— அழகு குணசீலன் —
ஈழப்போராட்டம் !
சமாந்தரமான தண்டவாளத்தில் ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கின்ற வண்டிகளாக ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. ரயில்கள் வெவ்வேறு தண்டவாளங்களில் ஓடியபோதும், ஒரு புள்ளியில் – சந்தியில் சந்தித்தபோதும் ஆரம்பத்தில் தடம்புரளவோ, மோதுண்டு விபத்துக்கள் ஏற்படவோ இல்லை. விட்டுக் கொடுத்து விலகி ஓடின. பாதைகள் வெவ்வேறாயினும் அடையும் இலக்கு – இறுதி ஸ்ரேஷன் ஈழ விடுதலை என்று எல்லோரும் நம்பினர்.
இலக்கு சரியாகவே இருக்கும் என்று நம்பிய போராளிகளும், மக்களும் தாம் சார்ந்த அரசியலுக்கு ஏற்ப பொருத்தமான வண்டியில் ஏறிக்கொண்டனர். ஆனால் இந்த ரயில்களின் பெயர்கள் யாழ்தேவியோ, உதயதேவியோ, உடறட்டமெனிக்கவோ அல்ல. மாறாக பல்வேறு ஈழவிடுதலை அமைப்புக்களின் பெயர்களை சுமந்த ரயில்கள் அவை.
இவற்றிற்கு இடையில் தமிழர்கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற வண்டிகளும் ஓடாமல் இல்லை. இவை மிதவேக வண்டிகள் என்றால் முந்தியவை அதிவேக வண்டிகள் என்று கூறமுடியும். 1980 களில் இருந்து அதிவேக வண்டிகளின் ஓட்டம் அதிகரிக்க, அதிகரிக்க மிதவேக வண்டிகளை மெல்ல, மெல்ல தவிர்த்து மக்களும், இளைஞர்களும் அதிவேக வண்டிகளிலேயே இடம்பிடிக்கத் தொடங்கினர்.
இது வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த இடத்தில்தான் உதயசூரியன், இரட்டை இலை ரயில்கள் ஈழப்போராளிகளை தங்கள் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு இலக்கை அடைவதற்கான ஆதரவுகளை வழங்கத்தொடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் டெல்லி வண்டிகளிலும் இடம் கிடைக்கவும் அந்த ஓட்டிகள் (எம்ஜிஆர், கருணாநிதி) வழிசமைத்தார்கள்..
இரண்டு தமிழீழ ரயில்களின் ஓட்டிகள் பாண்டிபஜாரில் ஆளுக்காள் மோதிக்கொண்டபோது வண்டிகள் தடம்புரள்வதற்கான முதல் சிவப்பு சிக்னல் விழுந்தது. தொடர் நிகழ்வுகளாக ரயில்கள் தடம்புரண்டன. இது பாதை தவறியதாலும், சதியாலும் இடம்பெற்றது. வண்டிகள் மட்டுமன்றி அவற்றின் ஓட்டிகளும் அழிக்கப்பட்டனர். மாற்று வண்டிகள் ஓடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
ஒரே வண்டி! ஒரே ஓட்டி!! ரயில் வண்டி போக்குவரத்து தமிழ் ஈழ தேசத்தின் தனியுரிமையானது. ஓட்டி ஏகபோகமானார். போட்டிகள் அற்ற, மாற்றீடுகள் அற்ற, ஏகபோக ஈழப் போராட்ட அரசியல் தனியுரிமை சந்தையில் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது.
அரசியல் நுகர்வோர் உரிமைகள் மறுக்கப்பட்டன. மாற்று அரசியல் உற்பத்திகளை செய்யவும், கொள்வனவு செய்யவும் அனுமதியில்லை. தரம்குறைவான, கலப்படம் செய்யப்பட்ட, போலியான உற்பத்திகள் அரசியல் சந்தையில் ஒரிஜனலாக காட்டப்பட்டன. மாற்று அற்ற ஒரே அரசியலை மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்கவேண்டி இருந்தது. தனியுரிமை வண்டிக்கும், ஓட்டிக்கும் பின்னால் மக்கள் செல்வதைத் தவிர வேறு தேர்வு இருக்கவில்லை.
