கருணாகரன் —
அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயமும் அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும் அரசியல் நோக்கர்களிடத்தில் பலவிதமான அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ளது. கூடவே சில விமர்சனங்களையும்.
உருவாகிய காலத்திலிருந்தே (1970 களில்) இந்திய எதிர்ப்பு உளநிலையிலிருந்த ஜே.வி.பியினரின் அரசாங்கம் இந்தியாவுடனான உறவை எப்படிப் பேணப்போகிறது? என்.பி.பியின் ஆட்சியில் இலங்கை – இந்திய உறவு நிலை எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்திருந்தன. மட்டுமல்ல, ஐ.எம். எவ் உடனான ஒப்பந்தத்தின் எதிர்காலம் அல்லது அதனுடைய தொடர் நடவடிக்கை, மேற்குலகத்துடனான உறவு என்பனவற்றிலும் கேள்விகள் இருந்தன. குறிப்பாக அரசியற் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் இதைக்குறித்து ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், அநுரகுமார திசநாயக்க பதவியேற்ற கையோடு ஜே.வி.பியின் அடையாளத்தையே மாற்றிப்போடுவதாக இந்தியாவுக்கே முதற்பயணத்தைச் செய்தார். அதைப்போல ஐ.எம்.எவ்வுடனான தொடர் நடவடிக்கை பற்றிப் பேசினார். இதன்மூலம் தம்மைப்பற்றியிருந்த வெளி அபிப்பிராயத்தை மாற்றியது என்.பி.பி. அநுரவின் (என்.பி.பியின்) இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பலரும் கேள்விகளோடும் குழப்பங்களின் முன்பும் குந்தியிருந்தார்கள். எதிர்க்கட்சிகள் வழமையைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என். பி. பி மிக வேகமாக அதிரடி ஆட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிகாரத்திலிருக்கும் தரப்புகளின் பொதுக் குணம் இது. அதிகாரத்துக்கு வெளியே (அதிகாரம் இல்லாதபோது) பேசியதை எல்லாம் அதிகாரத்திலிருக்கும்போது எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் என்பது வேறான ஒன்று. அதை விளங்குவதற்கு வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
பலருக்கும் என்ன குழப்பம் என்றால், நீண்டகாலமாக இவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி. பி அல்லது என்.பி.பி, இப்பொழுது எப்படிக் குத்துக்கரணமடித்து இப்படிச் சமரசத்துக்கு வந்தது? அப்படிச் சமரசத்துக்கு வந்ததைப் பற்றி – அதனுடைய நியாயங்களைப் பற்றி – அது பகிரங்கமாகச் சொன்னதா? அதாவது அது தன்னுடைய கொள்கை மாற்றத்தைப் பற்றிப் பொதுத்தளத்தில் எங்கேயாவது பேசியுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்படுகின்றன.
எந்தக் கேள்விக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ ஜே.வி.பியோ அல்லது என்.பி.பியோ பதிலே சொல்லவில்லை. சொல்லப்போவதுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை தம்மை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கான பதில் என்பது செயல்தான் எனக் கருதுகிறார்கள். அதாவது செயற்பாடு அல்லது நடவடிக்கை.
எதையும் சொல்வதை விட, எதற்கும் விளக்கமளிப்பதை விட, உரிய காரியங்களைச் செய்வதே சரியானது. அதுவே அரசியற் பெறுமானமுடையது. அதுவே அவசியமானது. அதுவே பொருத்தமானது என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை. அதாவது தாம் ஒரு மாற்றுச் சக்தி என்பது, தமது செயல்களின் அடையாளமாகும்; செயல்களின் விளைவாகும் என்ற நிலைப்பாடு. இதில் அவர்கள் எவ்வளவு தூரம் சரியாகச் செயற்படுவார்கள்? எந்தளவு வெற்றியைப் பெறுவார்கள்? எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்துவர்கள்? எப்படியான மாற்றங்கள் நிகழும்? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடையாது. அவர்களுடைய ஆட்சியைக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
இதன்படியேதான் என்.பி.பியின் நடவடிக்கைகள் அமைகின்றன.
இதற்குச் சிறந்த உதாரணம், என்.பி.பி இந்திய உறவைக் கையாள்வது அல்லது இந்தியாவைக் கையாள்வதாகும். முதலில் இந்தியாவுக்கும் பிறருக்கும் ஜே.வி.பியையைப் பற்றி அல்லது என்.பி.பியைப் பற்றி வெளியே இருந்த அபிப்பிராயத்தை அது மாற்றியிருக்கிறது. உண்மையில் அநுரவின் வெற்றியையும் அதைத் தொடர்ந்து என்.பி.பி. பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மை பலத்தையும் குறித்து இந்தியாவுக்குச் சற்றுப் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அநுரவும் என்.பி.பியும் சீனாவுடன் நெருங்கக் கூடும். அல்லது சீனா என்.பி.பி. அரசாங்கத்தை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இலங்கையில் செல்வாக்கை வலுப்படுத்தக் கூடும். இதனால் தனக்கு நெருக்கடி உண்டாகலாம் என இந்தியா பதற்றமடைந்தது.
