சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 10

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 10

 — எழுவான் வேலன் — 

(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 10 இதுவாகும்.)  

சென்ற பகுதியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய உகந்த சூழல் இல்லை என்பதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா போன்ற மாவட்டங்களில் யாழ்த் தலைமைகள் நேரடியாகப் போட்டியிட்டமை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இதனை விட யாழ் மையவாதக் கட்சிகள் கிழக்கிலுள்ள தங்கள் முகவர்கள் மூலம் வாக்குகளைப் பொறுக்கி தங்களுக்கான ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதன் காரணத்தினால் கிழக்குத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.  

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு எத்தனை தமிழ் கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தெரிவாவப் போவது தமிழ் பிரதிநிதிகளேயாகும். ஆனால் கிழக்கைப் பொறுத்தவரை இங்கு அதிகமான தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு விசமப் பரீட்சையேயாகும். அதிலும் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறத் தொடங்கிய காலம் தொடக்கம் (1977) அம்பாறை மாவட்டத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஏதாவது ஒரு அணிக்கு வாக்களிப்பதன் மூலமே அம்பாறைத் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பேணமுடியும் என்பது எந்த ஒரு அரசியல் கத்துக்குட்டிக்கும் தெரிந்த விடயமாகும். அப்படியிருந்தும் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கம் 1994ம் ஆண்டுத் தேர்தல் தொடக்கம் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒரு அணியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் வலியுறுத்தியே வந்துள்ளது. ஆனால் இதனைப் பொருட்படுத்தாத யாழ் மையவாதக் கட்சிகள் அம்பாரை மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பெருமளவு பணத்தினைச் செலவு செய்து தங்களுடைய தேசியப் பட்டியல் ஆசைக் கனவுக்காக அனைத்து பாராளுமன்றத் தேர்தல்களிலும் இங்கு போட்டியிட்டே வருகின்றன. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (2020) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர்ந்த யாழ் மையவாதக் கட்சிகள் கிழக்கில் பெற்றுக் கொண்ட வாக்குகளை கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. 

தேர்தல் மாவட்டம் கட்சி பெற்ற வாக்குகள் 
திகாமடுல்ல (அம்பாறை) ஈபிடிபி 582 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 283 
 மட்டக்களப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) 8113 
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4960 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1203 
ஈழவர் ஜனநாயக முன்னணி 331 
 திருகோணமலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  2745 
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 1625 
ஈபிடிபி 3775 
மொத்தம் 23616 

கட்சி அடிப்படையில் பின்வருமாறு,  

கட்சி : EPDP 

தேர்தல் மாவட்டம் பெற்ற வாக்குகள் 
திகாமடுல்ல (அம்பாறை) 582 
திருகோணமலை 3775 
மொத்தம் 4357 

கட்சி : அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 

தேர்தல் மாவட்டம் பெற்ற வாக்குகள் 
திகாமடுல்ல (அம்பாரை) 283 
மட்டக்களப்பு   1203 
திருகோணமலை 2745 
மொத்தம் 4231 

கட்சி : தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 

தேர்தல் மாவட்டம் பெற்ற வாக்குகள் 
மட்டக்களப்பு    4960 
திருகோணமலை 1625 
மொத்தம் 6585 

கட்சி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF) 

