மாற்று அரசியலுக்கான தேவை (சொல்லத் துணிந்தேன் – 93)

மாற்று அரசியலுக்கான தேவை (சொல்லத் துணிந்தேன் – 93)

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

‘மாற்று அரசியல்’ பற்றிப் பேசும்போது காலாதிகாலமாகக் கட்சி அரசியலுக்குள்ளேயே மூழ்கிப் போயிருக்கும் பெருவாரியான தமிழர்கள் இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஏட்டிக்குப் போட்டியாக இன்னுமொரு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது என விளக்கம் இல்லாமல் மேலோட்டமாகத் தவறாக அர்த்தம் கொள்கிறார்கள். மாற்று அரசியலானது ஒரு தனிக்கட்சி அரசியலுக்கு அப்பால் மாற்றத்தை விரும்புகின்ற – மக்கள் நலன் சார்ந்து மட்டுமே தமது அரசியல் செல்நெறியைத் தகவமைக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கும் செயற்பாட்டையும் உள்ளடக்கியதாகும். 

மாற்று அரசியல் என்றால் என்ன? என்ற விளக்கத்திற்குச் செல்லுமுன் மாற்று அரசியலுக்கான தேவை என்ன? என்ற கேள்வி எழுகிறது. சரி பிழைகளுக்கு அப்பால் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாகச் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காலத்திலிருந்து இன்று இரா.சம்பந்தன் காலம் வரை மிதவாதத் தமிழ்த்தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்தம் உரிமைகள் சார்ந்த அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகள் – அகிம்சைப் போராட்டங்கள் மற்றும் பிற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்கள்- இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பவற்றால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சமூக பொருளாதார அரசியல் ஏற்றங்களும் கிடைக்கவில்லை. மாறாக ஆரம்பத்தில் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலந்தான் அறுவடையானது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் எஞ்சியவற்றையாவது காப்பாற்றிப் பேணுவதற்கும் இழந்தவற்றில் சிலவற்றையாவது மீட்டெடுப்பதற்குமான ஒரு மாற்று அரசியல் தேவையின் அவசியம் எழுந்துள்ளது. 

இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மைக்காலமாகப் பேசுபொருளாக இருந்துவரும் ‘மாற்று அரசியல்’ என்றால் என்ன? 

‘மாற்று அரசியல்’ என்றால் என்ன? என்னும் தேடலுக்கு முதலில் இதுவரை இருந்து வரும் தமிழர் அரசியலைப் புரிந்து கொண்டால்தான் – அதிலுள்ள தவறுகளைத் தெரிந்துகொண்டால்தான் மாற்று அரசியலை அடையாளம் காணமுடியும். 

இலங்கையில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆட்சியாளர்களிடம் இருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதக்  கருத்தியல்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை 

ஆனால், இந்தக் கருத்தியல் சுதந்திர இலங்கையில்தான் உருவான தொன்றல்ல. தீபவம்சம், மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்கள மொழி நடைமுறைக்கு வருமுன்னரே எழுதப்பட்டமைகூட முழு இலங்கையையும் பௌத்த நாடாகக் கொண்டுவரும் ஒரு எண்ணப்பாங்கில்தான். 

இந்தப் பின்னணியில் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களுடைய உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் எவ்வாறு பாரபட்சமாகவும் நியாயமற்ற முறையிலும் நடந்து கொள்வார்களென்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே எதிர்வுகூறப்பட்டதொன்று. 

இலங்கையில் தொழிற்சங்கத் தந்தை என அழைக்கப்பட்ட ஏ.ஈ.குணசிங்க, இடதுசாரித் தந்தை என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன, தேசபிதா என அழைக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களைப் பொறுத்தவரை எத்துணைப் பாரபட்சமாக நடந்து கொண்டனரென்பது தமிழ் மக்களிடையே ‘கல்விமான்கள்’ எனக் கருதப்பட்ட சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்களுக்குத் தெரியாத சங்கதி அல்ல. 

ஆனால், சிங்கள அரசியல் தலைமைகள் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே சிங்கள சமூகத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்துத் தீர்க்கதரிசனமாகவும் தந்திரோபாயமாகவும் நடந்துகொண்ட அளவுக்குத் தமிழ் அரசியல் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை. 

தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே யாழ் மேலாதிக்க – சைவ வேளாள- மேட்டுக்குடி வர்க்கக் குணாம்சம் கொண்டவர்களாகவும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்தியாது தமது தனிப்பட்ட அல்லது தமது குடும்பத்தின் அல்லது தமது கட்சியினதும் எதிர்காலம் குறித்துமட்டுமே சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொண்டவர்களாகவும், தன்னலம் மிக்கவர்களாகவும், புகழுக்கும் பெருமைக்கும் தமது வித்துவங்களை வெளிப்படுத்துவோராகவும் (இதில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சற்று மாறுபடக்கூடும்) விளங்கியமையே சுதந்திர இலங்கையில் தமிழர்களின் பின்னடைவுகளுக்கான காரணமாகும். 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களிலும் செயற்பாடுகளிலும் இந்திய தேசிய காங்கிரஸ் மூலமாகப் பங்கேற்ற அலி முகமது ஜின்னா அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்குச் சுதந்திரம்வ வழங்கத் தீர்மானித்தபோது முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தானைத் தனி நாடாகக் கேட்டுப் பெற்றார். 

இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்தம் தாயகத்திற்குத் தனிநாடு கேட்டிருக்கத் தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் முழு இலங்கைக்குமே ‘சமஸ்டி’ ஆட்சியைக் கேட்டுப்பெற்றிருக்கலாம். அதில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு தனியான- கூட்டாட்சிப் பிராந்தியங்களிலொன்றாக அமைந்திருக்கும். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையிலும் சிங்கள சமூகத்தினரிடையே நிலவிய உளவியல் பின்னணியிலும் – கண்டிச் சிங்களவர்கள் ‘கண்டிய தேசிய சபை’ மூலம் தமக்கென ஒரு தனியான- கூட்டாட்சிப் பிராந்தியம் ஒன்றைக் கோரிநின்ற நிலையிலும் இது சாத்தியமாகியிருக்கும். தமிழ் அரசியல் தலைவர்கள் ‘டொனமூர் ஆணைக்குழு’விடமும் பின்னர் ‘சோல்பரி ஆணைக்குழு’விடமும் முழு இலங்கைக்குமான ஒரு ‘சமஸ்டி’ அரசியலமைப்பை முன்வைத்திருக்கக்கூடிய அரிய சந்தர்ப்பங்களைத் தவற விட்டார்கள். ‘டொனமூர் ஆணைக்குழு’விடம் ‘கண்டிய தேசிய சபை’ சமர்ப்பித்த ‘சமஷ்டி’த் தீர்வுத் திட்டத்தைத் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏற்றுச் சம்மதித்து ஆதரவு கொடுத்திருக்க முடியும். 

இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவம், பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம், சமபல பிரதிநிதித்துவம் (ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை) என்று பதவி நாற்காலிகளின் மீது குறி வைத்தார்களே தவிர ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களினதும் எதிர்காலம் குறித்துத் தீர்க்கதரிசனமாகவும் தெளிவாகவும் சிந்திக்கவும் செயற்படவும் தவறிவிட்டார்கள். 

இது சுதந்திர இலங்கைக்கு முன்னர் நடந்த தமிழர் அரசியல். இனி சுதந்திர இலங்கையில் தமிழர் அரசியலைப் பார்ப்போம். 

‘சோல்பரி’ அரசியலமைப்பின் கீழான இலங்கைப் பாராளுமன்றத்துக்கான முதலாவது பொதுத் தேர்தல் 1947இல் நடைபெற்றது. 1948 பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுகிறது. முன்பு அரசாங்க சபை முதல்வராகவும் உணவு விவசாய அமைச்சராகவும் இருந்த டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராகிறார். 

