— அ. வரதராஜா பெருமாள் —
பகுதி – 14
இக்கட்டுரைத் தொடரின் முன்னைய பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையாக உள்ள குறைபாடுகளை தொடர்ச்சியாக அவதானித்துள்ளோம். இந்த அடிப்படைக் குறைபாடுகளுக்கு காரணமாக பல்வேறு வகைப் பட்ட உற்பத்தித் துறைகளிலும் காணப்படுகின்ற குறைவிருத்தி நிலைமைகளை நாம் அடையாளம் கண்டு புரிந்து கொள்வதுவும் அவசியமாகும். இக்கட்டுரைத் தொடரின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே இலங்கையின் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் உள்ள குறைவிருத்தி நிலைமைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் இப்பகுதியில் பிரதானமான பொருளாதாரத் துறைகளில் உள்ள விருத்தியற்ற நிலைமைகள் அல்லது சமகால நிலைமைகளுக்குப் பொருத்தமான அளவுக்கு வளர்ச்சியடையாது இருக்கும் நிலைமைகளை நாம் தொடரந்து அவதானிக்கலாம். அனைத்துத் துறைகளிலுமுள்ள அனைத்து உற்பத்திகள் தொடர்பாகவும் நிலவும் நிலைமைகளை இங்கு விரிவாக ஆராய்வது சாத்தியமற்றது. எனவே இங்கு சில பிரதானமான – அடிப்படையான பண்ட உற்பத்திகளின் நிலைமைகளை நோக்குவதன் மூலம் முழுமையையும் புரிந்து முற்படுவோம். அந்த வகையில் முதலாவதாக இங்கே இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறையை நோக்கலாம்.
இலங்கையின் பொருளாதார நிலைக்கு பொருத்தமற்ற தேயிலை உற்பத்தித் துறை
இலங்கையின் உழைப்பாளர்களில் 5 (ஐந்து) லட்சம் பேருக்கு மேற்பட்டோர் நேரடியாகவும் மேலும் 5 (ஐந்து) லட்சம் பேர் மறைமுகமாகவும் தமது வாழ்வாதார வருமானத்திற்காக தங்கியிருக்கும் தேயிலை உற்பத்தித் துறையை இலங்கையின் பொருளாதார நிலைக்கு பொருத்தமற்ற துறை என்று கூறுகின்ற போது பலராலும் அக்கருத்து ஏற்கப்பட முடியாத ஒன்றாகவே தென்படும். தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. தேயிலை ஏற்றுமதியால் 1000 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலங்கைக்கு அந்நியச் வெலாவணி வருமானம் கிடைக்கிறது. இப்படியிருக்கையில் எப்படி தேயிலை உற்பத்தித் தொழிலை இலங்கைக்கு பொருத்தமற்றது என்று சொல்லலாம் என பொதுவாக பொருளாதார அறிஞர்கள் கொதிப்படையவே செய்வார்கள். ஏனெனில் இலங்கையின் பொருளாதார ஆய்வுகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலை பற்றி குறிப்பிட்டாலும் அதன் தேசிய முக்கியத்துவத்தைப் பற்றி பெருமையையே வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், இலங்கையின் தற்போது தேயிலை தோட்டங்களாக உள்ள நிலத்தின் அளவை படிப்படியாக குறைத்து அவற்றை மாற்று விவசாய உப உணவு மற்றும் பணப்யிர்களை நோக்கி மாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ளுதல் வேண்டும் எனக் கூறினால் அதனை அர்த்தமுள்ள கருத்து என எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக் குறியே. எனவே, இலங்கைக்கு ஏன் தேயிலைத் தோட்டங்கள் பொருத்தமற்றவை? தொடர்ந்தும் தேயிலைத் தோட்டங்களுக்காக 5 (ஐந்து) லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை பயன்படுத்தத்தான் வேண்டுமா? இவ்வளவு நிலங்களையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்தியை சந்தைப்படுத்துகையில் உலக சந்தையில் ஏனைய பண்டங்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப தேயிலையின் விலையும் உயர்ந்து அதனால் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் உயர்வதற்கு வாய்ப்புகள் ஏதாவது உண்டா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது நிர்ப்பந்திக்கப்படும் கூலியின் அளவானது எவ்வாறு நாட்டின் சராசரியான கூலி அளவை உயரவிடாமல் வைத்திருப்பதில் பங்களிக்கிறது? இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இந்த அளவு நிலத்தில் கணிசமான பங்கை மாற்றுப் பயிர்களுக்கு மாற்றுவதன் மூலம் கூடுதலான அளவு நன்மைகள் நாட்டின் தேசிய பொருளாதார நலன்களுக்கும் தேயிலைத் துறையிலுள்ள உழைப்பாளர்களுக்கும் கிடைக்குமா இல்லையா? எனப் பல தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பி சரியான விடைகளைக் காண வேண்டியுள்ளது.
