–— கருணாகரன் —
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “Torch light” என்ற “மின்சூள்” சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்து. இதற்கான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.
இதைப்பற்றி தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டதுடன் ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.
இந்தத் தகவலும் நடவடிக்கையும் தமிழ் அரசியல் சூழலில் முக்கியமான ஒன்றாகும்.
ஏனென்றால், இருபது ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னும் அரசியற் கட்சியாக முறைப்படி தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவுமில்லை. அங்கீகரிக்கப்படவுமில்லை.
அதைப் பதிவு செய்யக் கோரி, கூட்டமைப்பிலுள்ள பலரும் தொடர்ந்து கோரி வந்தனர். மக்களுடைய எதிர்பார்ப்பும் அவ்வாறே உள்ளது. இந்தப் பதிவுக் கோரிக்கையைப் புறந்தள்ளி வருவதைக் கண்டித்தே சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பிலிருந்து விலகியது. இதைக்குறித்து ரெலோவும் புளொட்டும் அழாக்குறையாகக் கெஞ்சிக் கொண்டேயிருக்கின்றன.
தலைவர் சம்மந்தனோ கண்களை மூடிக் கொண்டு எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார். சம்மந்தனுக்கு அடுத்த நிலையிலிருக்கும் மாவிட்டபுரம் சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றோருக்கும் இதில் அக்கறையில்லை.
ஆனால், 2015 ஜூன்3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (01.12.2021) பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆறு ஆண்டுகளுக்குள் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்துள்ளனர். மக்களுக்குக்கு எது தேவையோ அதைச் செய்திருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள் என்றால், அந்த விருப்பத்துக்கு அடையாளமாகியிருக்கிறா்கள்.
இதுதான் மக்கள் அரசியலின் அடையாளமாகும்.
இதைப்பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசனே சொல்கிறார், “2015 ஜூன் 3ம் திகதி கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது. இது அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியாகும்.
“எமது மக்களின் மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறது முற்போக்குக் கூட்டணி. ஒற்றுமை நிலைக்க வேண்டும் என எதிர்பார்த்த பெருந்திரள் மக்கள் மத்தியில், இது “தேர்தல் வரையிலான உறவு” அல்ல. அதற்கும் அப்பாலான அடிப்படைகளைக் கொண்டது.“தேர்தல்கள் முடிந்த பின் உடைந்து விடும், உடைய வேண்டும்” என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் பதிலாக நாம் புத்தெழுச்சியுடன் நிற்கிறோம். ஒற்றுமையை வலுப்படுத்தியிருக்கிறோம் என்று நிரூபித்திருக்கிறோம்.
கட்சிகள் “ஒன்றுசேர வேண்டும், ஒன்றுசேர வேண்டும்” எனப் பல தரப்பாலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. நாம் அதை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறோம். ஒன்றுபட்டு நின்று, பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளை கடந்து புதிய ஒரு நிலையை எட்டியிருக்கிறோம். இந்தக் காலத்தில் எம்மைவிட்டு பிரிந்தவர்களுக்கு துயருடன் விடை கொடுத்தோம். பதிலுக்குப் புதியவர்களை உள்வாங்கினோம்” என.
இந்தச் சந்தர்ப்பத்தில் சக பயணிகளையும் முன்னாள் நண்பர்களையும் உருக்கத்துடன் நோக்குகிறார் மனோ. இது உயரிய பண்பாகும்.
ஒரு அரசியல் இயக்கம் வேறு எப்படி இருக்க முடியும்?
இதற்கிடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல்களை அது இணைந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியாகவே எதிர்கொண்டது. அதே வேளை இதிலுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியான தலைமைத்துவத்தையும் கட்டமைப்பையும் கொண்டவை. ஆனால் தேசிய அரசியலை எதிர்கொள்வதற்கு தமது தனியான அடையாளம் உதவாது, போதாது என்ற நிலையில்தான் இவை தனித்துவமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியாக, ஓரளியில் நிற்கின்றன.
