நவராத்திரியின் முக்கியத்துவம்

நவராத்திரியின் முக்கியத்துவம்

– கலாநிதி சு.சிவரெத்தினம் 

(நவராத்திரி விழாவை முன்னிட்டுசுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 12.10.2021 அன்று நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்) 

தமிழர்கள் பல பண்பாட்டு விழாக்களை கொண்டாடுகின்ற போதும் அவற்றில் மூன்று பண்பாட்டு விழாக்கள் மனிதப் பொது வாழ்வியலுக்கான விழாக்களாக இருக்கின்றன. 

1. பொங்கல் 

2. பட்டிப் பொங்கல்  

3. நவராத்திரி 

பொங்கல் 

இந்த உலகை உயிர்ப்பிக்கும் சூரியனுக்குச் செலுத்தும் நன்றிக் கடன்தான் பொங்கல் என்பதை அனைவரும் அறிவர். தாய்தந்தையை, குருவை மறந்து நிந்தனை செய்யும் சமூகத்தில் வாழ்கின்றோம். ஆனால் எம்முன்னோர்கள் ஒரு சடப்பொருளுக்கு நன்றி செலுத்தும் ஒரு உயர்ந்த பண்பாட்டை எமக்கு கையளித்திருக்கிறார்கள். அந்தப் பண்பாட்டைப் பேணுபவர்கள் என்ற வகையில் நாம் பெருமைப்படலாம். இந்தப் பண்பாட்டின் மதநிலை கடந்து நோக்குகின்றபோது அது உலக உயிர்ப்புக்கானது என்கின்ற பொது இலட்சியத்தினைக் கண்டு கொள்ள முடியும். 

பட்டிப் பொங்கல்  

பொங்கலைத் தொடர்ந்து அடுத்த நாள் வருகின்ற சடங்குதான் பட்டிப்பொங்கலாகும். சூரியனுக்கு நன்றி செலுத்திய விவசாயி தனது தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றான். தன்னை வாழவைத்த மாடுகளை அன்பினால் தெய்வநிலைக்கு உயர்த்துகின்ற பொங்கலாக பட்டிப்பொங்கல் விளங்குகின்றது. பட்டிப்பொங்கலையும் மதநிலை கடந்து நோக்குகின்றபோது பட்டிப்பொங்கல் நன்றியுடன் இணைந்து அன்பினையும் வெளிப்படுத்துகின்ற பொங்கலாக அமைகின்றது. மனித வாழ்வுக்கு நன்றியுணர்வும் அன்பும் முக்கியம் என்பது இதனால் எமக்குக் கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்தப் பண்பாட்டைப் பேணுபவர்கள் என்ற வகையில் பெருமைப்படலாம்.  

நவராத்திரி  

சூரியனில் உயிர்ப்பையும்மாட்டில் உணவையும் கண்டவர்கள் தாம் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறுவதே நவராத்திரி விழாவாகும். அந்தவகையில் மனித வாழ்வுக்கு கல்வி(அறிவு), செல்வம்வீரம் என்பவற்றை அடிப்படையாகக் கொள்கின்றனர். இங்கு குறிப்பிடப்படுகின்ற கல்வி(அறிவு)செல்வம்வீரம் என்பவை தற்போதைய பேராசைப் பொருள் கொள்ளலில் அளவுக்கு மீறி இயற்கையை அழித்து அடைந்து கொள்ளப்படும் கல்வியையோ(அறிவையோ) அல்லது செல்வத்தையோ அல்லது வீரத்தையோ அல்ல. இன்னொரு வகையில் சரஸ்வதி சபதம் உருவாக்கியிருக்கும் விம்பங்களையும் அல்ல.  

மனித வாழ்வுக்கும் இயற்கைக்கும் தேவையான கல்வியும் (அறிவும்)செல்வமும்வீரமும் ஆகும். உதாரணமாக வீரத்தினை எடுத்துக் கொண்டால் கட்டுமஸ்த்தான உடலும் சண்டையில் வெற்றி கொள்கின்ற பலமும் அல்ல. இன்றைக்கு கொரோனாவினை எதிர் கொள்கின்ற உடல் வீரமாகும். அந்த வகையில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கின்றமைதான் வீரமாகின்றது. அந்த நோய் எதிர்ப்புச் சக்தியினால்த்தான் மனிதன் வாழ முடியும் என்பது இன்று நிருபிக்கப்பட்டுள்ளது. 