ஏற்றுமதி தொடர்பில் எவ்வளவு தொகையான நிலங்களும் உழைப்பு சக்தியும் ஈடுபடுத்தப்படுகின்றது, அதனால் எந்த அளவுக்கு இலங்கையர்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றிய கணக்கை முன்னைய தொடர்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
தேயிலைத் தோட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் 500000 (ஐந்து லட்சம்) ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 200000 ஏக்கர் நிலங்கள் தேயிலைக் கம்பனிகளிடம் உள்ளன. இந்தக் கம்பனிகளின் கூலித் தொழிலாளர்களாக சுமார் 1.5 (ஒன்றரை) லட்சம் பேர் உள்ளனர். சுமார் 300000 (மூன்று லட்சம்) ஏக்கர் அளவு தேயிலைத் தோட்ட நிலங்கள் சுமார் 4.5 (நான்கரை) லட்சம் சிறு தேயிலைத் தோட்ட உடைமையாளர்களிடம் உள்ளன.
2018 – 19ம் ஆண்டுகளின் தகவல்களின்படி தேயிலைத் தோட்ட நிலங்கள் சிறு தேயிலைத் தோட்ட உடைமையாளர்களிடம் இருக்கையில் அவர்கள் மேற்கொள்ளும் வருடாந்த மொத்த தேயிலை உற்பத்தியானது நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 அல்லது 75 சதவீதமாக இருக்கின்றது– அதாவது கிட்டத்தட்ட 240 மில்லியன் கிலோக்கள். நாட்டில் சராசரியாக ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டத்திலிருந்து பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்துகளிலிருந்து தயாரிக்கப்படும் தேயிலையின் வருடாந்த உற்பத்தி 800 கிலோக்கள். ஆனால் 2 (இரண்டு) லட்சம் ஏக்கர் நிலங்களைக் கொண்ட தேயிலைப் பெரும் தோட்ட கம்பனிகள் வெறுமனே மொத்தத்தில் சுமார் 100 மில்லியன் கிலோ தேயிலையையே. மட்டுமே உற்பத்தி செய்கின்றன. சராசரியாகப் பார்த்தால் தேயிலைத் தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தின் உற்பத்தித் திறன் சராசரியாக வெறுமனே சுமார் 500 கிலோ தேயிலையே. இந்தக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தேயிலைத் தோட்ட நிலங்கள் முழுமையாக தேயிலை உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படாமல் அவற்றில் கணிசமான அளவு நிலங்கள் பயிரற்ற தரிசு நிலங்களாகவும்,ஏனையவை வேறு தேவைகளுக்கு கம்பனிகளால் பயன்படுத்தப்படுபவையாகவும் உள்ளன. அரசாங்க அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா அண்மையில் பகிரங்கப்படுத்தியுள்ள கணக்குப்படி,பெருந் தோட்ட கம்பனிகளிடம் உள்ள சுமார் 95000 ஏக்கர் தேயிலைத் தோட்ட நிலங்கள் தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படாதவையாக உள்ளன. எனவே பெருந் தோட்ட தனியார் கம்பனிகளிடம் உள்ள தேயிலைத் தோட்டங்களில் உண்மையில் எவ்வளவு நிலத்தில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது என்பதையும் அதிலிருந்து பெறப்படும் மொத்த தேயிலை உற்பத்தியின் அளவையும் தொகுத்துப் பார்த்தால் அந்த நிலங்களினுடைய தேயிலை விளைதிறனானது சிறு தேயிலைத் தோட்ட நிலங்களுக்குக் குறைந்தவையல்ல என்பது தெளிவாகின்றது.
