வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 09

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 09

—  கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது.  — ஆசிரியர்) 

“எதற்காக இந்தப் பாதகம்? ஏனிந்தப் பாரபட்சங்கள், வேற்றுமைகள்? நாம் யார்? நீங்கள் யார்? திரைமறைவில் எதற்காக ஆயிரம் நாடகங்கள்? 

(09) 

மேலும் ஒரு இடைக்குறிப்பு – 

வடக்கு நோக்கி வந்த மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் பாடுகளையும் அவர்களுக்கு இழைப்படும் தொடர்ச்சியான நீதி மறுப்பையும் அவர்களுடைய இன்றைய நிலையைப் பற்றியும் எழுதப்படும் “இந்தத் தொடர் இப்பொழுது தேவைதானா? இது சமூகப் பிளவுகளை ஏற்படுத்தாதா? ஏன் பழைய –கடந்த காலத்துச் சங்கதிகளை இப்பொழுது கிண்டிப் பேச வேண்டும்?”என்று சிலர் கேட்கிறார்கள். 

இந்தக் கேள்வியின் உள்ளே மிகப் பயங்கரமான சூதான நோக்கம் மறைந்துள்ளன. 

நாங்கள் எப்படியும் நடந்து கொள்வோம். யாரையும் எப்படியும் நடத்துவோம். அதைப்பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்பதே இதன் பின்னால் உள்ள தந்திரமாகும். 

மேலும் இவர்கள் சொல்கிறார்கள், “இந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் இப்பொழுது பேசுவதால் தமிழ்ச்சமூகத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதாகி விடும். அது எதிரிகளுக்குச் சாதகத்தைக் கொடுக்கும். அது தமிழர் தரப்பின் அரசியலைப் பலவீனப்படுத்தும். அத்துடன் தேவையில்லாத வகையிலான சமூக முரண்பாடுகளை உருவாக்கும்” என. 

இதைக் கேட்கும்போது சிரிப்பே வருகிறது. ஆழமாக யோசித்தால் மன்னிக்கவே முடியாத கோபம் ஏற்படும். 

சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்களே அது வேறொன்றுமில்லை, இதுதான். 

இப்பொழுது கூட இதையெல்லாம் பேசவேண்டியிருக்கிறது என்பதே மிகப் பெரிய துயரமும் வெட்கக் கேடுமாகும். ஏனென்றால் இப்போதும் இந்த மக்களுக்கு எதிராகத் தொடரப்படுகிறது நீதி மறுப்பு. பாரபட்சப்படுத்தல்கள். தம்மிலிருந்து வேறாக்கும் நடவடிக்கைகள். அதாவது சமகாலத்திலும் சமத்துவமாக இந்த மக்களை நோக்குவதற்கும் நேசிப்பதற்கும் நடந்து கொள்வதற்கும் நீங்கள் தயாரில்லை. என்பதால்தானே இதையெல்லாம் பேச வேண்டியுள்ளது. 

ஆகவே முதலில் இதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். 

நீங்கள் கூறுவதைப்போல கடந்த காலத்தை விட்டு விடலாம். ஆனால், சமகாலம் உங்களுக்குரியது. அந்தச் சமகாலத்தைப் பொறுப்பேற்று அதில் சரிகளை – நீதியை – சமத்துவத் தன்மையை, ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். பாரபட்சங்களை நீக்குங்கள். சமூக நீதியை நிலை நிறுத்துங்கள். தயவு செய்து நீதிமான்களாகவும் நியாயவாதிகளாகவும் நடக்க முற்படுங்கள். 

அப்படிச் செய்யும்போது இவற்றையெல்லாம் எழுதத்தான் வேண்டுமா என்று நாம் மீளாய்வு செய்யலாம். 

இரண்டாவது, இவை ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெருந்திரள் மக்கள் நேரில் சந்தித்த வாழ்க்கையின் வரலாறு. ஆகவே இந்த வரலாற்றுப் பதிவைச் செய்வது எந்த வகையில் தவறாகும்? 

மூன்றாவது, இந்தத் தொடரில் கூறப்படும் விடயங்கள் எதுவும் நடக்கவில்லை. பொய்யானவை என்றால் அதை உரிய ஆதாரங்களோடு யாரும் மறுக்கலாம். அல்லது இதற்கு மறுப்பான வகையில் தமது தரப்பு நியாயங்களை யாரும் முன்வைத்து விவாதிக்கலாம். 

