தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

 —- வி. சிவலிங்கம் — 

–           சுமந்திரன் தலைமையிலான குழுவினரின் அமெரிக்க விஜயம் 

–           டிசெம்பர் மாதம் அமெரிக்கா நடத்தும் மெய்நிகர்‘ வழியிலான கலந்துரையாடல். 

–           சீன – இலங்கை உறவுகளில் ஏற்பட்டு வரும் நெருக்கமும், தாக்கங்களும் 

–           உள்நாட்டு அரசியலில் புதிய கூட்டுகள்  

இலங்கை அரசியலையும், குறிப்பாக தமிழ் அரசியலையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகவும் அவசியமாகி வருகிறது. குறிப்பாக பூகோள அரசியல் நிலமைகள் மாறிவரும் சூழலில் சர்வதேச அரசியல் மிக விரைவாகவே மாறி வருகிறது. இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் இன்று பலமாக இருப்பினும், அதன் ஆயுள் தொடர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நாடு பொருளாதார அடிப்படையில் பலமாக இருக்கும்போது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் சாத்தியமாகலாம். ஆனால் இப்போது நாட்டின் அதிகார வர்க்கம் இவ்வாறான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தினைத் தனது அதிகார இருப்பிற்காக பயன்படுத்திய உண்மைகள் மிக விரைவாகவே அம்பலமாகி வருகின்றன.  

இப் பின்னணியில் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக அரசு எடுத்துவரும் முடிவுகள் அரச ஆதரவு சக்திகளைப் பலப்படுத்துவதாக மக்கள் உணரத் தொடங்கியுள்னர். உதாரணமாக, பொருட்களின் விலையேற்றத்தைத் தடுப்பதாகக் கூறி கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்திய அரசு பொருட்கள் கறுப்புச் சந்தைக்கு சென்றதை அறிய மாதங்கள் சென்றிருக்கிறது. அதன் பின்னர் கட்டுப்பாட்டு விலையை அகற்றியிருக்கிறது. இது போன்றே பல அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டப்பாட்டு விலையை அதிகரிக்க வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும், பின்னர் அதனை வாபஸ் வாங்குவதும் பார்வைக்கு தற்செயலாகத் தென்படலாம். ஆனால் இவை மிகவும் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இச் செயல்களால் பயனடைந்த பிரிவினர் அரச ஆதரவாளர்களே. சட்டத்தை மீறிச் செயற்பட்ட எந்த வர்த்தகரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அரசு கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதும், பின்னர் முழுமையாகவே கட்டுப்பாட்டு விலைகளைத் தளர்த்துவதும் வர்த்தகர்களுக்கும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெற்ற வர்த்தகர்களுமே பலனடைந்தார்கள்.  

எனவே சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கதையாடலின் உள் நோக்கம் மக்களால் மிகவும் தெளிவாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். தற்போது அரசாங்கத்தின் உள்ளிலும், வெளியிலும் சீனாவிடம் மட்டும் கடன்களைப் பெறுவதிலுள்ள நன்மை, தீமைகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. சீனாவின் கடன்கள் குறுகிய கால அடிப்படைகளைக் கொண்டிருப்பதோடு, அதி கூடிய வட்டியையும் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறைக்குள் சிக்கியுள்ள இலங்கை சீனாவை மட்டும் ஏன் நம்பியிருக்கிறது? சர்வதேச வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் ஏன் கடன்களைப் பெற முயற்சிக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன. சீனாவின் கடன்களில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான மற்றும் கடன்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவதில் தமது நாட்டு தொழிலாளர்களையும் பயன்படுத்துவது தொடர்பான  நிபந்தனைகளைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் கடன்களைப் பெறும் ஆட்சியாளர்கள் சீன தொழிலாளர்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது. ஏனெனில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மிகவும் தொழில்நுட்ப தேவைகளையும், அதற்கான தொழிலாளர்களையும், குறுகிய காலத்தில் நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட சேவைகளும் அவசியமாகின்றன.  

