
“எழுபதுகளின் பிற்பகுதியில் அல்லது எண்பதுகளில் இருந்த சோஷலிசவாதக் கோசமும், வறட்டுத்தனம்மிக்க சமூக ஜதார்த்த வாதமும் படைப்புக்களில் இருந்து விடைபெறுகின்றன எனக்கொள்ளலாம்” என்ற தொகுப்பாளர் உமா.வரதராஜனின் கருத்து கவனிக்கத்தக்கது. அப்படியானால் பின்வந்த காலங்களில் கலை, இலக்கியங்கள் வர்க்கம் பற்றி பேசவில்லையா? பின்நவீனத்துவமானது சோஷலிசம் வெறும் கோசம் என்றோ, வறட்டுத்தனம் கொண்டது என்றோ அல்லது சமூக ஜதார்த்தம் அற்றது என்றோ பிரகடனம் செய்யவில்லை. மாறாக ஒட்டுமொத்த அணுகுமுறைக்குள், இருக்கக்கூடிய கூறுகளை கவனத்தில் கொண்டு சோஷலிசம் குறித்த பார்வையில் ஒரு புது அணுகுமுறையை பின்நவீனத்துவம் புகுத்தி இருக்கிறது. இதன் அர்த்தம் சமூக நீதியும், வர்க்கப்பார்வையும் காலாவதியாகிவிட்டன என்பதல்ல. மாறாக பின்நவீனத்துவம் இவற்றிற்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. இதனால்தான் பின் நவீனத்துவ கலை இலக்கியங்கள் சமகாலத்தை காட்டுகின்ற காலக்கண்ணாடியாகின்றன. அழகியல் முதன்மைப்படுத்தல் முயற்சிகளில் கூட உள்ளார்ந்தமாக ஏதோ ஒருவகையில் வர்க்கம் பேசப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
1970களின் பிற்கூறுகளில் அழகியல் முக்கியம் பெறுகிறது என்ற கருத்து ஆய்வுக்குரியது. இந்தக்காலம் ஆயதப்போராட்ட ஆரம்பக்காலம். இக்காலத்திலும், தொடர்ந்தும் போராட்ட, சுதந்திரம், புரட்சி பற்றிய சோஷலிச கருத்துக்களை கலை இலக்கியங்கள் தாராளமாகப் பேசின. வர்க்கப்பார்வையைத் தவிர்த்து “சொல்லப்படுவது எது” என்பதை விடுத்து “எப்படிச் சொல்லப்படுகிறது” என்ற வார்த்தைஜாலம் மட்டும் காட்டப்படவில்லை.
இன்பதுன்பங்கள், வேதனைகள், சோதனைகள், விரக்திகளில் எல்லாம் வர்க்கமே பிரதிபலிக்கப்படவில்லை என்று மறுதலிக்க முடியாது.
வர்க்கத்தைப் பேசுகின்ற ஆயிரக்கணக்கான படைப்புக்கள் 1970களின் பிற்பகுதியில் இருந்து வெளிவந்துள்ளன.
கிழக்கின் நூறு சிறுகதைகள் தொகுப்பு வெளியாகி சிலவாரங்கள் கடந்துள்ள இன்றைய சூழலில் சமூக ஊடகங்களிலும், கலை இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் மத்தியிலும் இத்தொகுப்பு பெரும்கவன ஈர்ப்பை பெற்று, விமர்சனத்துடன் கூடிய பேசுபொருளாகி இருப்பது இத் தொகுப்புக்கு கிடைத்திருக்கின்ற வெற்றி. கிழக்குமாணத்தைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்று சாதனை. பொறுப்பு வாய்ந்தவர்களால் சில விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாததால் தவறுகள் இடம்பெற்றுள்ள போதும் இவ் வெளியீட்டை குறைத்து மதிப்பிட முடியாது..
கிழக்கின் மூத்த சிறுகதை எழுத்தாளர்கள் சிலர் தவறவிடப்பட்டுள்ளனர், கிழக்கின் முதலாவது சிறுகதையும், அது வெளிவந்தகாலமும் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவை இத்தொகுப்பின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்தி உள்ளன. இத்தொகுப்பு ஒரு ஆவணம் என்றால், எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்லப்படும் வரலாற்றுப்பதிவு என்றால், கிழக்கின் இலக்கிய ஆய்வுகளுக்கான உசாத்துணை என்றால் இந்தத் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு மிகக் கவனமாக செயற்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்கிறது. இல்லையேல் அது கிழக்கின் சிறுகதை இலக்கிய வளர்ச்சி வரலாற்றைத் திரிவுபடுத்தி விடும்.