தேர்தல் மாவட்டம் பெற்ற வாக்குகள் 
மட்டக்களப்பு 8113 

கட்சி : ஈழவர் ஜனநாயக முன்னணி 

தேர்தல் மாவட்டம் பெற்ற வாக்குகள் 
மட்டக்களப்பு    331 

இந்தத் தேர்தலில் 23616 கிழக்கு மக்களின் வாக்குகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாகாணத்தில் அல்லது மாவட்டத்தில் நான்காயிரம், ஆறாயிரம், எட்டாயிரம் வாக்குகளைத்தான் பெறமுடியும் என்கின்றபோது, உண்மையில் மக்கள் நல நாட்டம் கொண்ட கட்சிகளாக இருந்தால்  கிழக்கின் கள நிலமையினைக் கருத்தில் கொண்டு தேர்தல்களில் போட்டியிடாது, போட்டியிடுகின்ற ஏதாவது ஒரு கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்குவதின் ஊடாக மக்களுக்கு நன்மை செய்யமுடியும். அல்லது எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஒதுக்கிக் கொள்ளலாம். ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது மக்களுக்கு நாம் எல்லோரும் ஓரணியில் நிற்கின்றோம் என்கின்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதோடு ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி அதி கூடிய வாக்குகளைப் பெற்று அப்பிரதேசத்தின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றது. உதாரணத்துக்கு இம்முறை அம்பாரை மாவட்டத்தில் ஈபிடிபி தனித்துப் போட்டியிடாமல் அகில இலங்கைத் தமிழர் மகாசபையுடன் செய்து கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் (இவை இரண்டும் இணைந்தே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் கூட்டமைப்பினை ஏற்படுத்தியிருந்தன) அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். அதே போல அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது அகில இலங்கைத் தமிழர் மகாசபை ஆகிய இரண்டில் ஒன்றுக்கு தமது ஆதரவை வழங்கியிருக்கலாம். அதுவும் முடியவில்லையாயின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். இவ்வாறு நடத்திருக்குமாயின் அம்பாரை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.   

அம்பாரை மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அந்தக் கட்சி மேலும் 74 வாக்குகள் பெற்றிருந்தால் தேசியப் பட்டியல் ஆசனமொன்றைப் பெற்றிருக்கும். என்பதை கட்சி, கொள்கைகளுக்கப்பால் யாழ் மையவாதக் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் நேர்மையுடன் கவனிக்க வேண்டும். அக்கட்சி அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்டு இருக்குமானால் மிக இலகுவாக இந்த இலக்கினைப் பெற்று ஒரு தேசியல் பட்டியல் ஆசனத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அம்பாரையைத் தவிர்த்துக் கொண்டது ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அம்பாரை மாவட்டத் தமிழ் மக்களின் நலனுக்காகவேயாகும். ஆனால் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காகப் போட்டியிட்ட யாழ் மையவாதக் கட்சிகளில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை விட 74 வாக்குகள் அகில இலங்கை ரீதியாக (வடகிழக்கு மாகாணங்களில்) அதிகமாகப் பெற்று ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோதும் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருட்டிக் கொள்ளப்பட்டது. தாங்கள் பெற்றுக் கொண்ட ஆசனத்தை, ஆசனம் இழக்கப்பட்ட அம்பாரைக்கோ அல்லது யாழ்குடா நாட்டுக்கு வெளியிலோ வழங்குவதற்கு அவர்கள் முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் மட்டும்தான் தமிழ் மக்களை ஆளப்பிறந்தவர்களும் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கின்ற தமிழ்த் தேசப் பற்றாளர்களுமாக இருக்க யாழ்குடா நாட்டுக்கு வெளியில் உள்ளவர்கள் அனைவரும் தங்களால் ஆளப்படுபவர்களாகவும், தங்களின் தமிழ்த் தேசப் பற்றைவிடக் குறைந்தவர்களாகவும் யாழ் மேலாதிக்கவாதிகளால் கருதப்படுகின்றார்கள். இதனால் யாழ்குடா நாட்டுக்கு வெளியில் தங்களுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு முன்வருவதில்லை. முன்னைய பதிவில் குறிப்பிட்டதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ்குடா நாட்டுக்குள்தான் கோரிநின்றது என்பதையும் அது திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களுடைய தற்றுணிவின் அடிப்படையில் கலையரசனுக்கு வழங்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். எனவே இந்தக் கட்சிகளெல்லாம் தமிழ்த் தேசியம் என்றும், வடகிழக்கு தமிழர் தாயகம் என்றும், உதட்டளவில் பேசிக் கொண்டு செயற்படுவதெல்லாம் தாங்கள் பதவிகளில் பத்திரமாக இருந்து கொண்டு மற்ற மக்களை ஏய்க்க வேண்டும் என்பதுதான்.  