சீனாவிடம் பெறப்படும் கடன்கள் ஆட்சியாளர்களின் ஊழல் செயற்பாடுகளுக்கு மிகவும் வாய்ப்பைத் தருகிறது. அபிவிருத்தி திட்டங்களுக்கான உள்நாட்டு உதவிகள் அரச ஆதரவாளர்களுக்கு அதாவது வீதி அமைத்தல், துறைமுக அபிவிருத்தி போன்றவற்றிற்கு உள்நாட்டு தரகர்கள் உதவுகின்றனர். பகிரங்க கேள்விப் பத்திரங்கள் கோரப்படுவதில்லை. தற்போது அரசியல்வாதிகள் பலர் கொந்தராத்துக்காரர்களாக மாறி பல ஆயிரம் உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலைகளையும் வழங்குகின்றனர். இவர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லாவிடினும் தற்போதுள்ள சிக்கலான பொருளாதாரச் சூழலில் பெரும்பாலோர் கூலிகளாக உள்ளனர். எனவே சீனாவின் கடனுதவிகள் அரச ஆதரவாளர்களுக்கு பெரும் பணத்தைச் சுருட்ட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதே போன்ற வாய்ப்பு உலக வங்கியிடம் அல்லது ஏனைய உலக நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றால் ஏற்படப் போவதில்லை. இந்த நிறுவனங்கள் செலவினங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயன்பாடுகள் போன்றவை குறித்து அதிக ஆர்வம் செலுத்துகின்றன. பணம் செலவிடப்படுவது தொடர்பாக மிகவும் இறுக்கமான கணக்கு அறிக்கையை அவர்கள் எதிர்பார்கின்றனர். இது ஊழல் பெருச்சாளிகளைக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. இதனால் மத்திய வங்கி ஆளுனர் உட்பட பலரும் சர்வதேச நிதி நிறவனங்களிடம் கடன் பெறுவதைத் தவிர்க்கின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு இந்த ஊழல் பேர்வழிகள் கூறும் காரணங்கள் எதுவெனில் மக்களிடம் அதிக வரி விதிக்கும்படியும், பொருட்களின் விலையை அதிகரிக்கும்படியும், மக்களின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கான செலவினங்களைக் குறைக்கும்படியும் கூறுவார்கள் எனவும், தாம் மக்கள் மேல் சுமைகளை விதிக்கத் தயாரில்லை எனவும் மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் போல கூறுகின்றனர். உண்மையில் தற்போது உலக நிதி நிறுவனங்களின் அணுகு முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கொரொனா நோயின் தாக்கத்திற்குப் பின்னர் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களின் பொதுச் சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது, ஓர் ஆரோக்கியமான சமூகம் கட்டப்பட வேண்டுமெனில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்துப் போன்ற பல துறைகளில் அரசின் தலையீடு அவசியமாகிறது. ஏனெனில் தனியார் நிறுவனங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே தற்போது பிரித்தானியாவின் கொள்கையாக மாறி வருகிறது. எனவே இந்த நிதி நிறுவனங்கள் நாடுகளின் உள்கட்டுமானங்களின் பலங்களைக் கவனத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளன. ஆனால் ஊழல்வாதிகள் தமது ஊழல்கள் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமாகவே கடன் பெற மறுத்து வருகின்றனர். 

இங்கு நாம் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளை அவதானித்தால் இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பலர் பெருந்தொகைப் பணங்களை சர்வதேச வங்கிகளில் வைத்திருக்கின்றனர். அத்துடன் தமது உறவினர்கள், ஆதரவாளர்கள் மூலமாக பெரும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இதற்குப் பிரதான காரணம் இந்த ஆட்சியாளர்கள் குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து ஆட்சியிலிருப்பார்கள் என்ற கனவின் அடிப்படையில் தமது முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். எனவே தற்போது மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி கொண்டிருப்பினும் தம்மால் தொடர்ந்து பதவியிலிருக்க முடியும் என்ற அடிப்படையில்தான் சிங்கள பௌத்த பெருந்தேசிவாத நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்.  

நாம் இங்கு சில கேள்விகளை எழுப்புவது அவசியம். அதாவது தற்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ராணுவ மேலாதிக்கம், தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்கள் என பல போராட்டங்கள் தினமும் நடைபெறுகின்றன. சட்டமும். ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. இருந்த போதிலும் அரசு எதையும் கவனத்தில் கொள்ளாது குறிப்பாக செயற்கை உர வகை இறக்குமதிக் கட்டுப்பாடு, கறுப்புச் சந்தை அதிகரிப்பு, போதைப் பொருள் பாவனை, கடத்தல் அதிகரிப்பு, சிறைச்சாலைகளில் அமைதியின்மை, எரிபொருள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகள் அரசைத் துரத்திய போதும் அரசு ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற பெயரில் இனவாத பௌத்த பிக்கு தலைமையில் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இவை யாவும் மக்கள் அன்றாட வாழ்வைப் பாதித்திருக்கையில் அரசு புதிய அரசியல் யாப்பைக் கொண்ட வரப் போவதாகக் கூறுவதன் பின்னணியை ஆராய்தல் அவசியமாகிறது.  