அன்று, தப்பிப்பிழைத்த ஈழ வண்டிகளின் உதவிஓட்டிகள் பலரும் தப்பினோம் பிழைத்தோம் என்று தனித்தும், கூட்டாகவும் அதிவேக ஓட்டியின் லைசன்ஸ் பெற்று அல்லது லைசன்ஸ் இல்லாமல் இன்று மெதுவேக வண்டிகளை ஓட்டுகிறார்கள். லைசன்ஸ் பெறுவதற்கான ஒரேயொரு நிபந்தனை ஏகபோகத்தையும், ஏக ஓட்டியையும் எந்த வித கேள்விக்கும் உட்படுத்தாமல் பூஷை செய்ய வேண்டும். இல்லையேல் தெய்வப்பழி.
இந்த தமிழ் ஈழ அதிவேக ரயில் ஓட்டி தனியுரிமை ஏகபோக அரசியல் சந்தையில் தமிழக மெதுவேக ரயில் ஓட்டிகளின் வகிபாகம் என்ன?
இன்றைய தமிழ்த்தேசிய மெதுவேக தாராளபோட்டிச் சந்தை வண்டி ஓட்டத்தில் இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
இந்தக்காட்சிகளை மீளக்காட்ட காலக்கண்ணாடி கடந்த காலத்தைக் காட்ட திரும்புகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம்!
ஸ்டாலின் நூறுநாள் சாதனை!!
இலங்கையில் யு.என்.பி.யும் எஸ்.எல்.எப்.பி யையும் போன்றே மாறி மாறி ஆட்சிக்கு வரும் பாரம்பரியம் கொண்டவைதான் தமிழகத்தின் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். தமிழக இருதரப்பு ஆட்சியும், அரசியலும் ஊழல்களும், மோசடிகளும், சட்ட ஒழுங்கு மீறல்களும் நிறைந்தவை. இவற்றை எல்லாம் கடந்து ஈழப்போராட்டத்தில் இக்கட்சிகளின், அவர்களின் தலைவர்களின் நிலைப்பாடும், அணுகுமுறைகளும் என்ன என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது.
எம்.ஜி.ஆருக்குப்பின்னர் அ.தி.மு.க.வில் பல தலைமைத்துவ மாற்றங்கள் ஜானகி அம்மா முதல் எடப்பாடி வரை ஏற்பட்டுள்ளன. தி.மு.க.வில் அறிஞர் அண்ணா, கருணாநிதி இவர்களுக்குப் பின்னரான தலைமைத்துவமாக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த கால தமிழக கட்சி அரசியல் தலைமைகள், ஈழப்போராட்டத்தில் கொண்டிருந்த அக்கறை, ஏற்பட்ட விளைவுகள், ஸ்டாலினின் சம கால அரசியல் தலைமைத்துவம் என்பன குறித்த விம்பங்கள் கண்ணாடியில் விழுகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான பல திட்டங்களை முன்மொழிந்திருப்பதுடன், மறுவாழ்வு மையங்களையும் சீரமைக்க உள்ளார். வெறும் ஒரு வேளைக்கஞ்சிக்கு வழங்கப்பட்ட அன்றாட உதவிகளைவிடவும், உருப்படியான குறுங்கால, நீண்டகால திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் தி.மு.க ஆட்சியிலோ, அ.தி.மு.க. ஆட்சியிலோ இல்லாத விடயங்கள் இவை. “இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்ற அவரின் கூற்றின் வெளிப்பாடு இது.
“தமிழக அரசினால் அதிகாரம் மிக்க ஆணைக்குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். இந்த ஆணைக்குழு இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு நலன்பேணல், மற்றும் நீண்டகாலத்தில் அவர்களின் இந்திய குடியுரிமை, இலங்கையில் மீள்குடியேற்றம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்.” ஆம்! ஸ்டாலின் பூனைக்கு மணி கட்டுவது தன்னால் தான் முடியும் என்பதை நிரூபித்துள்ளார். 2006 இல் கலைஞர் கருணாநிதி அகதிகளுக்காக ஆரம்பித்த புதிய பல திட்டங்களுங்குப் பின்னர் ஸ்டாலின் அரசே ஈழத்தமிழ் அகதிகளைத் திரும்பிப் பார்த்திருக்கிறது.
மறுவாழ்வு நிகழ்சித்திட்டங்களுக்காக வரலாற்றில் இல்லாதவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(*) பழுதடைந்துள்ள 7,4 69 வீடுகள் 231 கோடி 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்படும்.