திரு.வி.ஆனந்தசங்கரி அவர்களைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அகில இலங்கை தமிழர் மகாசபைப் பிரதிநிதிகள் கிழக்குத் தமிழர் ஒன்றிய அம்பாரை மாவட்டப் பிரதிநிதிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுவதல்ல என்பதுடன் அங்கு எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது இல்லை என்றும் முடிவினை எடுத்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) கிழக்குத் தமிழர் ஒன்றியத்துடன் தேர்தல் இணக்கப்பாட்டை ஏற்படுத்தாமல் திரு.வி.ஆனந்தசங்கரி அவர்களே தேர்தல் தொடர்பான முடிவினை எடுப்பவராக இருந்திருந்தால் அம்பாரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் (TULF) தனித்தே போட்டியிட்டிருக்கும். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதும், ஈபிடிபி அகில இலங்கைத் தமிழர் மகாசபையுடன் கூட்டுச் சேர்ந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பினை ஏற்படுத்தியிருந்தும் அம்பாரையில் தங்களால் ஏற்படுத்தப்பட்ட கூட்டுடன் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிட்டதையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தாங்களாகவே போட்டியைத் தவிர்த்துக் கொண்டதும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) யின் கிழக்குத் தமிழர் ஒன்றியப் பிரதிநிதிகள் அகில இலங்கைத் தமிழர் மகா சபையின் கோரிக்கையினை ஏற்று ஒதுங்கிக் கொண்டதையும் தேர்தல்களில் நடக்கின்ற ஒரு சாதாரணச் சம்பவங்களாகப் பார்க்கக் கூடாது. இதற்குள் யாழ் மையவாத வர்க்க குணாம்சம் எவ்வாறு கிழக்குத் தமிழர்களின் அரசியலை நோக்குகின்றது, பயன்படுத்துகின்றது என்பதையே பார்க்க வேண்டும்.  

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாவதற்கு சற்று முன்பு வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரனை கிழக்குத் தமிழர் ஒன்றியம் சார்பில் சந்தித்த திரு.த.கோபாலகிஸ்ணன் அணியினர், கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதன் அவசியத்தினை விளக்கியிருந்தனர். அவ்வாறு ஒரு பொதுச்சின்னத்தில் சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் கிழக்கில், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலம் வாய்ந்த ஒரு அணி உருவாக வேண்டும் என்றும், கிழக்கை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும், வடக்கை வடக்கில் உருவாகப் போகும் பலம்வாய்ந்த அணி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வடகிழக்குக்கான பொதுவான பிரச்சினைகள் என்று வரும்போது, இரு அணிகளும் ஒன்றாகச் சேர்ந்து செயற்படலாம் என்றும், ஒரு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனால், திரு.சுரேஸ்பிரேமச்சந்திரன் தனது தலைமையிலான EPRLF என்ற கட்சியை தியாகம் செய்து, திரு.சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கட்சி, கிழக்கின் நிலைமையினையும் திரு.சுரேஸ்பிரேமச்சந்திரன், திரு.த.கோபாலகிஸ்ணன் அவர்களுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டினையும் பொருட்படுத்தாது, அக்கட்சி மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டது. இவர்கள் இன்னும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பார்களானால் மட்டக்களப்பில் தற்போது நான்காக இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவத்தினை மூன்றாகக் குறைத்த பெருமையினைப் பெற்றிருப்பார்கள். அதிஸ்ட்டவசமாக அந்த ஒரு ஆசனம் காப்பாற்றப்பட்டு விட்டது.  

இதுபோன்றே திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் ஓர் அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான அத்தனை சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டவர். இறுதியில் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்த கட்சிகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்ற கடைசி நேரத்தில் தான் தனது கட்சிச் சின்னமான உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும், பிடிவாதமாக நின்று வலுவான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உருவாவதைத் தடுத்தார். அதன் பிறகு கிழக்குத் தமிழர் ஒன்றியத் தலைவரான திரு.த.சிவநாதன் அவர்களை வளைத்துப் போட்டு  தனது கட்சியை உதயசூரியன் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட வைத்தார். திரு.வி.ஆனந்தசங்கரி அவர்களுக்கிருந்ததெல்லாம் யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தனது கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான். ஆனந்தசங்கரி அவர்களுடைய  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF)  மட்டக்களப்பில் போட்டியிடாமல் இருந்திருந்தால் கிழக்கிற்கு மேலும் ஒரு ஆசனம் கிடைத்திருக்கும். அதனைத் தடுத்த பெருமை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF)யைச் சாரும். மாறாக இவர்களும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் தற்போது நான்காக இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவம் மூன்றாகப் போயிருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அதிஸ்ட்ட வசமாக ஒரு பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டு விட்டது.  

இதுபோன்றே திருகோணமலை மாவட்டத்திலும் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக வாக்குப் பொறுக்க வந்த ஈபிடிபி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தால் திருகோணமலையின் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் பறிபோயிருக்கும். மயிரிழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாத்துக் கொண்டது. 

