— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன். —
அடுத்து வருகிறது இலங்கையின் அரச கரும மொழிச் சட்டம். ‘தனிச்சிங்கள மசோதா’ எனத் தமிழர்களுடைய அரசியல் அரங்குகளில் வர்ணிக்கப்பட்ட இச்சட்ட மூலத்தைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1956 ஜூன் 5ஆம் தேதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இச் சட்டமூலத்தின் சாதக பாதகங்களை அலச முதல் இலங்கையின் அரச கரும மொழி குறித்த அவரது நிலைப்பாடுகள் மற்றும் பின்னணி குறித்து பின்னோக்கிப் பார்த்தல் பொருத்தம்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இலங்கையின் அரச கரும மொழியை ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கும் தமிழுக்கும் மாற்றுவது குறித்து ஆராய்ந்து அறிக்கையிட அரசாங்க சபை (CEYLON STATE COUNCIL) தெரிவுக்குழு ஒன்றினை 1945 செப்டம்பர் 20ஆம் திகதி நியமித்திருந்தது.
ஆனால், அதற்கு முன்பே ஜே.ஆர்.ஜெயவர்தனா 1943 ஜூன் 22ஆம் திகதி சிங்களத்தை அரச கரும மொழியாக்குவதற்கான பிரேரணையொன்றிற்கு அரசாங்க சபையில் அறிவித்தல் கொடுத்திருந்தார். அரசாங்க சபையில் இப்பிரேரணை 1945 மே 24ஆம் திகதி எடுக்கப்பெற்றுச் சிங்களத்துடன் தமிழையும் அரச மொழியாகச் சேர்த்துக்கொள்ளும் திருத்தத்துடன் நிறைவேறியது. இதன்போது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் அரசகரும மொழியாக்குவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையென்றும் இதில் எவ்வித தீங்கோ- ஆபத்தோ அல்லது சிரமமோ இருப்பதாகத் தான் காணவில்லையென்றே கருத்துரைந்திருந்தார்.
பின்னர் ஜெயவர்த்தனாவைத் தலைவராகக் கொண்ட மேற்கூறப்பெற்ற அரசாங்க சபைத் தெரிவுக்குழு 1946 ஒக்டோபர் 9ம் திகதி இற்றைப்படுத்திய தமது அறிக்கையில் 01.01.1957இலிருந்து ஆங்கிலம் நீக்கப் பெற்று அரச கரும மொழிகளாகச் சிங்களமும் தமிழும் இடம்பெற வேண்டுமென்று விதந்தரைத்திருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்காக அரசாங்க சபை 1947-இல் கலைக்கப்பட்டதால் அரசாங்க சபைத் தெரிவுக்குழுவின் மேற்படி அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெறுவதிலிருந்து தவிர்க்கப்பட்டது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை முன்பே பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் முரண்பட்டு 1951 ஜூலை 12இல் மந்திரிசபையிலிருந்தும் யூ.என்.பி. கட்சியிலிருந்தும் வெளியேறிய பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவியிருந்தார்.
அதற்கு முன்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1951 ஏப்ரல் 13,14,15ஆம் திகதிகளில் திருகோணமலையில் பிரமாண்டமாகக்கூடித் ‘தமிழரசு’த் தீர்மானத்தை நிறைவேற்றித் திருகோணமலையைத் தமிழரசின் தலைநகரமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது. இதைத்தான் தமிழர் அரசியலில் ‘மாடு வாங்க முதல் நெய்க்கு விலைபேசிய’ செயற்பாடு என வர்ணிக்கவேண்டியுள்ளது. திருகோணமலையை ‘நோண்டி’யாக்கியதைத் தவிர இம் மாநாடு உருப்படியாக எதனையும் தரவில்லை.
தமிழரசுக் கட்சியின் தோற்றமும் 1951இல் திருகோணமலையில் நடைபெற்ற அதன் முதலாவது தேசிய மாநாட்டு வெளிப்பாடுகளும் சிங்கள மக்களுக்குத் தவறான சமிக்ஞைகளையே வழங்கியிருந்தது. பிரிவினை கோரவில்லை எனத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும் வடக்கிலே தமிழரசு என்றும் தென்னிலங்கையிலே ‘சமஸ்டி’ என்றும் கூறிய அவர்களது இரட்டை வேட அரசியல் சிங்கள இனவாதச் சக்திகளுக்குத் தீனி போட்டது.