இவையே இவர்கள் செய்ய வேண்டியது. பதிலாக எதையும் பேசவேண்டாம் என்று தந்திரமாக உண்மைகளை மறைக்க முற்படுவதல்ல. அது மேலும் அநீதியானதாகும். மேலும் அதிகாரத்தைத் தந்திரமாகப் பிரயோகிப்பதாகும். மேலும் குரல்வளையை நெரிப்பதாகும். மேலும் தவறுகளுக்கு இடமளிப்பதாகும். மேலும் துயரங்களை வளர்ப்பதாகும். மேலும் ஒடுக்குமுறைக்குப் பலியாவதாகும். மேலும் உண்மையைப் பலியிடுவதாகும். 

எனவே தவிர்க்க முடியாமல் இந்த வார்த்தைகளைப் பேசியே தீர வேண்டியுள்ளது. 

இராசரத்தினம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 

“ஜெயபுரத்துக்கு வர மொதல்ல நாங்க மூணு முகாம்களா மாறிக்கிட்டிருந்தம். வன்முறையால பாதிக்கப்பட்ட மாகாணங்கள்ல இருந்து வந்தவங்கள அங்கங்க முகாம்கள அமெச்சு வெச்சிருந்தாங்க. யாழ்ப்பாணத்தில புங்குடுதீவில ஒரு முகாம். அப்புறம் வன்னியில மல்லாவில, அக்கராயன்ல, மடு, வட்டக்கண்டல், நானாட்டன், கிளிநொச்சில குருகுலத்தில…. 

இப்பிடி ஒவ்வொரு இடத்திலயும் ஒரு அம்பது நூறு குடும்பங்கள்ணு வெச்சிருந்தாங்க. பிறவு கொஞ்ச ஆட்கள் அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு இடமாப் பாத்துப் போனாங்க. இதுக்கு முன்னாடி இங்க வந்திருந்த அவங்க உறவுக்காரங்க மூலமா இது அவங்களுக்கு சரியாச்சு. மத்தவங்கள்லாம் முகாம்லதான் இருந்தாங்க. 

அப்பிடியிருந்தவங்கள சேர்த்து ஒவ்வொரு இடமாப் பார்த்துக் குடியேத்தினாங்க. அப்பிடித்தான்  நாங்க இரண்டு பகுதியா ஆனைவிழுந்தானுக்கும் ஜெயபுரத்துக்கும் வந்தோம். 

ஆனைவிழுந்தானுக்கு 250 குடும்பங்கள். ஜெயபுரத்துக்கு குழந்த குட்டி அவங்களோடு பிள்ளைங்க எண்ணு மொத்தமா 538 குடும்பங்கள் வந்தன. 

ஜெயபுரத்தில் அப்பெல்லாம் பெரிய காடு. வனம். இது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எம்பத்து அஞ்சு, எம்பத்து ஆறுல. ஆளாளுக்குப் பிரிச்சு அந்தக் காட்டத்தான் காமிச்சாங்க. அதோட சரி. பிறகு அத வெட்டி, தீ வெச்சுக் கொளுத்தித்தான் குடிசையைப் போட்டம். அப்ப கிளிநொச்சி மாவட்டத்துக்கு அரசாங்க அதிபரா ஜெயநாதன் அப்பிடீன்னு ஒருத்தர் இருந்தாரு. ரொம்ப நல்லவரு. அவராப் பாத்து இந்தப் பக்கத்தில எல்லாருக்கும் காணியைக் குடுத்தாரு. அதனால அவரோட பேர்ல இந்த இடத்துக்கு ஜெயபுரம் அப்பிடீன்னு பேர வெச்சொம். அதோட அப்ப எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) ஏஜீஏ இருந்தாரு. அவரும் நம்மள கொஞ்சம் கவனமாப் பார்த்தாரு. அதால அவரோட பேர்ல ஆழிநகர் அப்பிடீன்னு இந்தப் பக்கமாக (ஜெயபுரத்தின் இன்னொரு பகுதி) ஒரு பகுதிக்கு பேர வெச்சாங்க. அப்படியே ஜெயபுரம் உருவாகிடிச்சி. 

