— அகரன் —
நான் பிரான்சில் தமிழர்கள் குறைந்த மாவட்டத்தில் வாழ்கிறேன். பிரஞ்சு ஸ்ரைலில் அலங்காரம் செய்வேன். அலங்காரம் என்றதும் அந்தமாதிரி நினைக்கக்கூடாது. இங்கு ஆண்களும் அலங்காரம் செய்வார்கள்.
SNCF றெயினில் வேலைக்கு போய்வருவது வழக்கம். அப்போதுதான் விஜிதரன் அண்ணையை சந்தித்தேன்.
நான் வேலைக்கு போகும் நேரத்தில் றெயினில் ஒரு மூலையை அண்டி கதவோரம் இருப்பார். அவர் நிச்சயம் ஒரு தமிழர் என்பதற்கான அடையாளம் அப்படியே இருந்தது. சரிச்சு இழுக்கப்பட்ட முடி. கைகளால் சீவப்பட்ட தாடி. பாகிஸ்தானியர் கடையில் விற்பனையாகும் குளிரங்கி. சுத்தமாக்க நேரமின்றிய சப்பாத்து. வெறுமையும், சாந்தமும் பயமும் கலந்த முகம்.
ஆனால் அவர் என்னை இனங்கண்டுகொள்ளவில்லை. நான்தானே வேசம்போட பழகிவிட்டேன். ஒவ்வொரு தரிப்பிடமும் வரும்போது ஜன்னலால் எட்டிப்பார்ப்பார். இவரிடம் அனுமதிச்சீட்டு இல்லை என்று எனக்கு விளங்கிவிட்டது.
ஒரு பனி மாலை நேரம். மாலை 5 மணிக்கே இருட்டிவிட்டது. SNCF றெயின் எப்படியோ தண்டவாளத்தை கட்டிப்பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு எதிரே இரண்டு இருக்கைகள் தள்ளி அவர் மூலையோர இருக்கையில் இருந்தார்.
நான் ஒரு சிறுகதைப்புத்தகம் ஒன்றை படித்தேன். அது எல்லாமே மாத்திர பூதத்தின் கதைகள் போலவே இருந்தது. அதனால் தூக்கம் வரவில்லை.
திடீரென உள்கதவை திறந்துகொண்டு பயணப்பரிசோதகர்கள் (contrôleur) நுழைந்தனர்.
உடனே விஜிதரன் அண்ணையை பார்த்தேன் அவர் அருமையான தூக்கத்தில் இருந்தார். எனக்கு உள்ளுக்குள் நடுக்கம். மாட்டுப்பட்டுவிடுவார் என்பது நிச்சயம்.
பரிசோதகர் அவரை monsieur… monsieur.. தட்டி எழுப்பினார். மிரண்டு எழுந்த விஜி அண்ணை தான் எங்கு இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த சிலநொடிகள் எடுத்துக்கொண்டார். பின்னர் முகம் ஏமாற்றமும் பயமும் கெஞ்சலுமாக மாறியது. அவர்கள் பயணச்சீட்டை கேட்டார்கள். தன்னிடம் இல்லை என்று கைகளால் சைகை செய்தார். அவர்கள் 70€ தண்டமாகக் கேட்டனர். அவர் தன் சட்டைப்பை முழுவதையும் வெளியேற்றி தேடிக்கொண்டே இருந்தார். அவரிடம் இல்லை என்று அந்த பெட்டியில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
அந்த பரிசோதகர்களிடம் சென்று அவருக்காக நான் பணம் கட்டலாமா என்று கேட்டேன். அவர் பொக்குவா பா? என்றார். என் வங்கி அட்டையை நீட்டினேன்.
அப்போதுதான் அவர் தம்பி நீங்கள் தமிழா? மெத்த நன்றி தம்பி என்றார். நான் வேசமிடுவதை அவரும் உறுதிப்படுத்தினார்.
தன் அருகே இருக்குமாறு வேண்டிக்கொண்டார். எந்த ஊர்? எப்ப வந்தது? எங்க வேலை? கலியாணம்? ஏதோ நான் ரிக்கற் இல்லாமல் செல்வதுபோல கேள்விகளை நிறைத்துக்கொண்டிருந்தார்.