இந்தச் சூழ்நிலையில் 1956 மே இல் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில் யூ.என்.பி. ஐத் தோற்கடித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் தேவைப்பாட்டையே பிரதான இலக்காகக் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா ‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழி விடயத்தைத் தேர்தல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திச் சிங்கள வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தத் தீர்மானித்தார்.
17.12.1955 அன்று நிட்டம்புவவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் தீர்மானத்தையெடுத்துத் தனது கட்சி பதவிக்கு வந்தால் சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்றுவோமெனப் பண்டாரநாயக்க உறுதியளித்தார். எனினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றிய அரச கருமமொழி பற்றிய தீர்மானம் சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் அதே சமயம் தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்தையும் எடுத்தியம்பியது.
தமிழ்மொழியின் நியாயமான உபயோகம் என்பதற்குப் பண்டாரநாயக்கா கொடுத்த விளக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது.
‘பாராளுமன்ற விவகாரங்களில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து. விவாதங்களும் சட்டமியற்றலும் இரு மொழிகளிலும் இடம்பெறும். முழு இலங்கை நாட்டினதும் நிர்வாகம் சிங்களம் எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியும் நீதிமன்ற மொழியும் தமிழாகவும் இருக்கும். போதனா மொழி சிங்களவர்களுக்குச் சிங்களம். தமிழர்களுக்குத் தமிழ்’
இதனைத்தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக யூ.என்.பி. 18.02.1956 அன்று நடைபெற்ற தனது பத்தாவது தேசிய மாநாட்டில் (களனி மாநாடு) சிங்களம் அரச மொழியாக வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
சிங்கள இனவாத அமைப்புகள் யாவும் சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாக்க வேண்டுமென்றே அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களைக்கொடுத்தன.
ஆனாலும், இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என்.எம்.பெரேரா மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்றவர்கள் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்தை ஆதரித்தனர்.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர் என்.எம்.பெரேரா சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் வேண்டுமென்ற பிரேரணையைப் பாராளுமன்றத்தில் 1955லேயே கொண்டுவந்திருந்தார்.
இத்தகைய ஒரு அரசியல் பின்புலத்தில்தான் 1956 தேர்தலில் வென்று பண்டாரநாயக்கா அவர்கள் 1956 ஏப்ரல் 12ஆம் திகதி பிரதமராகப் பதவி ஏற்கிறார். தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் அரசகரும மொழிச் சட்டமூலத்தை 1956 ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத்தீர்மானிக்கிறார்.
பண்டாரநாயக்காவைப் பொறுத்தவரை அவர் லண்டன் ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். மேலைநாட்டுக் கலாசாரத்தில் வாழ்ந்து பழகியவர். தாராளவாதி. அடிப்படையில் இனவாதியல்ல. இடதுசாரிச் சிந்தனைகளின் பால் ஈர்ப்புக் கொண்டவர். ஆனாலும் அரசியலதிகாரத்துக்கு வரவேண்டுமென்பதற்காகவே தனது கலாசார நடைமுறைகளை மாற்றிக் கொண்டார். கிறிஸ்தவ மதத்திலிருந்து பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டார். இவையெல்லாம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கெல்லாம் தெரியாதவையல்ல.
‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழிச் சட்டமூல அறிவிப்பு வந்தவுடனேயே பிரதமர் பண்டாரநாயக்காவோடு சிநேகபூர்வமான இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தமிழரசுக் கட்சியானது அன்றிருந்த ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்கள இடதுசாரித் தலைவர்களையும் கட்சி அரசியலுக்கப்பால் இணைத்துக்கொண்டு சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்துக் கோரும் விடயத்தை முன்வைத்துச் சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் விடயத்தில் உடன்பாட்டுரீதியான (POSITIVE) பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அது நடைபெறவில்லை.
