(‘கவிதை கேளுங்கள்‘ குழுமம் அமைப்பினால் கவிஞர் பாத்திமா மைந்தன் (மொகமட் அன்சார்) அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுவரும் கவிதைகள் ஏன்? எதற்கு? எப்படி? எனும் தலைப்பிலான இணையவழி இலக்கியச் சந்திப்பின் மூன்றாவது தொடர் சந்திப்பு 02.10.2021இல் இடம்பெற்றபோது ‘குறும்பாவில் எனது அநுபவம்‘ எனும் தலைப்பில் கவிஞர் கலாபூஷணம் ஏ.பீர் முகம்மது அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு ஆற்றிய உரை இளங்கவிஞர்களுக்கு உதவலாம் என்னும் நோக்கில் இங்கே தரப்படுகிறது.)
—- ஏ.பீர் முகம்மது —-
கவிஞர் மஹாகவியின் அரை நூற்றாண்டு நினைவைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் குறும்பா தொடர்பில் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
முகநூலைத் திறந்தாலே யாராவது ஒருவர் குறும்பா என்ற வடிவத்தில் கவிதை யொன்றை எழுதி வெளியிடும் அவலம் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. குறும்பாவின் உருவம் என்ன? உள்ளடக்கம் என்ன? யாப்பு என்ன? பொருள் மரபு என்ன? என்று எதுவும் தெரியாமல் இந்த அநர்த்தம் இடம்பெற்று வருகின்றது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் மட்டும் குறும்பாவை அதன் கற்புக்கு இடர் வந்து விடாமல் எழுதி வருகின்றனர். இந்த நிலையில்தான் குறும்பாவில் எனது அநுபவங்கள் என்ற பொருண்மையில் எனது உரையைத் தொடங்க விரும்புகின்றேன். அதனை ஆரம்பிப்பதற்கு முன்னதாக எனக்கும் குறும்பாவிற்கும் இடையிலான உறவினைப் பேசுவது அவசியம் என்று கருதுகின்றேன்.
எனது இலக்கியப் பிரவேசம் “குறும்பா” என்ற கவிதையினூடாகவே இடம்பெற்றது. இன்றைய கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் எவரினதும் இலக்கிய நுழைவு குறும்பாவினூடாக இடம் பெற்றிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அந்தப் பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்திருக்கலாம் என்று நான் இன்றுவரை விசுவாசிக்கிறேன்.
கல்முனை ஸாகிரா கல்லூரியில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களிடம் (சசி) நான் பாடம் கேட்டவன். ஆங்கில இலக்கியம்பற்றி எனக்கு அறிமுகம் செய்தவர் அவரே. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் லிமரிக் கவிதையொன்றுபற்றி விளக்கினார்.
அதன் வடிவம் இது
There was a young lady of Niger
Who smiled as she rode on a tiger
They returned from the ride
with the lady inside
And the smile on the face of the tiger
பிற்காலத்தில் எனக்குக் கிடைத்த இதன் தமிழ் மொழிபெயர்ப்பு இதுதான்
புன்சிரிப்புப் பூத்தபடி வீரி
போகின்றாள் புலிமிசை சவாரி
பெண் அதனின் பேழ்வயிற்றுட்
புக்கிருந்தாள் மீள்கையில் அப்
புன்சிரிப்போ புலி முகத்தில் ஏறி
கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமானபோது அவர் நினைவாக செங்கதிர் சஞ்சிகை அஞ்சலிச் சிறப்பிதழ் ஒன்றை 2012 மே மாதம் வெளியிட்டபோது இந்த விடயங்களை நான் அங்கு பதிவிட்டுள்ளேன்.
லிமரிக் பற்றிய அறிமுகம் கிடைத்த அதே காலகட்டத்தில் எம்.ஏ.ரஹ்மான் என்பவரை ஆசிரியராகக் கொண்டு இளம்பிறை என்ற பெயரில் இலக்கிய சஞ்சிகையொன்று வெளிவந்தது. அதிலே குறும்பாக்கள் அறிமுகமாகி வந்தன. அதனைப் படித்தும் சுவைத்தும் என்னை இழந்து கொண்டிருந்தேன். குறும்பாவை எழுதும் முயற்சியில் வெற்றி பெற்றேன். 1965 செப்டம்பர் மாத இளம்பிறை இதழில் எனது முதலாவது குறும்பா வெளியானது.
சிந்தனையைக் கிளறுகிறான் பாடி
சிரிப்பும் உடனேவருமாம் கூடி
வந்து குறும்பாவினைநம்
வாய்கிழிய மெய்சிலிர்க்கத்
தந்திடுவான் ஊழல்களைச் சாடி
இலக்கியப் பிரவேசத்தோடு இணைந்த மஹாகவிபற்றிய எனது முதல் குறும்பா இதுதான் இந்தப் பீடிகையோடு எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன்.
