— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
1977ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலைத் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டை அமைப்பதற்கான தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் சர்வஜன வாக்கெடுப்பாக எதிர் கொண்டது. இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘தமிழீழத் தேசிய மன்றம்’ அமைத்து அதற்கான அரசியலமைப்பொன்றை உருவாக்கிச் செயற்படுவார்களெனத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது.
அதேவேளை தமிழர்கள் தனி நாடு கோருவதற்கான காரணங்களை நியாயமானதென ஏற்றுக்கொண்டிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சியமைத்தால் சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டி இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தது.
ஆனால், இரு தரப்பிலும் நடந்தவைகளோ எதிர்மாறு.
21.07.1977 இல் தேர்தல் நடந்தது. ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சியமைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
12.08.1977 அன்று யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் நடந்த களியாட்ட விழாவில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்ட அசம்பாவிதமொன்றைத் தொடர்ந்து தமிழர்களுக்கெதிரான நாடளாவிய இனக்கலவரம் நடந்தேறியது. கலவர காலத்தில் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரைப் பார்த்துப் “போரா? சமாதானமா? போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்” என்று கேட்டுச் சிங்கள இனவாதச் சக்திகளைத் தூண்டிவிட்டார். சர்வகட்சி மாநாட்டின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண உறுதியளித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழர்களுக்கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார்.
பின் 1978இல் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்புத் திட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்ற இறுதி நாளன்று தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ன செய்திருக்க வேண்டுமென்றால் பாராளுமன்ற ஆசனங்களை நிரந்தரமாகத் துறந்து பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேறித் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தவாறு தமிழீழத் தேசிய மன்றத்தை நிறுவித் தமிழீழத் தனிநாட்டுக்கான அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இந்தக் காலகட்டத்திலாவது ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியல் அடுத்த கட்டத்திற்கு முறையாக முன்னகர்ந்திருக்கும்.
தேர்தல் மைய அரசியல் தேவைகளுக்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர் தரப்பு அரசியல் தலைமை (தமிழர் விடுதலைக்கூட்டணி) இளைஞர்களைச் சூடேற்றிவிட்டுத் தான் வழமைபோல் பாராளுமன்றச் சம்பிரதாயங்களுக்குள் மூழ்கிப் போனது. தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜே.ஆர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்துச் சலுகைகளையும் வசதிகளையும் ஏற்றுக் கொண்டமை-1977 தேர்தலில் தமிழீழம் அமைப்பதற்கான தமிழ் மக்களின் ஆணையைப் பெற்று வந்துவிட்டு 1981இல் ஜெயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரித்து ஏற்றுக்கொண்டமை- 20.09.1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஸ்கரிக்கக் கோரி மீண்டும் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாவதற்கு மறைமுகமாக உதவியமை போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளின் மீது வெறுப்பும் விரக்தியுமுற்ற தமிழ் இளைஞர்களை முறையான அரசியல் வழிகாட்டலின்றி ஆயுதமேந்த வைத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியல்தான் தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடையவும் தடம்மாறவும் காரணமாயிற்று.
இதுவே பின்னாளில் தமிழ் இளைஞர்களின் கட்டுப்பாடற்ற வன்முறைச் செயற்பாடுகளுக்கும்-இயக்க மோதல்களுக்கும்- சகோதரப் படுகொலைகளுக்கும் காரணமாகி, இறுதியில் 2009 ஆம் ஆண்டு மே 18இல் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழினத்தின் பேரழிவுக்கும் வழிவகுத்தது. இதனை விளக்க வேண்டிய அவசியமில்லை.
இப்பத்தித் தொடரின் முன்னைய பத்திகளில் ஆங்காங்கே இவை விவரிக்கப்பட்டுள்ளன. முன்னைய பத்திகளில் அவ்வப்போது தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளும்- ஆயுதப்போராட்ட நடவடிக்கைகளிலிருந்த தவறுகளும்- சரி பிழைகளுக்கு அப்பால் இறுதிவரை களமாடிய தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிய விமர்சனங்களும் விபரமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல- தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டுமல்ல- 2001இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளும் கூட விமர்சன நோக்கில் விளக்கமாக இப்பத்தித் தொடரில் கூறப்பட்டு வந்துள்ளன.