அதற்கு மாறாக, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் பாராளுமன்றத்தில் ‘தனிச்சிங்களச் சட்ட’ மசோதாவைத் தாக்கல் செய்த அதே தினத்தில் தமிழரசுக்கட்சி கொழும்பில் பழைய பாராளுமன்றத்திற்கு எதிரேயுள்ள காலிமுகத்திடலில் அதனை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் நடத்தியது. அப்போது இலங்கையின் இடதுசாரிச் சக்திகள் அனைத்தும் இச்சட்டமூலத்தை எதிர்த்தன. அப்போதுதான் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர். டி. சில்வா ‘ ஒரு மொழி இரண்டு நாடுகள், இரு மொழிகள் ஒரு நாடு’ எனக்கூறி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்தார். வடக்கின் பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்.கந்தையா அவர்கள் தமிழர்கள் சிங்களம் படிக்கவேண்டும் சிங்களவர்கள் தமிழ் படிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். சிங்களவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தனர்.அரச கரும மொழிச் சட்டமூலம் அதாவது தனிச்சிங்களச் சட்ட மசோதா தமிழ் அரசாங்க ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்திற்று. ஒட்டுமொத்தத் தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பீட்டு ரீதியில் தமிழ் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திப் பொன்.கந்தையா அவர்களின் ஆலோசனையைச் சட்டமூலத்திற்குத் திருத்தமாகக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கலாம். அதற்கான அரசியல் சூழ்நிலை தென்னிலங்கையில் அன்றிருந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி அதனைப் பயன்படுத்தாமல் தங்கள் ஏகாதிபத்திய சார்புக் குணாம்சம் காரணமாக ஆங்கிலத்தை மோகித்துக் கொண்டு ‘சிங்களம் வேண்டாம்’ என்று முழக்கமிட்டது. இவ்வாறு முழக்கமிடாமல் சிங்கள இடதுசாரித் தலைவர்களுடன் இணைந்து தமிழர்களின் உணர்வைப் பவ்வியமாகவும், இங்கிதமாகவும் சிங்கள அரசியல் தலைவர்களிடமும் சிங்கள மக்களிடமும் வெளிப்படுத்தியிருந்தால் அன்றே சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக்கப்பட்டு இலங்கையின் இவ் இனப்பிரச்சனை அப்போதே முளையிலேயே கருகியிருக்கும். ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயே இந்த மொழிப் பிரச்சனைதான். ஆனால் இன்று இனப்பிரச்சினை என்பது வேறு பல சிக்கலான பரிமாணங்களைப் பெற்றுக் கிளைபரப்பி வளர்ந்துவிட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காகச் ‘சிங்களம் மட்டும்’ என்ற பேரினவாதப் பொல்லை எடுத்துக்கொள்ளப் பதிலாகத் தமிழரசுக்கட்சியினர் தங்கள் பாராளுமன்றக் கதிரைகளைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ‘குறுந் தமிழ்த்தேசியவாத’ப் பொல்லைக் கையில் எடுத்தனர். எதிர்மறையான நடவடிக்கையில் இறங்காமல் சிங்கள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து அரசியல் ரீதியான-இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளைத் தமிழர்தம் அரசியல் தலைமை அன்று மேற்கொண்டிருந்தால் இதுவரை ஏற்பட்ட அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். மொழிப் பிரச்சினையைத் தமிழர்களின் உணர்ச்சியைத்தூண்டி விடுகின்ற ஒரு கருவியாகத்தான் தமிழரசுக்கட்சி பயன்படுத்தியதே தவிர அவர்களுக்குத்தானும் அதில் விசுவாசம் இருக்கவில்லை. தமிழ் அரசாங்க ஊழியர்களைச் சிங்களம் படிக்க வேண்டாமென்று கூறிவிட்டுத் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் அவர்களின் புதல்வி சிங்களம் படித்ததாக அன்று பேசப்பட்டது.