இங்கு முன் வைக்கப்படும் குறைகள் பொதுவாக வெளியீட்டுப் பொறிமுறையின் தவறுகளே. இந்த பாரிய முயற்ச்சியையோ, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டு மொத்த நிர்வாகம் சார்ந்ததோ அல்ல. வேண்டுமானால் இந்தப் பொறிமுறறைச் செயற்பாட்டை சரியாகக் கண்காணிக்காததால் திணைக்களம் சகல தவறுகளுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அது அதன் தார்மீகப் கடமையும் கூட. இது ஒரு பாரிய முயற்சி முற்றுமுழுதாக தவறுகளைத்தவிர்ப்பது என்பது பணிப்பாளர் கூறுவது போன்றும், சில ஆர்வலர்கள் பதிவிடுவது போன்றும் கஷ்டமானதுதான். ஆனால் ஆகக்குறைந்தது மூத்தபடைப்பாளிகள் விடப்பாடாமலும், இத்தொகுப்பின் ஆணிவேரான கிழக்கின் முதற்சிறுகதை தவறிப் போனதையும் தவிர்த்து இருக்கலாம். ஆணிவேரை விட்டு கிளைகளையும், பூக்களையும் பேசுகின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது ஆரோக்கியமான கலை இலக்கியக்களத்திற்கு உரியதல்ல.
கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், திருமலை வளாகம் எங்கும் ஆக்க இலக்கியகர்த்தாக்கள், ஆய்வாளர்கள், துறைசார் நிபுணர்கள் எல்லாம் நிறைந்து கிடக்கின்ற நிலையில், மறுபக்கத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இத்துறை சார்ந்தவர்கள் ஏராளமாகவும், தாராளமாகவும் பரவிக்கிடக்கின்ற சூழலில் அவர்களை உள்வாங்கி இத்தொகுப்பை வெளியிட முடியாமல் போனது விசனத்திற்குரியது. கிழக்கு மாகாணத்திற்கு வெளியே இலங்கையிலும், புகலிடநாடுகளிலும் வாழ்கின்ற துறைசார்ந்தவர்களை தேவையாயின் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் இன்றைய உயர்தொழில்நுட்ப தொடர்பாடல் வசதிகளுடன் முடியாத ஒன்றல்ல. இவை அனுபவத்திரட்சியையும், நிபுணத்துவ வழிகாட்டலையும் வெளிப்பாட்டுத்தன்மையையும் மேலும் அதிகரித்திருக்கும். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டவேண்டிய தேவை இருந்திருக்காது.
இத் தொகுப்பு குறித்து “காலக்கண்ணாடி” இங்கு பேசுவதற்கு வெளிப்படைத்தன்மையற்ற வெளியீட்டுத் பொறிமுறை ஒரு முக்கியமான காரணம். ஆனால் இது மாத்திரமே ஏக காரணமும் அல்ல. இதைவிடவும் ……..
1. திருகோணமலையில் வெளியீடு இடம்பெற்ற சமகாலத்தில் சமூக ஊடகங்களில் -முகப்புத்தகத்தில் சில பதிவுகள் இடம்பெற்றன. இவை கிழக்கிலங்கையின் ஆரம்பகால முன்னணி கதைசொல்லிகள் தொடர்பான குறிப்புக்கள்.
2. என்.ஆத்மா ஒரு பதிவை இட்டிருந்தார். முதலில் அவரது பதிவு தனது கதை சேர்க்கப்படாததன் வெளிப்பாடகவே இருந்தது. இதனால் தான்சார்ந்தே அவர் பேசுகிறார் என்ற வெட்க நிலையே இருந்தது. அதற்கான பதிலும் திணைக்கள பணிப்பாளரால் வழமையான சிவப்பு நாடா நிர்வாகப்பாணியில் வெளியிடப்பட்டது.