இன்றைய ஆட்சியாளர்கள் இவ்வாறான நெருக்கடியை செயற்கையாக உருவாக்குகிறார்களா? என்ற சந்தேகங்களும் உள்ளன. இருப்பினும் அரசாங்கம் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் புதிய அரசியல் யாப்பினை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் கொண்டு வரவுள்ளதாக அடிக்கடி கூறிவரும் பின்னணியில் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து பரந்த அளவில் விவாதித்தல் அவசியமாகிறது. குறிப்பாக தமிழ் அரசியல் இம் மாற்றங்களை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது? என்பது பிரதான பேசு பொருளாக அமைகிறது.  

நாம் புதிய அரசியல் யாப்பு என்பது அதன் உள்ளடக்கத்தில் எதனை முன் நிறுத்தப் போகிறது? என்பது பிரதான கேள்வியாக அமைகிறது. சமீபத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதி தெரிவிக்கையில் தம்மால் விவசாயிகளை வழிக்கு கொண்டு வர முடியும் என்ற விதத்தில் உரையாற்றியிருந்தார். நாட்டில் தற்போது ராணுவம் செயற்படும் விதங்களை அவதானிக்கையில் ஜனாதிபதி ராணுவத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதை உணர்த்துகிறது. புதிய அரசியல் யாப்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானதாக அதாவது உதாரணமாக 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு நாட்டின் நெருக்கடிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான செயல்முறையாக அந்த விவாதங்கள் நகர்த்தப்படலாம். சமீப காலமாக ஜனாதிபதியும், அவரைச் சார்ந்தவர்களும் அரச உயர் அதிகாரிகள் மீதும் அவநம்பிக்கைகளை வெளியிட்டு வருவதும், சில அதிகாரிகள் சேவையிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்வது அல்லது வெளிநாடுகளை நோக்கிச் செல்வது நிகழ்வாக மாறி வருகிறது. அரச நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் மிக விரைவாகவே வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. உதாரணமாக, சமையலறை எரிவாயு கொள்கலன்கள் வெடித்துச் சிதறுவது சகஜமாக மாறி வருகிறது. அடிக்கடி நடைபெறுகிறது. இதற்குக் காரணம் எரிவாயுவில் கலப்படம் நடப்பது தெரிய வந்துள்ளது. எரிவாயு கொள்கலன்களில் 80 சதவீதம் பியூடேன்  (Butane) வாயுவும், 20 சதவீதம் புறொப்பேன் (Propane) வாயுவும் கலக்கப்படுகிறது. பியூடேன் வாயு எரிய வைப்பதற்கும், புறொப்பேன் வாயு உள்ளே அழுத்தத்தை அதிகரிப்பதற்குமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது அந்த வாயுக் கலவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி சுமார் 50 இற்கு 50 என கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன. ஒரு புறத்தில் பியூடேன் வாயு குறைந்துள்ளதால் சமையலுக்கான பாவனை விரைவாக முடிவடைகிறது. மறு பக்கத்தில் புறொப்பேன் வாயு அதிகரிப்பதால் கொள்கலன்களில் அழுத்தம் அதிகரித்து வாயு கசிய ஆரம்பிக்கிறது. இவை கசிந்து அறைகள் நிரம்பிய நிலையிலிருக்கும்போது மின்சார சுவிச் களைப் போடும்போது ஏற்படும் பொறி அந்த வாயுவுடன் பற்றிக் கொள்வதால் கொள்கலன் வெடிக்கிறது. 

இது பற்றி அரச அமைச்சர்கள் இவற்றைச் சாதாரண வழமையான சம்பவங்களாகவும், இவ்வாறான சம்பவங்கள் முன்னர் நடைபெற்றிருந்ததாகவும் தற்போது ஊடகங்கள் பெரிதுபடுத்துவதால் பாரியதாகத் தெரிவதாகக் கூறி உண்மையை மறைக்கின்றனர். அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் இத்தகைய வர்த்தக நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதால் அவர்களும் இணைந்து இவற்றை மறைக்க உதவுகின்றனர். மக்களின் மரணங்களை விட அவர்கள் வர்த்தக நலன்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.  