தேயிலையின் விலை இலங்கையர்களின் கையிலில்லை
பொருளியல் மொழியில் கூறுவதானால் தேயிலையானது ஒரு நெகிழ்ச்சியற்ற அல்லது நெகிழ்ச்சி மிகவும் குறைந்த பண்டமாகும். தேயிலையின் விலை குறைவதால் ஒரு நபர் அதிகமாக கொள்வனவு செய்யப் போவதோ அல்லது விலை சற்றுக் கூடி விட்டது என்பதற்காக தேயிலையைக் குறைத்து வாங்கப் போவதோ இல்லை. எனவே உள்ளுர் சந்தையில் மட்டுமல்ல சர்வதேச சந்தையிலும் தேயிலையின் விலை தொடர்பாக அதன் விற்பனைத் தொகையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை.
ஒரு நாட்டின் தேயிலைக்கான ஏலச் சந்தைகள் அந்த நாட்டின் தலை நகரங்களிலோ அல்லது அந்த நாடுகளின் தேயிலைத் தோட்டங்களுக்கு அண்மித்த பெரு நகரங்களிலோ இடம்பெறுவது வழமை. இலங்கையில் கொழும்பிலேதான் தேயிலைக்கான ஏலச் சந்தை இடம் பெறுகின்றது. கென்யாவில் அதன் தலைநகரான மொம்பாஸாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் பல இடங்களில், அஸ்ஸாம் மாநில தலைநகரான குவாஹாட்டியிலும், மேற்கு வங்காள தலைநகரான கொல்கத்தாவிலும், கேரளாவில் கொச்சினிலும், தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலும் தேயிலை ஏலச் சந்தைகள் இடம் பெறுகின்றன. தேயிலை ஏலச் சந்தைகள் தேயிலையை உற்பத்தி செய்யும் அந்த நாடுகளில் இடம்பெற்றாலும் அந்தச் சந்தைகளில் தேயிலையின் விலையை நிர்ணயிப்பதில் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நாடுகளில் உள்ள சந்தைகளின் விலை நிலவரங்களுக்கு ஏற்றவாறே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஏலச் சந்தைகளில் தேயிலை விற்பனையின் போது விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஏல விற்பனையின் போது விலையை நிர்ணயிப்பதில் சர்வதேச ரீதியில் தேயிலை வர்த்தகத்தில் செல்வாக்கு மிக்க சர்வதேச நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றமையே யதார்த்தமாக உள்ளது.
உலக தேயிலை ஏற்றுமதியில் இந்தியா,இலங்கை மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளும் மொத்தத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைச் செலுத்துகின்றன. ஆனால் தேயிலையின் சர்வதேச விலையை நிர்ணயிப்பதில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து தமது தேயிலையின் விலைகளை நிர்ணயிக்கும் ஆற்றலற்றவையாக இருப்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். பெற்றோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் தமது கூட்டமைப்பின் மூலம் தமது பெற்றோலிய எண்ணெய் விலைகளை நிர்ணயிப்பது போல தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தமது தேயிலைகளின் விலைகளை நிர்ணயிக்க முயற்சிக்க வேண்டுமென தேயிலை தொடர்பாக 2005ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் கண்டியை மையமாகக் கொண்டு செயற்படும் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் தோழர் பெரியசாமி முத்துலிங்கம் அவர்கள் ஒரு பிரேரணையை முன்வைத்தும் கூட அந்தப் பிரேரணைக்குச் சார்பான பதிலை உரிய நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து பெற முடியவில்லை என ஒரு தடவை இக்கட்டுரை எழுத்தாளருக்குக் கூறியதை இங்கு பதிவது பொருத்தமானதாகும்.
