— கருணாகரன் —
நாட்டில் விலைவாசி மலைபோல ஏறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடுதான் மக்கள் வாழ வேண்டிய நிலை. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று சனங்கள் அழுகிறார்கள்.
சிலர் கண்டபாட்டுக்கு அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். அரசாங்கத்தைத் திட்டி என்ன செய்து விட முடியும்?
இந்த அரசாங்கத்தை மாற்றுவதுதான் மீட்சிக்கு வழி என்று பலரும் சொல்கிறார்கள்.
இது நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த அரசாங்கமாவது இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கிறது. இல்லையென்றால் கஞ்சிக்கும் வழியற்றுப் போய் விடும் என்று சொல்வோரும் உண்டு.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் பொருளாதார நெருக்கடியே. பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவற்றில் முக்கியமான ஒன்று சீரற்ற பொருளாதாரக் கொள்கையும் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகளும். இன்னொன்று, கொரோனா தொற்று. கொரோனா தொற்றினால் நாடு முடங்கியது. நாடு முடங்கியதால் தொழில்துறைகளும் உற்பத்தித்துறையும் படுத்தன. போதாக்குறைக்கு இலங்கையை சிவப்புப் பட்டியலில் சேர்த்தது உலகம்.
இதனால் நாட்டின் பிரதான வருவாயை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை அப்படியே படுத்தது. உற்பத்தித்துறைகளிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டது.
இப்படி எல்லா வருவாய்ப்பகுதிகளும் முடக்கத்துக்குள்ளாகினால் நிலை என்னவாகும்? பொருளாதார நெருக்கடி பிசாசைப் போலப் பிடித்தாட்டும்.
ஒரு குடும்பத்திலுள்ளவர்கள் வேலை எதற்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்? அடுப்பில் பூனை படுக்கிறது என்பார்களே, அப்படியான ஒரு நிலையில்தான் இலங்கை இன்றுள்ளது.
இதனைத்தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏறிச்செல்லும் விலையைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் எட்டிப்பிடிக்கவும் முடியாமல் திணறுகிறோம்.
இந்த நிலைமையை மாற்றுவது எப்படி?
அது நம்முடைய கைகளில்தான் உள்ளது. நம்முடைய கைகள் என்பது நம்முடைய மனமாகும். எண்ணமாகும். சிந்தனையாகும்.
நம்முடைய மனம் என்பது நம்முடைய செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் சிந்தனையில் உள்ளது. அதாவது பொறுப்பாகச் சிந்திக்க வேண்டும். கட்டற்று அலையும் மனதைக் கட்டுப்படுத்தி வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் திட்டமிட வேண்டும். ஒழுங்கமைக்க வேண்டும். திட்டமிட்டவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்த வேண்டும்.
ஆகவே நம்முடைய சிந்தனையை சரியான முறையில் வைத்துக் கொண்டால்தான் இந்தப் பொறியிலிருந்து நாம் தப்பிக்கொள்ள முடியும்.
இதற்கு முதலில் இலங்கையை சிவப்பு வலயத்திலிருந்து – அபாய வலயத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
இப்பொழுது சிவப்பு வலையத்திலிருந்து ஒருவாறு நாடு பச்சை வலயத்திற்குள் பிரவேசித்துள்ளது. இதை எட்டுவதற்காக நாட்டை அரசாங்கம் முடக்கி வைத்திருந்தது. மக்களும் ஓரளவுக்கு (ஓரளவுக்குத்தான்) இந்த முடக்கத்திற்கு ஒத்துழைத்தனர். அதன் பயனாக நாடு அபாய வலயத்திலிருந்த மெல்ல விடுபட்டுள்ளது. பச்சை வலயத்திற்குள் பிரவேசித்துள்ளது.
மக்கள் ஏற்கனவே பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் நாடு சிவப்பு வலையத்திற்குள் சிக்கியிருக்காது. ஆனால் இதை எத்தனை பேர் உணர்ந்து நடந்தனர்? அப்படிச் சிவப்பு வலையத்திற் சிக்கியிருந்தாலும் விரைவில் அதிலிருந்து மீண்டு பச்சை வலயத்திற்குள் நுழைத்திருக்க முடியும். இதற்கு எத்தனைபேர் தயாராக இருந்தனர்?
பொது முடக்கத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் பலரும் அதை மீறிச் சுழித்துக் கொண்டு பொறுப்பற்றுத் திரிந்தனர். இப்படித்திரிந்தவர்களில் ஒரு தொகுதியினர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏனையோர் ஏதோ சாட்டுப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு கண்டபாட்டுக்குத் திரிந்தனர்.