நாட்டின் அரச கட்டுமானங்கள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால் கறுப்புச் சந்தை, விலையேற்றம், கலப்படம் என்பவை குறித்து அரசியல்வாதிகள் பேசுவதைக் குறைத்துள்ளனர். இருப்பினும் மக்கள் மாறிவரும் சூழல்களைப் படிப்படியாக புரிந்து வருகின்றனர். எனவே உள்நாட்டில் அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்து வருகின்ற போதிலும் முழுமையான ராணுவ ஆட்சிக்கான ஆபத்துகள் அரசியல் யாப்பு வழிமூலம் அல்லது அதற்குப் புறம்பாக ஏற்பட வாய்ப்பு உண்டு. இப் பின்னணியில் நாம் பூகோள அரசியல் மாற்றங்களை நோக்கும் போது குறிப்பாக சீனாவின் இலங்கை தொடர்பான நெருக்கங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக மாறி வருவதோடு இந்து சமுத்திர பிராந்திய தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு ஆபத்தாகவும் கருதப்படுகிறது.  

இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவிடம் நெருக்கமாகச் செல்வதன் மூலம் மேற்கு நாடுகளிடம் அதிக உதவிகளைப் பெறலாம் என்ற நப்பாசையில் செயற்படுவதாகவும் கருதப்படுகிறது. தமது இருப்பைப் பேணுவதற்கு பேரம் பேசும் வகையில் சீனாவின் பிடியிலிருந்து வெளியேறுவதாயின் தமது நாட்டிற்கு உதவிகளைத் தருமாறு மேற்கு நாடுகளை நோக்கிப் பேரம் பேசுவது தீவிரமாகி வருகிறது. இதனால் வெகு விரைவில் அமெரிக்க நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக, மந்திரிசபையின் அனுமதி இல்லாமலேயே மின்சாரம் தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் ஏற்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பாதுகாவலர்கள் என அடிக்கடி பீத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் தற்போது மௌனமடைந்துள்ளனர். 

பூகோள அரசியலில் அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ என்ற பெயரில் ‘நேட்டோ’ ஒப்பந்தம் போன்ற ஒன்றில் இணைந்துள்ளனர். இது ஒரு வகை பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இந் நிலையில் இலங்கை மீதான அழுத்தங்கள் மிகவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த அழுத்தங்கள் என்பது பல்வகை முகங்களைக் கொண்டதாக அமையலாம். குறிப்பாக உள்நாட்டு மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், நீதி விசாரணைகள் என ஒரு புறத்திலும், மறு புறத்தில் பொருளாதார அழுத்தங்கள் மூலமாகவும், இன்னொரு புறத்தில் ராஜதந்திர அழுத்தங்கள் எனவும் பல வகைகளில் அமையலாம். எனவே இலங்கை மீதான அழுத்தங்கள் உள்நாட்டு பிரச்சனைகளை மையமாகவும், சர்வதேச குறிப்பாக மனித உரிமை, ஜனநாயகம் என்பதாகவும் இரண்டு அம்சங்களாக அமையலாம்.  

இப் பின்னணியிலிருந்தே சமீபத்தில் சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயம் அணுகப்பட வேண்டும். சுமந்திரன் குழுவினர் பல தரப்பட்ட குழுவினரைச் சந்தித்துள்ளனர். அயர்லாந்து, நோர்வே, இந்தியா மற்றும் ஐ நா பிரதிநிதிகள் என பலரையும் சந்தித்துள்ளனர். இச் சந்திப்புகளின் பின்னர் சுமந்திரனின் உரைகளை அவதானிக்கும் போது இந்த இரட்டை வித அணுகுமுறைகள் புலப்படுகின்றன. முதலில் சர்வதேச அம்சங்களை நோக்கும்போது அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் சர்வதேச அணுகுமுறைகளுக்கு ஏற்றவாறான விதத்தில் வியூகம் அமைக்கப்படுகிறது.  

இம் மாதம் ( டிசெம்பர்) 9ம் 10ம் திகதிகளில் சுமார் நூற்றிற்கு மேற்பட்ட நாடுகளின் அரசுத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தனியார் நிறுவனங்கள் என பல தரப்பட்ட ஜனநாயக செயற்பாட்டை வற்புறுத்தும் பலர் ‘மெய்நிகர்’ வழியிலான சந்திப்பு நடைபெறுகிறது. இச் சந்திப்பின் பின்னர் ஓர் செயற் திட்டம் ஒன்றை வரைந்து அதனடிப்படையில் அமெரிக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இச் சந்திப்பில் இலங்கை தவிர்க்கப்பட்டிருப்பது மிகவும் கவனத்திற்குரியது.  

