எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)

  — அ. வரதராஜா பெருமாள்—                       

பகுதி – 21 

இக்கட்டுரைத் தொடரின் இதுவரையான பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வகைகளில் பரிதாபகரமான நிலைகளில் இருக்கிறது – எந்தளவுக்கு பாதகமான சூழல்களுக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறது என்பவை விபரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை எவ்வாறு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் காலகட்டங்களில் மோசமாக்கப்பட்டு வந்திருக்கிறது – அந்த வகையில் இன்றைக்கும் இலங்கையை ஆளுபவர்களிடம் இலங்கையை நிமிர்த்தி முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான தொலைநோக்கோ திட்டங்களோ தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து செயற்படுவதற்கான எண்ணமோ இல்லையென்பதையும், எதிர்க்கட்சியினரும் அதில் சற்றும் குறைவிவல்லாதவர்களாகவே உள்ளனர்; என்பதையும் இக்கட்டுரைத் தொடரில் மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் புள்ளிவிபரங்களுடன் ஆதாரப்படுத்தப்பட்டும் உள்ளன. 

தங்கம், வைரம், நிலக்கரி, இரும்பு மற்றும் சில பிரதானமான உலோக கனிம வளங்கள் தான் இலங்கையில் இல்லை. அவையும் கூட சில வேளைகளில் இலங்கையில் இருப்பது கண்டு பிடிக்கப்படலாம். இராவணின் இலங்கையை இராமாயணத்தை நம்பும் வட இந்தியர்கள் தங்கம் நிறைந்த இலங்கை என்று கருதியிருந்ததை இங்கு குறிப்பிடுவது பெருமைக்குரிய விடயமாகும். அது ஒரு புறமிருக்க, ஏனைய எல்லா மூல வளங்களையும் – நிலவளங்கள், நீர்வளங்கள், மலைவளங்கள், வனவளங்கள், கடல் வளங்கள், பல்வகை கனிம வளங்கள், கல்வி வளம் மற்றும் துணிச்சல்களும் ஆற்றல்களும் மிக்க உழைப்பு வளங்கள் என பல்வேறு வளங்களையும் – கொண்ட இலங்கையானது நீடித்து நிலைத்து தொடர்ந்து முன்னேறக் கூடிய சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அனைத்துத் தரங்களையம் தகுதிகளையும் உடைய நாடு. இருந்தும் அடிப்படையில் எவையின்மையினால் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறு தரம் தாழ்ந்து அவிழ்க்க முடியா சிக்கல்கள் கொண்ட சிரமங்களுக்குள் அகப்பட்டுப் போயிருப்பதற்கான அரசியல் சமூகக் காரணிகளைப் பற்றிய புரிதலும் அவசியமாகும். அதாவது இங்கு குறைபாடான பொருளாதார அம்சங்கள் மட்டுமல்ல அரசியல் சமூக மேல்கட்டுமானங்களில் உள்ள படுமோசமான குறைவிருத்திகளும் இன்றைய பொருளாதார சிக்கல்கள் சிரமங்களினது விளைகாரணிகளாக உள்ளன. அவற்றிற் சில பிரதானமான விடயங்களை இக்கட்டுரைப் பகுதியில் நோக்கலாம் 