எனவே மேற்படி அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை என்று கிழக்கு, வடக்கின் மேலாதிக்க வாதிகளாலும் அவர்களுடைய கட்சிகளாலும் கபளீகரம் செய்யப்படுகின்றது. இந்தக் கபளீகரச் செயற்பாட்டுக்கு வடக்கு மையவாதக் கட்சிகளை மட்டும் குறைகூறுதல் பொருத்தமாகாது. இந்தக் கட்சிகளுக்கு காவடி தூக்கி அந்தக் கட்சிகளின் செல்வாக்கில் தமது இருப்பை உறுதிப்படுத்த நினைக்கும் கிழக்கின் சுயநலவாதிகளும் குறிப்பாக த.சிவநாதன், சோ.கணேசமூர்த்தி, அருண்தம்பிமுத்து போன்றவர்களும் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.       

நாம் கோருவதெல்லாம் தாங்கள் தாங்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டு வடக்கில் சாதாரண மக்களை ஏமாற்றுவதும் கிழக்கில் தங்கள் அரசியல் நலனுக்காக கிழக்கு மக்களை பலிக்கடாவாக்குவதையும் நிறுத்துங்கள் என்பதுதான். இவ்வாறு கோருவதனை பிரதேசவாதமாக கட்டமைப்பதும், எம்மைப் பிரதேசவாதிகளாக அல்லது பிள்ளையானுடைய ஆட்களாக அல்லது கருணாவினுடைய ஆட்களாக முத்திரை குத்துவதும் கடைந்தெடுக்கப்பட்ட அரசியல் குள்ளநரித்தனம் என்பதை கிழக்கு மக்கள் மட்டுமல்ல வடக்கு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் எனும் பேரில் மேற்படி கட்சிகள் இம்முறை 23616 கிழக்குத் தமிழர்களின் அரசியல் உரிமையினை இல்லாமல் செய்திருக்கிறார்கள் என்கின்ற உண்மையினைப் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களுடைய அரசியல் உரிமை மட்டுமல்ல கிழக்குத் தமிழர்களின் இருப்புத் தொடர்பான தீர்மானமும் ஆகும் என்பதை கிழக்கில் வாக்குப் பொறுக்க வரும் யாழ் மையவாதக் கட்சிகளும் அக்கட்சிகளுக்காக அந்தக் கட்சிகள் வழங்கும் நிதியினைப் பெற்றுக் கொண்டு அவற்றுக்கு காவடி தூக்குபவர்களும் உணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும்.  

இவ்வாறு நாம் தமிழ்த் தேசிய அரசியலையும் அதனை முன்னின்று நடாத்துவதாகக் குறிப்பிடும் கட்சிகளையும் விமர்சிக்கும் போது, திரு.வி.சிவலிங்கம் அவர்கள் மேலே என்னால் குறிப்பிடப்பட்டுள்ள தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.   

 “……மறு புறத்தில் கிழக்கின் புதிய அரசியல் சக்திகள்தற்போது பெருந்தேசியவாத சக்திகளுடன் மறைமுகமாக ஏற்படுத்தியுள்ள உறவுகளை மறைக்கும் விதத்திலும், சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் விசுவாசிகளாக தம்மை அடையாளப்படுத்தும் வகையிலும், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைக் கைவிட்டு பிரதேச அபிவிருத்தி என்ற பெயரில் புதிய அரசியல் செய்வது பிரதேசவாதமே தவிர தேசிய இனங்களின் ஜனநாயகம் சார்ந்த அரசியல் அல்ல என வடக்குவிவாதங்கள் கூறுகின்றன.”                          

“சாதி மேலாதிக்க அரசியல் குறித்து அதிகம் சிலாகித்து வரும் கிழக்கு அரசியலின் பிரிவினர் யாழ். மேலாதிக்க அரசியலை விடமிக மோசமான சிங்கள பௌத்த மேலாதிக்கம் குறித்து அடக்கிவாசிப்பதும் அல்லது அபிவிருத்தி அரசியல் என்ற போர்வைக்குள் மறைந்து செயற்படுவதும் அவநம்பிக்கைகளையே அதிகம் தருகிறது.” 