டி.எஸ்.சேனநாயக்காவின் குணநலன்கள் மற்றும் அரசியலில் அவர் எவ்வளவு தந்திரோபாயம் மிக்கவர் என்பதும் அன்றிருந்த தமிழ் அரசியற் தலைவர்களுக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. சுதந்திர இலங்கைக்கு முன்னமே அவர் எத்துணை இனவாதம் உள்ளவராகத் தன்னை வெளிக்காட்டியிருந்தாரென்பதும் தமிழர் அரசியல் தலைவர்களுக்குப் புரியாமலிருக்கக் காரணங்களும் இல்லை. தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் (உ+ம்- மகாத்மா காந்தி 1929இல் இலங்கை வந்தபோது யாழ்ப்பாணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சின் கீழ் 1931இல் நடைபெற்ற அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்தமை போன்றவை) பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆத்திரமூட்டிய வேளைகளில் அச்சந்தர்ப்பங்களை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் சிங்கள சமூகத்திற்கு எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரென்பதும் இன்று ‘கல்விமான்கள்’ ஆகவும் ‘தீர்க்கதரிசி’கள் ஆகவும் கொண்டாடப்படும் அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பதற்கான காரணங்களுமில்லை. 

ஆனால், தமிழ் அரசியல் தலைவர்களிடம் தனிநபர் நலன்களும் தாம் சார்ந்த அமைப்பு/ கட்சி நலன்களுக்கும் அப்பால் மக்கள் நலன் சார்ந்த தந்திரோபாய செயற்பாடுகளும் தன்னலமறுப்பும் அர்ப்பணிப்பும் இருக்கவில்லை. இன்றும் கூட இந்த நிலைமைதான் தொடர்கிறது. 

‘சத்துருவையும் சார்ந்து வெல்லும்’ அணுகுமுறைகளும் – கள நிலைக்கேற்ற தந்திரோபாயங்களும் – ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும்’ புத்திசாலித்தனமும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாமற் போய்விட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ‘சிலுசிலுப்பு’ கள்தான் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் அதிகம் பதிவாகியிருக்கின்றன. 

இலங்கையின் சுமார் பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்தைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதனை எதிர்த்தது. அப்போதிருந்த இலங்கை – இந்திய காங்கிரஸ் தலைவர்களான தொண்டைமானும் அசீஸும் எதிர்த்தனர். இடதுசாரிகளும் சில சிங்கள சுயேச்சை உறுப்பினர்களும் எதிர்த்தனர். இளஞ்செழியன் தலைமையிலான இலங்கைத்திராவிடர் கழகம் மலையகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இலங்கையில் நிரந்தரமாக வாழும் இந்திய வம்சாவளியினர் எல்லோரும் இலங்கைக் குடியுரிமைக்குரித்தானவரே என்பதில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் மிகத் தெளிவானதும் உறுதியானதுமான நிலைப்பாட்டிலேயே இருந்தார். 

இந்தப் பின்னணியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அப்போது இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பையும் இடதுசாரிகளையும் ஏனைய சிங்கள முற்போக்குச் சக்திகளையும், இலங்கைத் திராவிடர் கழகத்தையும் இணைத்துக்கொண்டு இப்பிரஜாவுரிமைச் சட்டமூலத்தினால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளான மலையகத் தமிழர்களையும் உள்வாங்கி மலையகத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஜனநாயக ரீதியிலான வெகுஜன எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் நேரடித்தலையீட்டில்கூட இச் சட்டமூலத்தின் தலைவிதிமாற்றி எழுதப்பட்டிருக்கும். ஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது எதிர்ப்பைப் பாராளுமன்றத்துக்குள்ளேயே மட்டுப்படுத்திக்கொண்டமை இச்சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய வலுவையும் வாய்ப்பையும் டி.எஸ்.சேனநாயக்காவின் யூ.என்.பி. அரசாங்கத்திற்குக் கொடுத்தது. அன்றிருந்த சூழ்நிலையில் குறைந்த பட்சம் இலங்கை இந்திய – காங்கிரஸ் மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைத் தியாகம் பண்ணத் தீர்மானித்திருப்பார்களாயின் அது பாரியதாக்கத்தைக் கொடுத்திருக்கும்.  

அன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்காட்டிய எதிர்ப்புக்கு மேற்கூறியவாறு ஒரு வெகுஜனப் போராட்ட வடிவத்தைக் கொடுத்திருக்க முடியும். அவ்வாறு அன்று நடைபெற்றிருந்தால் நிலைமைகள் மலையகத் தமிழர்களுக்குச் சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது குழுவினரும் இச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததோடும்- எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ‘இன்று அவர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) நாளை நமக்கு (வடக்கு கிழக்கு வாழ் இலங்கை தமிழருக்கு)’ என்று தீர்க்கதரிசனம் உரைத்ததோடும் அமைதி கண்டுவிட்டனர். 