சுயாதீனமில்லாத நீதித் துறை 

ஜனநாயகத்தின் சரிந்து போன தூண் 

ஒரு நாட்டின் அரசுக்கு அமைச்சரவையே தலைமை. ஆனால் அவர்கள் இங்கு நாட்டினுடைய மன்னர்களல்ல. அதை அவர்களுக்கு ஒவ்வொரு வேளையிலும் உணர்த்துவதற்கு நாட்டின் நீதித் துறை சுயாதீனமானதாக இருக்க வேண்டும். பாராளுமன்றம் நாட்டு மக்கள் அனைவரினதும் நலன்களைப் பேணுவதற்கான சட்டங்களை ஆக்கும் மன்றம். ஆனால் இங்கு பாராளுமன்றமோ ஊழல் பேர்வழிகளினதும் மோசடிக்காரர்களினதும், அதிதீவிர இனவாத மற்றும் மத வாத நடிகர்களினதும் பாதுகாப்பான குகையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதனால், லஞ்சம், ஊழல்கள், மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றிறைத் தடுப்பதற்கும் துடைத்தழிப்பதற்குமான முறையான சட்டங்களை ஆக்குவதற்கோ நடைமுறைப்படுத்துவதற்கோ பாராளுமன்றவாதிகள் தயாராக இல்லை. எனவே பாராளுமன்ற சட்டங்களை முறையாகவும் முழுமையாகவும் பரந்துபட்ட மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றும் வகை செய்வதற்கு சுயாதீனமான நீதித்துறை வேண்டும். பாராளுமன்றம் தவறினாலும் கூட, அரசியல் யாப்புக்கு மாறுபடாமலும் பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு முரண்படாமலும் சட்டங்களை ஆக்கும் பாரம்பரிய உரிமை நீதித்துறைக்கு உண்டு. ஆனால் அதனைப் பிரயோகிக்கும் வாய்ப்பு இலங்கையின் நீதித்துறைக்க வழங்கப்படவில்லை.  

இலங்கையின் நிறைவேற்று அதிகாரத் துறையின் பதவிகளில் உள்ள நபர்களின் செயலாற்றற் தகுதியில் குறை சொல்ல பெரிதாக எதுவுமில்லை. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இலங்கையின் நிறைவேற்று அதிகாரத் துறையானது லஞ்சம், ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் நிறைந்ததாக உள்ளன என்பது அனைவரும் அறிந்த விடயமே. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சலாம் போட்டுக் கொண்டு தமது இருக்கும் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதிலும், மேலும், தமது பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதிலும் குறியாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலன்சார் விடயங்களில்; முன்னேற்றகரமான பொருளாதார செயற்பாடுகளை மேற்கொள்வதில் அக்கறையற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தம்மை நாடி வரும் பொது மக்களை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை,மாறாக பொதுமக்கள் ஏதோ தமது கௌரவங்களுக்கு இடைஞ்சலானவர்கள் போல கடமை உணர்வற்றும் கண்ணியமற்றும் செயற்படுவதை அரச அலுவலகங்கள் எங்கும் பரவலாக காண முடிகின்றது. இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரச நிறுவனங்கள் பொது மக்களின் சுயமரியாதையை பேணுகின்றவையாக பொறுப்புடன் கடமைகளை மேற்கொள்பவைகளாக செயற்பட வைப்பதற்கும், அரச நிர்வாக கட்டமைப்புகள் பொதுமக்கள் நலன் சார் சேவை நிறுவனங்கள் எனும் உணர்வுடன் செயற்படுவதை உறுதி செய்வதற்கும் சுயாதீனமான நீதித்துறை மிகவும் அவசியமானது. 

ஆனால், இங்கு நீதித்துறையானது அதன் கட்டமைப்பில் சமநீதியை நிலைநாட்டும் துறையாக இல்லாமல் வல்லமை மிக்கவர்களுக்கு வாய்ப்பாக சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு நிறைவேற்று அதிகாரத் துறையாகவே உள்ளது. இங்கு நீதியை நிலைநாட்டலும், சட்டம் சகலருக்கும் சமமானதே என்பதை உறுதிப்படுத்தலும் பின்தள்ளப்பட்ட விடயங்களாகவே உள்ளன. அனைத்து அடிப்படை அரசியல் பொருளாதார, சமூக வாழ்வு உரிமைகளையும், சமூக சமத்துவத்தையும்,சுற்றுப் பறச் சூழல் பாதுகாப்பையும் உறுதியாக நிலைநிறுத்துவது நீதித் துறைக்கு உரிய பொறுப்பாகும். ஆனால் அரச நிறைவேற்றுத் துறையும் அதில் அதிகாரத்தில் உள்ளவர்களும் அவற்றிற்குப் பாதகமாக செயற்படும் போது அதற்கெதிராக வினைத்திறனுடன் செயலாற்ற முடியாத துறையாகவே இலங்கையின் நீதித் துறை காணப்படுகின்றது. 

