மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 8

மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் – 8

 — என். செல்வராஜா, நூலகவியலாளர் — 

ஒரு பிராந்திய பொதுசன நூலகத்தில் சுவடிகள் காப்பகப் பிரிவொன்றின் முக்கியத்துவம் பற்றி கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். மட்டக்களப்பு பொது நூலகத்தில் அத்தகையதொரு சுவடிகள் காப்பகப் பிரிவொன்றினை உருவாக்குமிடத்து அவதானிக்க வேண்டிய சில விடயங்களை இன்றைய இயலில் முதலில் காண்போம். இது ஒரு முற்று முழுதான நடைமுறையல்ல. எமது சிந்தனையை வழிநடத்துவதற்காக மேலோட்டமான சில அவதானப் புள்ளிகளை இனம் காட்டுவதற்கான முயற்சியேயாகும். 

பாதுகாப்பு நடைமுறைகள் 

மட்டக்களப்பு பொது நூலகத்தில், குறிப்பாக நூல்களையும் ஆவணங்களையும் பாதுகாக்கும் முன்னெடுப்புகளின்போது, பூச்சிகளின் தாக்கத்தைத் தடுப்பதற்கு பூச்சிக்கொல்லி வகைகள் பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது. பூசணத் தாக்கத்திலிருந்து சுவடிகளைப் பேணுவதற்கு புகையூட்டித் தூய்மை செய்தல், ஆற்றல் மிக்க நச்சரிவகை பயன்படுத்தல், மிக்க ஒளியினாலும் வெப்பத்தினாலும் சுவடிகள் நிறம் மாறிப் பாதிப்புறாவண்ணம் யன்னல் சீலைகளைப் பயன்படுத்தலும், திருப்திகரமான காற்றோட்ட வசதி அமைத்தலும், தீ விபத்துக்களைத் தடுப்பதற்கு தீயணை கருவிகள் இணைத்திருத்தல், காற்று பதனிட்ட நிலையில் (airconditioned) சுவடிக் கட்டிடத்தை வைத்திருத்தல், சுவடிகளை வைப்பதற்கு பூச்சிகள் பாதிக்காத மரவகை – உருக்குத் தட்டுகளையும் பெட்டிகளையும் பயன்படுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் சுவடிகள் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். 

பொது நூலகத்தில் நூல்களைப் பேணும் பிற பிரிவுகளான உசாத்துணைப்பிரிவு, இரவல் வழங்கும் பிரிவு, சிறப்புச் சேர்க்கைப் பிரிவுகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் நூற்பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் சுவடிகள் காப்பகப் பிரிவின் ஆவணங்களைப் பாதுகாத்துவைக்கும் நடைமுறைகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு. மற்றைய பிரிவுகளில் தகவல் வடிவங்கள் நூல்களாகவே பெரும்பாலும் காணப்படும். சுவடிகள் காப்பகப் பகுதியில் அளவுவேறுபாடுகள் கொண்ட பல்வேறு வடிவிலான ஆவணங்கள் காணப்படலாம். அறிக்கைகள், கோவைகள் என்பன எளிதாக நூல்களை அடுக்குவது போலத் தட்டுகளில் அடுக்கிவைக்க முடியாது. ஏடுகளும் அவ்வாறே. சில  ஆவணங்கள் குறித்த நிறுவனங்கள், சபைகளின் பெயரின் கீழ் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டியவையாயிருக்கும். 