1949 இலிருந்து 1964 வரை தமிழரசுக் கட்சிமேற்கொண்ட எதிர்ப்பு அரசியலும் எதனையும் உருப்படியாகச் சாதிக்கவில்லை. 1965 இலிருந்து 1969 வரை மேற்கொண்ட இணக்க அரசியலாலும் எதனையும் சாதிக்க முடியவில்லை. 1970 இலிருந்து 1977 வரை மீண்டும் மேற்கொண்ட எதிர்ப்பு அரசியலாலும் ஒன்றும் ஆகவில்லை. 1977 இலிருந்து 1983 வரை தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராய் மேற்கொண்ட அரசியலாலும் எந்த நன்மையும் விளையவில்லை. ஆக 1983 இலிருந்து 1989 வரை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு அதன் காரணமாக உருவான இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தமும்- பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும்- மாகாணசபை முறைமையும்தான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழர்களுக்குக் கிடைத்த அரசியல் அடைவு ஆகும். இந்தியத் தலையீடு இருந்திருக்காவிட்டால் அதுவும் கிடைத்திருக்கமாட்டாது.
ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையும் குழப்பிப் பின்னர் 1989 இலிருந்து 1993 வரை மீண்டும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு பின் 1994 இலிருந்து 2004 வரையிலான சுமார் பத்தாண்டு காலம் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஜனாதிபதியாக விளங்கிய சாதகமான சூழ் நிலையையும் தட்டிக் கழித்துவிட்டு- 2005 இலிருந்து 2009 வரை மீண்டும் தீவிரமான எதிர்ப்பு அரசியலில் மூழ்கி யுத்தம் முடிவடைந்த மே 18, 2009குப் பின்னர் 2014 வரை தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலையே பேணி 2015 இலிருந்து 2019 காலம் வரையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்த இணக்க அரசியலாலும் எதனையும் பெற்றுத்தராமல் ஏமாந்து- இப்போது 2020 இலிருந்து இன்றுவரை மீண்டும் எதிர்ப்பு அரசியலில் வந்து தமிழர் தரப்பு அரசியல் காலையூன்றியுள்ளது.
ஒட்டுமொத்தமாக நோக்கினால் தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்ற 1949க்கு முந்திய அரசியல் நடவடிக்கைகளும்- 1949 இலிருந்து 1977 வரையிலான அகிம்சைப் போராட்டமும்- 1977 இலிருந்து 2009 வரையிலான ஆயுதப்போராட்டமும்- 2009 இலிருந்து இன்று வரையிலானஇராஜதந்திரப் போராட்டம் (?) என வர்ணிக்கப்படும் அரசியல் நடவடிக்கைகளும் என எல்லாவற்றிலும் தமிழர்தம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமே நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர் தரப்பின் அரசியல் கையாலாகாத்தனம் சேர் பொன்இராமநாதன் காலத்திலிருந்து இன்று இராசம்பந்தன் காலம் வரை சுமார் ஒரு நூற்றாண்டு காலத்தை விழுங்கி விட்டது. எனவே இலங்கைத்தமிழர் தரப்பு புதிய அரசியல் வியூகத்தையும் அவ்வியூகத்தை வினைத்திறனுடன் வகுத்துக் கையாள்வதற்கான மாற்று அரசியல் அணியையும் இன்று வேண்டி நிற்கிறது. இதுவே இன்றைய யதார்த்தம். இந்த மாற்று அரசியல் அணியை இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளெனக் குறிசுடப்பட்டுள்ள கட்சிகளினால் தனித்தோ அன்றி கூட்டாகவோ ஏற்படுத்த முடியாது.