சுமந்திரன் தலைமையிலான குழுவினரின் விஜயம் அதன் ஒரு அங்கமாகவே உள்ளது. குறிப்பாக எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாத இடைப் பகுதியில் அமெரிக்கா இலங்கை தொடர்பான தனது அணுகுமுறைகளை வெளியிடலாம் எனக் கருதப்படுகிறது. இலங்கை தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தல், அரசியல் யாப்பு, சட்டம் ஒழுங்கு அடிப்படையிலான ஆட்சி, மனித உரிமைகளைப் பேணல் என்பவற்றை வற்புறுத்துவதாக அமையலாம். குறிப்பாக ஆட்சியாளர்கள் ஜனநாயகம், மனித உரிமை அவற்றின் அடிப்படையிலான அரசியல் ஏற்பாடுகள் குறித்த உறுதி மொழிகளை அரசுத் தலைவர்களிடம் எதிர் பார்க்கலாம்.  

இன்று ஜனநாயகம் தொடர்பான புதிய அணுகுமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன். உதாரணமாக, ஒரு நாட்டில் மனித உரிமைகளை மீறிய ஆட்சித் தலைவர் உலகின் எந்த நாட்டு நீதி மன்றத்திலும் நிறுத்தப்படலாம். ஏனெனில் மனித உரிமை மீறல் என்பது சர்வதேச மீறல் எனவும், மனிதன் என்பவன் ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் வரையறுக்கப்படுபவனல்ல என்ற அடிப்படையில் உலக அளவில் மனிதர்கள் சமமானவர்கள் எனக் கருதி சட்டங்கள் மாறி வருகின்றன. இலங்கை ஆட்சியாளர்கள் உள்நாட்டுப் பிரச்சனை எனக் கூறி மனிதர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்படுவது எதிர் காலத்தில் சாத்தியமாகாது. 

சர்வதேச அளவில் ‘ஜனநாயக மீள்கட்டுமானம்’ என்ற பெயரில் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகளில் உள்நாட்டு சக்திகளின் செயற்பாடுகளும் முன்னுரிமை பெறுகின்றன. குறிப்பாக இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் என்பது எண்ணிக்கை அடிப்படையிலல்லாமல் சக மனிதர்கள், அவர்களின் அடையாளம், கலாச்சாரம், அம் மக்களின்  பாதுகாப்பு என்பவற்றை அங்கீகரித்துச் செல்லுதல் என்பதை உள்ளடக்குகிறது. இவை பெரும்பான்மைக்கு மட்டுமல்ல சிறுபான்மையினத்தவரும் பரஸ்பரம் அங்கிகரிப்பது அவசியமாகிறது. எனவே அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் வேளை அந்த அரசின் கீழ் செயற்படும் சமூகங்களின் ஜனநாயக கடமைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. 

இவற்றின் பின்னணியில் சுமந்திரன் தலைமையிலான நிபணர் குழுவின் விஜயம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்க அரசின் ஜனநாயக மீள் கட்டுமான முயற்சியில் குறிப்பாக இலங்கை விவகாரங்களில் அதாவது ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்தல், அரசியல் யாப்பு அடிப்படையிலான ஆட்சிமுறை என்பவற்றில் தமிழ் அரசியல் தலைமைகளின் பங்களிப்புக் குறித்த விவாதங்கள் எழுகின்றன. இங்கு இலங்கை அரசினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அரச தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்திகளின் பிரகாரம் பார்க்கையில் ஓர் சிங்கள, பௌத்த ஆட்சியை ராணுவ உதவியுடன் நிறுவும் ஓர் ஏற்பாடாக கருதப்படுகிறது. இவை அமெரிக்க தரப்பிலும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது.  

இதனால் தமிழர் தரப்பினர் புதிய அரசியல் யாப்பினை முற்றாக எதிர்க்கும் நிலை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்திய தரப்பு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் இவ்வாறான அவதானிப்புக் கிடைத்துள்ளது. அதன் காரணமாவே 13வது திருத்தம் தொடர்பாக இந்தியா அடிக்கடி நினைவூட்டியது. எனவே புதிய அரசியல் யாப்பினை தமிழர்கள் மட்டும் எதிர்ப்பதால் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. ஆகவே சிங்கள தரப்பில் இதற்கான பலமான எதிர்ப்புகள் கிளம்புவது அவசியம். அவ்வாறானால் தமிழ் அரசியல் தலைமைகள் தனித்துச் செயற்படாது மாற்றத்தை ஆதரிக்கும் இதர சக்திகளுடன் இணைந்து செல்வது தவிர்க்க முடியாதது. இங்குதான் தமிழ் அரசியல் தலைமைகளின் ராஜதந்திரம் அவசியமாகிறது.  