(*) மறுவாழ்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய். அத்தோடு இலங்கைத்தமிழர் வாழ்க்கை மேம்பாட்டுநிதியாக வருடாவருடம் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
(*) கல்வி மேம்பாட்டுநிதி: திறமை அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கான விடுதிக்கட்டணங்களை தமிழக அரசு பொறுப்பேற்கும்.
(*) புலமைப் பரிசில் உதவித்தொகை, தொழில்நுட்ப கல்லூரி, கலை, விஞ்ஞான பட்டப்படிப்பு, பட்டதாரி தரத்திலான தொழில்கல்வி ஆகிய துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருடாந்த செலவு 1.25 கோடி ரூபாய்.
(*) 50 பொறியியல் கற்கைநெறி மாணவர்களுக்கும், 5 விவசாய பொறியியல் கற்கைநெறி மாணவர்களுக்குமான நிதி 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
(*) 5,000 மாணவர்களுக்கான துறைசார் தேர்ச்சி பயிற்சிக்கு 10 கோடி ரூபாய்.
(*) குடும்பத்தலைவர்கள், வளர்ந்தோர், சிறுவர்களுக்கான உதவிக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேலதிக செலவு 21.5 கோடி ரூபாய்.
இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவிடயமாக உள்ளது வைத்தியக் கல்லூரிகளுக்கான மாணவர்களுக்கு எந்த சலுகையும், கோட்டாவும் அறிவிக்கப்படவில்லை. இதையே பழ.நெடுமாறன் அண்மையில் கோரியிருந்தார்.
நாடுதிரும்பும் இந்திய வம்சாவழியினருக்கு வைத்திய பட்டப்படிப்புக்கான ஒரு கோட்டா ஒதுக்கீடு ஏற்கனவே இருந்தது. இது இலங்கைத் தமிழர்களுக்கானது அல்ல. அப்படியிருந்தும் அதனை கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கியிருந்தார். ஆனால் பின்னர் இந்த இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு இல்லாமல் செய்துவிட்டது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
வரலாற்றில் இவ்வாறான பாரிய மறுவாழ்வு திட்டம் ஒன்றை முதன்முதலாக அனைத்து அடிப்படை வசதிகளையும், கல்வி, தொழில்வாய்ப்பையும் உள்ளடக்கி அறிமுகப்படுத்துகின்ற ஸ்டாலின் அரசை அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் இலங்கைத் தமிழர்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது. எதனை, எப்போது தனது அதிகாரத்திற்கு உடபட்டு செய்யவேண்டுமோ? செய்ய முடிந்ததோ? அதை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியே.
மேற்குலக புலம்பெயர்ந்த வாழ்வியலில் பழகிப்போனவர்கள் இதை “யானைப் பசிக்கு சோளப்பொரியாக” பார்க்கக்கூடும். ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மறுவாழ்வு நிலையங்களில் பல தசாப்தங்களாக வாழ்கின்ற அந்த மக்களுக்குத்தான் அதன் வலிதெரியும். அந்த வலியை ஸ்டாலினின் திட்டங்கள் எந்தளவுக்கு ஒரு ஒத்தடமாக குறைக்கும் என்பது அந்த மக்களுக்குத்தான் புரியும்.
பாண்டிபஜார் சிவப்பு சிக்னல்!
குறைபாடுகள் அற்ற அரசியல் தலைமைகள் இன்றைய உலகில் யாரும் இல்லை. ஒப்பீட்டளவில் குறைபாட்டின் அளவில் மாத்திரம்தான் சிறு வேறுபாடுகளைக் காணமுடியும். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைமைகளும், அவர்களின் ஆட்சிகளும், அரசியலும் விதிவிலக்கல்ல.
ஈழப்போராட்ட விடயமாக பொதுவாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைமை மீதான பழியைவிடவும், தி.மு.க. மற்றும் அதன் தலைமை மீதே அதிக பழிசுமத்தப்படுவது தொடர்கிறது. இதற்கான காரணங்கள் என்ன?
அ.தி.மு.க, தி.மு.க.வை விடவும் ஈழப்போராட்டத்திற்கும், ஈழமக்களுக்கும் எதைச் செய்ததால் அது சுமக்கும் பழி குறைவானது?
அல்லது அ.தி.மு.க.வைவிடவும், ஈழம் தி.மு.க.வை அளவுக்கு அதிகம் நம்பியதனால் ஏற்பட்ட அதிருப்தியா?
