வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள்

வடக்கிலும் அழிக்கப்படும் கண்டல் தாவர காடுகள்

   —  கருணாகரன் — 

கடந்த வாரம் முல்லைத்தீவுக்குப் போனபோது பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புதுக்குடியிருப்புக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட நந்திக்கடலோரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். அங்கேயிருந்த அலையாத்திக் காடுகளை (கண்டற்காடுகளை) காணவில்லை. தெருவுக்கும் கடலுக்குமிடையிலிருந்த சிறுபற்றைக் காடுகளுமில்லை. ஏறக்குறைய ஏழு கிலோ மீற்றர் வரையான காடுகள் ஒரு ஆண்டுக்குள் அழிக்கப்பட்டுள்ளன.  

பட்டப்பகலில் நடந்த கொள்ளை என்பார்களே, அதைப்போல எல்லோருடைய கண்ணுக்கு முன்னே இந்த அநீதி நடந்துள்ளது. சந்தேகமேயில்லை. இது மிகப் பெரிய அநீதியே. அந்தப் பகுதி மக்களுக்கு, அங்குள்ள மீனவர்களுக்கு, கடல்வாழ் உயிரினங்களுக்கு, அந்தக் களப்புக் கடலுக்கு, அதைச் சுற்றியிருக்கும் பறவைகள், விலங்குகள் என அனைத்துத் தரப்பிற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி இது. 

இந்தக் காடும் நிலமும் அரசுக்குரியது. இதைப் பாதுகாத்திருக்க வேண்டியது முதலில் அரச நிறுவனங்கள் –திணைக்களங்களாகும். குறிப்பாக கடல்வள அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், சுற்றுச் சூழல் அதிகாரசபை, வனத்திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், கனிம வளங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவை. அடுத்ததாக அரசியல்வாதிகளும் அரசியற் கட்சிகளும். அடுத்ததாக அந்தப்  பகுதியில் உள்ள சூழலியல் ஆர்வலர்கள், மதத்தலைவர்கள், மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள் தொடக்கம் ஒவ்வொரு பொதுமக்களும் இந்தக் காடுகளைப் பாதுகாத்திருக்க வேண்டும். 

ஏனென்றால் இந்தக் காடுகளே நந்திக்கடலை – அந்தக் களப்பைப் பாதுகாக்கின்றன. களப்புக் கடலை வளப்படுத்துவது இந்தக் காடுகளிலிருந்து மழைக்காலத்தில் வடிந்தோடும் வண்டல் நீராகும். இந்த வண்டல் நீரிலிருந்து களப்புக்குக் கிடைக்கும் கனிமங்களும் உணவுமே கடல்வாழ் உயிரினங்களுக்கானது. அதோடு கடலோரத்தில் நிற்கும் கண்டல் மரங்கள் “அலையாத்தி”யாக நிற்கின்றன. இது களப்பின் நீரை சூடேறாமல் பாதுகாப்பதுடன் கரையோரத்தையும் பாதுகாக்கின்றன. அத்துடன் இந்தக் கண்டல் காட்டிலும் கரையோரக் காட்டிலும் ஏராளமான கொடிகளும் செடிகளும் நிறைந்து சூழலையும் மண்ணையும் வளப்படுத்துகின்றன. இயற்கைச் சூழலைச் சமநிலையில் வைத்திருக்கின்றன. கூடவே இந்தக் காட்டில் கடற்பறவைகள் தொடக்கம் வலசையாக வரும் பறவைகள் மற்றும் ஏனைய உள்ளுர் பட்சிகள் வரையில் ஆயிரக்கணக்கான வானுயிர்கள் தங்கியிருந்தன. இன்று இவை ஒன்றுமே இல்லாமல் சுடுகாடுமாதிரி வெட்ட வெளியாக்கப்பட்டுள்ளது. 