மேலும், அன்றிருந்த வடக்கின் இடதுசாரித் தலைவர்கள் தென்னிலங்கையிலுள்ள இடதுசாரித் தலைவர்களுடனும் சிங்கள மக்கள் மத்தியிலே செயற்பட்ட முற்போக்குச் சக்திகளுடனும் தொடர்புடையவர்கள். தமிழரசுக் கட்சி இவர்களுடன் நேசபூர்வமான அரசியலை வடக்கில் முன்னெடுத்து இவர்களின் ஊடாகத் தமிழ் மக்களின் நியாயமான உரிமைக் கோரிக்கைகளுக்கான காரணங்களையும் தமிழர்களின் உணர்வுகளையும் சிங்கள மக்கள் மத்தியிலே விளக்கியிருக்கலாம். பிரச்சினைகளின் தீர்வுக்கு இவ்வணுகுமுறை உதவியிருக்கும். ஆனால் தமிழரசுக் கட்சி இதற்கு மாறாகக் குறுந் தமிழ்த் தேசியவாதத்தைக் கக்கி அதன் எதிர்விளைவாகப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தைத் தென்னிலங்கையிலே மேற்கிளம்பச் செய்தது. வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக்கிடந்த பௌத்த சிங்களப் பேரினவாதக் காண்டாமிருகத்தைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் ‘கீச்சுமூச்சு’ க்காட்டி எழும்பவைத்தன. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அதன் பின் சேர்.ஜோன்.கொத்தலாவல மற்றும் டட்லி சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளுக்கே உரித்தான அதிகார மோகம் காரணமாகப் பேரினவாத மனப்போக்குகளை வெளிப்படுத்தியும் தமிழ் மக்களுக்கு அளித்த அரசியல் வாக்குறுதிகளை மீறியும் செயற்பட்டிருக்கலாம். அது அரசியல்வாதிகள் மட்டத்து விடயம். ஆனால் 1956 வரை சாதாரண சிங்கள மக்களிடம் பேரினவாதச் சிந்தனை அல்லது தமிழர்களுக்கு எதிரான சிந்தனை அருகியே காணப்பட்டது. 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கொண்டுவந்த ‘சிங்களம்மட்டும்’ மசோதாவும் அதற்குத் தமிழரசுக்கட்சி காட்டிய எதிர்வினையும்தான் சாதாரண சிங்கள மக்களுடைய மனங்களில் பேரினவாத விதைகளை ஊன்றியது. இதன் விளைவே 1958ல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட தமிழ்- சிங்கள இனக்கலவரம் ஆகும். இக்கலவரத்திற்கு முன்னோடியாகத் தமிழர்களுக்கு எதிராகச் சிங்களவர்களால் காட்டப்பட்ட சமிக்ஞைதான் கிழக்கு மாகாணத்தில் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்த கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் கீழ் தாமாகவே காடுவெட்டிக் கழனி ஆக்கிக் குடியேறிய உள்ளூர்த் தமிழ் விவசாயக் குடும்பங்கள் பல 1956இல் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டமை. 1956இல் காலிமுகத்திடலில் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகத்திற்கான சிங்களவர்களின் எதிர்வினைதான் இச்சம்பவமாகும். 1958 இனக்கலவரம் வரை தென்னிலங்கையில் ஏராளமான வட இலங்கைத் தமிழர்கள் வசித்தார்கள். வர்த்தகம் செய்தார்கள். எந்தவிதமான எதிர்ப்புக்களுமின்றிக் கோயில்கள் கட்டிக் கும்பிட்டார்கள், தமிழ் அரசாங்கஊழியர்கள் அச்சமின்றிப் பணிபுரிந்தார்கள். இராணுவம் வடகிழக்கில் நிலை கொள்ளவில்லை. இப்படித் தமிழர்களுக்குச் சாதகமானவை பல.
ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளையும்-வெகுஜனப் போராட்டங்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அவை தேவையற்றவை எனக் கூறுவதோ இப்பத்தி எழுத்துக்களின் அர்த்தமல்ல. ஆனால்அவை நன்கு திட்டமிடப்பட்டதாயும்- அதன் பின்விளைவுகளைக் கணக்கில் எடுத்ததாயும் அமைதல் அவசியம். எதனை இலக்காக வைத்து- எந்த மக்களின் நலன்களுக்காக அவை மேற்கொள்ளப்படுகின்றனவோ அவற்றை அறுவடையாகத் தராமல் அதன் பின்விளைவுகள் எதிர்மறையாக அமையுமானால் அத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளும் வெகுஜனப் போராட்டங்களும் அர்த்தமற்றதாகிவிடுவது மட்டுமல்ல அவை ஆபத்தானவையுமாகிவிடுகிறது.
தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பெற்ற வெகுஜனப் போராட்டங்கள் யாவும் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் நலன்களை முதன்மைப்படுத்தாமல் அப்போராட்டங்கள் மூலம் தமிழ் மக்களை உணர்ச்சிமயப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளைத் தமிழரசுக்கட்சி பெறுவதன் மூலம்தனது அரசியல் எதிர்க் கட்சியான அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டித் தாம் மேலெழும்புவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருந்தது. பாராளுமன்ற அரசியலைக்கொண்டு செல்வதற்கு ஏதுவாகத் தமிழரசுக்கட்சிக்குப் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதுதான் தமிழரசுக் கட்சியின் இலக்காக இருந்ததே தவிர தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் ஏற்றங்கள் அவர்களது எண்ணமாகவிருக்கவில்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ் மக்களும் வேறுமாற்று வழியில்லாது தமிழரசுக் கட்சியையும் அதன்மறு வடிவமான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பின்னர் அதன் தற்போதைய வடிவமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தமையே தமிழ்த் தேசிய அரசியலின் இதுவரையிலான வரலாறு ஆகும். இத்தகைய ‘வைக்கோல் இழுத்த வழிப்பாடு’ மாற்றமுற வேண்டுமென்பதுதான் மாற்று அரசியலின் நோக்கமாகும்.