பதவியேற்ற கையோடு இந்தியாவுக்கு முதற் பயணத்தைச் செய்து இதையெல்லாம் மாற்றிப் போட்டு விட்டார் அநுர. இதை என்.பி.பியின் சரணாகதி என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியல்ல.
இதுதான் அரசியல்.
அரசுக்கு வெளியே – ஆட்சிக்கு வெளியே இருப்பது வேறு. அரசைப் பொறுப்பெடுத்து இயக்குவது வேறு. வெளியே இருக்கும்போது பலதையும் பத்தையும் பேசலாம். அப்படிப் பேசுவது சரியென்று சொல்லவில்லை. ஆனால், வெளியே இருக்கும்போது எதையும் பேசுவதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும். ஆட்சியிலிருக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. ஒவ்வொன்றுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். ஆகவே ஒவ்வொன்றிலும் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் சரிகளைத் தவற விட்டால், அதற்கான எதிர்விளைவுகள் வந்தே தீரும். அதற்கெல்லாம் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.
இதேவேளை நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
என்.பி.பி என்பது கடந்த கால ஜே.வி.பி அல்ல. அது தன்னை மாற்றிக் கொண்ட ஒன்று. இன்று அது முற்றிலும் புதிய ஒன்று. அதில் பழைய ஜே.வி.பியின் சிறு குணங்கள் – பிசிறுகள் – இருக்கலாம். ஆனால், அதையும் விட அது மாறிய – மாற்றத்துக்குள்ளான – ஒரு அரசியல் இயக்கமாக, அரசியல் வடிமாகவே உள்ளது.
ஆனால், பலரும் முந்திய ஜே.வி.பியைத்தான் இன்னமும்மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் அவர்களுக்கு இன்னமும் குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. அவர்களுடைய விமர்சனம் அந்த அடிப்படையிலானதே.
பலரும் ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். ஜே.வி.பி ஏன் என்.பி.பி யாக மாற்றமடைந்தது? எப்படி அது ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய நிலைக்கு வந்தது? மட்டுமல்ல, ஏன் இவர்களில் பலரும் என்.பி.பியின் இந்தத் திடீர் வளர்ச்சியையும் அது ஆட்சியைக் கைப்பற்றியதையும் கூட இன்னமும் நம்ப முடியாமல் – ஏற்றுக் கொள்ள முடியாமல்- புரிந்து கொள்ள முடியாமல்தான் உள்ளனர்.
ஆனால், இதொரு மறுக்க முடியாத உண்மை. இதொரு யதார்த்தம். யாரும் ஏற்கலாம், விடலாம். ஆனால், இதொரு வெற்றி. அதாவது ஜே.வி.பியினுள் நிகழ்ந்த மாற்றம், என்.பி.பியின் வெளிப்பாடாக, வெற்றியாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதைப் புரிந்து கொண்டால், அநுர – மோடி இருவரும் இறுகப் பற்றித் தழுவிக் கொண்டதற்குப் பின்னால், இறுகப் பற்றிக் குலுக்கிய கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலையும் யதார்த்தத்தையும் குழப்பமின்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இன்றைய சூழலில் இந்தியாவுக்கு இலங்கை மிக அவசியமானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிர்நிலையிலேயே உள்ளன. அல்லது இந்தியாவுக்கு மாறான உளநிலையிலேயே இருக்கின்றன. ஆகவே இலங்கையையாவது தன்னுடைய நெருக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்குள்ளது. என்பதால்தான் அது இலங்கையுடன் நிபந்தனையற்ற உறவைக் கொண்டுள்ளது. அநுரவின் ஆட்சிக்கு முன்பு, சீனாவின் மடியில் ராஜபக்ஸக்கள் தலையை வைத்திருந்த காலத்திலும் இந்தியா மிகப் பொறுமையாக – நிதானமாக இலங்கையுடனான உறவைத் தொடர்ந்தது.
இதற்கு வாய்ப்பாக இலங்கையின் நெருக்கடிகளில் பங்கேற்கும் தரப்பாகத் தன்னைத் தொடர்ந்தும் வைத்திருக்கிறது. போரிலும் பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளை இங்கே நினைவு கொள்வது நல்லது.
இலங்கை இந்தியாவை விட்டு மேற்குலகம், சீனா என்று சற்று விலகிச் சென்றபோதும் அதைக் கண்டும் காணாததைப்போல இருந்து கொண்டு தொடர்ந்தும் உறவிலும் உதவித்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது இந்த அடிப்படையிலேயே. இலங்கையோடு பகை நிலையைக் கொண்டால், அது (இலங்கை) முற்று முழுதாக சீனா, பாகிஸ்தான் என்ற இன்னொரு உறவு வளையத்துள் சென்று விடக் கூடும் என்ற அச்சம் இந்தியாவுக்குண்டு.