எமது சமூகவாழ்வில் பெண்ணைவிட ஆண் அறிவுள்ளவனாகப் பார்க்கப்படுகின்றான், செல்வத்தை தேடுபவனாக ஆணே பார்க்கப்படுகின்றான்பெண்ணை விட ஆணே வீரமுள்ளவனாகப் பார்க்கப்படுகின்றான். இவ்வாறு அறிவுசெல்வம்வீரம் என்பவற்றுக்கு ஆணை முக்கியப்படுத்திக் கொண்டு ஆனால் இவற்றுக்கான தெய்வங்களாக பெண்களை வைத்திருப்பதன் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்மையவாத நோக்குஆணாதிக்க சமூகம் வலுப்பெற்றதன் பின்பு ஏற்பட்ட நிலையாகும். அதற்கு முன்பு இவை முழுக்க பெண்ணுக்குரிய விடயங்களாக இருந்துள்ளன. அதைத்தான் இந்தப் பெண்தெய்வங்கள் எமக்குக் காட்டுகின்றன. 

அறிவுசெல்வம்வீரம் என்பவை உறைந்து கிடப்பவை அல்லஅவை தொடர்ச்சியாகப் படைக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவை நிலைபேறுடையதாகும். எடுத்துக்காட்டாக கொரோனா தொற்றை எதிர்கொள்வது என்றால் மனித உடல் கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதற்கான வெண்சிறு துணிக்கைகளைப் போதியளவுக்கு உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே இங்கொரு படைப்பாக்கம் முக்கியமாகின்றது.  

பண்டைய காலத்தில் படைப்பாக்கத்தினைச் செய்பவளாக பெண்ணே பார்க்கப்படுகின்றாள். ஏனெனில் அவளால் மட்டுமே குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். குழந்தைகளைப் பெற்றெடுப்பது போல் அறிவையும் செல்வத்தையும் வீரத்தையும் படைப்பாக்கம் செய்யமுடியும் எனக் கருதப்பட்டது. அதன் காரணமாக இவற்றுக்கான தெய்வங்களாக பெண் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன.  

நவராத்திரி விழா முழுக்க முழுக்க உற்பத்திக்கான விழாவாகவே இருக்கின்றது. கும்பம் கர்ப்பப் பையின் குறியீடு என்பதை பலர் அறிவர். கும்பம் வைப்பதும் பின்பு கும்பம் சொரிவதும் இந்தப் படைப்பாக்கத்தினை உலகுக்கு வழங்குகின்ற குறியீட்டு நடவடிக்கைகளாகும். இது போன்றே தானியங்கள் முளைக்க வைக்கப்படுதல் உலகத்துக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதன் குறியீடாகும். ஏடுகள்இசைக் கருவிகள்உற்பத்திக் கருவிகள் என்பவற்றை வைத்து வணங்குவது மக்கள் தன்னிறைவாக இருந்து மகிழ்ச்சியுடன் அறிவார்ந்து வாழ வேண்டும் என்பதன் குறியீட்டு நடவடிக்கைகளேயாகும்.  

சூரியனுக்கு நன்றி தெரிவித்து மாட்டுக்கு அன்பை வழங்கி நவராத்திரியில் ஏருக்கு வணக்கத்தைச் செலுத்துகின்ற ஒரு உற்பத்தி உறவுநிலைப் பண்பாட்டு வளர்ச்சியை இம் மூன்று விழாக்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இந்த விழாக்களில் உள்ள மதநிலைப்பாடுகளை தவிர்த்து இவற்றை நோக்குகின்ற போது இவை இந்த உலகுக்கு எப்போதும் தேவையான பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளாக இருக்கின்றன. மதவாதமும் இனவாதமும் வலுவாகக் காலூன்றியிருக்கும் இலங்கையில் இந்த விழாக்கள் பொது மனிதார்த்துவத்தில் இருப்பது முக்கியமான விடயமாகும். இதனை விளங்கிக் கொள்வதற்கு எமக்கு அறிவு வேண்டும். அதனால்த்தான் பாரதி அறிவுக்கு முக்கியத்துவம் வழங்கிப் பாடினார்.  

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் 

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும் 

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்‘  

அறிவுள்ளோராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் செய்யும் தொழிலே தெய்வம்‘ என்கின்ற நிலை உருவாகும். அதாவது தொழிலைத் தெய்வமாகப் பார்க்கின்ற நிலை. அந்தநிலையில்தான்  கடமையைச் செய் பலனை எதிர்பாராதே‘ என்ற துறவு நிலை ஒன்று உருவாகும். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்கின்ற நிலைதான் ஆனந்த நிலையாகும். மனிதவாழ்வின் முக்தி நிலையது.  

எனவே ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று விழாக்களும் மனிதனை மனிதனாகவும் இயற்கையை இயற்கையாகவும் வாழ வைப்பதற்கான விழாக்களாக விளங்குகின்றன. அந்தவகையில் இந்த விழாக்களை மதநிலை கடந்து அனைவரும் விளங்கிக் கொள்வது இன்றைய சிக்கலான உலகுக்கு முக்கியமாகும்.