லஞ்சம், ஊழல் மோசடிகள், சுற்றுச் சூழல் வளங்களை கொள்ளையடித்தல், அடிப்படை உரிமை மீறல்கள், இன மத மற்றும் சாதி அடிப்படைகளில் பொருளாதார சம வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றமை, நிர்வாக கட்டமைப்பிலுள்ள நேர்மையானவர்கள் தேச நலன் நோக்கில் செயற்பட முடியாமை போன்ற விடயங்களில் காத்திரமான வகைகளில் தலையிட முடியாத ஒன்றாகவே இங்கு நீதித் துறை உள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பானது அரசியல் பொருளாதார அதிகாரங்ளை மாகாண மற்றும் உள்ளுராட்சிகளுக்கென பகிர்ந்திருக்கின்ற போதிலும், அவற்றை மைய அதிகாரத்தில் உள்ளவர்கள் சுலபமாக மறுதலித்து தங்கள் கைகளிலேயே முழு அரச அதிகாரங்களையும் தொடர்ந்து கையகப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட அரசியல் சமூகப் பிரிவினரோ, இவ்விடயத்தில் உண்மை நிலையை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை அதனைச் செய்யாது என்ற எண்ணப்பாட்டுடன் விரக்தி கொண்டவர்களாகவும், நீதித் துறை மீது நம்பிக்கையற்றவர்களாகவுமே உள்ளனர்.  

இலங்கை ஓர் அரசியல் யாப்பு அடிப்படையிலான ஜனநாயக நாடு. பாராளுமன்றம் ஆக்கியிருக்கும் சட்டங்கள் காலத்துக்கு பொருத்தமானவையா?மேலும் அவை அரசியல் யாப்பை மீறாதவையாக உள்ளனவா? என்ற கேள்விகளுக்கான விடையைத் தரும் வகையில் சட்டங்கள் ஒவ்வொன்றையும் காலத்துக்குக் காலம் மீளாய்வு செயவதற்கான பொறுப்பு நீதித் துறைக்கே உரியதாகும் ஆனால் அந்த நிலைமை இலங்கையில் இல்லை. அரசியல் யாப்பின் பல பகுதிகள் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளன. அரசியல் யாப்பு முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதாக சத்தியப்பிரமாணம் செய்யும் ஜனாதிபதியே அவற்றில் பலவற்றை மறுதலிக்கின்ற ஒருவராக இருக்கின்ற வேடிக்கை இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமாக உள்ளது. அரசியல் யாப்பின் உறுப்புரைகள் அனைத்தும் தேச நலன்களையும் பொது மக்கள் நலன்களையும் சார்ந்த வகையில் முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறையானது அதற்குரிய ஆற்றல்களைக் கொண்டிருக்க முடியாத ஒன்றாகவே இங்கு ஆக்கப்பட்டுள்ளது.  

பொருத்தமில்லா கல்வி அமைப்பு 

பிர்த்தானிய காலனித்துவம் தனக்கானதோர் உள்நாட்டு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அதனது அரசியல் பொருளாதார தேவைகளுக்கு சேவை செய்வதற்கும் உரியவையாகவே இலங்கையின் பாடசாலைகளையும் அதன் பாட விதானங்களையும் உருவாக்கி செயற்படுத்தியது. இது அறிவார்ந்தோர் அனைவரும் அறிந்த விடயமே. ஆனாலும், இலங்கை சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளாகியும் இன்னமும் அதில் எந்தவித முன்னேற்றகரமான மாற்றமும் செய்யப்படவில்லை என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை உருவாக்கிய பிரித்தானியா தனது நாட்டின் கல்வியமைப்பில் காலத்தின் தேவைகளுக்கேற்ப பல படி முன்னேற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஆனால் பிரித்தானிய பாரம்பரிய கல்வி முறையையே கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ளும் இலங்கையர்கள் இன்னமும் காலனித்துவ அடிமைக் கால கல்வி அமைப்பை தொடருவதிலேயே பெருமை கொள்கின்றனர். அதனால்த்தானோ என்னவோ இன்றைய கால வர்த்தமான நிலைமைகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான வகையில் இலங்கையின் கல்வி அமைப்பில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.  