30 ஆண்டுகளுக்கு முதல் இலங்கையின் தலா நபர் வருமானம் 500 அமெரிக்க டொலர்களையும் எட்டவில்லை. அப்போது ஒரு கிலோ இலங்கைத் தேயிலையின் ஏலச் சந்தை விலை சராசரியாக சுமார் 1.5 (ஒன்றரை) அமெரிக்க டொலர் பெறுமதியுள்ளதாக இருந்தது. இலங்கையின் தலாநபர் வருமானம் சுமார் எட்டு மடங்கு அதிகரித்து 4000 டொலர்களை அண்மித்ததாக இருக்கும் வேளையில் தேயிலைக்கு இப்போது கிடைக்கும் விலை 3 அமெரிக்க டொலர்களை அண்மித்த பெறுமதியுடையதாகவே உள்ளது. தலாநபர் தேசிய வருமானத்தின் அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டில் ஏனைய பொருட்களின் விலைகளெல்லாம் அதிகரிக்கின்ற பொழுது தேயிலையின் விலையில் மட்டும் ஏற்றம் மிகவும் சிறியதாகவே உள்ளது. காரணம் தேயிலையின் விலையை இலங்கையின் உள்நாட்டுச் சந்தைக் காரணிகளோ அல்லது இலங்கையர்களோ நிர்ணயிப்பதில்லை. அது அந்நிய வர்த்தக ஆதிக்க சக்திகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
இலங்கையர்கள் தமக்குத் தேவையான பொருட்களை தொழில்கள் ரீதியாக அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து பெறுகையில் அவற்றுக்கான விலைகளை அந்தந்த நாடுகளின் பொருளாதார நிலைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலைகளுக்கே வாங்க வேண்டும். ஆனால் அதேவேளை பொருளாதார விருத்தி கொண்ட நாடுகள் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்து பொருட்களை வாங்குகின்ற பொழுது அவற்றிற்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கு ஏற்ற விலைக்கு இலங்கையின் பொருட்களை விற்க முடியாது என்கின்ற பரிதாப நிலையே காணப்படுகின்றது.
தேசிய பொருளாதார நிலையும் தேயிலை உற்பத்தியும் கூலியும்
இலங்கையானது இந்தியா மற்றும் கென்யாவின் விலைகளோடு போட்டியிடுவது பொருத்தமானதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிள்ளது. இந்தியா மற்றும் கென்யா ஆகியவற்றின் தலாநபர் தேசிய வருமானம் கிட்டத்தட்ட ஒரே அளவாகும். அதாவது 2000 அமெரிக்க டொலர்களை அண்மித்ததாகும். ஆனால் இலங்கையின் தலாநபர் வருமானம் 2018ன் படி ஏறத்தாழ இரண்டு மடங்காக அதாவது 4000 அமெரிக்க டொலர்களை அண்மித்ததாகும். கென்யாவின் தேயிலைத் தோட்டங்களினுடைய தொழிலாளர்கள் சராசரியாகப் பெறும் மாதாந்தக் கூலியின் அளவு கிட்டத்தட்ட 5 அமெரிக்க டொலருக்குச் சமமானமென கணக்கிடப்பட்டாலும் அங்கு தேயிலைக் கொழந்து பறிக்கும் தொழிலாளர்களின் நாளாந்தக் கூலி 2 (இரண்டு) அமெரிக்க டொலர்களின் பெறுமதிக்கும் குறைவாக இருப்பதாகவே அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்க முன்னர் வரை 167 ரூபாவே நாட்கூலியாக வழங்கப்பட்டது. இப்போது அது 217 ரூபாவாக அந்தந்த மாநில அரசாங்கங்களினால் (கிட்டத்தட்ட 3 அமெரிக்க டொலர்களுக்கு சமனாக) நிரணயிக்கப்பட்டுள்ளது, அதேவேளை கேரளாவில் 375 ரூபாவாகவும் (கிட்டத்தட்ட 5 அமெரிக்க டொலர்களுக்கு சமன்), தமிழ்நாட்டில் 335 ரூபாவாகவும் உள்ளது. இப்போதும் அவையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 75 தொடக்கம் 80 சதவீதமான தேயிலையை உற்பத்தி செய்வது அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களுமே. மேலும் அவற்றின் தேயிலையே இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் மிகப் பெருமிடத்தைப் பெறுகின்றன. எனவே அந்த மாநிலங்களின் கூலி அளவே இங்கு ஒப்பீட்டுக்குப் பொருத்தமானதாகும்.
இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் நாட்கூலியாக 1000 ரூபா (ஐந்து அமெரிக்க டொலர்களுக்கு சமமானது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையினது தேயிலையின் உற்பத்திச் செலவுகளோடு ஒப்பிடுகையில் இந்திய மற்றும் கென்ய நாடுகளின் தேயிலை உற்பத்திச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவானவையாகும். இந்நிலையில் சர்வதேச சந்தையில் இந்திய மற்றும் கென்ய நாடுகளின் தேயிலையோடு விலைகள் தொடர்பில் இலங்கையின் தேயிலை போட்டியிட முடியாது. இதனைச் சுருக்கமாகக் கூறுவதானால் சர்வதேச சந்தைக்கான தேயிலை உற்பத்தியானது மிக வறிய நாடுகளின் – அதாவது மிகக் குறைவான நாட் கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கக் கூடிய நாடுகளுக்கே பொருத்தமானதாகும். எனவே இலங்கை தொடர்ந்தும் தேயிலை உற்பத்தியை ஒரு முக்கியமான பொருளாதாரமாக கொண்டு செல்ல வேண்டுமாயின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மிகவும் கீழ் நிலையிலே தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்பதே இங்கு நியதியாக உள்ளது.
இதே இடத்தில் மற்றொரு உண்மையையும் பதிவு செய்வது பிரதானமானதாகும். அதாவது, இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் 20க்கும் 25 சதவீதத்துக்கும் இடைப்பட்ட அளவு தேயிலையையே இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இலங்கையோ தனது மொத்த தேயிலை உற்பத்தியில் 85 அல்லது 90 சதவீதமான தேயிலையினை ஏற்றுமதியை நம்பியே உற்பத்தி செய்கின்றது. எனவே இந்தியாவை விட இலங்கை பல மடங்கு அதிகமாகவே தனது தேயிலைக்கான சந்தைக்கு அந்நிய நாடுகளை நம்பியிருக்கின்றது. அவ்வாறு தேயிலையால் கிடைக்கும் வருமானம் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. அந்த வகையில், இன்றைய இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் அதன் தேயிலை உற்பத்தி பிடித்துக் கொண்டிருக்கும் பங்கானது இலங்கையினுடைய பொருளாதார அம்சங்கள் தற்போது சிக்கியுள்ள நிலைமைகளுக்கு எந்த அளவு பிரதான காரணியாக உள்ளது என்பதையும் இங்கு புரிந்து கொள்ளலாம்.
தேயிலைத் தொழிலாளர்களின் கூலி அளவு பாதாளத்திலிருக்க
ஏனைய தொழிலாளர்களின் சம்பளம் தனியாக மலையேறுமா!
தேயிலை மற்றும் றப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு பலமான தொழிற் சங்கங்கள் உள்ளன. இவற்றின் ஏற்றுமதி வருமானத்தின் முக்கியத்துவம் கருதி அரசாங்கமும் இதன் தொழிலாளர்கள் விடயத்தில் அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இந்த நிலைமைகள் ஏனைய விவசாயத் துறை உற்பத்திகளில் உள்ள தொழிலாளர்களுக்குக் கிடையாது. அப்படியிருந்தும் தேயிலைத் தொழிலாளர்கள் 1000 ரூபாவை அடிப்படை நாட்கூலியாகக் கேட்டு பல ஆண்டுகளாக போராடினார்கள். கடைசியாக அரசாங்கம் 1000 ரூபாவை அடிப்படையான நாட்கூலியாக நிரணயிக்காமல் மொத்த நாட் கூலியாக வழங்குவதற்கே ஏற்பாடு செய்துள்ளது. தேயிலைத் தோட்டக் கம்பனிகள் இந்தக் கூலியையாவது வாரம் தோறும் 6 நாட்களுக்கு வேலை கொடுத்து வழங்கினாலும் பரவாயில்லை. ஆனால் நடைமுறையில் வாரத்தில் 5 நாட்கள் கூட அல்ல, மாதத்தில் 13 நாட்கள் – அதிக பட்சம் 15 நாட்கள் மட்டுமே கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தையே தேயிலைத் தோட்டக் கம்பனிகள் செயற்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக 20 கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால்த்தான் அந்தச் சம்பளம் என