3. ரியாஸ் குரானா ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை இட்டதுடன் கேள்விகளையும் எழுப்பினார். இந்த தொகுப்பின் எந்த உரையும், எவரது உரையும் பேசாத தகவல்களையும், வரலாற்றுப் பதிவையும் மிகக்கனதியாக ஆணித்தரமாக தொகுத்துள்ளார். உண்மையில் இது கிழக்கின் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு, அறிய விரும்புகிறவர்களுக்கு மிகச்சிறந்த வரலாற்றுப்பதிவு.
4. எஸ்.எல்.எம் ஹனிபாவும் தவறவிடப்பட்ட எழுத்தாளர் வேதாந்தி தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். தங்கள் கதைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என சுயதிருப்தி அடையும் கிழக்கின் இலக்கியப் பெரும் புள்ளிகளுக்கு தனது இலக்கிய நேர்மை என்ன என்பதை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.எல்.எம்.
5. இன்னொரு பதிவில் “ஒட்டடையும், தும்புத்தடியும்” பேசின. ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படையாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தனிப்பட்ட முகப்புத்தகத்தில் ஒழித்திருந்து கல்லெறியும் வக்கிரம் சம்பந்தப்பட்டவர்களின் நேர்மை குறித்து கேள்வியை எழுப்புகின்றது.
தும்புத்தடியைத் தூக்கியவர் தன்னை ஒரு கலை, இலக்கிய, சினிமா விமர்சகராக காட்டிக்கொள்பவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கருத்தைக் கருத்தால் மோதாமல் தும்புத்தடி அழகியல் வாய் வன்முறையில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
பொதுநிதியில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்புமீதான தவறுகள் குறித்த விமர்சனங்களை அலட்சியப்படுத்துவதையே
ஒட்டடையும் தும்புத்தடியும் வெளிப்படுத்துகின்றன. கிழக்குமாகாண கலை இலக்கியக் களம் இவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. கிழக்கின் ஒவ்வொரு நபருக்கும் இது குறித்து கருத்துச்சொல்லும் உரிமை உண்டு. இதன் அர்த்தம் துதிபாடுதல் மட்டும் அல்ல எதிர்க்கருத்தாடலும்தான்.
இவை அனைத்தும் ஏற்படுத்திய. தூண்டுதலின் விளைவே இப்பதிவு.
இருட்டடிப்பு செய்யப்பட்ட “ஆணிவேர்” படைப்பாளிகள்.
கிழக்கின் சிறுகதைகள் என்ற இத்தொகுப்பில் உள்ள நூறு கதைகளில் முதல் முப்பத்தியொரு கதைகள் அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள். எஸ்.டி.சிவநாயகத்தின் “சோமாவதி” தொகுப்பின் முலாவது கதை. முப்பத்தியோராவது கதையாக “கடவுள் ஊர்வலம் போகின்றார்” என்ற இராஜ.தர்மராஜாவின் கதை சேர்க்கப்பட்டுள்ளது.
நம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற படைப்பாளிகளில் முதல்கதையும், தொகுப்பின் முப்பத்தியிரண்டாவது கதையும் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய “மல்காந்தி”. இந்த வரிசையில் தொகுப்பில் நாகேந்திரன் விஜயதாஸ் என்ற ஒருவரின் கதையே நூறாவது கதை.
உண்மையில் தவறவிடப்பட்ட எழுத்தாளர்கள் கிழக்கிலங்கையின் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. .
அவர்கள் தொகுப்பாளரால் தவிர்க்கப்பட்டிருப்பது முற்று முழுதான நேர்மையீனம். “பாயோடுஒட்டி வேரோடிப்போனவர்கள்” பற்றி குறிப்பிடும் தொகுப்பாளர் உமா.வரதராஜனுக்கு கிழக்கின் சிறுகதை இலக்கியம் என்ற விருட்சத்தின் கிளைகளும், பூக்களும், பக்கவேர்களும் தெரிந்திருக்கின்ற நிலையில் ஆணிவேர்கள் தெரியாமல் போனதா? தெரிந்தும் திட்டமிட்ட இருட்டடிப்பா?