அடிக்குறிப்பு :-
1947 இல் அமுலுக்கு வந்த சோல்பரி அரசியலமைப்பின் 29வது ஷரத்து சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாப்பதற்காகச் சேர்க்கப்பட்டதாகும். இலங்கைப் பாராளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கும் எந்தச் சட்ட மூலமும் நிறைவேற்றப்படாவண்ணம் ஒரு ‘ஆப்பு’ ஆக இச்ஷரத்து கருதப்பட்டது.
1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் சோல்பரி அரசியல் அமைப்பில் உள்ள 29வது ஷரத்திற்கு முரண்பட்டதாகும். அப்படியாயின் ‘அப்புக்காத்து’மாரை அதிகம் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி இச் சட்டமூலத்திற்கெதிராக ஏன் நீதிமன்றத்தை (இங்கிலாந்தில் உள்ள கோமறைக் கழகம் – PRIVYCOUNCIL – வரை) நாடவில்லை? என்பது எழுப்பப்படும் கேள்வியாகும்.
ஆனால், பின்னாளில் இந்த அரசகரும மொழிச் சட்டத்தினால் பாதிப்புற்ற தனி நபரான -அரசாங்க எழுதுவினைஞரான திருகோணமலையைச் சேர்ந்த செ.கோடீஸ்வரன் என்பவர் அச் சட்டத்தைச் சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது அவரின் சார்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மு.திருச்செல்வம் ஆஜராகி வாதிட்டார். இவ்வழக்கு 1964இல் நடைபெற்றது.
இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பிரச்சனைக்குரிய இவ் அரசகரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது 1956இல். கோடீஸ்வரன் வழக்கு நடந்தது எட்டு வருடங்கள் கழித்து அதாவது 1964இல்.
இவ் அரசகரும மொழிச் சட்டமூலத்தை எதிர்த்துக் கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் நடத்துவதைத் தவிர்த்து தமிழ் மொழியுரிமை சம்பந்தமாக சோல்பரி அரசியல் அமைப்பின் 29வது ஷரத்தின்கீழ் அமைந்த சட்டப் பாதுகாப்பை 1956இலேயே நாடியிருக்கலாம். அல்லது சத்தியாக்கிரகம் முறியடிக்கப்பட்ட பின் அல்லது தோல்வியில் முடிந்த கையோடுதானும் இச்சட்டப் பாதுகாப்பை நாடியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஏனெனில் ‘சிலுசிலுப்பு’க் காட்டுவதையே நோக்கமாகக் கொண்ட இவர்கள் ஒருபோதும் செயற்பாட்டு அரசியலை நாடுவதேயில்லை.
இதில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கட்சியை வளர்ப்பதையும்-தமிழ் வாக்குகளைக் கவர்வதையும் -தமிழ் மக்களை உணர்ச்சியூட்டுவதையுமே (மொழி இனம் என்பவை உணர்ச்சி ஊட்டுவதற்கு மிக எளிதான விடயங்களாகும்). தமிழரசுக்கட்சியின் போராட்டநடவடிக்கைகள் இலக்காக் கொண்டிருந்தனவே தவிர, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் நீண்டகால நலன்களை முதன்மைப்படுத்தி அல்ல என்பதாகும். அக்கட்சி மேற்கொண்டதெல்லாம் தேர்தல் அரசியலுக்குத் தேவையான அடையாள எதிர்ப்புகளே.
ஆனால், 1987 இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பெற்ற 13வது மற்றும் 16 ஆவது அரசியல் சட்டத் திருத்தங்களின் மூலம் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளிலொன்றானதும் மற்றும் தமிழுக்குக்கிடைத்த நிர்வாக, நீதிமன்ற மற்றும் போதனா மொழியுரிமைகளும் பற்றி இன்றைய ‘தமிழ்த்தேசிய அரசியல்'(?) பொது வெளியில் பேசப்படுவதில்லை.