குறும்பா பற்றியும் அதன் வரலாற்றுச் சுருக்கம் பற்றியும் எனது உரை அமையும். ஒரு இலக்கண வகுப்பு இடம்பெறாது. ஏனெனில் குறும்பா தொடர்பான சில முக்கிய தகவல்களை மட்டும் இன்றைய தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கம் மட்டுமே என்னிடம் உள்ளது.
தமிழ்மொழியின் வளத்திலே பல கவிதை வடிவங்கள் உள்ளன. வெண்பா, ஈரடி வெண்பா, அறுசீர்விருத்தம், எண்சீர் விருத்தம், ஆசிரியப்பா, அகவல், கட்டளைக் கலிப்பா என்பவை அவற்றுள் சில. அவை உருவத்தோடும் உள்ளடக்கத்தோடும் பலவகையின. இத்தனை செல்வங்கள் இருந்த போதிலும் நமது மண்ணுக்கு வெளியில் இருந்து பல கவிதை வடிவங்கள் உள்ளடக்கங்களோடு உள்ளே வந்து நமது பயன்பாட்டில் உள்ளன. மேலைநாட்டிலிருந்து புதுக்கவிதையும் ஜப்பானிலிருந்து ஹைக்கூவும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இதுபோன்ற ஒரு நிகழ்வாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வடிவமாக மட்டும் வந்து சேர்ந்ததே குறும்பா ஆகும். இலங்கையில் 1965ஆம் ஆண்டு கவிஞர் மஹாகவி அவர்களால் இக்கவிதை வடிவம் குறும்பா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த இடத்திலே குறும்பாவின் தோற்றுவாய்பற்றிச் சிறிது தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
பதினெட்டாம் நூற்றாண்டிலே லிமரிக் என்ற கவிதை வடிவம் ஆங்கில சமூகத்தில் உலா வந்தது. அதனை யார் எழுதினார்? எப்போது எழுதினார்கள்? என்ற வரலாறுகள் பெரிதாக வெளிவரவில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே எட்வேட் லியர் என்பவர் இந்த லிமரிக் என்னும் ஆங்கிலக் கவிதை வடிவத்தைப் பரவலாகப் பயன்படுத்தியவர் என்று பதிவுகள் உள்ளன. அவரே லிமரிக் என்ற கவிதை வடிவத்தின் பிதாமகர் என்பதில் சந்தேகமில்லை.
லிமரிக் கவிதை என்பது வெறுமனே எள்ளல் நையாண்டி நகைச்சுவை அங்கதம் பாலியல் சேட்டை என்று கவிதையாக வெளிவந்ததே தவிர மனித சமூகத்தின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அதன் உள்ளடக்கம் அமைந்திருக்கவில்லை. மாறாக கவிஞர் மஹாகவி தமிழுக்கு அறிமுகப்படுத்திய குறும்பா லிமரிக்கின் வடிவத்தைக் கொண்டிருந்தாலும் எள்ளல் நகைச்சுவை நையாண்டி அங்கதம் என்பதோடு சிந்தனை விரிவுக்கும் முக்கியதுவம் கொடுப்பதாய் அமைந்திருந்தது.
மஹாகவி தந்த குறும்பாவின் இயல்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. குறுகிய வடிவம்
2. குறும்புப் பா
3. ஒரே எதுகையுடைய மூன்று அடிகள்
4. ஐந்து வரிகளில் அமைதல்
5. தலைப்பு இடப்படாமை
6. சிந்திக்கத் தூண்டுதல்
7. காட்சி துணுக்கு சம்பவம் ஊடாக வெளிப்படுத்துதல்
8. இறுதி அடியில் அழுத்தம்
இந்தக் கட்டத்திலே இலங்கையில் குறும்பா அறிமுகம் எப்படி எங்கே நிகழ்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.
நீர்கொழும்பிலே 1965 ஜனவரியில் தமிழ் விழாவொன்று நடைபெற்றது. அவ்விழாவிலே தமிழறிஞர்களான எப்.எக்.சி.நடராசா, ஜே.எம்.எம்.அப்துல் காதிர், எஸ்.பொன்னுத்துரை, எம்.ஏ.ரஹ்மான் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த கவிஞர் மஹாகவி தான் எழுதிய குறும்பா கவிதைத் தொகுதிக்கு எஸ்.பொன்னுத்துரை அவர்களிடம் அணிந்துரை கேட்டு அதனைக் கையளித்தார். கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய எஸ்.பொன்னுத்துரை, தனது உரையில் மஹாகவியின் தொகுதியிலிருந்த முதலாவது குறும்பாவை வாசித்துக்காட்டி தனது உரையைத் தொடர்ந்தார். அவர் வாசித்த மஹாகவியின் முதலாவது குறும்பா இதுதான்.
‘உத்தேசம் வயது பதினேழாம்
உடலிழைக்க ஆடல் பயின்றாழாம்
எத்தேசத் தெவ்வரங்கும்
ஏறாளாம் ஆசிரியர்
ஒத்தாசையால் பயிற்சி பாழாம்’
நமக்கு அறிமுகமான தமிழ் வடிவத்திலான முதலாவது குறும்பாவும் இதுதான் இவ்வாறுதான் இலங்கையில் குறும்பாவின் முதலாவது பிரவேசம் இடம்பெற்றது.