இந்த வெளியில் தற்போது நெல்லும் சேனைப் பயிரும் பயிரிடப்படுகிறது. அங்கங்கே ஒரு சிலர் தென்னைகளை நட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வருவாயைத் தரக்கூடியன. அதற்குப் பிறகு களப்புக்கடல் சேற்றுக் குளமாகி விடும். அந்தச் சூழலே கெட்டு நாறிப் போகும். எந்தப் பயிரும் விளைய முடியாத தரிசாகி விடும். அந்தளவுக்கு நிலம் கெட்டு உவர் பெருகி விடும். இப்படி மனிதர்களின் ஆசையினாலும் முட்டாள் தனத்தினாலும் அழிந்து போன காடுகளும் நிலங்களும் ஏராளமுண்டு. அதிலிருந்து நாம் எதைத்தான் படித்திருக்கிறோம்? 

இவ்வளவுக்கும் இது இறுதி யுத்தம் நடந்த பிரதேசமாகும். யுத்தத்தின்போது கூட இந்தப் பிரதேசம் இப்படி அழியவில்லை. யுத்தத்திற்கு முன்பும் யுத்தத்தின்போதும் யுத்தம் முடிந்த பின்னும் கூட நந்திக்கடல் களப்புக் கரை அழகாகவே இருந்தது. வளம் பூத்துக் கிடந்தது. பசுமை பொலிந்திருந்தது. இப்பொழுது? 

இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றனர்? சில நாடுகளில் என்றால் இதற்கு எதிராக மக்கள் அமைப்புகளோ தனி நபர்களோ வழக்குத் தாக்கல் செய்திருப்பார்கள். அப்படிச் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான மண் பற்று. நாட்டுப் பற்று. சமூகப்பற்றாகும். ஆனால் அப்படியான எந்தப் பற்றும் நம்முடைய அரசியற் கட்சிகளுக்கும் இல்லை. தலைவர்களுக்கும் இல்லை. அப்படித்தான் அரச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற அதிகாரிகளுக்கும் கிடையாது. கேட்டால் இதற்கு தாம் பொறுப்பில்லை. அதோ அந்தத் திணைக்களம்தான் பொறுப்பு. அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பார்கள். இப்படித் தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டு பிறரின் தலையில் அதைப் பொறுப்பித்து விட முயற்சிப்பார்கள். இது ஒரு கூட்டுப் பணி. அதற்கான கூட்டுப்பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்பட மாட்டார்கள். 

இதேநிலைதான் மக்கள் அமைப்புகளுக்கும் மதத்தலைவர்கள், புத்திஜீவிகளுடையதும். ஏனென்றால் இந்தக் காணியை அபகரித்தவர்களும் காடுகளை அழித்தவர்களும் அந்தப் பிரதேசத்தில் வலுவான நிலையில் இருப்போர். இவர்களை எப்படிப் பகைத்துக் கொள்வது? ஏன் கொள்ள வேண்டும் என்ற தயக்கநிலையினால் கண்டும் காணதிருந்து விடுகின்றனர். 

ஆகவே ஒட்டு மொத்தத்தில் இதற்காக அனைவரும் வெட்கப்பட வேண்டும். 

பல நூறு ஆண்டுகளாகவே பாதுகாப்பாக இருந்த ஒரு அரண் இன்று தமக்கு முன்னாலேயே அழிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு வெட்கப்படாமல் இருக்க முடியுமா? 

இது தனியே நந்திக்கடலோரத்தில் நடக்கும் அநீதி மட்டுமல்ல. இதே அநீதிதான் கிளிநொச்சி நகரில் உள்ள குளத்தோரக் காணிகளைப் பிடிக்கும்போதும் நடந்தது. குளத்தின் நீரேந்து பகுதியும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமும் காணாமல் போய் விட்டன. இயக்கச்சியிலும் பளையிலும் வடமராட்சி கிழக்கிலும் இந்த அநியாயம் தாராளமாக நடக்கிறது. காடழிப்பும் மணல் அகழ்வும் சர்வசாதாரணமாகி விட்டன. இதைச் செய்யாதவர்கள் ஏதோ இயலாதவர்கள் என்ற மாதிரி ஒரு தோற்றப்பாடு உருவாகியிருக்கிறது. அந்தளவுக்குச் சமூகத்தின் கூட்டு மனநிலை வளர்ந்துள்ளது. காணி பிடிக்க முடியாதவர்களும் காடழிக்கத் தெரியாதவர்களும் வல்லமை குறைந்தவர்கள் என்ற பார்வை இது. 

