— அழகு குணசீலன்—
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும் கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில் மட்டக்களப்பு சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன் பிரிந்து கிடக்கிறது.
பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும், நீதி, நிர்வாகத்தை அரசியல் பிடியில் இருந்து விடுவிக்கும் மற்றொரு நடவடிக்கை என்கின்றனர் மறுதரப்பினர். இதனால்தான் இதனை ஒன்றும்,ஒன்றும் இரண்டா? அல்லது அதற்கும் மேலா?என்று கேட்கவேண்டி உள்ளது.
முதலில் கைது செய்யப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட போதும், பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ். ரவீந்திரநாத் 15, டிசம்பர்,2006 இல் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமைக்காக இந்த கைது இடம்பெற்றதாக தெரியவந்தது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்களையும், சட்டப்பிரிவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள்/ 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெறுவதாகவே அறிய வந்தது. பின்னர் அது நீடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பாராளுமன்றத்தில் இது பற்றி பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையானுக்கு ஈஸ்டர் படுகொலைகளோடு கணிசமான தொடர்புகள் இருப்பதாக அறிவித்தார். இது பயங்கரவாத சட்டத்திற்குள் இழுத்து விடுவதற்கான காரணம் தேடலாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக பிள்ளையான் பல தடவைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் சிறையில் இருந்தவர். இது குறித்து சிறைச்சாலையில் நடந்த சில நிகழ்வுகளையும் தனது நூலில் எழுதியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் இது போன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டா. தற்போது உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார காலத்தில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் பின்னணியைக்கொண்டது என்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இதனை ஆதாரம் காட்டுகிறது.
இதைவிடவும் கடந்த தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு வந்திருந்த அநுரகுமார திசாநாயக்க பிள்ளையானையும் அவரது கட்சியையும் கடுமையாக எச்சரிக்கும் தொனியில் அவரது வழமையான பாணியில் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த பிள்ளையான், “எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்றும், பின்னர் அவர்கள் ஆயுதம் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை……” என்றும் கூறினார். பிள்ளையானின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி. இதுவரை பதிலளித்ததாக தெரியவில்லை.
அண்மையில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கட்சியின் பெயரை பிள்ளையான், கருணா, வியாழேந்திரனின் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பயன்படுத்துவது குறித்து இரு தரப்பாலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பெயர் குறித்து விவாதிப்பதற்கு இப்பத்தி பொருத்தமற்றது என்பதால் இனி வரும் காலங்களில் இதற்கு வெளிச்சம் போடப்படும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரைப்பொறுத்தமட்டில் தமிழரசுகட்சிக்கு அடுத்து என்.பி.பி.க்கு சவாலாக கிழக்கு கூட்டமைப்பு அமையும் என்று நம்புகின்றனர். இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று இப்போதும் பிள்ளையானின் தலையில் குட்ட அநுரகுமார அரசு முனைகிறது என்கிறார்கள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்.
வியாழேந்திரன், பிள்ளையானுக்கு அடுத்து கருணா மீது புலனாய்வு பிரிவினர் பாய்வார்களா? என்ற கேள்வியும் மட்டக்களப்பில் நிலவுகிறது. ஜனாதிபதி அநுரகுமார சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு வந்தார். அதற்கு முன்னர் திட்டமிட்டு, கணக்கு பார்த்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இந்த “கணக்கு பார்ப்பில்” கவனிக்கத்தக்கது என்னவெனில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும். ஏப்ரல் 22 ம் திகதியே நீதிமன்றங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கும் இதுவும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்கிறது ரி.எம்.வி.பி. ஆக, பிள்ளையான் இல்லாத மட்டக்களப்புக்கு வருவதும், ஈஸ்டர் படுகொலையை அரசியல் பிரச்சாரமாக்குவதும் ஜனாதிபதியின் உள்திட்டம் என்று கூறுகிறார்கள் அவர்கள்.
முதலாவது தரப்பினரின் கருத்துக்களை வடிகட்டியதில் கிடைத்த மற்றொரு தகவல் வடக்கில் என்.பி.பி. தனது ஆதரவை அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை நாடியிருப்பதாகவும், அந்த டயஸ்போராவின் நிபந்தனையை நிறைவு செய்யவே, பிள்ளையான் கைது, வீதித்தடை நீக்கம் போன்றவை இடம்பெறுகின்றனவாம். தமிழ் டயஸ்போராவின் நிபந்தனைகளில் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் ஆகியோர், உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த தகவல் ஒன்றில் அறியக்கிடைத்தது.
டக்ளஸ் தேவானந்தா ஊழல், இலஞ்சம் மற்றும் சிறிதர் தியேட்டர் சொத்து சேர்ப்பு சம்பந்தமாகவும், சித்தார்த்தன் அவரது புளட் இயக்க தோழர், ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்றும் கதையடிபடுகிறதாம். என்.பி.பி. வடக்கில் பாராளுமன்றமன்ற தேர்தலில் கிடைத்த ஆதரவை தக்கவைக்க முயற்சிக்கிறது. எனினும் எப்படித்தான் இருந்தாலும் புலிகளை எதிர்த்து, உயிரைப்பணயம்வைத்து ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை வலியுறுத்தியவர் டக்ளஸ் கொமறாட் என்று அநுரகுமார கருதுவதாகவும் ஒரு கசிவு தகவல் உண்டு.
