— தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் —
டிசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி மாநகரசபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.
லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற பலவர்ணம் கொண்ட எப்போதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள். பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு; (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன் கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் (2 லட்சம்) மட்டுமே. ஆகக்கூடியது 2 வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் அடங்குகின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கல் நிலையமாக காண்கின்றனர்.
லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.
தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதாரத் தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.
லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.
லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் சில்லறை வியாபாரத்துறையில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் நிலையங்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர. தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தென்படக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.
டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14 ஐ நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதேபோல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.
கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவருமான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.
லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். அவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள் தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.
தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி, குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்கள் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரீட் (Eastham High street) இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்னுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.
‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் கூறி, தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.
கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாகக் குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.
இறுதியாக நிக்களஸ் ரொஜர் தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனைப்பிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.
இவ்வாறு எல்லாவற்றையும் முன்னுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான படுகொலைகள் தமிழர் மத்தியில் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.
எதிர்காலத்தில் இவை அனைத்தும் மாற வேண்டும். இங்குள்ள தமிழ் சமூகம் மேம்பட வேண்டும்.