ஆனா தண்ணி கெடயாது. தண்ணியில்லேண்ணா என்னதான் பண்ண முடியும்? இது எல்லாருக்குமே பெரிய பிரச்சினையா இருந்திச்சி. கொஞ்சத் தூரத்தில இருந்த தும்புருவில் கொளத்திலதான் குடிக்கிறதுக்கும் தண்ணி. குளிக்கிறதுக்கும் அங்கதான் போவாங்க. எல்லாச் சனங்களும் அதுதான் ஒரே தெய்வம். 

பிறகு கெணறு வெட்டிக்கிறதுக்கு எண்ணு ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாங்க. அந்தக் காச, சாப்பாடு, வெத்தல பாக்கு தேத்தண்ணி எண்ணு எடுத்துக்கிட்டு நாலஞ்சு குடும்பத்து ஆக்களாச் சேர்ந்து நாமளே கெணத்தை வெட்டினோம். ரொம்ப ஆழம். முப்பத்தெட்டு நாப்பது அடி ஆழம். 

ஆனா கெணத்தெக் கட்டுறதுக்கு தனியா சீமெந்த குடுத்தாங்க. அதுக்கு கூலிக்காரங்க நாங்கதான். அப்பிடியே  எல்லாத்துக்கும் கெணறு ஓரளவுக்குக் கெடச்சிச்சி. 

சாப்பாட்டுக்கு கொஞ்சப் பொருள் கொடுப்பாங்க. வாராவாரம் றேஷன் மாதிரி. அதை வெச்சு வாழ்க்கையை ஓட்டிக் கிட்டிருந்தொம். எங்களுக்கு உதவியா கியூடெக், உலக இந்து மகாசபை, கிளிநொச்சியில இருந்த குருகுலம் அப்டீன்ற மூணு அமைப்பு ஆக்கள் இருந்தாங்க. இவங்கதான் இந்தக் கிணறு வெட்டிக்கிறதுக்கும் அப்பறமா ஏதாவது வீட்டுப் பக்கத்தில சின்னதா தோட்டம் போட்டுப் பயிர் கொடி வெக்கிறதுக்கும் உதவினாக.  

ஆனா அதில ஒரு விசயம் நடந்திச்சி பாருங்க, அப்படியே ஒரு கொஞ்சப் பேரு மதம் மாறீட்டாங்க. பஞ்சம் வந்திச்சின்ன எல்லாமே போயிடும். பசி மனிசன மாத்திடும். களவு, விபச்சாரம் எல்லாம் பஞ்சத்திலதாங்க அதிகப் பொறக்கும்கிறது பார்த்திருப்பீங்க. அப்படியொரு பசிக் கொடுமை நமக்கு. வேலை கெடக்கலைன்னா வழியென்ன?ஆனா ஜனங்க அப்படிக் கெட்ட பழக்கத்துக்கெல்லாம் போகல்ல. நம்ம ஊரு கொஞ்சம் தனியா ஒதுக்கில கெடந்தது நல்லதாப் போயிடிச்சி. 

அப்ப ஜெயபுரத்தில யாரைப் பாத்தாலும் காட்டுவாசிங்க போலத்தான் இருப்பாங்க. அந்தளவுக்கு இது ரொம்பக் காய்ஞ்ச பூமி. வெயில் வாட்டிப் போட்டிடும். ஆனா ஒண்ணு பாருங்க. மனுஷங்க காலடி பட்டா அந்த எடம் எப்பிடியும் மாறீடும். மலைக்காடெல்லாம் கூட முன்னாடி எப்படி இருந்திச்சி? காடுதான? அந்தக் காட்ட நம்ம ஆட்கள்தானே தோட்டங்களாக்கினாங்க. அதுக்குப் போற வழியெல்லாத்துக்கும் பாதை எப்ப வந்திச்சி? தோட்டுத்துக்கு வந்த ஆட்கள்தானே பாதைகளயும் பாலத்தையும் போட்டாங்க. இதெல்லாத்தையும் யாருதான் இப்ப நினைச்சுப் பாக்கிறாங்க. 

அதவுடுங்க, 

இந்தக் காட்ட வெட்டித் துப்புரவாக்கி வீடெல்லாம் போட்டாலும் உழைப்புக்குப்  பிரச்சினை. தோட்டம் வெச்சுக்கலாம் என்றால் அதுக்கு தண்ணி இல்ல. கெணறு இருந்தாலும் அதின்ர ஆழத்தில இருந்து எடுத்து பயிர வளக்கிற அளவுக்கு ஜனங்கள் கிட்ட சக்தி கெடயாது. 