அண்ண, உங்களைப்பற்றி சொல்லேல்ல? என்றேன்.
தம்பி என்னத்த சொல்லுற? பெயர் விஜிதரன். நேற்று ஐப்பது வயது முடிஞ்சுது. இங்க வந்து இரண்டு வருசமாகீற்று. இன்று மேன்முறையீடும் நிராகரிச்சும் போட்டினம். நல்ல காலம் நீங்கள் காசுகட்டாட்டி பொலிசிட்ட குடுத்திருப்பினம்.
தம்பி நீங்கள் பிரஞ்சு வாசிப்பீர்கள் போல. என்ர கேசை வாசித்தால் என் நிலை தெரியும்.
கேசிலை யாரண்ண உண்மைய எழுதினம் இஞ்ச?
இல்லத்தம்பி இது நான்தான் எழுதினன். யாருட்டையும் கொடுக்கவில்லை. எல்லாம் கதிர்காம முருகன் அறிய உண்மை.
OFPRA
201 Rue Carnot, 94136 Fontenay- sous- Bois
25/09/2018
அகதி அடைக்கல கோரிக்கை சம்மந்தமானது :-
கனம், ஐயா/அம்மணி,
நான் இலங்கையை சேர்ந்தவன். அங்கிருந்து வெளியேறயபோது மீண்டும் இலங்கைக்கு திரும்பக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். யாருமற்ற இடத்தில் நான் அனாதையாக செத்தாலும் பரவாய் இல்லை. என் மூதாதையர் காலம் காலமாய் வாழ்ந்த அந்த நாட்டில் எனக்கு ஏற்பட்ட இந்த வெறுப்பும் பயமும் எவ்வளவு மோசமானது என்பதை என்கதையை முழுமையாக படித்தால் உங்களுக்கு தெரியவரும்.
என்னோடு சிறுவயதில் படித்த நண்பன் தங்களுடைய நாட்டில் நான்கு கடைகள் வைத்திருக்கிறான். அவன்கூட இங்கு அகதியாக வந்தவன்தான். அவன் தங்கள் நாட்டைப்பற்றி பெருமையாய் சொன்னதால் மட்டுமே இந்த மக்களை நம்பி இங்கு வந்து தங்களிடம் அகதி அடைக்கலம் கேட்கிறேன்.
ஐயா, இந்தப்பாவி 20/10/1971இல் மாத்தளை என்ற இடத்தில் பிறந்தேன். எனக்கு முன்னர் மூன்று அண்ணர்கள் பிறந்து வாட்டசாட்டமாக வளந்து இருந்தனர். எனக்குப் பிறகு ஒரு தங்கை பிறந்தாள்.
என் தந்தை யாழ்ப்பாணத்தில் உள்ள நெல்லியடியை பிறப்பிடமாகக்கொண்டவர். என் தாயார் புகழ்பெற்ற அறிஞரான விபுலாநந்தரின் காரைதீவை பிறப்பிடமாக கொண்டவர். என் தாயும் தந்தையும் மாத்தளையில் ஆசிரியராக இருந்தார்கள்.
அவர்கள் காதல் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் காதல் செய்ததது பெருங்குற்றமாக போய்விட்டது. அதனால் எங்களுக்கு அயலவர்களான சிங்கள மக்களும், கடுமையான தேயிலை தொழிலாளிகளான தமிழ் மக்களுமே உறவுகளாக இருந்தனர்.
1977இல் அங்கு கலவரம்.. கலவரம் என்றார்கள். தமிழர்கள் எல்லோரும் பீதியில் எங்கு செல்வது என்று திக்கற்று திரிந்தனர். ‘’சிங்கள மக்கள்விட மாட்டார்கள் அவர்கள் அன்பானவர்கள்.’’ என்று அம்மா அப்பாவுக்கு தெம்பூட்டினார்.
பக்கத்து வீட்டு கமகே பாட்டி ஓடிவந்து. எங்களை தங்கள் பண்ணை தோட்டத்திற்கு கொண்டு சென்று ஒளித்து வைத்தார். தினமும் உணவோடு வந்து எங்களை பயங்கொள்ள வேண்டாம் தன் உயிர்போனால்தான் உங்களை தொடலாம் என்று சொன்னார்.