இதன் மூலம் இப்பொழுது தமிழ் முற்போக்குக் கூட்டணி தேசிய அரங்கில் தவிர்க்க முடியாதஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்தக் கூட்டணி தொடர்பாக மலையகத்திலும் பிற இடங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் உண்டுதான். ஆனால், அவை ஒரு புறமிருக்க, கூட்டாகச் செயற்படும் அப்படையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று முன்மாதிரிச் சக்தியாகியுள்ளதை யாரும் மறுதலிக்க முடியாது.
இதேவேளை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கேற்ப முஸ்லிம் கட்சிகளிடத்திலும் பல விடயங்களில் ஒருங்கிணைந்த முன்மாதிரிகள் உருவாகி வருகின்றன. காலச் சூழல் அவ்வாறு அவற்றை நிர்ப்பந்திக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் தேவாலாயத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் உருவாகியிருக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நிலையின் நெருக்கடிகள் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகப் புதிதாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன. அதன் ஒரு விளைவாகவே முஸ்லிம் கட்சிகளின் இந்தக் கூட்டுப் பரிமாணம். இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. இப்பொழுது முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்பு போலப் பங்காளிகள் இல்லை. இதுவும் ஒரு புதிய அரசியற் பரிமாணத்துக்கான அடிப்படையே.
இந்தச் சூழலில் முற்போக்குக் கூட்டணி இன்று பெற்றிருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் பதிவு பல கோணங்களில் பார்க்கப்பட வேண்டியது. எதிர்காலத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் போல முஸ்லிம் தரப்புகளும் தமிழ்த்தரப்புகளும் பொது அடையாளத்தின் கீழ், பொதுச் சின்னத்தின் கீழ் அணிவகுக்கலாம். அதற்கான சாத்தியங்களை புறச்சூழலும் அகச் சூழலும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
அதற்கு இந்தச் சக்திகள் தயாராகும் என்றே தெரிகிறது. அதற்கொரு முன்னுதாரணமே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பதிவும் தனிச்சின்னமுமாகும்.
அடுத்தது தமிழ்க் கட்சிகளைப் பற்றியது. அவற்றின் ஒற்றுமை, ஒருங்கிணைவு தொடர்பானது. ஏனெனில் முஸ்லிம்கள் சந்திப்பதைப்போல மக்களும் ஏராளம் நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டேயிருக்கிறார்கள். முந்திய நெருக்கடிகளை விட இப்பொழுது புதிய நெருக்கடிகள் வேறு வந்துள்ளன. படைகளுக்கான காணி சுவீகரிப்புத் தொடக்கம் மாவலித்திட்ட விரிவாக்கம், தொல்பொருள் மையங்கள் வழியாக நில ஆக்கிரமிப்பு, தொடரும் கைதுகள், ஊடக சுதந்திர மறுப்பு எனப் பலவாக.
இதை விட நினைவு கூரலுக்கான தடை, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை என முந்திய தீராக் கணக்குகளும் உண்டு.
இருந்தாலும் தமிழ்த் தரப்புகளிடம் ஒற்றுமை இல்லை மட்டுமல்ல ஒருங்கிணைவும் இல்லை. முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைவு நிகழ்ந்திருக்கிறது. 1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணி அப்படித்தான் உருவாகியது. அதற்கொரு புதிய சின்னமாக உதய சூரியனும் கிடைத்தது.
பின்னர் இயக்ங்கள் நான்கு (புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், ரெலோ) இணைந்து (கைகோர்த்து) ஒரு புதிய கூட்டு ஈழதேசிய விடுதலை முன்னணி என்று உருவாகியது. ஆனால் அது மூன்று ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. அது இயக்கங்களின் கூட்டு என்பதால் அதற்குப் பதிவும் சாத்தியமில்லை. சின்னமும் சாத்தியமில்லை.
ஆனால் 2021 இல் புலிகள் தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. இப்பொழுது 20 ஆண்டுகள் கடந்து விட்டன. பதிவும் நடக்கவில்லை. ஒற்றுமையும் குலைந்து விட்டது.