மேற்படி விழாவிலே கலந்து கொண்டிருந்த இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் கூட்ட முடிவில் கவிஞர் மஹாகவியைச் சந்தித்து மேற்படி கவிதைத் தொகுப்பை தனது அரசு வெளியீட்டின் மூலம் வெளியிட முடியுமென்று அனுமதியைப் பெற்றதோடு உடனடியாகவே ஜனவரி இளம்பிறையில் குறும்பாக்களை தொடராக வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார்.
இவ்வாறுதான் குறும்பாவின் அறிமுகம் இலங்கையில் இடம்பெற்றது.
நிலைமை இவ்வாறிருக்க குறும்பா பற்றிய தப்பபிப்பிராயங்களும் இருந்தன. இருக்கின்றன.
க்ரியா என்கின்ற தற்கால அகராதியில் குறும்பா பற்றி பின்வருமாறு குறிப்பு காணப்படுகின்றது.
குறும்பா பெ (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம் லிமரிக் என்று போடப்பட்டுள்ளது. இது பிழையான தகவல் என்றும் குறும்பா என்பது இலங்கையில் வழங்கி வந்த சொல் என்பது பிழையானது என்றும் பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை தனது வரலாற்றுக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் குறும்பா அறிமுகமான காலத்தில் அது தமிழுக்குப் புது வடிவம் என்று மகாகவி குழுவினர் சொன்னபோது குறும்பா தமிழுக்குப் புது வடிவமே அல்ல என்று ஒரு கோஸ்டி சில்லையூர் செல்வராசன் தலைமையில் வெளிக்கிட்டு வந்த வரலாறும் உண்டு. காவடிச்சிந்து வகையறா என்றும் சித்தர் பாடல்கள் இதுபோல் உள்ளன என்றும் அதனைச் சிறுமைப்படுத்தியவர்களும் உண்டு.
அதுபற்றி நான் ஒரு குறும்பா எழுதியிருந்தேன்.
குறும்பாவைத் புதுவடிவாய்த் தந்தார்
கொதித்தெழுந்து சிலபேரும் வந்தார்
வெறும்வாயைச் சப்பியன்று
வீண்புரளி செய்தோரை
நறும்பாவால் நசுக்கி வழி போந்தார்.
இப்படியான பரபரப்புகளோடு ‘சிசேரியன் ஒப்பரேன்’ ஊடாகப் பிறந்ததுதான் குறும்பா என்னும் தமிழ்க் கவிதை வடிவமாகும்.
குறும்பாவின் அமைப்பு எத்தகையது?
குறும்பா மூன்று அடிகளையும் ஐந்து வரிகளையும் கொண்டது.
‘பென்சனிலே வந்தழகக் கோனார்
பெரும் கதிரை மீதமர லானார்
அஞ்சாறு நாள் இருந்தார்
அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியினாலே இறந்து போனார்’
குறும்பா பதின்மூன்று சீர்களைக் கொண்டது. சீர் என்பதை சொற்கள் என்று கொண்டாலும் சரியே.
முதலாவது வரியில் மூன்று சீர்களும் இரண்டாவது வரியில் மூன்று சீர்களும் மூன்றாம் நான்காம் வரிகளில் இவ்விரண்டு சீர்களும் கடைசி வரியில் மூன்று சீர்களுமாக மொத்தம் பதின்மூன்று சீர்கள் குறும்பாவில் அமைந்திருக்கும்.
குறும்பாவின் முதலாம் ஏழாம் பதினோராம் சீர்கள் எதுகை சார்ந்தன. அதாவது மேற்படி குறும்பாவில் பென்சன், அஞ்சாறு, பஞ்சி ஆகிய சொற்கள் எதுகை சார்ந்தது.
அவ்வாறே முதலாம் நான்காம் சீர்களும் ஏழாம் ஒன்பதாம் சீர்களும் வரியின் மோனையைச் சுட்டி நிற்பன. பென்சன் பெரும் கதிரை என்பதில் வரும் பெ சார்ந்த சொல் அவ்வாறானதே. அஞ்சாறு அடுத்த திங்கள் என்பதில் வரும் அ சார்ந்த சொற்களும் மோனை சார்ந்த ஒலி கொண்டவையாகும். மூன்றாவது ஆறாவது பதின்மூன்றாவது சீர்கள் இயைபுத் தொடையாகும். அதாவது கோனார் லானார் போனார் என ஓசை பயக்கும் சொற்களாகும்
எனவே குறும்பாவின் அமைப்பு என்பதும் சிறப்பு என்பதும் எதுகை மோனை இயைபு என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளதுடன் மூன்று அடிகளும் ஐந்து வரிகளுமாக அமைந்து குறும்பாவுக்குச் சுவை கூட்டுகின்றன.