இவர்களே கொரோனா தொற்றுக் காவிகளாக இருக்க நேர்ந்ததால் இவர்களே நாட்டை சிவப்பு வலையப்பட்டியலுக்குள் தள்ளி வைத்திருந்தவர்களாவர். அதாவது நாட்டின் நெருக்கடிக்கு இவர்களும் ஒரு வகையில் காரணமாகின்றனர். இத்தகையவர்களால் ஒட்டு மொத்த மக்களும் நாடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
எப்படியோ எல்லாவற்றையும் கடந்து இப்பொழுது நாடு மீண்டும் பச்சை வலயத்துக்குள் பிரவேசித்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சின் தொழில் நுட்ப சேவைகள் பிரிவுப் பணிப்பாளர், அன்வர் ஹம்தானி.
ஆனால் இதைத் தக்க வைப்பது மக்களுடைய கைகளில் – அதாவது மக்களுடைய சிந்தனையில்தான் உள்ளது என்ற உண்மையையும் கூறுகிறார் ஹம்தானி.
அவர் கூறுவது முற்றிலும் உண்மையே. மக்கள் மாஸ்க் அணிவதிலிருந்து நடமாட்டத்தைக் குறைப்பது வரையில் ஒவ்வொருவரும் பொறுப்பாக நடந்து கொண்டால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி விடலாம். அத்துடன் தயக்கமின்றி தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதும் அவசியம். இரண்டையும் முறைப்படி செய்து கொண்டால் ஓரளவு பரவாயில்லை. பல படிகள் முன்னேறி விடலாம்.
இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் தொடர்பாடலும் இன்னும் சீராகவில்லை. பாடசாலைகளை இயக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. ஆகவே இயல்பு நிலையை எட்டுவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.
இதேவேளை கொரொனோ தொற்றும் கொரோனா மரணங்களும் குறைந்தளவிலேனும் நிகழ்ந்து கொண்டுதானுள்ளன. இயல்பு நிலையை ஏற்படுத்த முனைந்தால் இவற்றின் எல்லைகள் விரிவடையலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டில் கொரோனா தொற்றும் கொரோனா மரணங்களும் நிகழ்கின்றன என்றால் யார்தான் யோசிக்காமல் நாட்டுக்கு வருவார்கள்?
யாரும் நாட்டுக்கு வரவில்லை என்றால்,நாடு தொடந்தும் அபாய வலயத்திற் சிக்கினால், நாட்டைத் தொடர்ந்தும் முடக்கத்திற்குள் வைத்திருந்தால் எப்படி பொருளாதார நெருக்கடி நீங்கும்? எப்படி மக்கள் வாழ்க்கை உயர்வடையும்?
எனவே மக்களாகிய எங்களுடைய கைகளில் – மனங்களில் – தான் நம்முடைய எதிர்காலமும் நாட்டினுடைய எதிர்காலமும் தங்கியுள்ளன.
இதற்கு நாம் முழுப்பொறுப்பாளிகளாகச் செயற்பட வேண்டும். போராளிகளுக்கு இருப்பதைப் போன்ற விசுவாச உணர்வையும் அர்ப்பணிப்பையும் நாம் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் போராளிகளைப் போல அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். அப்பொழுதுதான் எல்லா நெருக்கடிகளும் தணியும்.
பொது முடக்கத்தை அரசாங்கம் விலக்கி விட்டது என்றவுடன் பழையபடி எல்லோரும் திரியத் தொடங்கி விட்டனர். மாஸ்க்கை காதில் கொழுவி கழுத்தில் இழுத்து விட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய தொண்டைக்குழியில் சுருக்குக் கயிற்றைப்போல மாஸ்க் நிற்கிறது. இப்படிப் போனால் நிச்சயமாக அது தொண்டைக்குழியை இறுக்கும் சுருக்காகவே அமையும். இது ஆபத்தானது. இப்படி தொடர்ந்தும் நடந்தால் நாடு மறுபடியும் சிவப்பு வலயத்திற்குள் தள்ளப்பட்டு விடும் என்று எச்சரித்திருக்கிறார், அன்வர் ஹம்தானி.
அவர் தன்னுடைய பணியைச் செய்கிறார். அதனால் நிலைமையைப் பொறுப்பாகச் சொல்கிறார்.
எனவே, இந்த ஆபத்தைக் கடந்தால்தான் நமக்குச் சோறுண்டு என்று சுருக்கமாகச் சொல்லலாம். இல்லையென்றால் நேரே சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகவேண்டியதுதான்.