இந்த நிலைமை இலங்கைக்குச் சாதகமான ஒன்று. இதைப் புரிந்து கொண்டிருக்கிறது என்.பி.பி – அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும். தாம் எப்படி ஆட்சியைக் கைப்பற்றும் தரப்பாக மாறுதலுக்கு உட்பட்டோமோ, அதைப்போல,ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் மாறுதல்கள் வேண்டும் என்பதே என்.பி.பியினரின் நம்பிக்கையாகும். எனவேதான் இந்தியாவுக்கு முதற் பயணத்தை அநுரகுமார திசநாயக்க மேற்கொண்டார். இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியிலிருந்து வந்த ஒருவர், ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவுக்கு முதல் வருகை செய்வதை இந்தியா வரவேற்றதும் இலங்கையைத் தன்னுடைய நட்பு வளையத்துள் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற நலன் நோக்கு அடிப்படையிலேயே. அதாவது ஒவ்வொருவருக்குமான பரஸ்பர நன்மைகள், லாபங்களின் அடிப்படையில்.
இதனால் ஜனாதிபதி அநுரவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு டெல்லியில் அளிக்கப்பட்டது. இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அநுரகுமார திசநாயக்க முயற்சித்தார். குறிப்பாக இலங்கை சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு துணைக்கரமாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள விளைந்தார்.
அதற்கான தொடர்பாடலின் விளைவாக – வெற்றியாக – மோடியின் இலங்கைப் பயணம் அமைந்தது. மோடிக்கு இலங்கையில் செல்லுமிடமெங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வழியெங்கும் நிறைந்திருந்த சனங்கள் மோடியை வாழ்த்திப் பாடினார்கள்.
இந்தப் பயணத்தில் பல விடயங்களை பேசப்பட்டன. சில விடயங்கள் இருதரப்பு உடன்பாட்டுக்குள்ளாகின. சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சில விடயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றோடு சேர்ந்து இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு போன்ற வழமையான விவகாரங்களும் அமைந்துள்ளன.
இவையெல்லாம் இந்த ஆட்சியின் தொடக்க ஆட்டம்தான். ஏனென்றால், இந்தியாவுக்கு இலங்கையில் எத்தகைய நன்மைகள் வேண்டியிருக்கிறதோ, அதற்கு நிகராக இந்தியாவிடத்திலிருந்தும் பலவிதமான நன்மைகளைப் பெற வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது. என்பதால்தான் இது இருதரப்பு உறவாக – உறவாடலாக இருக்கிறது. எனவே இந்தத் தொடராட்டம் மேலும் நீடிக்கப்போகிறது.
திசநாயக்கவின் அரசாங்கம் முதல் ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடியிருக்கிறது. எப்படி அது ஐ.எம்.எவ்வுடன் ஒரு சுமுகமான ஆட்டத்தில் உள்ளதோ, அவ்வாறே இந்தியாவுடனும் உறவாடுகிறது.
மோடியின் இந்த இலங்கைப் பயணத்தில் அவருக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதை – மகிழ்ச்சி உண்டாகியதை – அவருடைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்பு அவர் மூன்று தடவை இலங்கைக்கு வந்திருக்கிறார். ஆனால், இந்தத் தடவையே அவர் உற்சாகமாக இருந்ததாக உணர முடிகிறது. ஏதோ நீண்டகால நண்பர்களைப்போல அநுரவும் மோடியும் காட்டிய நெருக்கம் இதற்குச் சான்று.
1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால்ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது.
விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது. அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது.
மாக்ஸிஸத் தத்துவம் எப்போதும் வலியுறுத்துவது, “மாற்றம் என்பது நிகழ்ந்தே தீரும். மாறாதவை அழிவடையும்” என்பதாகும். என்.பி.பி (ஜே.வி.பி) இதைப் புரிந்துள்ளது என எண்ணலாம்.
ஆகவே, அடுத்த கட்டமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் பல அனுகூலங்கள் சித்திக்கக் கூடும். பல புதிய திட்டங்களுக்கான வாசல்கள் திறக்கப்படலாம். அதில் சில நெருக்கடிகளைத் தருவனவாகவும் இருக்கலாம். அதையெல்லாம் கையாள்வதுதான் அரசியல். அதுதான் அரசியல் ஆளுமையும் தலைமைத்துவமும் ஆகும்.
அநுரகுமார திசநாயக்க இளைய தலைவர். என்.பி.பிக்கு இது புதிய ஆட்சி அனுபவம். ஆனாலும் விடயங்களைக் கையாள்வதில் முதிர்ச்சியான போக்குத் தென்படுகிறது. இலங்கையின் இராசதந்திரமும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதும் வியப்பூட்டும் வகையில் செயற்பட்டதே வரலாறு. தலைக்கு வருவதையெல்லாம் அவர்கள் தலைப்பாகையோடு தள்ளி விடுவார்கள். என்றபடியால்தான் இந்தச் சின்னஞ்சிறு தீவு, புவியியல் ரீதியாக நெருக்கடிப் புள்ளியிலிருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
சிந்திக்கக் கூடியவர்களின் வரலாறு எப்போதும் முன்னோக்கியே பயணிக்கும். பின்னோக்குவதில்லை. நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.
என்.பி.பி. தன்னை ஒரு நதியாக உணர்ந்துள்ளது போலும். வரலாறு அதைச் சொல்ல வேண்டும்