அதுமட்டுமல்லாமல் மூன்றாம் நான்காம் வரிகள் உள்ளே வலது பக்கம் சிறிது நகர்ந்து காணப்படுவதோடு ஐந்தாவது வரி வழமையான அமைப்பிற்கு வந்து விடுகின்றது. எனவே குறும்பா பின்வரும் வாய்பாட்டைக் கொண்டு அமைகின்றன.
காய் காய் தேமா
காய் காய் தேமா
காய் காய்
காய் காய்
காய் காய் தேமா
இவ்வடிவம் பல ஓசை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன. இதன் காரணமாக குறும்பாவின் உயிரோட்டம் ஓசை பெற்றுச் சிறக்கின்றது. குறும்பாவை வாசிக்கும்போது நீங்கள் இதனை விளங்கிக் கொள்ளலாம்.
மேலும் முதலாவது அடி அடிகோலுவதாகவும் இரண்டாவது அடி கட்டியெழுப்புவதாகவும் மூன்றாவது அடி முத்தாய்ப்பிடுவதாக அமையும், அவ்வாறான குறும்பாக்களே சிறப்பானதாகவும் அமையும்
இப்போது நான் தரும் குறும்பாவைக் கவனியுங்கள் இந்த விடயம் உங்களுக்கு இலகுவாகப் புரியும்
கண்டியில் ஓர் பேரிளம்பெண் ஆத்தாள்
கற்பைஅவள் அற்புதமாய்க் காத்தாள்
உண்டு செமியா தவயிறு
ஊத ஒருநாள் கயிற்றைத்
தொண்டையிலே மாட்டி உயிர் நீத்தாள்’
கண்டியிலே ஒரு கற்புடைய பெண் வாழ்ந்து வந்தாள் என்று முதலாவது அடியிலே கதை தொடங்குகின்றது. எதிர்பாராவிதமாக அவள் கருத்தரித்தாள் என்று இரண்டாவது அடியில் நமது கவனம் வேறு திசைக்கு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் கதையொன்று கட்டியெழுப்பபடுகின்றது. மூன்றாவது அடியில் தற்கொலை நடந்து எதிர்பாராத திருப்பம் இடம்பெறுகின்றது. குறும்பாவின் அடிநாதமே மூன்றாவது அடிதான்.
மேலும் மஹாகவி தனது குறும்பாக்களுக்கு தலைப்பு இடவில்லை. ஆனால் தலைப்புகள் இல்லாமலேயே அவரின் குறும்பாக்கள் பேச வேண்டிய அனைத்தையும் பேசின.
கீழுள்ள குறும்பாவைப் பாருங்கள்
முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின்
கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்
சீலன் முத்தெடுக்கக் கடலுக்குப் போகிறான். அப்பொழுது அவனது உயிரைக் கவர்ந்து செல்ல காலன் வந்து நிற்கிறான். தன்னிடமிருந்த பத்து முத்துகளை இலஞ்சமாகக் கொடுத்து சீலன் காலனிடமிருந்து தப்பிக் கொள்கிறான். எமனையே திருப்பி அனுப்பும் அளவுக்கு இலஞ்சம் விசாலித்துள்ளது என்பதை குறும்பா சொல்கிறது. தலைப்பில்லாமல் இதனை விளங்கிக் கொள்ள முடியாதா?
நமது சங்ககால கவிதை மரபிலும் பெரும்பாலான தனியார் செய்யுள் வகையிலும் நாட்டார் பாடல் பரப்பிலும் தலைப்பில்லாமல்தான் கவிதைகள் வந்தன. ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று சத்திமுத்தப் புலவரின் பாடலை பாடசாலைக் காலத்திலே நாம் தலைப்பை வைத்துக் கொண்டா படித்துத் தெரிந்து கொண்டோம்? குறும்பாவின் சிறப்புகளிலொன்று தலைப்பில்லாமல் குறும்பா தருவதுதான். தலைப்பில்லாமல் தனது செய்தியை வெளியே தெரிவிக்க முடியாத குறும்பா பலவீனமான குறும்பா என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். அதனால்தான் குறும்பாத் தொகுதிக்கு மஹாகவியின் குறும்பா எனப் பெயரிட்டார்.
குறும்பாவின் இன்னுமொரு விசேசம் நகைச்சுவைப் பாங்காக அது அமைய வேண்டுமென்பது.
லிமரிக் காலத்திலிருந்து அண்மைக் காலம்வரை நகைச்சுவை கேலி கிண்டல் எள்ளல்களோடுதான் குறும்பா வாழ்ந்து வந்தது. ஆனால் இப்போது நகைச்சுவையைப் புறந்தள்ளி மனம்போன போக்கில் குறும்பாவை எழுதும் போக்கு பயிற்சிக்கு வந்துள்ளது.
மஹாகவி எழுதிய ஒரு குறும்பா இது…
தென்றலிலே மன்றல்வருஞ் சோலை
தேனைஅளி தேடும்இளங் காலை
அன்றில்ஒன்று தன்பேடொடு
அணையும் ஒரு மூலையிலே
சென்றான் காலைக்கடனோ வேலை
நகைச்சுவையை மஹாகவி எப்படிக் கையாண்டுள்ளார் என்பது நம்மை வியக்க வைக்கின்றது.