கம்பனிகள் நிர்வாகம் நிர்ப்பந்திப்பதாகவும், அந்த அளவு தேயிலையை ஒரு நாளில் பறிக்க முடியாமல் இரண்டு நாட்கள் வேலை செய்தாலும் அதே 20 கிலோவுக்க 1000 ரூபாவும் அதற்கு மேலதிகமாக பறிக்கப்பட்ட கொழுந்துகளுக்கு கிலோவுக்கு ஒரு தொகையெனவும் கூலி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் இங்கு தேயிலைத் தொழிலாளர்கள் மாதம் முழுமைக்குமாக உழைக்கும் வருமானம் 15000 (பதினைந்தாயிரம்) ரூபாவைத் தாண்டுவது முடியாத காரியமாகவே உள்ளது. அதேவேளை தோட்ட லயன்களிலுள்ள தொழிலாளர்கள் வெளியிடங்களில் வேலை செய்யப் போவதற்கும் முடியாத கட்டாய சூழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது கொத்தடிமைத்தனத்தின் வேறோரு வடிவமாகவே உள்ளது.
இதிலுள்ள மற்றொரு பிரதானமான விடயம் என்னவென்றால் இந்த 1000 ரூபா கூலியில் 100 ரூபாவை அரசாங்கமே தனது வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்குகின்றது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதோர் விடயமாகும்.
இந்தச் கூலி எல்லையை மீறாமலே மலையகத்தின் அனைத்துப் பாகங்களிலும் நடைபெறும் அனைத்து பயிர் உற்பத்திகளிலும் ஈடுபடுகின்ற விவசாய கூலித் தொழிலாளர்களின் கூலியும் நிர்ணயிக்கப்படுகின்றதென்பது இயல்பான ஒர் விடயமே. தனியார் சிறு தேயிலைத் தோட்டங்களில் அவ்வப்போது வேலை வாய்ப்பு கிடைக்கும் கூலித் தொழிலாளர்களும் நாட்கூலியாக 1000 ரூபாவுக்கும் குறைவாகவே பெறுகின்றனர் என்பதையும் இங்கு கவனத்திற்கொள்வது அவசியமாகும்.
தேயிலை தோட்ட சிறு நில உடைமையாளர்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கை நிலைமையும் வறுமைக் கோட்டு மட்டத்திலேயே உள்ளது. இவர்கள் தமது நிலங்களில் தாமே பெரும்பாலும் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவ்வகையானவர்களிற் பெரும்பான்மையானவர்களின் பிரதானமான வருமானம் அவர்களின் தேயிலைப் பயிர்ச் செய்கையிலிருந்தே பெறப்படுகின்றது. உற்பத்திச் செலவுகளைக் கழித்து விட்டுப்பார்த்தால் இவர்கள் ஒரு ஏக்கர் தேயிலை செய்கையிலிருந்து பெறுகின்ற மாதாந்த சராசரி வருமானம் ரூபா 25000 ரூபாவைக் கடப்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகும். 300000 (மூன்று லட்சம்) ஏக்கர் நிலத்தை சுமார் நான்கரை (4.5) லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் உடைமையாகக் கொண்டிருந்தால் மிகப் பெரும்பான்மையானவர்கள் அரை ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே உடைமையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.
இவர்கள் தமது உடைமையாக தேயிலைத் தோட்டத்தைக் கொண்டிருப்பதனால் சொந்தமாக தமக்கென ஒரு வீட்டைக் கொண்டிருக்க முடிகின்றது. மேலும் தமது நிலத்தில் ஒரு பகுதியை தமது சீவனோபாய தேவைகளுக்காக ஏனைய உப உணவுப் பயிர்களை வளர்க்கவும் ஒரு சிறிய அளவில் கால் நடை வளர்ப்புக்களில் ஈடுபடவும் முடிகின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீணடகால பயன்தரு மரங்களைக் கொண்டிருக்க முடிகின்றது. இவ்வாறான நிலைமைகளால் இவர்களின் வாழ்க்கை நிலைமை தேயிலை பெருந் தோட்டக் கம்பனிகளின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை விட முன்னேற்றகரமானது என்பதில் சந்தேகமில்லை. எனினும் இவர்களின் பொருளாதார வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்த வரையில், வறுமைக் கோட்டை கணிசமான அளவுக்குத் தாண்டிய ஒரு முன்னேற்றமான நிலையைப் பெற்றுள்ளார்கள் எனக் கூற முடியாது.