“இவை யாழ். மேலாதிக்கத்தின் தாக்கங்களைக் குறைத்துமதிப்பிடுவது என்பதை விட அதைவிட மிக மோசமான மேலாதிக்கம் நாட்டின் சகல மக்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகையில் அவை குறித்து எவ்வித பாரிய தாக்குதல்களும் அற்றுக் கடந்து செல்ல முயற்சிப்பது புதிய அரசியல் அணுகுமுறைகளில் நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.”  

“……தென்னிலங்கை அரசியல் அதைவிட மோசமாக இருப்பதையும், அதன் பக்கமாக சில கிழக்கிலங்கை அரசியல்வாதிகள் சரிந்து செல்வதையும் மிக இலகுவாகவே தட்டிக் கழித்துச் செல்வதாகவே அவை காணப்படுகின்றன. விவாதங்கள் ஒரு புறத்தில் சாதி மேலாதிக்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் அதேவேளை, மறு புறத்தில் அதைவிட மோசமான மேலாதிக்கம் குறித்து அலட்சியமாக இருப்பது அல்லது இலகுவாகவே கடந்து செல்வது என்பது கிழக்கின் புதிய அரசியல் சிந்தனைக்கான களத்தைத் திறப்பதற்கு முதலில் முன்னால் உள்ள எதிரியை அவமானப்படுத்துவது அதாவது ஏற்கெனவே ஆதிக்கத்திலுள்ள கருத்தாடலை நிராகரிக்கும் தந்திரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.” 

என சிவலிங்கம் அவர்கள் தனது ஒரு கட்டுரையில் ஒரு விடயத்தினையே நான்கு இடங்களில் வெவ்வேறு விதமாக அதாவது கூறியது கூறலாக குறிப்பிடுவதை வாசகர்கள் அவதானிக்க வேண்டும். அவரால் இவ்வாறு மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதன் நோக்கம் யாழ் மேலாதிக்கவாதத்தினை நியாயப்படுத்தி பாதுகாப்பதற்கான பகீரதப் பிரயத்தன முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.   

கடந்த எனது ஒன்பது பகுதிகளிலும் யாழ் மேலாதிக்கம், தமிழ் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாது அவர்களுக்கு சம சந்தர்ப்பத்தினையும் சம வாய்ப்பினையும் வழங்காது புறமொதுக்குகின்றது. அது தமிழ் இனத்தினதும் தமிழ்த் தேசியத்தினதும் பெயரால் ஒரு பகுதி மக்களை ஆள்கின்றது. அவர்களை தமது நலனுக்காகப் பலிக்கடாவாக்குகின்றது, என்பதை ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இவ்வகைப்பட்ட யாழ் மேலாதிக்கத்துக்கும் இதேபோன்று தமிழ் மக்களை நடாத்தும் சிங்கள பேரினவாதத்துக்கும் எந்தவிதமான அடிப்படை வித்தியாசங்களும் எம்மைப் பொறுத்தவரை இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இதனால் யாழ் மேலாதிக்கத்தையும் அதனுடைய அரசியல் நடவடிக்கைகளையும் விமர்சிப்பதென்பது சிவலிங்கம் அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று தெற்கின் காலடியில் சரணாகதி அடைவது என்று பொருள் அல்ல. யாழ் மேலாதிக்கமும் சிங்களப் பேரினவாதமும் இரு வேறு ஆடைகளைப் போர்த்திக் கொண்டிருக்கும் ஒரே வகைப்பட்ட எதிரிகள்தான் என்பதை நாம் தெளிவாகவே இனங்கண்டிருக்கின்றோம். ஆனால் பெருமளவான தமிழ் மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகள் வெளித்தெரியும் அளவுக்கு யாழ் மேலாதிக்கத்தின் நுண்ணரசியல் பண்பாட்டு அடக்குமுறைகள் வெளித்தெரிவதில்லை என்பதே வேறுபாடாகும். இந்த வெளித்தெரியாத நுண்ணரசியல், பண்பாட்டு அடக்குமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த காரணத்தினால்தான் வெளித் தெரிந்த சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டம் தோல்வியுற்றது என்பதையும் நாம் படிப்பினைகளாகக் கொண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களை உதறித் தள்ளிவிட்டு யாழ் மேலாதிக்கத்தின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இனியும் நாம் இருக்க முடியாது என்பதையும் அதனைப் பாதுகாக்க முற்படுகின்ற சிவலிங்கம் போன்ற முதிர்ச்சியடைந்த இடதுசாரிகள் விளங்கிக் கொள்ளவும் வேண்டும்.    

(தொடரும்………………..)