காட்சி கதையாக விரிதல் என்பதும் குறும்பாவின் ஒரு பண்பாகும். எடுத்துக்காட்டாக ஒரு குறும்பா ஐந்து வரிக்குள் ஒரு காட்சி விரியும் கதைவிரியும். குறும்பா தானாகவே பிறந்து விடுகிறது.
செந்திரு இரட்டையரை ஈன்றாள்
சிந்தையிலே பேருவகை சான்றாள்
வந்து கண்ட ஐயப்பர்
வாய்கடித்தே என்னுடையது
எந்த மகவு என்ன ஏதும் தோன்றாள்
ஒரு கதையும் காட்சியும் இந்தக் குறும்பாவிலே உலா வருகின்றது.
இதுவரை குறும்பா தொடர்பான பல தகவல்களைப் பார்த்தோம். இனி இலங்கையில் குறும்பாவைக் கையாண்ட கவிஞர்கள் தொடர்பான சில தகவல்களைப் பார்ப்பது சிறப்பு என்று கருதுகின்றேன்.
இலங்கையில் குறும்பா என்ற கவி வடிவத்தை மகாகவி அறிமுகம் செய்த காலகட்டத்தில் கவிதைத் துறையில் கால்பரப்பி நின்ற சிரேஷ்ட கவிஞர்கள் எவரும் குறும்பா வடிவத்தைத் தொட முன்வரவில்லை. மகாகவி மீது கொண்ட துடக்கு மனப்பான்மையும் தங்களுக்கு வாலாயமாக அமைந்த பழைய வடிவத்திலே எழுதினால் போதும் என்ற சுயதிருப்தியும் இதற்கான காரணங்களாகும். ஆனாலும் இளந்தலைமுறையினர் பலர் குறும்பாவில் கவிதைகள் புனைந்து எழுதி மகிழ்ந்தனர்
மஹாகவிக்குப் பிறகு உரிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் குறும்பாவைக் கையாண்ட முதலாமவர் ஏ.பீர்முகம்மது என்பவரே என்று ஜீவநதி 2019 மே இதழில் வெளியான கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி இங்கு நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஆனால் பேராசிரியர் எஸ்.யோகராசா அவர்கள் ஜீவநதி 2014 டிசம்பர் இதழில் எழுதிய ‘ஈழத்தில் குறும்பாவின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரையில் இலங்கையில் குறும்பா எழுதியோர் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
அவருடைய கட்டுரையில் இருந்து கீழ்வரும் தகவல்கள் கிடைக்கப்பட்டன.
1970ஆம் ஆண்டுகளில் காலஞ்சென்ற கவிஞர் எம்எச்எம் சம்ஸ் நிறையவே குறும்பா எழுதியவர். அவர் எழுதிய குறும்பா ஒன்று இது.
ஆறுதரம் போனவராம் மக்கா
ஆஜி வரவேற்பு மிகப் பக்கா
காரிலவர் வந்திறங்கக்
கந்தலுடைப் பெண்விழியில்
பார்த்து விட்டாள்ஆம் அவனின் அக்கா
தனது சொந்த சகோதரி அணிவதற்கு ஒழுங்கான உடையில்லாமல் கந்தலுடையோடு இருக்கும்போது ஆறு தடவைகள் மக்காவுக்குப் போகும் ஹாஜிகளின் சமூகம் என்பதை இக்கவிதை படம் பிடிக்கின்றது
இது போன்ற பல சமூக சிந்தனைக் குறும்பாக்களை கவிஞர் சம்ஸ் அவர்கள் அதிகம் எழுதினார்.
கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார் போன்றவர்களும் இக்காலத்தில் சிறப்பான குறும்பாக்களை எழுதி கவனிப்புப் பெற்றனர்.
1980களில் தீரன் ஆர்.எம்.நௌசாத் நிறையவே குறும்பாக்கள் எழுதினார். ‘தூது’ என்ற சிறு கவிதைச் சஞ்சிகையில் ஆசிரியத் தலையங்கம்கூட குறும்பாவில் வெளிவந்தது. ‘குறும்பாக சில குறும்பாக்கள்’ என்ற தலைப்பிலும் எழுதினார். முகநூலிலும் இன்றுவரை தொடர்ந்து குறும்பாக்கள் எழுதி வருகின்றார். மிக அண்மையில் அவர் எழுதிய குறும்பா இது
அப்பத்தை சட்டியில் ஊற்றி
நடுவிலொரு முட்டையை ஊற்றி
உப்பும் மிளகும் தூவி
உடன் தருவாள்
சுவையோ போற்றி போற்றி
இவரைப்போலவே எண்பதுகளில் எழுதிய கவிஞர்களாக அல் அசூமத் போன்றோரைக் குறிப்பிடலாம்.