இந்தப் பின்னணியில் மாற்று அரசியல் என்பது யாது?
மாற்று அரசியல் என்பது,
*தனிநபர் நலன்களையும் கட்சி நலன்களையும் கடந்த முழுக்க முழுக்க மக்களுக்கான அரசியலாகும்.
*இலக்குகளை அடைவதற்கான மூலோபாயங்களை வகுத்துச் செயற்படும் அரசியலாகும்.
*பத்திரிகை அறிக்கைகள்- பாராளுமன்ற உரைகள்-மாநாட்டுத் தீர்மானங்கள்- ஊடக சந்திப்புகள்-தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் கடிதங்கள், மகஜர்கள், அறிக்கைகளால் மட்டுமே இதுவரையில் காவி வரப்பட்டுள்ள ‘ஏட்டுச் சுரைக்காய்’ அரசியலைப் புறந்தள்ளி மக்களைச் சமூக, பொருளாதார ரீதியாக வலுவூட்டக் கூடிய ‘செயற்பாட்டு’ அரசியலாகும்.
*ஆரவாரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தவிர்த்து அறிவுபூர்வமான அமைதியான நடவடிக்கை மூலம் இலக்குகளை அடைந்துகொள்வதாகும்.
*மக்களை உணர்ச்சியூட்டி உசுப்பேற்றாமல் அவர்களை அறிவூட்டி ஆற்றுப்படுத்தும் அரசியலாகும்.
*தன்முனைப்பான- தான்தோன்றித்தனமான-தன்னிச்சையான செயற்பாடுகளைத் தவிர்த்து மக்களின் நலன்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்புடன் கூடிய செயன்முறையாகும்.
*எதிர்ப்பு அரசியலோ இணக்க அரசியலோ எதுவாயினும் இலக்குகளை எய்தும் வண்ணம் நன்கு திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் நிரம்பிய வினைத்திறன் மிக்க அரசியலாகும்.
*’மாடு வாங்கமுதல் நெய்க்கு விலை பேசாத’ அரசியலாகும்.
*’சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்காத’ அரசியலாகும்.
*’தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காத’ அரசியலாகும்.
*மக்களுக்கு உண்மையான- நேர்மையான-வெளிப்படையான அரசியலாகும்.
*தேர்தல் வெற்றிகளில் மட்டுமே இலக்கு வைப்பதை விட மக்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட அரசியலாகும்.
*அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்காது அடுத்த சந்ததி பற்றிச் சிந்திக்கும் அரசியலாகும்.
*மக்களை வஞ்சிக்காத அரசியலாகும்.
*’சத்துருவையும் சார்ந்து வெல்லும்’ அரசியலாகும்.
*’காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்’ அரசியலாகும்.
*தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் கள நிலைகளுக்கேற்ற தந்திரோபாய அரசியலாகும்.
*அரசியல் தீர்வு முயற்சிகளையும் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் சமாந்தரமாகக் கொண்டுசெல்லும் அறிவுமைய அரசியலாகும்.
யாரும் யாரையும் ‘துரோகி’ என்று நோக்காத-குறிசுடாத- நாகரிகமான அரசியலாகும்.
இலங்கைத் தேசியத்தையும் தமிழ்த் தேசியத்தையும் எதிரெதிர்த் திசையில் வைக்காமல் இலங்கைத் தேசியத்துடன் தமிழ்த்தேசியத்தைத் தனித்துவம் கெடாது இணைத்துச் செல்லும் தேசிய நல்லிணக்க அரசியலாகும்.
இத்தகைய அரசியலை முன்னெடுப்பதற்கான மாற்று அரசியல் அணியை தற்போதைய தமிழ் அரசியல் பொதுவெளியில் எப்படி உருவாக்குவது என்பது குறித்து அடுத்த பத்தி (சொல்லத் துணிந்தேன்-100) பேசும்.
அடிக்குறிப்பு.
தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949 இலிருந்து இன்று வரையுள்ள கடந்த எழுபத்தியிரண்டு வருடகாலத்தில் எந்தக் கட்டத்திலும் தமிழர்தரப்பு அரசியல் தலைமைகள் பாராளுமன்றப் பதவிகளைக் கூட்டாகத் துறந்து தமிழ்த் தேசிய அரசியலை அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு உட்படுத்தத் துணியவில்லை. அதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் 1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட போதும்-1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட போதும் வாய்த்திருந்தன. அச்சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.
1974இல் தந்தை செல்வா மட்டும் தனித்துத் தனது காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்து மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது தமிழ் இளைஞர்களை ஆசுவாசப்படுத்தும் ஓர் ‘அரசியல் சித்து’ விளையாட்டே.
1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான யு என் பி (UNP) அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறை (இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பு) அரசியலமைப்புச் சட்டத்திற்கு 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி ஆறாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த ஆறாவது அரசியலமைப்புச் சட்டத்திற்கமைய அரசாங்க உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவருமே நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரவளிக்கமாட்டோமெனச் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 157 ‘அ’ உறுப்புரையும் 161 (ஈ)(lll) உறுப்புரையும் பின்வருமாறு அமைகிறது.
“————- ஆகிய நான் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றி காப்பேன் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாக தனி அரசொன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாக வோமறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கின்றேன்/ சத்தியம் செய்கின்றேன்”
………………………..
(ஒப்பம்)
ஒப்பம் சமாதான நீதவான் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும்.
இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கமைய அன்றைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த அப்போதைய தமிழர் விடுதலைக்கூட்டணிச் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் உட்படத் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்துத்தான் தங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் துறந்தனர் என்றே தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. இது தவறான தகவலாகும்.
1977ஆம் ஆண்டுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 1983 ஆம் ஆண்டுடன் நிறைவடையவிருந்தது. ஆனால் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு (ஆறு வருடங்கள்) நீடிப்பதற்காக அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் 1982 டிசம்பர் 22ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்தி (பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்கப்படுவதை ஆதரிப்போரின் சின்னம்- விளக்கு எதிர்ப்போரின் சின்னம்- குடம்) 54.66% மக்கள் ஆதரவைப் பெற்றுப் பாராளுமன்ற பதவிக்காலத்தை தேர்தல் நடத்தாமல் 1989 வரை நீடித்துக்கொண்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றப் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களைக் ‘குடம்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரச்சாரம் செய்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நாங்கள் பாராளுமன்றக் கதிரைகளுக்கு ஆசைப்டவில்லையென்று மக்களுக்குக் காட்டியதோர் ‘ஆசாடபூதித்தன’ அரசியல்தான் இது.
1983 ஜூலை மாதம் மன்னாரில் நடைபெற்ற தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் மக்கள் தங்களைத் தெரிவு செய்தது ஆறு ஆண்டு காலம் பதவிவகிக்கவே; எனவே மக்கள் ஆணையை மதித்து தாங்கள் பதவிக்காலம் நீடிக்கப்பட்ட பாராளுமன்றத்திற்குச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. (1977 ஆம் ஆண்டு தேர்தலில் ‘தமிழீழத் தேசிய மன்றம்’ அமைத்துத் தமிழீழத் தனிநாட்டுக்கான அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அதே மக்கள்அளித்த ஆணையைத் தங்கள் வசதிக்காகத் தமிழர்விடுதலைக் கூட்டணி மறந்து போனது)
மேற்படி மன்னார் மாநாட்டுத் தீர்மானத்தின்படிதான் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லாதுவிட்டார்களே தவிர, மேற்படி ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு அமைய சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து அல்ல. மேற்படி மன்னார் மகாநாட்டு நேரத்திலேயே 1983 ஜூலைக் கலவரமும் தொடங்கிவிட்டது.