“கேணிப்பித்தன்” என்னும் கதைசொல்லி பன்மைத்துவ ஆற்றல் கொண்ட மண்வாசனை பேசும் சிறுகதைப்படைப்பாளி. ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வம்மிப்பூ, அந்த ஆவணி ஆறு, கேணிப்பித்தன் கதைகள், ஏன் வந்தாள், கும்பத்து மால் என அவரின் சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஈழத்து தமிழ் சிறுகதை வரலாற்றில் இவரது பங்களிப்பு காத்திரமான ஒன்று என்பதும் ஈழத்து தமிழ் சிறுகதை வரலாறு எழுதப்படுகின்ற போது கேணிப்பித்தன் எனும் கலாநிதி, கலாபூசனம் திரு.ச.அருளானந்தம் அவர்களை தவிர்த்து விட்டு எழுதமுடியாது என்பது இங்கு மிக முக்கியம் என நான் சொல்வேன்” —பால. சுகுமார் —
“அண்மையில் வெளிவந்த கிழக்கின் நூறுகதைகள் கொண்ட தொகுதியில் ஒரு சிலரின் கதைகள் விடுபட்டுப்போனது மனதுக்கு கொஞ்சம் நெருடலே” -இங்கு வேதாந்தி பற்றி பேசுகிறார் எஸ்.எல்.எம். ஹனிபா.
“பித்தன் ஷாவுக்கு முன்னர் கிழக்கில் சிறுகதை எழுதிய பலர் உள்ளனர். முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான்), சிவா (சிவசுப்பிரமணியம்), எம்.எம்.ஸாலிஹ், (புரட்சிக்கமால்), அருள்.செல்வநாயகம்” —-ரியாஷ் குரானா —-.
கிழக்கிலங்கையின் சிறுகதை முன்னோடி குருமண்வெளியூர் அருள்.செல்வநாயகம் அவர்கள். இவரது முதல்கதை 1946ம் ஆண்டு “மின்னொளி” என்ற சஞ்சிகையில் வெளிவந்ததாக இவர் பற்றிய வரலாற்றுக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. பெருமளவு தமிழக சஞ்சிகைகளில் இவரது கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட எண்பத்தைந்து சிறுகதைகளை எழுதியதாக அறிய முடிகிறது” —-பால.சுகுமார்—-
இத் தகவல்களை நோக்கும் பொது நடந்திருப்பது தற்செயல்நிகழ்வு, தவறு என்று சம்பந்தப்பட்டவர்கள் எவரும் சாக்கு போக்கு சொல்லமுடியாது. கிழக்கின் மூத்த முன்னணி கதைசொல்லிகளை தவிர்த்து விட்டு கிழக்கின் சிறுகதை இலக்கியம் பற்றி பேசுவது சுத்த அபர்த்தம்.
தொகுப்பில் தவிர்க்கப்பட்டுள்ள முத்த படைப்பாளிகள் வ.அ.இராசரெத்தினம், எஸ்.பொ, நீலாவாணன், அன்புமணி, நவம், காலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை நினைத்துப்பார்த்தவர்கள் அவர்களை மறந்தது தற்செயல் நிகழ்வா….? என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.
இன்னும் மோசமான செயல் என்னவெனில் சிறுகதை எழுத்தாளர்களாக அடையாளப்படுத்தப்படாத சில அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கதைகள் பின்கதவால் உள்வாங்கப்பட்டிருப்பது. இவர்கள் எப்போது இருந்து கதைகளை எழுதுகிறார்கள்? எத்தனை கதைகளை எழுதியுள்ளனர்? எந்த பத்திரிகையில் சஞ்சிகைகளில் தொகுப்புக்களில் அவை வெளிவந்துள்ளன என்ற விபரங்கள் தெரியாது.
உண்மையில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் இந்தப் பேர்வழிகள். இந்த விடயம் தொகுப்பாளரின் நேர்மையை சந்தேகிப்பதுடன், திட்டமிட்ட தவறுகளையும் சாட்சியப்படுத்துகின்றது.
இடம்பெற்ற தவறுகளை எந்தவகையிலும் கணக்கில் எடுக்காது பொறுப்பு வாய்ந்த ஒருவர் தனது முகப்புத்தகத்தில் “விமர்சனங்களை” ஒட்டடைக்கு ஒப்பிட்டு அசட்டை செய்வதும், அதற்கு பொறுப்புச் சொல்லவேண்டிய மற்றவர் தான் ஒட்டடையை தும்புத்தடியினால்தான் தட்டுவேன் என்று பதிலளிப்பதும் இந்த வெளியீடு குறித்து வெளியான மிக மோசமான பதிவு. இத்தனைக்கும் தும்புத்தடிக்காரர் தன்னை கிழக்கில் ஒரு விமர்சகராக அடையாளப்படுத்தி உள்ளவர் என்பது வேடிக்கையானது.