இந்த சிறு தேயிலைத் தோட்ட உடைமையாளர்கள் மூலதன வளம் கொண்டவர்களாகவோ அல்லது தம்மிடமுள்ள நிலத்தை உச்ச பயன்பாடுடையதாக ஆக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவோ இல்லை என்பது மிக முக்கிமானதொரு விடயமாகும். மேலும் இவர்கள் அறுவடை செய்து தமது பசுந் தேயிலையை தேயிலைத் தொழிற்சாலைக்கு விற்பனை செய்கையில் கிடைக்கின்ற விலையும் ஒரு பிரதானமான பிரச்சினையாக உள்ளது. இவர்களால் தமது உற்பத்தியை நேரடியாக சந்தைப்படுத்த முடியாதபடியினால் தேயிலை உற்பத்தித் தொழிற்சாலைக் கம்பனிகள் நிர்ணயிக்கும் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகவே உள்ளனர். இவ்விடயத்தில் அரசாங்கமும் தேயிலைக் கம்பனிகளின் நிலைப்பாடுகளுடன் ஒத்துப் போவதாகவே உள்ளது. சிறு தேயிலைத் தோட்டக்காரர்களுக்கான சமூக பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.
மலையகம் தவிர்ந்த விவசாயப் புறங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களின் வருமானமும் தேயிலைத் தோட்டங்களினுடைய தொழிலாளர்களின் கூலிக்கு அண்மித்ததாகவே உள்ளது.
ஏற்றுமதியோடு தொடர்பாக இருக்கின்ற இலங்கையின் பிரதான தொழிலான ஆடை தயாரிப்பு தொழிற்சரலைகளை எடுத்துக் கொண்டால் அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் மாதத்தில் 25 நாட்கள் கடுமையாக உழைத்து பெறுகின்ற சம்பளம் ரூபா 20000க்கும் 30000க்கும் இடைப்பட்டதாகவே உள்ளது. இந்த சம்பளத்தை நாட்கூலியில் பார்த்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சராசரி நாட் கூலியை விட சற்று உயர்ந்தாக உள்ளதே தவிர திருப்தி கொள்ளக் கூடிய அதிகரிப்பை இங்கும் காண முடியவில்லை.
நகரப் புறங்களில் பெரும்பான்மையினராக இருக்கின்ற உதிரித் தொழிலாளர்களின் கூலிகள் பெருந் தோட்டத்தில் உள்ளதை விட அல்லது கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதை விட 40 அல்லது 50 சதவீதம் அதிகமானதாக இருப்பினும் அதே அளவுக்கு நகரப் புற வாழ்க்கையின் செலவுகளும் உயர்ந்ததாகவே உள்ளன.
ஒரு நாட்டின் ஒரு பிரதான பகுதி தொழிலாளர்களின் கூலியின் அளவானது நாட்டின் அனைத்துப் பகுதிகளினதும் பொதுவான கூலியளவை நேரடியாக நிர்ணயிக்கின்றது எனக் கூற முடியாவிட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தேயிலை பெருந் தோட்டத் துறையில் நிலவும் குறைந்த பட்சக் கூலி அளவு மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கையில் நாட்டின் ஏனைய துறைகளில் கூலியின் அளவு பெரியதொரு இடைவெளியைக் கொண்டதாக உயர்ந்திருக்க முடியாது என்பதே உண்மையாகும்.
இது தொடர்பாக மேலும் ஒரிரு முக்கியமான விடயங்களைக் கூற வேண்டியுள்ளது. அவற்றை அடுத்த பகுதியில் தொடரலாம்!