பாராளுமன்ற விதிகளின்படி பாராளுமன்ற உறுப்பினரொருவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கு முன்னறிவித்தல் கொடுக்காமல் அல்லது விடுதலைக்கு விண்ணப்பிக்காமல் தொடர்ந்து மூன்று மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளுக்குச் சமூகமளிக்காமல்விட்டால் தனது பாராளுமன்ற ஆசனத்தைத் தாமாகவே இழப்பர்.
இந்த விதிமுறைக்கமையத்தான் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற ஆசனங்கள் வறிதாகினவே தவிர, மேற்படி ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கமைய சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்ததால் அல்ல.
இந்த உண்மை தமிழர் அரசியல் வரலாற்றில் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காகவே இப்பத்தித் தொடரில் இதனைச் சொல்லத் துணிந்தேன்.
பின்னர் 1989 ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அனைவரும் மேற்குறிப்பிட்ட சத்தியப் பிரமாணத்தைச் செய்து கொண்டதன் பேரில்தான் பாராளுமன்றம் பிரவேசித்தார்கள். அதுதான் இன்றுவரை தொடர்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
மேலும், மேற்படி சத்தியப்பிரமாணத்தைச் செய்துவிட்டுத்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) ‘இரு தேசங்கள்; ஒரு நாடு’ பற்றிப் பேசுவதும், ஏனைய தமிழ்த் தேசியவாதப்(?) பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத் தனிநாட்டைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவதும். இங்கு இன்னொரு விடயம் அவதானிப்புக்களாகிறது.
1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐந்து வருடகாலத்திற்குத்தான் மக்கள் தெரிவு செய்திருந்தார்கள். அதாவது அவர்களுக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை ஐந்து வருட காலத்திற்குத்தான். அவ்வாணை 1975 உடன் முடிவடைந்தது. மக்கள் ஆணைக்கு மதிப்புக் கொடுப்பவர்களாயிருந்தால் 1975 ஆம் ஆண்டிலேயே தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தமிழரசுக் கட்சியினர் ராஜினாமாச் செய்திருக்க வேண்டுமல்லவா. ஆனால் அப்படிச் செய்யவில்லை.
அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் 1972இல் புதிய குடியரசு அரசியல் அமைப்பை அறிமுகம் செய்து பாராளுமன்றப் பதவிக்காலத்தை 1972இல் இருந்து ஐந்து வருடங்களாக 1977 வரை அதாவது 1970இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் 1977 வரை நீடித்தது. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1977 வரை பதவியில் இருந்தார்கள். அப்போது நினைவுக்கு வராத மக்கள் ஆணை (ஐந்து வருடத்திற்கே தெரிவு செய்த) 1983இல் அதாவது 1977இல் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றம் தனது பதவிக்காலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் 1989 வரை நீடித்துக்கொண்டபோது மட்டும் ஞாபகத்துக்கு வந்தது. அதேவேளை ‘தமிழீழத் தேசிய மன்றம்’ அமைத்துத் தமிழீழத் தனிநாட்டுக்கான அரசியலமைப்பை உருவாக்கத் தமிழ் மக்கள் 1977 தேர்தலில் வழங்கிய ஆணையைத் தம் வசதிக்காகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மறந்து போனார்கள். (CONVENIENTLY FORGOTTEN). ஆனால் ஆறு வருடகாலத்துக்குத்தான் மக்கள் ஆணை என்பதை மட்டும் தங்கள் வசதிக்காகக் கையிலெடுத்துக் கொண்டனர்.
இதனை இங்கு பதிவு செய்யக் காரணம் என்னவெனில் அன்றும் இன்றும் சட்டத்தரணிகளாலேயே வழிநடத்தப்படும் தமிழர்தம் அரசியல் தலைமைகள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு முன்னுக்குப் பின் முரணான தமது சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளுக்கு வியாக்கியானம் அளிப்பதற்கு இந்த ‘அப்புக்காத்து அரசியல்’ எவ்வாறு துணை புரிந்து வந்துள்ளது என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இவர்கள் எவ்வளவு தூரம் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவேயாகும்.