சுதந்திர இலங்கையில் தமிழர்தம் மிதவாத அரசியல் தலைமை இழைத்த முதலாவது அரசியல் தவறாக இதனைக் கொள்ள முடியும். இன்று இழந்து போனஅச்சந்தர்பத்திற்காகப் பச்சாதாபப்படுவதில் பலனேதும் இல்லை. ஆனால் அதனைப் பாடமாகக் கொள்ள வேண்டும். இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதால் ஏற்பட்ட பின்விளைவுகளால் (1949ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கப் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் வாக்குரிமை இழப்பு, சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் போன்றவை) சுமார் ஆறு லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படவும் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவும் வழியேற்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இலங்கையில் தமிழர்கள் பலவீனப்பட ஆரம்பித்த முதற்கட்டம் இது. 

அடிக்குறிப்பு:- 

இலங்கையின் சுமார் பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்களின்) குடியுரிமையைப் பறித்த 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமை சட்டமூலத்தை அப்போது டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான இலங்கை அரசாங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் சட்டமூலத்தை ஆதரித்ததன் மூலம் இம்மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதற்குத் துணை போனார் என்பது இன்றுவரை பதிவாகி வரும் தகவல். ஆனால் இத்தகவல் தவறானது. 

உண்மையில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இச்சட்டமூலத்திற்கு எதிராகவே பாராளுமன்றத்தில் செயற்பட்டார். 

“இந்தியத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை 1948 ஓகஸ்ட் 20இல் இயற்றப்பட்ட இலங்கை பிரஜாவுரிமை சட்டம்தான் பாதித்தது. அந்தச்சட்டம் இயற்றப்படுவதை அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் ஏழு எம்பிக்களும் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் தொடர்பாக அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸில் மோதலோ பிளவோ ஏற்படவில்லை. இலங்கைப் பிரஜாவுரிமை மசோதாவை எதிர்த்துப்பேசும் போது டி.எஸ்.ஐ ஒரு வகுப்புவாத வெறியர் என்று பொன்னம்பலம் ஏசினார். அம்மசோதா நிறைவேற்றப்பட்ட தினத்தை இலங்கையின் கறுப்புநாள் என்றும் வர்ணித்தார். இலங்கையில் வாழ்ந்ததமிழ் மக்கள் யாவரும் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். இவ்விடயத்தில் பொன்னம்பலமும் செல்வநாயகமும் தொண்டமானும் அஸீஸும் ஓரணியில் நின்றார்கள்” 

உசாத்துணை:-  (த. சபாரத்தினம், ‘தந்தை செல்வா-ஓர் அரசியல் வாழ்க்கை சரிதை; பக்கம்: 89, இரண்டாம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு- சென்னை 2016) 

உண்மைச் சம்பவம் இப்படியிருக்க மந்திரிப் பதவிக்காக ஜி.ஜி பொன்னம்பலம் இச்சட்டமூலத்தை ஆதரித்தார் என்றும் அப்போது தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இதனை எதிர்த்துத்தான் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி வந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினாரென்றுமே தமிழரசுக் கட்சியும் அக்கட்சிக்கு ஆதரவான தமிழ் ஊடகங்களும் காலங்காலமாகச் சொல்லி வருகின்றன. அதுவே மக்கள் மனதிலும் பதிந்துள்ளது. இச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்கு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அவர்கள் சேர்.ஒலிவர் குணதிலக மூலம் அழைப்புவிடுத்தார். சிறுபான்மையினருக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் கூடிய பிரதிநிதித்துவம்- பிரஜா உரிமை விடயத்தில் மலையகத் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் பிரஜாவுரிமைச் சட்டத்தில் திருத்தம் ஆகிய இரு நிபந்தனைகளின் பேரில் அரசாங்கத்தில் இணைவது என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் செயற்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜி.ஜி.பொன்னம்பலம் 1948 டிசம்பரில் மந்திரி சபையில் இணைந்தாரென்றே அறியக் கிடக்கிறது. 