எதிர்கால முயற்சிகள் குறித்து…….!
ரியாஷ் குரானாவின் பதிவின் ஒர் பகுதியை எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதற்கான ஆலோசனையாக கொள்ள முடியும். இங்கு ஒரு விடயத்தில் அனைவருமே ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம் ஒன்று உள்ளது. அதுதான் இந்த முயற்சி தொடரவேண்டும் என்பதும் இடைநடுவில் தடைப்பட்டுப் போகக்கூடாது என்பதுமாகும்.
இது ஒரு பாரிய முயற்சி, பாரிய வேலைப்பளுவைக்கொண்டது என்பது எல்லாம் எவராலும் நிராகரிக்கப்படவில்லை. நவநீதனின் இடத்தில் வேறு ஒருவர் பதவியில் இருந்தால் இந்தளவுக்கு கிழக்கின் கலை இலக்கியக் களம் சூடுபிடித்திருக்கமாட்டாது என்பதுடன் ஒன்றிற்குப் பின் ஒன்றாக பல தொடர்நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்பில்லை என்பதையும் நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றைய மாகாணசபைகளைக்கு முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளது.
இது யாழ்குடாநாடு, வன்னி, மலையகம் மற்றும் தென் இலங்கை இலக்கிய ஆர்வலர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடியது.
தவறுகளை இனம் கண்டுள்ள கிழக்கின் மூத்த கலை, இலக்கிய படைப்பாளிகள் பலரும் மௌனிக்கிறார்கள். இவ்வாறான முயற்சிகளும், எதிர்காலத்திட்டங்களும் சாகடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கலாம்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது இது சரியாகத் தெரியலாம். ஆனால் இந்தக் கருத்தின் மூலம் இவர்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை மழுங்கடிக்கின்றனர். விமர்சனங்களை செய்யாத படைப்பாளியும், விமர்சனங்களை கவனத்தில் எடுக்காத படைப்பாளியும் தனது தார்மீகப் பொறுப்பை நிராகரிப்பவனாகிறான்.
இந்த முயற்சி தொடர்ச்சி அற்றுப் போகுமானால் அதற்கு சிலர் நினைப்பது போன்று விமர்சனம் காரணமல்ல. மாறாக வெளியீட்டுப்பொறிமுறையில் இடம் பெற்ற நேர்மையீனங்களும், வெளிப்படைத்தன்மை இன்மையுமே காரணமாக இருக்கமுடியும். இது ஒரு பொதுமுயற்சி, பொதுநிதி சார்ந்தது.
சமுக ஊடகங்களிலும், மேடைகளிலும் ஆளுக்காள் மாறி மாறி விமர்சனத்தை பாராட்டாக அர்த்தம் கொள்பவர்களிடம் அல்லது ஆளுக்காள் சால்வையும், பொன்னாடையும், மாலையும் போட்டுக் கொள்கின்ற இவர்களிடம் முகத்துதி கடந்த நேர்மையை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும்.
இவர்கள் எப்போதும் மதின்மேற்பூனைகள்தான்.
ரியாஷ் குரானா குறிப்பிட்டுள்ள பல விடயங்கள், எழுப்பி உள்ள கேள்விகள், ஆலோசனைகள் மிகவும் காத்திரமானவையும், ஆரோக்கியமானவையும். இவற்றை மற்றைய தொகுப்புக்களில் திணைக்களம் கருத்தில் கொள்வது நல்லது.
இந்த கஷ்டமான பணியில் மேடையில் ஏறாது திரைக்குப்பின்னால் இருந்து பெரும்பங்களிப்பை வழங்கிய அனைத்து கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள ஊழியர்களுக்கும், மாவட்ட, பிரதேச மட்ட மற்றும் கள உத்தகயோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
“ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்” இது எமது தமிழ் கலை இலக்கிய களத்தின் விமர்சன ஜதார்த்தம்.