மேற்கண்ட உசாத்துணை மற்றும் இரவல் வழங்கும் நூலகப் பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் பாவனையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேவேளையில் சுவடிகள் காப்பகப் பிரிவில் இடம்பெறும் ஆவணங்கள் பாதுகாப்புப் பெட்டகங்களாக, அதிலுள்ள ஆவணங்கள் எமது அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச்செல்லவேண்டிய வரலாற்று மதிப்புள்ள பொக்கிஷங்களாகக் கருதப்படும். இவை எளிதில் இரவல் வழங்கவோ உசாத்துண நூல்களாகப் பயன்படுத்தவோ முடியாது. சுவடிகள் காப்பகப் பிரிவு தரைத்தளத்தில் இலகுவில் பொதுமக்கள் பார்வைக்குப்படும் வகையில் காணப்படுவது குறைவு. சுவடிகள் காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் மிகப்பெறுமதியானவை. பிரதிகள் பெறப்பட முடியாதவை. இவற்றை பயன்படுத்துவதில் மிகவும் அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். இப்பிரிவில் வாசகர்கள் அல்லது பயனாளிகள் நேரில் சென்று நூல்களையும் ஆவணங்களையும் புரட்டிப்பார்த்து எடுத்த வாசிப்பது தடைசெய்யப்பட்டிருக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புவாய்ந்த ஊழியர்களால் மட்டுமே அத்தகைய அறைகளுக்குள் பிரவேசிக்க முடியும். எனவே மட்டக்களப்புப் பொது நூலகத்தின் சுவடிகள் காப்பகப் பிரிவினை முதலாம், இரண்டாம் தளங்களிலேயே கட்டமைப்பது பொருத்தமானதாகவிருக்கும். 

நூலகத்தின் மற்றைய பிரிவுகள் இத்தகைய வலிமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிரா. இன்றைய வாசகர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய நூல்களை வழங்கித் திருப்தி காண்பதற்கு இயைபாக இரவல் வழங்கும் பிரிவு செயற்படும். 

சற்று விலை கூடியதும், இரவல் வழங்கினால் ஏற்படும் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத உசாத்துணை நூல் தொகுதிகளும் பெறுமதிகூடிய பெருந்தொகுப்புகளும், வாசகர் நூலக அறைகளுக்குள்ளேயே தங்கியிருந்து நூலகர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் வைத்து வாசித்துவிட்டுச் செல்லக் கூடியவையுமான நூல்கள் உசாத்துணைப் பிரிவில் காணப்படும். 

சிறப்புச் சேர்க்கைப் பிரிவில் காணப்படும் சேகரங்களும் உசாத்துணை நூல்களாகவே கருதப்படும். உசாத்துணைப் பிரிவின் ஒரு அங்கமாகவும் சில நூலகங்களில் இது செயற்படும். ஆனால் அங்கு ஆய்வாளர்களுக்குரிய சிறப்புத் தொகுதிகளான இலங்கை எழுத்தாளர்களின் நூல்களும், மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களும், மட்டக்களப்பின் புகழ்பூத்த தமிழறிஞர்களின் சிறப்புச் சேகரங்களும் (உதாரணமாக சுவாமி விபலாநந்தர், பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துப் பூராடனார் -க.த.செல்வராசகோபால், என இப்பட்டியல் விரியும்), ‘சிலோனியானா’ (Ceyloniana), ‘பட்டிக்கலோனியானா’ (Batticaloniana) என பொதுவில் அழைக்கப்படும் பிரதேசவாரியான சிறப்புச் சேகரங்களும் இப்பிரிவில் இடம்பெறும். 

சுவடிகள் காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படக்கூடிய ஆவணங்கள் 

‘மல்லிகை’ இதழொன்றில் பேராசிரியர் கைலாசபதி அவர்களால்’ மறுபதிப்புகளும் வைப்பு நூலகங்களும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட குறிப்பொன்றினை ‘நூலகவியல்’ சஞ்சிகையின் டிசம்பர் 1985 இதழில் மீள்பிரசுரம் செய்திருந்தோம். அதனை இங்கு மீளவும் குறிப்பிடுதல் பொருத்தமாகவிருக்கும். 

‘….மனிதன் இன்றையப் பொழுதில் மாத்திரம் வாழ்பவன் அல்லன். நேற்றும், நாளையும் உண்டு. அந்த நேற்றைய நூல் தான் நேற்றைய வாழ்க்கையை நமக்குக் காட்ட முடியும். இப்பொழுது பல இளம் எழுத்தாளருக்கு அ.செ.முருகானந்தனையும், அ.ந.கந்தசாமியையும் பெயரளவிலேயே -அதுவும் அரைகுறையாகவே – அறியும் நிலைதான் உண்டு. இந்நிலையில் ஈழத்து இலக்கியப் பாரம்பரியம் குறித்து நாம் அர்த்தத்துடன் பேசமுடியுமா? இலக்கியச் சீரழிவிற்கும் நிலைகுலைவிற்கும் இதனைவிட வேறு எடுத்துக் காட்டுகள் வேண்டுமா? 