பின்னர், 1949 ஆகஸ்டில் 1949ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க இந்திய-பாகிஸ்தானிய (வதிவிட) பிரஜாவுரிமைச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பெற்றது. 

1948ஆம் ஆண்டின், 18 ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின்படி பிரஜாவுரிமையை இழந்த இந்திய- பாகிஸ்தானிய வம்சாவளியினர் சில நிபந்தனைகளின் பேரில் மீண்டும் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு இச்சட்டமூலம் வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்தார். இச்சட்ட மூலத்தையே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பாராளுமன்றக் குழுத் தீர்மானத்தை மீறி எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரோடிணைந்த சிலரும் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தனர். இச்சட்ட மூலம் 1949 ஆகஸ்ட் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயற்குழு, கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தை மீறியமைக்காகவே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் குழுவினரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது.இதன் பின்னரே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1949 டிசம்பர் 18ஆம் தேதி கொழும்பு மருதானைஅரசாங்க இலிகிதர் சேவை மண்டபத்தில்இலங்கைத் தமிழரசுக் கட்சியை அங்குரார்ப்பணம் செய்தார். 

இங்கே ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து மந்திரிப் பதவியைக் (கைத்தொழில், கைத்தொழில் அபிவிருத்தி, கடற்தொழில் அமைச்சு) பெற்றதும்- பின்னர் 1949ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க இந்திய-பாகிஸ்தானிய (வதிவிட) பிரஜாவுரிமைச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் ஆதரித்ததும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தின்படியேயாகும். இதில் ஜி.ஜி.பொன்னம்பலம் தன்னிச்சையாகச் செயற்பட்டார் என்று கூற முடியாது. தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் இந்த விடயங்கள் தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காகத் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்த விடயங்களை இங்கு பதிவிடக் காரணம் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை நியாயப்படுத்த அல்ல. ஆனால் எவராயிருந்தாலும் தவறான தகவல்கள் வரலாற்றில் உண்மைகளாகப் பதிவேறக்கூடாது என்பதற்காக மட்டுமே. உண்மைகள் உறங்கி விடக்கூடாது. 

1964இல் இலங்கைப் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் மேற்கொண்ட இந்திய விஜயத்தின்போது அப்போதைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டார். ஒப்பந்தத்தின்படி இலங்கையின் மலையகத் தமிழர்கள் 525,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவும் 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கவும் இரு பிரதமர்களும் இணங்கினர். இவ்வொப்பந்தம் சம்பந்தப்பட்ட மலையகத் தமிழர்களுடனோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பொது அமைப்புகளுடனோ குறைந்தபட்சம் மலையகத் தமிழரின் சார்பில் அப்போதைய பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராகவிருந்த தொண்டமானுடனோ எந்தக் கலந்துரையாடலோ கருத்தறிதலோ இல்லாமல் ஏற்படுத்தப் பெற்றதொன்றாகும். 

தமிழரசுக்கட்சி இவ்வொப்பந்தத்தைக் ‘காட்டுமிராண்டி ஒப்பந்தம்’ என வர்ணித்து எதிர்த்துக்குரல் கொடுத்தது. இந்த எதிர்ப்பையும் பாராளுமன்ற அரசியலுக்குள்ளேயே தமிழரசுக் கட்சிமட்டுப்படுத்திக் கொண்டது. ஆனால் இதே தமிழரசுக்கட்சி பின்னாளில் 1965இல் யூ.என்.பி. உடன் இணைந்து கூட்டரசாங்கம் ஏற்படுத்தியிருந்த காலத்தில் அக்கட்சி 1967இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுலாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதனை ஆதரித்தது. 

1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் பின்னர் 1949ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க இந்திய – பாகிஸ்தானிய (வதிவிட) பிரஜாவுரிமைச் சட்டத்தையும் 1964 இல்சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தையும் எதிர்த்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் குழுவினர் 1967இல் சிறிமா -சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கல் சட்டத்தை ஆதரித்தமை தமிழரசுக்கட்சியின் முன்னுக்குப் பின் முரணான அரசியல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) காலத்திலேயே ஆரம்பித்துவிட்டமையைப் பறைசாற்றுகிறது. 

(தொடரும்)