இதேபோலவே வவுனியாவிலும் பல குளங்களைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் எல்லாம் அடாத்தாகப் பிடிக்கப்பட்டுவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த குளப் பிரதேசத்தை இன்று யாரும் தேடவும் முடியாது. அந்தளவுக்கு தாழ்வான பகுதிகள் எல்லாமே மேடாக்கப்பட்டு விட்டன. 

குறிப்பாக தமிழ்ப்பிரதேசங்களில்தான் இவ்வாறான சூழலியற் படுகொலையும் சட்ட விரோதக் காடழிப்பும் அதிகமாக நடக்கிறது. ஒப்பீட்டளவில் சிங்களப் பகுதிகளில் காட்டையும் சூழலையும் பேணும் – பாதுகாக்கும் பண்பைக் காணலாம். அங்குள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மதகுருக்களும் சூழலியலில் கூடுதலான அக்கறையோடிருப்பதைக் காணலாம். 

தமிழர் தரப்பில் வாய்ப்பேச்சு அதிகமே தவிர, நடைமுறை எதிர்மாறானது. மண் பற்று என்பார்கள். மறுவளமாக மண்ணை அகழ்ந்து விற்று விடுவார்கள். மர நடுகையை விழா எடுத்து நடுவார்கள். சத்தமில்லாமல் மறுவளத்தில் காடுகளை அழிப்பார்கள். தாய் மண்ணின் மீது பற்றும் பாசமும் என்று பொழிந்து தள்ளுவார்கள். மறுபக்கத்தில் அந்தத் தாய் மண்ணை எப்படியெல்லாம் சீரழிக்க முடியுமோ அதைச் செய்து விடுவார்கள். 

என்பதால் தமிழ்ச்சமூகத்தை அதிகமாக நம்பிப்பயனில்லை. ஒப்பீட்டளவில், புலிகளின் காலத்தில்தான் உச்ச அளவில் சூழல் பாதுகாப்பு வலுவானதாக இருந்தது. அவர்கள் மரம் வெட்டுவதை 1980களின் நடுப்பகுதியிலிருந்தே தடுத்தனர். அதற்காகக் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தனர். அறிவித்தலை மீறி தவறான முறையில் மரம் ஏற்றிச் சென்ற லொறிகள் பல புலிகளால் எரியூட்டப்பட்டன. காடு அழிப்பில் ஈடுபட்டோர் ஆறுமாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு மரநடுகையிலும் காடு பராமரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டனர். 

மட்டுமல்ல தங்களுடைய கட்டுப்பாட்டுப்பகுதிகளிலே பல ஆயிரக்கணக்கான மரங்களைப் புலிகள் நடுகை செய்தனர். அதாவது புதிய காடுகளை உருவாக்கினார்கள். அந்தக் காடுகள் பல இடங்களிலும் இன்றும் செழிப்பாக உள்ளன. அதில் ஒரு காடு அண்மையில் அழிப்பதற்காக எரிக்கப்பட்டிருக்கிறது. முறிகண்டி –ஜெயபுரம் வீதியில் உள்ள வன்னேரிக்குளம் காடு. சிலருடைய சுயநலம் அந்தளவுக்கு மோசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.   

இதற்கு சட்டபூர்வமான சில நடவடிக்கைகளே பாதுகாப்பைத் தரும். 

முக்கியமாக பொறுப்பற்ற விதமாகச் செயற்படும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை சட்டத்தின் முன்னும் சமூகத்தின் முன்னும் நிறுத்த வேண்டும். சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தவறென்ன? 

இங்கே நடப்பது என்னவென்றால்,சில அதிகாரிகள் சனங்களோடு சனமாக நின்று தமக்கான காணியைப் பிடிக்கின்ற சங்கதிகளும் நடப்பதுண்டு. இப்படிச் செய்தால் கள்வர்களை காவற்காரர் காப்பாற்றுவதாகத்தானே அமையும். 

ஆகவே இதைக்குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம் கொள்ள வேண்டும். சிவில் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் இவற்றைக் கவனிக்கவில்லை என்றால், பேசாமல் படையினரின் பொறுப்பில் இதை விட்டு விடு வேண்டியதுதான்.  

காணி அதிகாரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அது கிடைக்க முன்பே காணிகளை – காடுகளை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம், பாதுகாக்கிறோம் என்று ஒரு தரம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.