கலவரம் ஓய்ந்து நாம் திரும்பியபோது எங்கள் வீடு சாம்பலாகி கிடந்தது. காடையர்கள் எங்கள் வீட்டை எரித்தபோது கமகேப் பாட்டி அவர்களுடன் மல்லுக்கட்டினார் என்றும் பின்னர் ஒரு கொடியவன் அந்த அற்புதப் பாட்டியை தாக்கினான் என்றும் அயலவர்கள் சொன்னார்கள். எனக்கு அப்போது ஆறுவயது. என் உடலெல்லாம் சிலுர்த்தது. பாட்டியை தொட்டவனை என்னால் என்ன செய்யமுடியும்? அந்தப்பாட்டியை கட்டிப்பிடித்து அழுதது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. பாட்டியும் கண்கலங்கி அழுதவா. என் கண்ணீரை துடைத்து‘’ மகனே! அழாதே!’’ என்று என் கண்களை துடைத்ததை நான் மறக்கமாட்டேன்.
கமகே பாட்டி வீட்டில்தான் தற்காலிகமாக குடியிருந்தோம். என் அண்ணர்கள் நல்ல உடலும் மூளையோடும் வளர்ந்துகொண்டே இருந்தார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அண்ணர்களைப் பற்றிய பயமும் வளர்ந்துகொண்டே இருந்தது.
அப்போது யாழ்ப்பாணத்தில் படித்தால் நல்ல நிலைக்கு வரலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்பா தன் பெற்றோரிடம் சமாதானம் பேசி அண்ணன்களை அங்கு கொண்டு சென்று விட்டு வரச்சென்றார். ஆனால் அப்பாவை அவர் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பா தூரத்து உறவினருடன் அண்ணன்களை விட்டுவிட்டு யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் அவர்களை சேர்த்துவிட்டு வந்துவிட்டார்.
அவர் மாத்தளை வந்ததும் முதல் சொன்னது. ‘’நான் செத்தாலும் இனி நெல்லியடி போகமாட்டன்’’
அண்ணன்கள் அருமையாக படிப்பதாக கடிதம் வந்துகொண்டிருந்தது. மூத்த அண்ணர் வைத்திய பிரிவில் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தார். கமகே பாட்டி மாத்தளை பூராகவும் அதை சொல்லிவிட்டார். அப்போதுதான் 1983 கலவரம் வந்தது.
நாட்டின் சேதிகளை அறிந்தபோது கமகே பாட்டிக்கும் பயம் வந்தது.
எல்லோரும் தேயிலை தோட்டக்காட்டுக்குள் ஒளிந்துவிட்டோம். அதற்கப்பால் கமகே பாட்டியின் தோட்டப்பண்ணை இருந்தது.
ஐந்தாவது நாளாக நாம் தேயிலை செடியுக்குள் இருந்தோம். ஒருநாள் மதியம் என் தங்கை கலைவாணிக்கு வயிற்றுக்கோளாறு தன்னால் காட்டுக்குள் மலசலம் செல்ல முடியாது என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
அப்பா அவளை அழைத்துக்கொண்டு கமகே பட்டியின் தோட்டத்துக்கு புறப்பட்டார். காட்டுக்குள் இருந்து ஒரு வீதியை கடந்தால் தோட்டம் வந்துவிடும். வீதியை பகலில் கடப்பதுதான் ஆபத்து. ஊர்ந்து ஊர்ந்து இருவரும் சென்றார்கள். நாம் பார்த்துக்கொண்டு பதுங்கி இருந்தோம்.
வீதியை கடக்கும்போது எங்கிருந்தோ காடையர்கள் கண்டுவிட்டார்கள். அப்பா தங்கைச்சியை வேலிக்குள்ளால் தூக்கிப்போட்டுவிட்டு ஓட முயன்றபோது கத்தி பொல்லு, கோடாலி சகிதம் வந்தவர்கள் அவர்களை பிடித்துவிட்டனர். அவர்கள் சிரித்து சிரிந்து என் அன்புத் தங்கையையும் அப்பாவையும் கொன்றனர். பின்னர் உடனேயே பெற்றோல் ஊற்றி எரித்தனர். இதை நானும் அம்மாவும் மறைந்திருந்து பார்க்கும் கொடுமை நடந்தது.