இப்போது பாடசாலை நிர்வாக செயற்பாடுகளே மிக மோசமான நிலைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.  

1)         பாடசாலைகளில் தேவையில்லாத வகையான ஆசிரியர்கள் நிறைய உள்ளனர், ஆனால் தேவைகளுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். 

2)         நகர்ப் புறங்களுக்கும் பின் தங்கிய பிரதேசங்களுக்கும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பகிர்வதில் மிகப் பெருமளவில் அசமத்துவங்கள் காணப்படுகின்றன.  

3)         கல்வி கற்பிக்கும் முறைகளும் பரீட்சைகளும் பழைய உளுத்துப் போன அம்சங்களைக் கொண்டவையாக உள்ளன.  

4)         சாதி மற்றும் மத பேதம் காரணமாக தரமான ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிக்காமல் தவிர்ப்பதில் கல்வி அதிகாரம் மிக நவீன உத்திகளைக் கையாளும் ஒன்றாக உள்ளது.  

5)         பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதில் அனைத்து மாணவர்களினதும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொது நீதி அல்லது வரைமுறை கடைப்பிடிக்கப்படாமல் இலவசக் கல்விக்குள்ளேயே ஒரு வகையான ஊழல் மற்றும் வியாபார முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது.  

6)         எல்லாவற்றிற்கும் மேலாக 5ம் வகுப்பு மாணவர்கள் முகம் கொடுக்கின்ற புலமைப் பரிசல்களுக்கான பரீட்சையானது சமூகத்தில் சில பாடசாலைகளை உயர்தரமான பாடசாலைகளாகவும் ஏனைய அனைத்தையும் தரம் குறைந்த பாடசாலைகளாகவும் சமூக வெளியில் கருதப்படுகின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளதுடன், பாடசாலைகளை மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையையும் தோல்வி மனோநிலையையும் வளர்த்து விடும் ஒரு உளவியல் கிருமியாக தலை தூக்கி நிற்கிறது. 

ஆனால் எல்லாவற்றையும் கடந்து பல்கலைக் கழகத்துக்கும் சென்று மூன்று அல்லது நான்கு வருடங்கள் படித்து முடித்த பின்னரும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக இருப்பதுதான் இலங்கை வாழ் சமூகங்களின் பரிதாப நிலை. இதைப் பற்றி அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற பதவிகளுக்காக முண்டாசு கட்டி கொண்டு நிற்பவர்களோ எந்த அக்கறையும் கொண்டவர்களாக இல்லை என்பது மட்டுமல்ல அதுபற்றி எந்த அறிவும் அற்றவர்களாகவும் உள்ளமையே இங்கு வேடிக்கை.  

கல்வி என்பது அறிவை முன்னேற்றுவதற்கும் அதனை சமூக முன்னேற்றத்துக்கென பிரயோகிப்பதற்காகவுமே! எனவும், அதற்கு மாறாக,  அதனை தொழில் வாய்ப்புகளுக்கானவையென படித்த இளைஞர்கள் கருதுவது தவறு! எனவும் சமூகப் போதனை செய்வது சரியானதல்ல. அந்த வாதம் முன்னைய குருகுலக் கல்வி காலத்துக்கு பொருந்தலாம். ஆனால் இன்றைய காலத்துக்கு அது பொருத்தமானதல்ல. மேலும், வருமானம் தரும் வேலையில் இல்லாவிட்டாலும் அரசாங்கம் அடிப்படைத் தேவைகளுக்கான கொடுப்பனவுகளைத் தாராளமாகவே வழங்குகின்ற தொழில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு அந்தக் கோட்பாடு பொருந்தலாம், ஆனால், இலங்கைக்கு அல்லது எந்தவொரு மூன்றாம் உலக நாட்டுக்கும் அது பொருந்தாது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.  

