போவோம்! புதியதோர் உலகை நோக்கி…!

போவோம்! புதியதோர் உலகை நோக்கி…!

— செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் — 

* செம்மொழி தமிழே என்று செப்பினால் போதுமாமோ? 

எம்மவர் வாழ்வில் எங்கும் இருப்பது தமிழா சொல்வீர்! 

தாய்மொழி தமிழில் கல்வி தருவதில் தடைகள் உண்டு. 

கோயிலில் வடமொழியைக் கோலோச்ச விட்டு வைத்தோம்! 

மழலையில் இருந்தே பிள்ளை ‘மம்மி’யும் ‘டடா’வும் சொல்லி 

வளர்வதே வாழ்க்கையென்றால் வண்டமிழ் வளருமாமோ? 

எம்மவர் மூச்சில் பேச்சில் எழில்தமிழ் இல்லையென்றால் 

செம்மொழி ஆக்கிக்கண்ட சிறப்பென்ன? சிந்திப்போமே! 

தடைகளை நீக்கி எங்கும் தமிழினை ஏற்றிவைக்கும் 

தடயத்தில் பயணம் போவோம்! -புதியதோர் உலகை நோக்கி 

போவோம்! புதியதோர் உலகை நோக்கி. 

* வலியான் தொடர்ந்து மெலியானைத் தாக்கினால் 

எலியும் ஒருநாள் புலியாய் எழுமே! 

ஊரை இன்னோர் ஊர் வந்தடக்கினால் 

ஊர்களுக் கிடையிலே உறவுகள் ஓங்குமா? 

தேசம் இன்னோரு தேசத்தைச் சுரண்டினால் 

நேசம் அங்கே நிறைவாய் நிற்குமா? 

நாடு வேறொரு நாட்டைப் பிடிப்பதால் 

கூடுமா நல்லவை? கொடுமைகள் விளையுமே! 

இனத்தை இன்னோர் இனம் வந்தாள்வதால் 

சனத்துள் ஐக்கியம் சரிப்பட்டு வருமா? 

மதம் இன்னொரு மதத்தைப்பகைப்பதால் 

எதனை நாங்கள் எய்தப் போகிறோம்! 

* ஆண்கள் பெண்களை அடக்கி வாழ்வதால் 

ஓங்குமா வாழ்க்கை உடைந்துதான் போகுமே! 

வெள்ளையன் கறுப்பனை விலக்கி வைப்பதால் 

உள்ளதும் கெடுமே! ஒற்றுமை குலையுமே! 

உள்ளான் ஒருவன் இல்லான் உழைப்பைக் 

கிள்ளினால் உலகில் கேடுகள் மலியுமே! 

சாதி மற்றொரு சாதியைச் சாடினால் 

பேதம் மற்றும் பிளவுகள் பெருகுமே! 

உறவுகள் உடைந்து பிரிவுகள் பெருகினால் 

உலகில் மக்கள் உய்வ தெங்ஙனம்? 

* பறவையைக் கண்டவன் விமானம் படைத்தது 

உறவைக் கெடுத்து இவ் உலகை ஆளவா? 

பாடும்மீனினில் படகினைக் கண்டது 

நாடும் நாடும் பகையினை நாடவா? 

அணுவைப் பிளந்தது ஆயுதம் செய்யவா? 

அகிலம் அதனால் அழிந்து போவதா? 

* காட்டை அழித்துக் கட்டிடம் கட்டினோம்! 

விளைநிலம் எங்கும் வீதிகள் அமைத்தோம்! 

குளத்தை நிரப்பிக் குடிமனை எழுப்பினோம்! – கடல் 

வளத்தைக் கெடுக்கும் வலையும் வீசினோம்! 

இயற்கைப் பசளை இடுவதைத் தவிர்த்தோம் 

செயற்கையில் எல்லாம் செய்து பழகியே 

நிலத்தைக் கெடுத்தோம்! நீர்வளம் நீக்கினோம்! 

காற்றிலும் மாசு கலந்திட வைத்தோம்! 

நேற்றைய வாழ்வினை நினைந்தே அழுதோம்! 

குலத்தை அழிக்கும் கோடரிக் காம்பாய் 

மனிதனே மனிதனை மாய்க்கவென் றெழுந்தோம்! 

* இயற்கையை அழித்து நாம் இறுமாந்திருந்ததால் 

செயற்கை உலகைச் சிருஷ்டிக்க முனைந்ததால் 

சாதிகள் சொல்லிச் சண்டைகள் பிடித்ததால் 

சாமியின் பெயரில் சமர்பல புரிந்ததால் 

ஊதிப்பருத்தது உலகில் வேற்றுமை 

ஓடி மனிதம் ஒளிந்து கொண்டது. 

பணத்தைத் தேடியே பகைமை வளர்த்ததால் 

குணத்தைத் தொலைத்தோம்! கொடுமைகள் மலிந்தன! 

* போதை வஸ்துப் போதையில் மூழ்கியே 

பாதைகள் தவறிப் பயணம் தொடர்ந்ததால் 

வாதைகள் உற்று வாழ்க்கை முடிந்தது! 

* ‘பாஸ்பூட்’ உண்டே பழகிப்போனதால் 

ஈற்றில் நோயால் இடர்பட நேர்ந்தது! 

* நடையைக் குறைத்து நாளைக்கழித்ததால் 

எடையைக் கூட்டியே இழுபட வைத்தது! 

* தியானம் தவிர்த்தோம்! தீதுகள் சேர்ந்தன! 

மயானம் அழைக்கையில் மதிவந்தென் செய?. 

* சூறாவளியும் வெள்ளமும் வந்தும் 

மாறா மனிதனை மாற்றவென் றொருநாள் 

‘சுனாமி’ தான் அடித்தும் சுணை வரவில்லையே! 

மாறா இயற்கையை மாற்றவே முயலும் 

மனதை மாற்றா மனிதனைத் திருத்த 

மரணம் இப்போ மடியில் விழுந்தது! 

‘வம்மிப் பூ’ க் ‘கொரோணா’ வடிவில் வந்தது! 

* சாதிகள் இல்லாச் சண்டைகள் இல்லா 

போதைகள் இல்லாப் பூசல்கள் இல்லா 

பேதங்கள் இல்லாப் பிளவுகள் இல்லா 

ஆயுதங்களாலே அழிவுகள் இல்லா 

செயற்கைப் பொருட்களால் சேதங்கள் இல்லா 

பெரிதாய் நோய்கள் பெருகுதல் இல்லா 

வேற்றுப் பிரிப்புகள் வெறுப்புகள் இல்லா 

விரக்திகள் இல்லா வீண்பழி இல்லா 

கொலைகள் இல்லாக் குற்றங்கள் இல்லா 

பொய்கள் இல்லாப் போலிகள் எல்லா 

களவுகள் இல்லாக் கலப்படம் இல்லா 

பண்டங்கள் எதனையும் பதுக்குதல் இல்லா 

தேர்தல் மோசடித் திருட்டுகள் இல்லா 

ஊழல்கள் இல்லா உழைப்பைச்சுரண்டும் 

உலுத்தர்கள் வாழும் ஊர்களே இல்லா 

* இயற்கையைப் போற்றி இயற்கையைப் பேணி 

இயற்கையோடியைந்து என்றுமே வாழும் 

இலக்குடன் பயணம் போவோம்! -புதியதோர் உலகை நோக்கி 

போவோம்! புதியதோர் உலகை நோக்கி 

# ‘பாஸ்பூட் (FAST FOOD)