இத்தகைய அவலநிலையில் எழுத்தாளரும், கலை இலக்கியத்தில் அக்கறை கொண்டோரும் இரு மார்க்கங்களை – நடைமுறை சாத்தியமான வழிவகைகளை – எண்ணிப் பார்க்கலாம். அரசியல் அதிகாரம் உள்ளவர்களும் இதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையென்று கருத வேண்டும். ஒன்று, ‘பழைய’ ஆக்க இலக்கியங்களை இயன்றவரை மறுபதிப்பாக வெளியிடுதல், சித்திரக் கதைகளை – காவிய இதிகாசக் கதைகளை நமது குழந்தைகள் ஆர்வத்துடன் படிப்பதைக் காணும்பொழுது, வயது வந்தவர்கள் இந் நாட்டிலேயே கடந்த பல தசாப்தங்களாக வந்த குறிப்பிடத்தக்க நூல்களைக் காலப்போக்கில் விரும்பி வாசிப்பர் என்று எண்ணத் தோன்றுகிறது. அவை கிடைக்க வேண்டும். தனிப்பட்டவர்கள் பெற்று வாசிப்பது ஒரு புறமிருக்க, நமது நாட்டின் பள்ளிக்கூடங்களிலும், பொது நூலகங்களிலும் இவை கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வாசிப்பு என்பது ஒரு பழக்கம். நூல்களை மறுபதிப்புச் செய்வதற்கு சில நிறுவனங்களைத் தோற்றுவித்தல் வேண்டும். இது மிகப் பெரிய கடமையாகத் தென்படுகிறது. 

இரண்டாவது, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு முதலிய பிரதான பட்டினங்களில் பொது நூலகம், பல்கலைக்கழக நூலகம் முதலியவற்றை எழுத்தாளர் வைப்பு நூலகங்களாகக் கருதிப் பொறுப்புணர்ச்சியுடன் பிரதிகளை வழங்கி உதவலாம். அவையும் ஈழத்து நூல்கள் அனைத்திலும் சில பிரதிகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முன்வந்தால், இனிமேலாவது ஈழத்துத் தமிழ் நூல்கள் ஒவ்வோரிடத்திற் கிடைக்கக் கூடியதாயிருக்கும். உலகின் பல நாடுகளில் depository Libraries எனப்படும் களஞ்சிய நூலகங்கள் அல்லது வைப்பு நூலகங்கள் உண்டு. சட்டப்படி அவற்றுக்கு ஒவ்வொரு பிரதி அனுப்பப்படல் வேண்டும். இலங்கையிலும் நூதனசாலை நூலகம், ஆவணசாலை நூலகம் ஆகியவற்றுக்கு நாட்டில் அச்சிடப்படும் ஒவ்வொரு நூலும் அனுப்பப்படல் வேண்டும். அது போன்ற சட்டம் அல்லது குறைந்த பட்சம் ஒரு எழுதாச் சட்டம் தமிழ்ப்பகுதிகளில் இரண்டொரு நூலகங்கள் சம்பந்தப்பட்ட வரையிலாவது நடைமுறைக்கு வரவேண்டும். அப்பொழுது தான் ஈழத்து தமிழ் நூல்களை ஒரு நூலகத்திலாயினும் முழுமையாகப் பார்த்து வாசிக்கக்கூடிய வாய்ப்பு உறுதியாக உண்டாகும். இல்லாவிடில் இலக்கிய நூல்களும் தினசரிப் பத்திரிகைகள் போல ஒருநாள் ஒருவார வாழ்க்கையுடன் முடிந்து விடும் நிலைபேறற்ற நிலை நிலவும்.’ 

மேற்குறிப்பிட்ட பேராசிரியர் கைலாசபதியின் கருத்து இன்றும் எமக்கு முக்கியமாகப் படுகின்றது. கிழக்கின் சகல நூல்களையும் தேடிப்பெற்று- மூலப்பிரதி கிடைக்காதவிடத்து அதன் ‘போட்டோக்கொப்பி’யையாவது பெற்று மட்டக்களப்புப் பொது நூலகத்தில் சுவடிகள் காப்பகப் பிரிவில் பாதுகாத்து வைக்கவேண்டும். என்றாவது ஒருநாள் படைப்பாளியின் வாரிசுகள் அதனை மீள்பிரசுரம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டக்களப்பு பொது நூலகத்தின் சுவடிகள் காப்பகம் அமையவேண்டும். 