இங்கு கல்வியானது அறிவு விருத்திக்காக மட்டுமல்ல அடிப்படை வாழ்க்கைக்கான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் அவசியமானதாக உள்ளது. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்கிறார் திருவள்ளுவர். ‘பள்ளிக்கூடத்துக்குப் போவதை விட தங்கள் பிள்ளைகள் நாலு மாடு மேய்க்கலாம்’ என பின்தங்கிய வறுமைப்பட்ட கிராமத்து மக்கள் மத்தியில் ஓர் கருத்துள்ளது. எனவே கல்வி வளத்துக்கும் பொருளாதார வாழ்வுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. ஆனால் அதனை பேணுவதற்கு வகையாக கல்லி அமைப்பு இல்லை என்பதனை அறிவார்ந்தோர்; புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் தங்களது பிள்ளைகளின் பள்ளிக்கூட கல்விக்காலத்துக்கும் அவர்களின் பொருளாதார வாழ்வுக்கும் இடையில் அந்நியோன்யமான பொருத்தம் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். தங்களது படித்த பிள்ளைகளுக்கு அரசாங்கம் வேலை வாய்ப்புக்களைத் தரவில்லை என பெற்றோர்கள் மனக்குறை கொள்கிறார்கள்.  

இன்றைய சராசரி உலகில் கல்விக்கும் வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையே மிக நெருக்கமான உறவை நிலைநாட்டுவது அவசியமாகும். நாட்டின் கல்வி அமைப்பே பொருளாதார முன்னேற்றத்துக்கான ஆற்றல்களை உருவாக்குவதிலும் மற்றும் உற்பத்தித் தொழில் முயற்சியாளார்களுக்கான தன்னம்பிக்கைகளை வளர்ப்பதிலும் மிக காத்திரமான பாத்திரத்தை வழங்க முடியும் – வழங்க வேண்டும். இங்கு அரச நிறுவனங்களிலும் சரி அல்லது தனியார் தொழிற் துறைகளிலும் சரி பெரும்பாலும் பண வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகாரம் கொண்ட பதவிகளில் உள்ளனர். இதனை உறுதிப்படுத்துவதாகவே கல்வி அமைப்பு உள்ளது. எனவே இங்குள்ள கல்வி அமைப்பானது நடைமுறையில் சமூக ஏற்றத் தாழ்வுகளை பராமரிக்கும் நிறுவனங்களில்  பிரதானமானதாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இலவசக் கல்வி அமைப்பு என இருந்தாலும் அனைத்து வர்க்கத்தினருக்கும் பொருளாதாரரீதியான முயற்சிகளுக்குரிய தன்னம்பிக்கைகளையம் துணிச்சலையும் வாய்ப்பக்களையும் கொடுப்பதாக கல்வி அமைப்பு இருப்பது மிகப் பிரதானமானதாகும். ஆனால் அவ்வாறான தகமையில் இங்குள்ள கல்வி அமைப்பு இல்லை என்பது பொதுவாக அறிவார்ந்தோர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயமே.  

தகுதியான கல்வி இல்லையெனில்  

தரமான பொருளாதாரம் இல்லை 

இலங்கையின் இன்றுள்ள கல்வி முறையைப் பார்த்தால், சில குறிப்பிட்ட தொழில்சார் கல்விகளைத் தவிர – அதாவது வைத்தியத் துறை, பொறியியல் துறை, சட்டத்துறை, கணக்கியற் துறை போன்றவற்றைத் தவிர ஏனைய கல்வித்துறைகளில் கல்வி கற்றவர்கள் ஆசிரியத் தொழிலுக்கோ அல்லது அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் நிர்வாக சேவை வேலைவாய்ப்புகளைத் தேட வேண்டியவர்களாகவோ உள்ளனர். அதற்கும் கூட அனைவருக்கும் போதிய பல் மொழியாற்றலையோ, தொழிற் திறனையோ வழங்குவதாக கல்வி அமைப்பு இல்லை. நாடு முழுவதுவும் தொழிற் கல்வி அமைப்புகள் என இருந்தும் அவை எதுவும் பெரும்பாலான இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்புகளுக்கான நம்பிக்கைகளையோ தேவையான ஏற்பாடுகளையோ வழங்குகின்ற நிறுவனங்களாக இல்லை.  