தமிழ் அரசியல் தனது அரசியலை சர்வதேச நிகழ்வுகளோடு இணைக்கும் வேலைத் திட்டத்தை வகுக்க வேண்டும். உதாரணமாக, செப்டெம்பர் தாக்குதலின் பின்னர் அமெரிக்க தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அடிப்படையில் சர்வதேச நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்ட போது இலங்கையும் அதில் இணைந்து கொண்டது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போரினை பயங்கரவாத செயற்பாடாக இலங்கை வர்ணித்தது. உலக உதவிகளுடன் 30 வருடகால போரை இதர நாடுகளின் உதவியுடன் முடிவுக்குக் கொண்டு வந்தது. இவ்வாறான ஒரு ராஜ தந்திரத்தை அதாவது ‘ஜனநாயக மீள் கட்டுமனம்’ என்ற சர்வதேச நிகழ்ச்சி நிரலில் தமிழ் அரசியல் தன்னை இணைக்க வேண்டும்.  

தற்போது தமிழ் அரசியலில் காணப்படும் ‘வாக்கு வங்கி’ அரசியல் மாற்றங்களுக்குள் செல்ல வேண்டும். சகல தமிழ் தரப்புகளும் தமது அரசியலை’ ஜனநாயக மீள் கட்டுமானம்’ என்ற பொதுத் திட்டத்திற்குள் தம்மை ஈடுபடுத்த வேண்டும். இதில் தமிழ் அரசியல் தனது இலக்குகளை அதாவது உள்நாட்டு அரசியலுக்கு ஏற்றவாறானதாகவும், அதேவேளை அமெரிக்க அரசின் தலைமையிலான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கு இது சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.  

தமிழ் அரசியலில் சில அடிப்படை மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக, மனோ கணேசன், ரவூப் கக்கீம் போன்றோர் ஓர் இணைந்த ஓர் அமைப்பைக் கட்ட தீவிர பிரயத்தனம் எடுத்து வருகின்றனர். அக் கட்சிகள் மத்தியில் குழப்பங்கள் காணப்பட்ட போதிலும் புதிய கட்சிகள் எழ வாய்ப்பு இல்லை. எனவே தமது கட்சிகளுக்குள் போராட்டங்களை நடத்தும் அதே வேளை எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கவும் ஈடுபடுகிறார்கள். எனவே நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஜனநாயக கட்டுமானங்களைப் பலப்படுத்துவது அவசியம் என்பதால் இணைந்து செயற்படுவது அவசியமாகிறது.  

சமீப காலமாக 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும் நாட்டில் ஜனநாயகம் பலவீனப்படும் நிலையில் 13வது திருத்தம் செயற்படுமா? என்பது சந்தேகமே. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக மாற்றத்துடன் 13வது திருத்தம் இணைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும்போது பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே முதலில் இக் கோரிக்கைகள் யாவற்றையும் உள்ளடக்கிய தேசிய முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் ‘தேசிய சபை’ (National Council) ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும். இச் சபை அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் ஒரு ‘வழிநடத்தும் சபை’ என்ற வகையில் சமூகத்தின் சகல பிரிவினரையும் உள்ளடக்கிய குழு தலைமை தாங்குவது பொருத்தமானதாக அமையும்.  

வாசகர்களே! 

மிகவும் இக்கட்டான வரலாற்றுக் கால கட்டத்தில் எமது நாடும், சமூகங்களும் நிற்கின்றன. பல விட்டுக் கொடுப்புகள் தேவைப்படுகின்றன. புதிய அரசியல் யாப்பு மூலம் சகல பிரிவினரும் ஓர் ராணுவ ஆட்சிக்குள் வாழுவதா? என்ற கேள்விக்குப் பதில்காணும் வேளை இதுவாகும். அமெரிக்க தலைமையிலான ‘ஜனநாயக மீள் கட்டுமானம்’ என்பது அமெரிக்க நலன்களை முன்நிறுத்துவதாகக் கூறி அசட்டையாக இருப்பதா? அல்லது அமெரிக்க, இந்திய பூகோள அரசியல் நலன்களில் எமது நலன்களை பெற்றுக் கொள்ள எமது ராஜதந்திரம் என்ன? என்பது பற்றிக் கவனம் செலுத்துவதா? என்பதே எம் முன் உள்ள கேள்வியாகும். 

முற்றும்.