இதுக்க என்ன பண்ண முடியும்? ஆளையாள் மூக்கைப் பார்த்துச் சொறிஞ்சுக்க வேண்டியதுதான். அப்பிடியொரு நெலமை. அக்கம் பக்கத்தில வேலைக்குப் போறதுக்கு ஊர்கள் கெடயாது. கொஞ்சத் தூரத்தில இருந்த பல்லவராயன்கட்டு, கரியாலை எல்லாம் ரொம்பச் சின்ன ஊருக. அங்கனயே ஒரு பத்து இருவது குடும்பங்கள்தான். அவங்க வேலைய அவங்களே பாத்துக்குவாங்க. இதுக்கு நமக்கெங்க வேலை கெடக்கப்போவுது? 

வேலை இல்லைன்னாக்க வயித்துக்கு ஏது ஆகும்? பசிதான். பசி வந்திச்சின்னா எதுதான் மிஞ்சிக் கெடக்கும்? 

இதுக்குள்ள கஸ்ரம் தாங்க முடியாம கொஞ்ச ஆட்கள் அப்படியே மன்னார் பக்கமாவும் கிராஞ்சிப்பக்கமாவும் போய் இந்தியாவுக்கு போயிட்டாங்க. 

இதுக்குள்ள இந்திய ராணுவம் வந்திடிச்சு. அதோட எல்லாமே பிரச்சினையாகிடிச்சி. ஆனா அப்பத்தான் பூநகரிப் பக்கத்து ஆட்கள் ஜெயபுரத்துக்கு வந்தாங்க. பிறகு 1990ல இலங்கை ராணுவத்தோட புலிகளுக்கு சண்டை தொடங்கிச்சில்ல, அதோட பூனகரி ஆட்கள்ல பாதி ஜெயபுரத்துக்கு வந்திட்டாங்க. மிச்சப்பேர் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் போயிட்டாங்க. 

பூனகரி ஆட்களும் வந்ததுக்கு அப்புறம்தான் ஜெயபுரம் கொஞ்சம் ஜனங்கள் நடமாடிற ஊர் மாதிரி தெரிஞ்சுது. அதுக்கு முன்னாடி ஏதோ ஒரு ஆதிவாசிகள் குடியிருப்பு மாதிரியில்லா இருந்திச்சு. இயக்கங்கள் போறப்பகூட நம்மளப் பாத்திட்டுப் போவாங்களே தவிர, வந்து பேசிறதெல்லாம் கெடயாது. ஏதோ பாதிக்கப்பட்டு வந்திருக்கிறாங்க. இந்தக் காட்டுக்க கெடக்கிறாங்க எண்ணு அவங்க நெனச்சிருக்கலாம். 

நாங்க வந்த காலத்தில இருந்தே ஒரு கோரிக்கையை வெச்சிட்டு வர்ரோம். ஜெயபுரத்துக்குப் பக்கத்தில இருக்கிற பண்டிவெட்டிக் கொளத்தை புனரமைச்சுத் தாங்க. அதைவெச்சு விவசாயம் செஞ்சுக்கலாம்ணு. அந்தக் கொளத்தைக் கட்டித் தந்தாங்கன்னா நம்மட ஜனங்கள்ட வாழ்க்கைல பெரிய மாற்றம் வந்திடுங்க. தண்ணி வேணுங்க எல்லாத்துக்கும். தண்ணி இல்லேன்னா இந்தப் பூமியே இல்லை. அப்டியே காஞ்சிடும்லா. 

ஆனா கொளத்தக் கட்டிறதைப் பற்றி ஆரும் கவலைப்படுறதா தெரியேல்ல. சந்திரகுமார் அப்டீன்னு ஒரு எம்பி இருந்தார்லா. அவர்தான் ஜனங்கள்ட கதையக் கேட்டிட்டு, அவங்கட நெலமையைப் பாத்திட்டு அந்தக் கொளத்தைக் கட்டலாம்னு சொன்னாரு. ஆனால் அவருக்கு தொடர்ந்து அதுக்கான சான்ஸ் கெடக்கல்ல. கொளத்து திட்டமும் படுத்திடிச்சி…. 

(தொடரும்)