கல்வி அமைப்பு ஏற்படுத்தும் சமூக உளவியலும் இங்கு பொருளாதார முன்னேற்றத்துக்கு பாதகமானதாகவே உள்ளது. படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வதா? கடற் தொழில் செய்வதா? மர வேலைகள் செய்வதா?கட்டிட வேலைகளில் ஈடுபடுவதா? மோட்டார் வாகன ஓட்டுனராக வேலை செய்வதா? போன்ற கேள்விகளின் மூலம் பெரும் தொகையான தொழில்களிலிருந்து படித்த இளைஞர்கள் விலக்கி வைக்கப்படுபவர்களாகவே உள்ளனர். 

புள்ளிக்கூடக் கல்வி கட்டாயம் என்பது மட்டும் போதாது. கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவதற்கு முதலில் இலங்கையின் ஒவ்வொரு மாணவ நபரும் மும்மொழிகளிலும் தேர்ச்சி உடைய ஆளாக ஆக்கப்படுவதோடு அவர் விரும்புகிற – அவருக்குப் பொருத்தமான ஏதோ ஒரு தொழிலில் திறன் வாய்ந்தராகவும் ஆக்கப்படுதல் வேண்டும். படித்த எவரும் குமாஸ்தாவாகவோ அல்லது ஆசிரியராகவோ ஆக்கப்படலாம் ஆனால், இங்குள்ள கல்வி அமைப்பினூடாக உருவாக்கப்படுகின்ற மிகப் பெரும்பான்மையானவர்கள் வெள்ளை உடையணிந்த குமாஸ்த்தாக்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ ஆக்கப்படுவதைக்கே தகுதி உடையவர்களால் நாட்டிற்கு அவசியமான அடிப்படைப் பொருளாதாரத் துறைகளனைத்தும் படிக்காதவர்களுக்கு உரியனவென்றே ஆகும்.   

ஓவ்வொரு மாணவரும் வெவ்வேறு தொழில் துறை ஆற்றல் பெற்றவர்; என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாடசாலைகளுக்குரியதே. அதற்குரிய வகையான சிறப்புப் பயிற்சிகள் வழங்குவதை கல்வி அமைப்பின் பாடவிதானம் கொண்டிருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் பேனையும் பேப்பரும் கணணியும் மட்டும் தெரிந்தவர்களல்ல கருவிகளையும் இயந்திரங்களையும் கையாளுவதில் சிறப்புத் தேர்ச்சி உடையவர்கள் என்பதை கல்வி அமைப்பு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல பல்கலைக் கழகங்களுக்கு ஒவ்வொரு துறைக்கும் மாணவர்களை இணைக்கும் விடயத்தில் படித்து முடிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும், அவர்களுக்கும் நாட்டின் தேசிய தேவைகளுக்கும் உரிய வகையான தொழிற் திறன்களையும் கருத்திற் கொண்டதாகவே அரசின் தெரிவுகள் மற்றும் ஒதுக்கீடுகள் அமைதல் வேண்டும்.  