இதனால்தான் பொது முடக்கத்தை அரசாங்கம் விலக்க வேண்டும். புரிந்துணர்வையும் பொறுப்புணர்வையும் கொண்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என இந்தப் பத்தியில் நாம் தொடராக பேசி வருகிறோம்.
இந்தப் பொறுப்பேற்புத்தான் நம்மை மீட்டுக் காப்பாற்றுவதும் நம்மை முன்கொண்டு செல்வதுமாகும்.
அரசாங்கம் கதவைத் திறப்பதற்கும் திறக்கும் கதவின் வழியாக நிகழ்வனவற்றை வெளியுலகம் ஏற்றுக் கொள்வதற்கும் சுமுகச் சூழல் வேண்டும். போக்கும் வரவும் இல்லையென்றால், ஊடாட்டங்கள் நிகழவில்லை என்றால், வெளியாட்கள் வரவில்லை என்றால் அந்நியச் செலாவணி மூலம் திரட்டப்படும் நிதி கிடைக்காது. அந்த நிதி இல்லை என்றால் விலை உயரும். விலை ஏறினால் வாழ்க்கை சிறுக்கும். ஆகவேதான் எப்படியும் இயல்புச் சூழலை உருவாக்க வேண்டும் என்கிறோம்.
இதை நாமெல்லோரும் இணைந்து உருவாக்குவோம். அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள நெருக்கடிகளிலிருந்து விடுபடுவோம்.
அப்படி விடுபடும்போதே நமக்கு உண்மையான – இயல்பான வாழ்க்கை கிட்டும்.
உலகம் முழுவதிலும் கொவிட் 19இன் அச்சுறுத்தலிலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் மக்கள் விடுபட்டது பொறுப்புணர்வான நடவடிக்கைகளால்தான். சீனா தொடக்கம் அமெரிக்கா வரை இதுதான் உதாரணம். மக்களின் ஒத்துழைப்பும் பொறுப்புணர்வும் இல்லையென்றால் எத்தனை சட்டங்களையும் திட்டங்களையும் போட்டாலும் பயன் கிட்டாது.
இப்பொழுது பல நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலையடைந்து வருகின்றன. ஆனாலும் அங்கும் தொற்றும் மரணமும் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்காக அவர்கள் நாட்டை மூடி வைத்திருக்கவில்லை. திறப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியே தொடர்ந்தும் சிந்திக்கிறார்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளே இப்படிச் சிந்திக்கும்போது வளர்முக நாடாக இருக்கும் நாம் எப்படிப் பொறுப்பாகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களால் அவுஸ்திரேலிய அரசாங்கமே ஆடிப் போய் நிற்கிறது. பிரான்ஸில் இன்னும் பதற்றம் முற்றாக நீங்கவில்லை.
இப்படி வளர்ச்சியடைந்த நாடுகளே திக்கித் திணறும்போது நாம் எம்மாத்திரம்?
ஆனால் ஒன்று உள்ளுர் உற்பத்தியாளர்களான விவசாயிகளும் மீனவர்களும் பிற தொழிற்துறையினரும் இந்த இடர்க்காலப்பகுதியில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். காத்தற் கடவுளர்களாகச் செயற்பட்டிருக்கின்றனர்.
இதனால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் உணவு சார் உற்பத்தித்துறை சற்று விரிவடைந்துள்ளது. முன்னேறியுள்ளது எனலாம்.
இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியது.
மக்கள் அரசாங்கத்தையும் அரசாங்கம் மக்களையும் மாறி மாறிக் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒருங்கிணைந்த ஒரு சிறப்பான வேலைத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டால்தான் எல்லாவற்றையும் கடந்து செல்ல முடியும்.
நாம் ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டதைப்போல இது ஒரு பொறுப்புணர்வான செயல், பொறுப்பான விசயம், ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டிய முக்கியமான பணி என்பதில் அனைவரும் தெளிவோடும் உறுதியோடுமிருக்க வேண்டும்.
நாடு மேலும் முடங்கினால் சனங்களால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது.
பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல,உளவியல் நெருக்கடி தொடக்கம் குடும்பத்துக்குள் நிகழும் குழப்பங்கள், வன்முறைகள் வரையில் தொடரும். எல்லாமே அதிகரிக்கும். முக்கியமாகப் பள்ளிப் பிள்ளைகளின் – எதிர்காலத் தலைமுறையின் – வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும்.
இதற்கெல்லாம் விடுதலை அளிக்க வேண்டாமா? வழி காண முடியாதா?