கவிஞர் அல் அசூமத் பூபாளம் என்ற கவிதை இதழ் மூலம் குறும்பா பணி செய்தவர். தொடர் குறும்பாக்களும் தந்தார். கவியரங்குகள் கூட, குறும்பா வடிவில் இடம்பெற இவர் காரணியாய் அமைந்தார். குறும்பா தொடர்பில் ஐயங்கள் எதனையும் தீர்த்து வைக்கும் அளவு குறும்பாவில் அவருக்கு அநுபவம் உண்டு.
அவர் எழுதிய ஒரு குறும்பா இது…
வேடுவர்கள் குகைவசித்த கோலம்
வீதியிலே வந்ததிற் காலம்
விட்டொழிந்தார் சீலம்
விளைகின்றார் கூளம்
விதியுருளைச் சுழற்சியிலே ஞாலம்.
கொக்கூர் கிழான் கா.வை.இரத்தினசிங்கம் போன்றோரும் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியவர்கள்
கவிதை வடிவங்களைச் சிறப்பாகக் கையாளும் சிவசேகரன் பனிமலர் சஞ்சிகையிலும் குறிஞ்சித் தென்னவன் (இவர் எழுதிய ஆண்டு தெளிவில்லை) போன்றோரும் குறும்பாவின் வரலாற்றில் வருகின்றனர். மலரன்பன் என்பவர் தொண்டன் என்ற சஞ்சிகையில் குறும்பா என்ற பெயரில் (பெயர்தான் குறும்பா) எழுதினார். இந்தத் தகவல்களையெல்லாம் பேராசிரியர் மேற்படி கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
இன்றுவரை குறும்பாக்களை எழுதுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதால் பெயரெதையும் இங்கு சுட்டவில்லை.
குறும்பா மட்டுமல்ல குறும்பாக்களைத் தொகுத்து வெளியிட்டவர்கள் பற்றியும் சில தகவல்கள் உண்டு.
1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 100 குறும்பாக்களோடு மகாகவியின் குறும்பா தொகுதியாக வெளியானது. அரசு வெளியீடு தனது 12வது நூலாக இதனை வெளிக் கொண்டு வந்தது. அந்த நூலிலே மஹாகவி தனது வெளியீடு பற்றிய நன்றியை தெரிவித்த விதம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
பின்வருமாறு அவர் நன்றியை வெளிப்படுத்தினார் ‘குறும்பாக்களை மக்களின் கைகளிலே வைத்த ரகுமானுக்கும் கருத்திலே சேர்த்த எஸ்.பொன்னுத்துரைக்கும் கண்ணிலே பதித்த சௌக்கும் நன்றிகள்.’ என்று தெரிவித்துள்ளார்.
இளம்பிறை சஞ்சிகை குறும்பாவை பரவலாக்கம் செய்யும் நோக்கில் இளைஞர்களிடையே குறும்பா நயம் எழுதும் போட்டி வைத்து பரிசில்களையும் வழங்கியது. இதன் காரணமாக குறும்பாவை இளைஞர்கள் வாசிக்கத் தூண்டப்பட்டார்கள். “மக்களின் கைகளிலே வைத்த ரஹ்மான்” என்று மஹாகவி நன்றி சொன்ன காரணம் அதுதான் அதேபோல பொன்னுத்துரை குறும்பாத் தொகுதிக்கு சிறப்பானதொரு முன்னீடு வழங்கியிருந்தார். சௌ என்ற ஓவியர் 50 சித்திரங்களை இந்நூலுக்கு வரைந்து பலரதும் பாராட்டுப் பெற்றார்
மஹாகவியின் குறும்பா தொகுதி வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரே இன்னுமொரு கவிதைத் தொகுதி வெளிவந்தது. அது நமது துரதிஸ்டமாகும்.
2000ஆம் ஆண்டில் சிவபாலன் என்பவர் ‘நகை’ என்ற தலைப்பில் குறும்பா தொகுதியை வெளியிட்டார். அதுவே மஹாகவியின் தொகுப்புக்குப் பின்னர் வந்த முதலாவது குறும்பா தொகுதியாகும். அதற்கான முன்னுரையை சோ.பத்மநாதன் அவர்கள் வழங்கியிருந்தார்.
2002ஆம் ஆண்டில் ஒலுவில் எஸ்.ஜலால்தீன் என்பவர் ‘சுடுகின்ற மலர்கள்’ என்ற தலைப்பில் ஒரு குறும்பா தொகுதியை வெளியிட்டார். அதேபோல ஒலுவில் ஜே.வகாப்தீன் வெட்டுக் கற்கள் என்ற தலைப்பில் 2010இல் ஒரு நூலை வெளியிட்டார்.
எல்லாவற்றையும்விட நீண்ட காலமாக இலக்கிய நிலத்தில் கால் பதித்து நிற்கும் பாலமுனை பாறூக் அவர்கள் 2013இல் “பாலமுனை பாறூக் குறும்பாக்கள்” என்ற தொகுதி தந்தார்.
சிறப்பான பல குறும்பாக்கள் அவருடைய தொகுதியிலே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை இங்கு வாசிக்க நினைக்கிறேன்.
அற்புதமாய் மெட்டெடுத்துப் படித்தாள்.