இது இவ்வாறு இருக்க,
தமிழ்த்தேசிய வெடித்தரப்பும், அரசாங்கத் தரப்பும் பிள்ளையான் கைது செய்யப்பட்டதில் சத்தியமாக அரசியல் பின்னணி இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்து வருகிறார்கள். அண்மையில் தென்னிலங்கையில் பேசிய பிரதி அமைச்சர் ஒருவர் திறைசேரி அந்நியச் செலாவணி இருப்பு குறித்து “அம்பே அப்பே” என்று அம்மா மேல் சத்தியம் செய்தது போல் இல்லாமல் இவர்களின் சத்தியம் இருந்தால் சரிதான்.
என்.பி.பி. அரசாங்கத்தின் இலஞ்ச, ஊழல் அற்ற, நீதி, நிர்வாகத்தில் சுதந்திர செயற்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். ராஜபக்சாக்களின் சொத்து சேகரிப்பு, ஈஸ்டர், பட்டலந்த படுகொலைகள் போன்று படிப்படியாக ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வரும் என்று வாதிடுகின்றனர். அப்படியானால் அரசாங்க அரசியல் வாதிகள் அடிக்கடி கைதுகள் குறித்து முன்கூட்டியே பேசுகின்றனரே அரசியல் தலையீடு இல்லாத நீதி நிர்வாகத்தில் இது எப்படி சாத்தியம் என்றும் மறு தரப்பு கேட்கிறது.
முன்னாள் தமிழ்த்தேசிய ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளவர்கள் பிள்ளையான் – கருணா குழுவினிரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்று பிள்ளையானின் கைதை நியாயப்படுத்தியுள்ளார். அதைப்படித்தபோது இஸ்ரேல் மொசாட் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் முக அடையாளத்தை மறைக்க ஒரு கண்ணை மறைத்து இருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது. அந்த அதிகாரியின் பெயர் தயான்.
அது போன்று ஒரு கண்ணால் பார்த்ததாலோ என்னவோ அரியத்தாருக்கு புலிகள் செய்த கொலைகள் / கொலை முயற்சிகள் தெரியவில்லை. அந்த பட்டியலில் அ.தங்கத்துரை, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, கிங்ஸ்லி இராசநாயகம், சம்பந்த மூர்த்தி, ராஜன் சத்தியமூர்த்தி, நிமலன் சௌந்தரநாயகம், சாம்.தம்பிமுத்து, வாசுதேவா போன்றவர்கள் மீதான கொலைகள் அவருக்கு தெரியவில்லை. இதில் வேடிக்கை என்ன வெனில் அனேகர் தமிழரசுக்கட்சிக்காரர், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அவரின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்படி அரசியல் செய்வதால்தான் தமிழரசு இன்று “சின்னவீடு” ஆகி இருக்கிறது. சங்கு சின்னத்தில் ஜனாதிபதிக்கு போட்டியிட்டதால் சந்திரா பெர்ணான்டோ, வணசிங்கா, ஊடகவியலாளர் நித்தியின் கொலைகள்/ தாக்குதல்களையும் மறக்கவேண்டியதாயிற்று.
இந்த நாட்டில் மொத்தமாக 50 ஆண்டுகாலமாக ஆயுத வன்முறை நிலவியது. இன்னும் நிலவுகிறது. ஜே.வி.பி.யும், தமிழ் இளைஞர்களும் அவரவர் அரசியல் நோக்கை அடைவதற்காக ஆயுதம் தூக்கி ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்து இறுதியில் தோற்றுப்போயினர். இவ்வாறான சூழலில் பல்வேறு சிறிய ஆயுதக்குழுக்களும், அரசாங்க படைகளுடன் சேர்ந்து செயற்படும் குழுக்களும், ஊர்காவற்படைகளும் இருந்தது வெளிப்படை. கலவர காலத்தில் ஜனநாயக அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கோ நாட்டில் இருக்கவில்லை. ஆயுதமேந்தியோர் ரில்வின் சில்வா சொல்வதுபோல் என்ன காரணத்தை சொன்னாலும் இந்த ஜனநாயக ரீதியான, நிறுவனரீதியான கட்டமைப்புக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதன் போது மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்புக்கள், கொலைகள், கொள்ளைகள் , சட்டமறுப்புக்கள், மீறல்கள் உள்நாட்டு போர் நடந்த நாடுகள் போன்று இலங்கையிலும் இடம்பெற்றன. இந்த கொடூரத்திற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கவேண்டும். இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். என்பதில் வேறு கருத்துகள் இல்லை.
அப்படி இல்லாமல் இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன? இது வரை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே எம்.பி. இது இழகிய இரும்பை கொல்லன் ஓங்கி அடிக்கும் கதை. புதிய அதிகாரம் பழைய அதிகாரத்தை பாதுகாத்தல். இளம் ராசபக்சாக்கள் மட்டும் விசாரணை என்று அழைக்கப்பட்டார்கள், எதுவும் நடக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை அரசாங்க வீட்டில் இருந்து கூட எழுப்ப முடியவில்லை.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க சர்வதேச ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். அரியநேத்திரனின் கண் மறைப்பைதான் இவரும் செய்துள்ளா. இறுதியுத்தகால அழிவை விசாரிக்க உள்ளகபொறிமுறை தான் என்று சர்வதேச பொறிமுறையை நிராகரித்தவர்கள், ஆனால் ஜே.வி.பி.க்கு எதிரான பட்டலந்தை கொலைகளை விசாரிக்கவும் ரணிலுக்கு தண்டனை வழங்கவும் சர்வதேச ஆதரவை பெறப்போகிறார்கள். இதற்கு பெயர் இனவாதத்திற்கு இந்த நாட்டில் இனி இடமில்லை?
இங்கு எப்படி ஒன்றும், ஒன்றும் இரண்டாகும்…….?