தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும்

தமிழர் தரப்பு மாற்று வழியில் சிந்திக்க வேண்டும்

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடக ஆய்வாளர்களிற் சிலரையும் சந்தித்திருந்தார். இதன்போது பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட 13வது திருத்தத்தைப் பற்றிப் பேசினர். கஜேந்திரகுமார் போன்றவர்களோ இதற்கப்பால் சென்றே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். ஏனையோர் தமது தனிப்பட்ட விவகாரங்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தைப் பற்றிய முறைப்பாடுகளைச் செய்வது வரையிலேயே அதிகமாக அக்கறை காட்டினர். வந்தவருக்குச் சற்றுத் தலைசுற்றினாலும் சமாளித்துக் கொண்டார். 

இதொன்றும் நமக்குப் புதியதில்லை. இந்தச் செய்தியும் உங்களுக்குப் புதியதல்ல. இப்பொழுது நாம் அறிய வேண்டியது, இதற்கப்பாலான சில சங்கதிகளையே. 

முதலில் சில அடிப்படையான விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். 

1. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விசயத்தில் இந்தியத் தலையீடு ஏற்படத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆயுதப் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவில் தொடங்கியது இது. இயக்கங்களுக்கு இந்திய அரசாங்கமே 1980களின் ஆரம்பத்தில் பயிற்சி வழங்கியது. ஆனாலும் அந்த வழியில் தீர்வு எட்டப்படவில்லை. ஆகவே இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

2. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய், 1987இல் இலங்கையுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்தது இந்தியா. அதில் தமிழர்களுடைய விவகாரமும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் பிறந்த குழந்தையே 13 ஆவது திருத்தமும் மாகாணசபைகள் முறைமையும். இது நிகழ்ந்தும் 34 ஆண்டுகள் கடந்து விட்டது. மாகாணசபை இன்னும் தேறாத குழந்தையாகவே (கண்ணாடிப் பெட்டிக்குள்ளேயே) உள்ளது. 34 ஆண்டுகளாக 13வது திருத்தத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு காலம் இதைப்பற்றி இப்படி இந்தியாவும் தமிழர்களும் பேசப் போகிறார்களோ! 

3. புலிகள் எல்லாவற்றுக்கும் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. புலிகள் இல்லாமற் போய் 13 ஆண்டுகளாகிறது. 13இல் ஒரு படி முன்னேற்றம் கூட எட்டப்படவில்லை. 

4. முன்னர் அரசியற் தீர்வை வலியுறுத்தி ஆயுதப்போராட்டம் நடந்தது. பிறகு புலிகள் தலைமையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பெரும் போரே நடந்து கொண்டிருந்தது. இதனால் தவிர்க்க முடியாமல் இலங்கை அரசாங்கம் தமிழர்களுடன் பேசும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியது. 1985 இலிருந்து 1987க்குள் பத்துத் தடவைக்கு மேலே பேச்சுகளில் இலங்கை ஈடுபட்டது. இதில் பிரதான பாத்திரம் வகித்தது இந்தியா. 1990 இலிருந்து 2009 வரையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அத்தனை இலங்கைத்தலைவர்களும் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட வேண்டிய நிலைமை – நிர்ப்பந்தம்– இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. 2009 இற்குப் பிறகு இந்த நிலை இல்லை. அப்படியென்றால் எப்படி அவ்வாறானதொரு நிலைமையை மீண்டும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்த முடியும்? அதைச் செய்வது யார்? 

5. 2009க்குப் பின்னர் அநேகமாக மேற்குலகும் இந்தியாவும் இலங்கைத் தமிழர் விடயத்தில் கரிசனை கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டு. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளிலும் பல தடவை மேற்குலகத் தலைவர்களோடும் அவற்றின் பிரதிநிதிகளோடும் தமிழ்த்தலைவர்களும் ஊடக ஆய்வுப் பிரகிருதிகளும் சந்திப்புகளைச் செய்திருக்கிறார்கள். விவகாரங்களைப் பேசியிருக்கிறார்கள். முறையிட்டிருக்கிறார்கள். அழுது புலம்பியிருக்கிறார்கள். அந்த வகையிலான ஒரு சந்திப்புத்தான் அண்மையில் ஹர்ஷ் வர்தனுடன் நடந்ததும். ஒவ்வொரு தடவையும் பெரிய நம்பிக்கைகளோடு சென்று எல்லாவற்றையும் சொல்லிமுறையிட்டு விட்டு வாயைப் பிளந்து கொண்டிருப்பதே கதையாகி விட்டது. இந்த அவல நிலை எப்போதுதான் முடியுமோ? 