பெரும்பாலான வளர்முகநாடுகள் சுதந்திரமடைந்த பின் தமது பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட்டுச் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றங்காண முற்பட்டிருந்தன. இவ்வகையிலான முயற்சிகளுக்கு நூலக ஆவண சேவைகளின் முக்கியத்துவம் நாம் கூறாமலே விளங்கும். எனினும் ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களை உருவாக்கி, அவற்றைப் பயன்மிக்க வகையில் நிறைவேற்றுவதற்கு நூலக சேவைகளின் இன்றியமையாத் தன்மை இன்னமும் எம்மால் உணரப்படவில்லையென்பது கவலையளிக்கின்றது. நூலக சேவையினையிட்டு தீவிரமாக சிந்திக்கும் போக்கு எமது உயர்மட்ட நிர்வாகத்தர்களிடையே திருப்திகரமாக இருப்பதில்லை. தரமான, பொருத்தமான, பொறுப்புக்கூறும் நிலையிலுள்ள (Responsibility and Accountability) நூலக அலுவலர்களைத் தேடி நியமிப்பதிலும் இந்த அசமந்தப் போக்கே மேலோங்கியிருக்கின்றது. எனவே தான், துரிதமான அபிவிருத்தியில் நாட்டம் கொண்டுள்ள எமது பிரதேசத்தில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிக்கான சாதனமான நூலக சேவைகளில் கூடுதலான கவனஞ் செலுத்தப்படவேண்டியது அத்தியாவசியமாகின்றது. இந்த முயற்சியில் தான் எமது மட்டக்களப்பு பொது நூலகத்தின் ஆவணச்சேகரிப்பும், விரிவான செயற்பாடும் இப்பிரதேசத்து நூலகசேவைக்குத் தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டக் கூடியதாயிருக்கும்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோயில்களின், பள்ளிவாசல்களின், தேவாலயங்களின் வரலாறு கூறும் பழைய ஆவணச் சேகரங்களை, பிரதேச வரலாறு கூறும் ஆவணங்களை, பொது நூலகத்தின் சுவடிகள் காப்பகப் பிரிவில் சேகரித்துப் பாதுகாத்து வைக்கலாம்.  

கிழக்கிலங்கையின் கைத்தொழிற் பேட்டைகளின் ஆவணங்கள், இங்கு பல்கிப் பெருகியிருந்த கூத்துக் கலைஞர்களின் வரலாற்றாவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், மாந்திரீக ஏடுகள், வாகடங்கள் என்பன இன்று அருகி அழிந்துவருகின்றன. அரசாங்க அலுவலகங்களின் கோவைகள் 25 ஆண்டுகள் பழமையானதும் தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு சட்டத்தின்படி அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால் தனியார் தொழிற்றுறைகளின் பழைய அறிக்கைகள், சமூக நலன்புரிச் சங்கங்களின் பழைய அறிக்கைகள், அப்பிரதேசத்தில் இயங்கிய பழைய நூல் வெளியீட்டகங்கள், பதிப்பகங்களின் வரலாற்று ஏடுகள் என்பன இப்படி சட்டவைப்பகங்களுக்கு அனுப்பப்படும் வழமை கிடையாது. பல நிறுவனங்கள், இன்று இயங்காத நிலையில் அவற்றின் மூல ஆவணங்கள் எங்கே போயின என்று நாம் சிந்தித்தால், பெரும்பாலானவை கவனிப்பாரற்று ஆங்காங்கே சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் வீடுகளில் என்ன ஏதென்றறியாமல் கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கும் நிலை இன்று காணப்படுகின்றது. மேலும் சில தனிப்பட்டவர்களின் கௌரவ சேகரிப்பில் முடங்கிக் கிடக்கின்றன. மட்டக்களப்பு பொது நூலகத்தின் ஆவணக்காப்பகத்தின் வரவு, இத்தகைய ஆவணங்களின் பாதுகாப்பான வைப்பகத்திற்கான தேவையை தீர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும் என நம்பலாம்.  

(தொடரும்)