ஆனால், இலங்கையின் இன்றைய கல்வி அமைப்பானது விசனத்துக்கும் விமர்சனத்துக்கும் உரியதாகவே உள்ளது. கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைதல் என்ற முகாமில் அரசாங்கம் கல்வித் துறையில் தனியார் முதலீடுகளுக்கு இடமளிக்க முற்படுவது கல்வியை வர்த்தகரீதியான பண்டமாக ஆக்கி விடும். இது அரசியல் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் நாட்டின் எதிர்காலத்துக்கு அது படு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இன்றைக்கு அரச துறையில் மிக அதிகமானோர் நிறைந்திருப்பதற்கும், பாடசாலைகளில் உரிய தேவைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுவதற்கும், அதேவேளை படித்த இளைஞர்கள் பெரும் தொகையில் வேலை வாய்ப்பற்றவர்களாக இருப்பதற்கும் இங்கு நடைமுறையிலுள்ள கல்வி அமைப்பில் உள்ளார்த்தமாக உள்ள அம்சங்களே காரணமாகும். எனவே இவற்றினைக் கருத்திற் கொண்டதாக கல்வி அமைப்பில் அடிப்படையான திருத்தங்களும் முன்னேற்றங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

இலங்கையில் கல்வி முன்னேற்றத்தை எற்படுத்துவதற்கு அவசியமான உட்கட்டமைப்புகள் போதிய அளவுக்கு உள்ளன. இங்கு நாடு முழுவதுவும் பாடசாலைகள விரிந்தும் பரந்தும் உள்ளன. இங்கு தேவைப்படுவதெல்லாம்,  

1) சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு உரிய வகையில் பாடவிதான அமைப்புக்களில் திட்டவட்டமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்,  

2) அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும், 

 3) பாடசாலைகள் மத்தியில் சமத்துவத்தை நிலை நாட்டும் வகையாக ஆசிரியர்கள் பகிரப்படல் வேண்டும், 

 4) பாடசாலைகளின் தரங்கள் தொடர்பாக நிலவும் ஏற்றத் தாழ்வுகள நீக்கப்பட வேண்டும்,  

5) பாடசாலைகளில் மாணவர்களை இணைத்தல் என்பது அவர்களின் தராதரத்தை பரிசோதித்ததின் அடிப்படையில் என்றில்லாமல் அவர்களின் வாழ்விடங்களின் அடிப்படையில் இடம் பெறுவதை உறுதிப் படுத்தல் வேண்டும்.  

அதை விடுத்து, அரசாங்கம் மாகாண ஆட்சிகளிடமிருந்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குதல் என்ற பெயரில் மைய அதிகாரத்துக்குள் கையகப்படுத்த எடுக்கும் முயற்சிகளும், அதிகூடிய தகுதி கொண்ட மாணவர்களை அடையாளப்படுத்தல் என்ற பெயரில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட பரீட்சைகளைத் தொடர்தலும், தனியார் வர்த்தக கல்விக் கூடங்களை ஏற்படுத்த முயற்சித்தலும் நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலும் பின்னடைவுகளை உருவாக்குவதோடு சமூக அரசியற் குழப்பங்கள் தொடரவே துணை புரியும். 

இங்கு போதிய அளவு விஞ்ஞானிகள் இல்லை, போதிய அளவு பொறியியலாளர்கள் இல்லை, போதிய அளவு வைத்தியர்கள் இல்லை, தாதியர்கள் பற்றாக்குறை, அறிவார்ந்த பயிர்ச் செய்கைகளுக்கு போதிய தகுதி கொண்டோர் விவசாயத்தில் இல்லை, ஏற்றுமதித் தரம் வாய்ந்த உற்பத்திகளை மேற் கொள்வதற்குத் தயாராக மூலதனம் கொண்டோரிடம் அதற்கான தொழிற் திறனில்லை, எந்தத் தொழிலையும் செய்வதற்கு ஆர்வம் கொண்டோரிடம் மூலதனம் இல்லை, தொழில் வாய்ப்புக்களை வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு உரிய வகையான தொழிற் திறன்கள் கொண்டோர் பற்றாக்குறை. இவற்றை நிவர்த்தி செய்வதற்க முதலில் தேசத்தின் கல்வி அமைப்பில் முன்னேற்றகரமான திருத்தங்கள் – மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இவற்றை செய்வதற்கோ ஆட்சியாளர்களிடம் நேரமுமில்லை மனமுமில்லை.   

கட்டுரைத் தொடர் பகுதி 22ல் தொடரும்