6. இந்த நிலை மாறி உருப்படியாக எதையாவது செய்யக் கூடிய தலைமைகள் தமிழ் மக்களுக்கு உண்டா? இல்லையென்றால், இனியாவது அவ்வாறான ஒரு யதார்த்தத் தலைமையை தமிழர்களும் மேற்குலகும் இந்தியாவும் கண்டு பிடிக்குமா? மாற்று உபாயங்களை நோக்கிச் சிந்திக்கப்படுமா? மாற்று உபாயங்கள் வகுக்கப்படுமா? 

7. தமிழர்களின் காதுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் பூவைச் சுற்றுவதை நிறுத்த மாட்டார்களா? கொஞ்சமாவது சொந்தப் புத்தியோடு இயங்குவதைப் பற்றிச் சிந்திப்பார்களா? 

8. வெளியார் வருகையைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் 1970களின் முற்பகுதியிலேயே கவிஞர் சண்முகம் சிவலிங்கம் உள்படப் பலரும் தீர்க்கதரிசனமாக தமிழ்ச்சமூகத்துக்கு எடுத்துச் சொன்ன பிறகும் இப்படி அண்ணாந்து அடுத்த வேலியைப் பார்த்துக்கொண்டு அலைவது ஏன்? இது எப்போது முடியும்? இதைப்பற்றியெல்லாம் மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறார்கள்? அல்லது வரலாறு முழுவதும் மூடர்களாகத்தான் இருக்கப்போகிறார்களா? 

9. தமிழ் மக்களின் அரசியல் அவல நிலையைப் பற்றி கவிஞர் மு.பொன்னம்பலம் “ஆக்காண்டி” என்ற கவிதையில் தெளிவாகவே சொல்லியிருக்கிறாரே. இதற்குப் பிறகும் ஏன் தடுமாற்றங்கள்? என்று தமிழ்த் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துச் சொல்வது யார்? 

10. ஒன்றைத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்ப… எவ்வளவு காலத்துக்குத்தான் செய்து கொண்டிருக்க முடியும். அதில் எந்த வகையான முன்னேற்றமும் ஏற்படாமலே? அப்படியென்றால் தமிழர்களின் அடுத்த கட்ட வழிமுறை என்ன? 

இப்படிப் பல விடயங்கள் உள்ளன நம்மை நாமே கேட்டுக் கொள்வதற்கு? 

இது போருக்குப் பிந்திய காலம் (Post war period). இதனைக் கடப்பது – எதிர்கொள்வது என்பதும் கையாள்வது என்பதும் மிகச் சவாலானது. மிகக் கவனமாகச் செய்யப்பட்டிருக்க வேண்டியது. இதைத் தமிழர்களும் சரி, தமிழர்களுக்கு அழுகிய வாழைப்பழத்தைத் தீத்த முற்படும் வெளிச்சக்திகளும் சரி சரியாகப் புரிந்து கொண்டு செயற்பட்டனவா? குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான இழப்பீடுகள் – நிவாரணம் அளிக்கப்பட்டதா? அதைப்பற்றி இவர்கள் அக்கறைப்பட்டனரா? 

இதெல்லாம் மிக எளிய அடிப்படையான விசயங்கள். இந்தப் பருப்பைக் கூட வேக வைக்கத் தெரியாத சமையற்காரர்களை நம்பித்தான் பெரு விருந்தொன்று கிடைக்கும் என்று எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்! 

கடவுளே…. இதைப்பற்றி இதுக்கு மேலே என்ன சொல்ல? 

நமக்குத் தெளிவாகவே பல விடயங்கள் புரிகின்றன. அவியக்கூடிய பருப்புகள் எவை? அவற்றை எப்படி அவித்துக் கொள்ள வேண்டும் என. அதைப்பற்றிச் சிந்திப்பதே நல்லது. பொருத்தமானது. 

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது. 

(இந்தக் கட்டுரையில் சில கடினமான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மக்களுடைய உணர்வின் வெளிப்பாடாகும்)