பின்னர் எங்களை தன் பிள்ளைகள் மூலம் யாழ்ப்பாணம் பாதுபாப்பாக அனுப்பி வைத்தது எங்கள் கமகே சிங்களப் பாட்டிதான்.
சேதியை அறிந்த அண்ணன்மார் துடித்துப்போணார்கள். அம்மாவை தேற்றுவதா?அண்ணர்களை தேற்றுவதா? நான் அழுவதா என்று எனக்கு தெரியவில்லை.
பின்னர், அருமையான கல்வித் தகைமையோடிருந்த மூத்த இரு அண்ணர்மார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கத்துக்கு போய்விட்டார்கள்.
நானும் சின்னன்ணர் சிவநேசனுமே அம்மாவோடு இருந்தோம். யாழ்ப்பாணத்தில் உறவுக்காறர் யாரையும் அம்மாவுக்கு தெரியவில்லை.
1986இல் எப்போதுமே சிரித்த முகத்துடன் எல்லோரையும் அரவணைத்துப் பழகும் என் சின்னண்ணா கைதடிப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். போராடப் புறப்பட்ட துப்பாக்கி ஒன்றே அவரை கொன்றது.
பிறகு இந்திய இராணுவ காலத்தில் மூத்த அண்ணாவும் சண்டையில் இறந்து போனார்.
எங்கள் வீட்டின் அருகே இந்தியன் ஆமிக்கும் பெடியளுக்கும் சண்டை நடந்தது. நான் அப்போது வீட்டில் இல்லை. சண்டையில் இரண்டு ஆமிக்காரர் செத்தனர். அதற்கு பதிலாக அருகே வீடுகளுக்குள் புகுந்த இந்தியன் ஆமி பத்து இளைஞர்களை சுட்டுவிட்டு அவர்கள் உடல்களுக்கு மேலால் தமது வாகனத்தை ஏற்றிச்சென்றனர். அதில் என் சிவதாசன் அண்ணாவும் செத்துப்போனார்.
இறுதியில் நானும் அம்மாவும் மிஞ்சினோம். அதுதான் ஏனென்று தெரியவில்லை.
பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்தோம். காடு.. காடாக.. ஊர் ஊராக.. திரிந்தோம். எங்களுக்குத்தானே உறவென்று யாரும் இருக்கவில்லை.
அப்போதுதான் அம்மாவிடம் ‘நாம் மட்டக்களப்பு செல்வோமா?’ என்று கேட்டேன்.
‘’இத்தனை ஆண்டுகளில் என்னை அவர்கள் தேடவில்லை. இனியும் வேண்டாம்‘’ என்றுவிட்டார்.
அம்மாவுக்காக நானும், எனக்காக அம்மாவும் இருந்தோம்.
இறுதியில் வவுனிக்குளம் என்ற ஊரில் வாழ்ந்தோம்.
2008இல் அங்கிருந்து இடம்பெயர்ந்து கொண்டேஇருந்தோம். குண்டுகளும், செல்லும், விமானமும், உள்பயங்களும் எம்மை தொடரந்துகொண்டே இருந்தது.
வவுனிக்குளத்தில் இருக்கும்போது எமக்கு நல்ல அயலவர் வாய்த்தார்கள். அவர்கள் முருகேசப்பு குடும்பம். அவர்களும் நாமும் ஒன்றாகவே இடம்பெயர்ந்தோம். முருகேசப்பாவின் மகள் சங்கவிக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்து இரட்டைப் பிள்ளைகளும் இருந்தனர்.
என் அம்மாதான் அவர்களுக்கு தினமும் உணவூட்டுவார். அன்று நாங்கள் தற்காலிகமாக விசுவமடுவில் இருந்தோம். என் தாய் அந்தப் பிள்ளைகளுக்கு கிணற்றடியில் உணவூட்டிக்கொண்டிருந்தார். நான் கொஞ்சம் தள்ளி பங்கர் வெட்டிக்கொண்டிருந்தேன்.
செல் கூவிக்கொண்டு வந்தது. நான் வெட்டிய கிடங்குக்குள் படுத்துக்கொண்டு ‘’அம்மா படுங்கோ‘’ என்று சொல்ல முதல் நேராக அம்மாவிற்கும் அவர் இடுப்பில் வைத்திருந்த குழந்தைக்கும் மேல் வெடித்தது செல்.