இதற்கு அடிப்படைக்காரணம் ஜனநாயகமின்மையே. மற்றது நம்பிக்கையீனம். புதிய கட்சியாகக் கூட்டமைப்பு பதிவு பெறுமாக இருந்தால் அது பயன்படுத்தும் வீட்டுச் சின்னம் இல்லாது போய் விடும். அந்தச் சின்னம் தமிழரசுக் கட்சிக்குரியது. தமிழரசுக் கட்சியின் சின்னம் என்பதால்தான் அது கூட்டமைப்பில் பிற தரப்புகளின் மீது அதிகாரத்தையும் அவமரியாதையையும் செலுத்துகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் தமிழரசுக் கட்சியோ வீட்டுச் சின்னமோ இருக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பாகவே ஒரு தரப்பினர் கலந்து கொண்டனர். சம்மந்தன், மாவை சேனாதிராஜா உள்பட. உதயசூரியன் சின்னமே பயன்படுத்தப்பட்டது.
ஆனால் ஆனந்தசங்கரியின் அவசரபுத்தியே சம்மந்தனையும் தமிழரசுக் கட்சியையும் பலப்படுத்தியது. அதொரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இடையில் நுழைந்த தமிழரசுக் கட்சி இன்று ஆதிக்கத்தரப்பாக மாறி விட்டது.
1975 க்குப் பிறகு 2005 வரையில் கல்லறைக்குள்ளிருந்த தமிழரசுக் கட்சியை உயிரூட்டி வைத்திருக்கிறார்கள். இதைச் செல்வநாயமே கைவிட்டிருந்தார் என்பது இன்னும் சுவாரசியமானது.“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேணும்” என்பது தமிழரசுக் கட்சியினால் முடியாமல் போய் விட்டது என்றுதானே அர்த்தமாகும். அதனால்தானே பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாகியது.
அப்படிக் காலத்தால் கழித்து விடப்பட்ட ஒரு கட்சியை எடுத்து, அதுதான் இனி மீட்பராக அருள் பாலிக்கும் என்றால் என்னதான் நடக்கும்? ஆனாலும் அது தன் பிடியை விட்டுக் கொடுக்காது. அதனுடைய பிஸினஸ் அந்த மாதிரிதான் போய்க் கொண்டிருக்கிறது.
ஆகவே ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சி ஒரு போதுமே நேர்மையான அரசியற் கூட்டுக்கோ ஒருங்கிணைவுக்கோ நேர்மையான அரசியலுக்கோ வரப்போவதில்லை என்று.
இதற்கு வலுவான சான்றுண்டு. 2001இல் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் புலிகள் தமக்கு எதிர் நிலையில் நின்ற ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற தரப்புகளைக் கூட இணைத்தனர். ஆனால் 2009 க்குப் பின் தமிழரசுக் கட்சியோ தன்னுடன் இருந்த தரப்புகளையும் விரட்டி இன்று தமிழ்த்தேசிய அரசியல் பல கூறுகளாகச் சிதறுண்டு கிடக்கிறது.
தமிழரசுக் கட்சியின் பிடிவாதப் போக்கினால்தான் ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம், அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், சிவாஜிலிங்கம் –சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி, விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி போன்றவை புதிதாக உருவாகின. இதை விட ஏற்கனவே அதற்குள்ளிருந்த தமிழ்க்காங்கிரசும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் வெளியேறித்தனியாக நிற்கின்றன.
இங்கே இரண்டு விடயங்களை நாம் அவதானிக்கலாம். மனோ கணேசன் சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரை விட அரசியலில் வாழ்க்கையில் ஜூனியர். ஆனால் அரசியலில் சீனியர்.
எப்படியென்றால் நான் முன்பே பல தடவை குறிப்பிட்டதைப்போல மலையக நண்பர் ஒருவர் சொன்னதை இங்கே, இப்பொழுதும் குறிப்பிடலாம். “நாங்க லயங்களில் வாழும் வாழ்க்கையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்க அதுக்கும் மேலான வாழ்க்கையில இருந்த கீழ (பணிய) வந்து கொண்டிருக்கிறீங்க”
இந்த உண்மை யாரைச் சுடும்?