அபிநயமும் அழகழகாய்ப் பிடித்தாள்.
பொத்தென்று விழுந்தனளே
போய்ப் பார்த்துச் சிரித்தார்கள்
இப்படியேன் வாந்திவரக் குடித்தாள்
சமூக சிந்தனையும் கேலியும் கிண்டலும் நகைச்சுவையும் நையாண்டியும் அங்கதமும் இருக்கின்ற இது போன்ற பல குறும்பாக்களை அவரின் தொகுதியிலே நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு கரவை மு.தயாளன் என்பவரால் ஒரு குறும்பா தொகுதி வெளியிடப்பட்டது. வழமையான குறும்பா தொகுதிகளிலும் இருந்து இத்தொகுதி வேறுபட்டது என்று அவருடைய முகவுரைவிலேயே குறிப்பிட்டுள்ளார். அதனால் அத்தொகுதியை குறும்பாவோடு கண்டு கொள்ளாதவர்களே அதிகம்.
நீண்டநேரம் குறும்பாபற்றிக் கதைத்து விட்டோம்.
இப்பொழுது குறும்பா எழுதும் உத்தி என்ன என்று ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது.
உண்மையைச் சொல்லுகின்றேன்…
குறும்பா பற்றியோ அதன் யாப்பு இலக்கணம் அமைப்பு பற்றியோ எதுவும் தெரியாமல் எத்தனையோ குறும்பாக்களை நான் எழுதிவிட்டேன்.
மஹாகவியின் குறும்பாக்களைத் தேடி எடுத்து ஒரு குறும்பாவைப் பல தடவைகள் படியுங்கள் மீண்டும் மீண்டும் படியுங்கள்.
குறும்பா எழுத ஆரம்பிக்கும் காலத்தில் முகநூலில் நாளாந்தம் வெளியாகும் குறும்பாவின் அருகிலும் சென்று விடாதீர்கள். முகநூலில் வருகின்ற எல்லாமே குறும்பாக்கள் அல்ல. அதேபோல வேறு சிலரோ சிறப்பான குறும்பாக்களை எழுதி வருகின்றனர். ஆனால் அவர்கள் எழுதுகின்ற அனைத்தும் குறும்பாக்களும் அல்ல.
சீதையை இராமபிரான் மீட்டார்
சிற்றிடையின் கற்பை எடைபோட்டார்
ஏதுமவர்க் கையம் இல்லை
என்றாலும் நாட்டவர்வாய்
தீது இலையேல் செய்வாரா மாட்டார்
இது போன்ற எத்தனையோ மஹாகவியின் குறும்பாக்கள் உள்ளன.
அவற்றைப் படியுங்கள் அவரின் குறும்பாக்கள் உங்களுக்கு சபாஷ் வாங்கித் தரும் இளையவர்களே முயலுங்கள்.
இப்பொழுது மற்றொரு விடயத்துக்கு மாறுவோம்..
மஹாகவி அறிமுகம் செய்து நமக்குத் தந்த குறும்பாவை அதே உருவ உள்ளடக்கத்துடன் இன்று சிலர் எழுதி வருகின்றனர். ஆனால் மகாகவியின் குறும்பாவின் பண்புகளிலிருந்து தூரநின்று நவீன குறும்பாக்களை எழுதுவோரே இன்று அதிகம் காணப்படுகின்றனர். இன்றைய நவீன குறும்பாக்கள் வேறுபடும் சில பண்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
அவையாவன…
யாப்புமுறை அறிந்தும் அறியாமலும் மீறப்பட்டுள்ளன.
உள்ளடக்கமும் கையாண்ட பொருள்வகையும் பலவகையிலும் வேறுபடுகின்றன.
தொடர்குறும்பாக்கள் இடம்பிடித்து வருகின்றன.
நகைச்சுவையே இல்லாத குறும்பாக்கள் அதிகம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் என்ற பெயரில் தங்கள் கோட்பாடுகளுக்கு வாய்க்கால் தேடுதல்.
இந்த நிலை குறும்பாவுக்கு ஏமாற்றம் தரக்கூடியது. நகைச்சுவை தவிர்க்கப்பட்டால் வழமையான கவிதைக்கும் குறும்பாவுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் ஒரு காலத்தில் குறும்பா காணாமல் போகும் நிலை ஏற்படலாம்.
இன்று சிலர் குறும்பா எழுதியது போதாதென்று தொடர் குறும்பாவும் எழுதி வருகின்றனர். பெயரே குறும்பா பிறகென்ன தொடர் குறும்பா?
மஹாகவி மீண்டும் உயிர்பெற்று உலகுக்கு வந்து குறும்பா தொடர்பில் இடம்பெறும் நவீன மாற்றங்களைக் கண்டால் நிலைமை என்னவாகும்?
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ஒரு குறும்பாவைப் பாருங்கள்.
வள்ளுவரும் மாணவராய் ஆனார்
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு
பெயிலாகிப் போச்சு
பாவம் அவர்படிக்கவில்லை கோனார்
மஹாகவிக்கும் இந்த நிலைதான் ஏற்படுமா?