அவர்கள் நின்ற அடையாளமே தெரியவில்லை. கண் முன்னே சிறு சிறு துண்டுகளாக சிதறியதை பாவப்பட்ட இந்தக் கண்கள் பார்த்தது.
முழு யுத்தத்தையும் கடந்து நான் உயிரோடு இருப்பதை இன்றும் நம்பமுடியவில்லை.
எனக்கு நாடு இருந்தது. வீடு இருந்தது. அழகான குடும்பம் இருந்தது. இன்று ஒன்றுமில்லை. இதுதான் கடைசி உயிர்.
கனம், ஐயா/ அம்மணி
இத்தனைக்கும் பிறகும் இந்த உயிரை காக்க அலைவதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் அந்த நாட்டில் சாகக்கூடாது. மனிதனை சற்றேனும் மதிக்கும் மண்ணில் செத்துப்போகிறேன். எனக்கு அந்த உரிமையை மட்டும் தாருங்கள்.
உண்மையுள்ள
கணபதிப்பிள்ளை விஜிதரன்.
*
அண்ண, இது எல்லாம் உண்மையாகவா? என்றேன். ‘’சத்தியம்! சத்தியம்! இப்படி யாரும் கற்பனையில் எழுதமுடியுமா தம்பி?‘’ என்றார்.
அவரை ஆரத்தழுவ வேண்டும்போல் இருந்தது.
இப்ப யாருடன் இருக்கிறீர்கள் என்றேன்?
‘’என்னோடு யாழ்ப்பாணத்தில் கூடப்படித்த நண்பன்தான் இலங்கை வந்தபோது சந்தித்துவிட்டு என்னை இங்கு கூப்பிட்டான். அவன் நல்லவன்.
அவனின் ஒரு கடையில் நான் வேலை செய்தேன். ஒருநாள் வேறு யாரோ தமிழர் தொழில் போட்டியில் காட்டிக்கொடுத்து விசா அனுமதி இன்றி நின்ற என்னை பொலீஸ் கடைக்குள் வைத்து பிடித்துவிட்டது. அதற்குப் பிறகு எனக்கு வேலை இல்லை. அவன் தன் வீட்டில் உள்ள நிலக்கீழ் அறையில் எனக்கு தங்குமிடம் தந்துள்ளான். அது சரியான குளிர். அதனாலதான் பகலில் இந்த ரெயினில திரிந்தால் குளிராதெண்டு இதற்குள் திரிவேன். இன்று தூக்கத்தில் மாட்டிவிட்டேன். மற்றும்படி அவர்கள் ஏறும்போது (contrôleur) நான் இறங்கி அடுத்த றெயின் பிடிப்பேன்’’ என்றார்.
அண்ண, நீங்கள் திருமணம் செய்யேல்லையோ?
‘’தம்பி, குழந்தைகள் சாவதை என்னால தாங்கேலாது. அதால அதைப்பற்றி நினைக்கேல்ல. 50 வயதுவரை உயிரோடு இருந்ததே கெட்டித்தனம்தான?’’ என்றார்.
**
நான் ஒரு வீடு வேண்டினேன். மாதம் 1250€ படி 25 ஆண்டுகளுக்கு வங்கிக்கு கட்டவேண்டும். விஜி அண்ணையை என்னோடு வைத்துக்கொண்டால் 250€ வேண்டலாம். அவரும் ஒரு குளிர் இல்லா வீட்டில் இருக்கலாம் என்று என் நல்ல மனது மற்றவருக்காக சிந்தித்தது.
மறுநாள் நான் நான் வேலை விட்டுவரும்போது லகார் (rail station) இல் எனக்காக விஜிதரன் அண்ணா காத்திருந்தார். முதல்நாள் நான் கட்டிய 70€ தந்துவிட்டு ‘மெத்த நன்றி தம்பி’ என்றார். தனது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டதையும் அவர் சொன்னார்.
அவருக்கு வதிவிட அனுமதி கிடைக்காதென்பது உறுதியானதால் என் வீட்டில் அவரை தங்க வைப்பது சம்மந்தமாக நான் எதுவும் பேசவில்லை. அதுதான் புத்திசாலித்தனமானது. ஆம்! இப்படித்தான் உலகம் இயங்குகிறது.