இதுபோன்ற பல விடயங்கள் உள்ளன. வெற்றி தோல்வியை காலம் தீர்மானிக்கும்.
இப்பொழுது கவலையான ஒரு விடயத்தைக் கூறி எனது உரையை முடிக்க விரும்புகின்றேன்.
மஹாகவியின் ஐம்பதாம் வருட நினைவை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை ஏற்பாடு செய்த “மஹாகவி: கவிதையும் வாழ்வும்” என்ற இணையவழி சிறப்புக் கருத்தரங்கு கடந்த 20.09.2021ஆம் திகதி இடம்பெற்றது. மஹாகவி இலங்கையின் நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளுள் ஒருவர். நவீன தமிழ் காவியங்களின் முன்னோடிகளிலும் ஒருவர். அதுபற்றியெல்லாம் பேசப்பட்டது. குறும்பா பற்றியும் அவரின் குறும்பாக்களை தமிழ்ப் பெருங்கவிஞர்களான சிற்பி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் மீரா, ஈரோடு தமிழன்பன் போன்றவர்கள் பேசியதையும் எழுதியதையும் பற்றிப் பேசினார்கள். நவீன காவியங்கள், பா நாடகங்கள் தந்தமை பற்றியும் பேசினார்கள்.
விடயம் என்னவென்றால் மஹாகவி 1965இல்தான் குறும்பாவோடு வந்து அனைவரினதும் கவனத்தைப் பெற்றார். அதற்கு முன்னதாக வள்ளி என்ற கவிதை நூலை அவர் வெளியிட்டாராயினும் மூத்த அறியப்பட்ட கவிஞராக அவர் இருந்தாரே தவிர உரிய முறையில் தூக்கலான கவிஞராக அவர் வெளியில் வரவில்லை. மாறாக இளம்பிறை சஞ்சிகையும் அதன் ஆசிரியர் எம்.ஏ.ரஹ்மானும் எஸ்.பொன்னுத்துரையும்தான் குறும்பா மூலம் அவரை தமிழ் உலகத்துக்கு தெரியப்படுத்தினாகள். மஹாகவி குறும்பாவை அறிமுப்படுத்தினார் என்பதிலும் குறும்பா மஹாகவியை அறியப்படுத்தியது என்பது எனது கட்சி. குறும்பாவின் அறிமுகத்தின் பின்னரே அவருடைய நவீன காவியங்களும் பா நாடகங்களும் அச்சிலே வந்து அவர் பற்றிப் பேசின. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட எவரும் இளம்பிறையுடனான மஹாகவியின் எழுச்சியின் ஆரம்பப் புள்ளியை மறந்தேனும் உச்சரிக்கவில்லை.
இளம்பிறையையும் ரஹ்மானையும் பொன்னுத்துரையையும் மேலே கிளம்பவிடாமல் எந்தக் குழுவினர் அக்காலத்தில் தடுத்து இயங்கினார்களோ அதே குழு மஹாகவியையும் மேற்கிளம்பி வர இடமளிக்கவில்லை என்பதையும் மறந்து விட்டார்கள். இந்த மறதி சென்னையில் இடம்பெறும்பொழுது மஹாகவியின் மகன் சேரனும் அந்த நிகழ்விலே இருந்தார். அவர் ஒரு வார்த்தை தானும் இளம்பிறை பற்றியோ ரஹ்மான்பற்றியோ பொன்னுத்துரை பற்றியோ பேசவில்லை. தூக்கி வளர்த்த தூரத்து உறவினரைப் பேசும்போது குழந்தை பெற்றுக் கொடுத்த தாயை மறக்கலாமா என்பதுதான் எமது ஆதங்கம்.
ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல குறும்பாவை இளம்பிறையில் தொடராக வெளியிட்டதும் குறும்பா தொகுதியை அரசு வெளியீடாக வெளியே கொண்டு வந்ததும் என்பதற்கும் அப்பால் செங்கதிரோனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கொழும்புத் தமிழ் சங்க வெளியீடான ‘ஓலை’ ஜூன் 2003இல் மஹாகவிக்குச் சிறப்பிதழ் வெளியிட்டு அவரைச் சிறப்பித்தது. 1971ம் ஆண்டு வெற்றிமணி என்ற சிற்றிதழ் மஹாகவியின் புகைப்படத்தை அட்டையிலே போட்டுச் மகிழ்ந்தது. இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகள் இலங்கையில் மகாகவி தொடர்பில் இடம்பெற்றிருக்கலாம். அவைபற்றி எதுவுமே பேசாமல் கதையாட வருவது வரலாற்றுக்கு நல்லதல்ல.
இலங்கையின் அறுபது எழுபதுகளில் தலைவிரித்தாடிய இலக்கிய சர்வாதிகாரத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் தலைகிளப்ப விரும்புவதையே இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்கின்றன. இவற்றையெல்லாம் மீறி உண்மை ஒருநாள் வெளிவரும்.