இந்திய துணைக்கண்டத்தில் ஒரு மாநில அரசு என்றவகையில் சட்டம், ஒழுங்கு அடிப்படையிலான அதிகாரத்திற்கு உட்பட்டு வேறு எந்த ஆதரவை அவர்கள் வழங்கி இருக்க முடியும்?
அப்படி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு தமிழகத்தால் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கு ஈழப்போராட்ட தரப்பின் வகிபாகமும் இருந்ததா? இல்லையா? என்ற வினாக்களை எழுப்பவேண்டி உள்ளது.
ஏற்கனவே கூறியது போன்று 1982, மே, 19 இல் பாண்டிபஜார் “சிவப்பு சிக்னல்” சென்னைக்கு மட்டுமல்ல டில்லிக்கும் ஒரு அபாயச்சங்கை ஊதியது.
டில்லி அரசினதும், றோ வினதும் கழுகுப்பார்வையை இந்த சிவப்பு சிக்னல் தமிழகம் நோக்கி திருப்பியது. தமிழக அரசுகள் விரும்பியோ விரும்பாமலோ கத்திமுனையில் ஈழவிடயத்தை அணுகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
1983 கறுப்பு யூலையைத் தொடர்ந்து ஈழவிடுதலை அமைப்புக்கள் பலவும் சென்னையில் குடியேறின. அது மாத்திரமன்றி புலிகள், புளட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ என்பன சென்னையை பங்கு போட்டு தமது ஆளுமைக்குட்பட்ட வகையில் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தன. இனக்கலவரத்திற்கு காரணமான விடுதலைப்புலிகளின் திருநெல்வேலித் தாக்குதல் தமிழகத்தில் அவர்கள் மீதான ஆதரவு அலையை ஏற்படுத்தியிருந்தது.
பாண்டிபஜார் சம்பவம் வரையும் கண்டும் காணாததுமாக இருந்த தமிழக அரசுகளும், தலைமைகளும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறைந்த பட்சம் டில்லி, கொழும்பு அரசுகளுக்கு தாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்ற செய்தியை சொல்ல வேண்டி இருந்தது.
மறுபக்கத்தில் கைது செய்யப்பட்ட பிரபாகரனையும், உமாமகேஸ்வரனையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இருவரையும் விடுதலை செய்ய நீதித்துறையில் தலையிட்டார். கிட்டுவும், புலேந்திரனும் தங்கள் தலைவர் விடுதலை செய்யப்படாவிட்டால் உயர்கட்டிடத்தின்மேல் ஏறி பாய்ந்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள். விடுதலையின் பின் பிரபாகரன் மதுரையிலும், உமாமகேஸ்வரன் சென்னையிலும் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். 2009இல் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் வழக்கு நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டது.
ஈழப்போராட்டத்தில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும்!
1983 கலவரத்தை தொடர்ந்து ஈழப்போராட்ட இயக்கங்களில் ஏற்பட்ட வீக்கம் தமிழகத்தில் தெளிவாக உணரப்பட்டது. கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழின உணர்வின் அடிப்படையில் அனைவரும் ஆதரித்தனர்.
நிதி, பயிற்சி, ஆயுதம், கூட்டங்களுக்கான இடவசதிகள், பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டன.
தமிழீழ ஆதரவாளர் அமைப்பு TESOஅமைக்கப்பட்டு 1986 மேமாதம் நான்காம் திகதி மதுரையில் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் பெருமுயற்சியினால் இந்திய முக்கிய அரசியல் ஆளுமைகள் மாநாட்டில் பங்கேற்றார்கள்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் என்.டி.ராமராவ்,பஞ்சாப்பைச் சேர்ந்த எச்.என்.பாஜ்குணா, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கஷ்மீர், கர்நாடக மாநில முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டமாநாடு இது. இங்கு உரையாற்றிய கலைஞர் கருணாநிதி தமிழீழத்திற்கான சுயாட்சி உரிமையை வலியுறுத்தி இருந்தார்.
மாநாடு இடம்பெற்று இரண்டே நாட்களில் ரெலோ தலைவர் சிறிய சபாரெட்ணம் புலிகளால் கொல்லப்பட்டார். கலைஞர் “சிறி சபாரெட்ணத்தின்” உயிருக்கு ஆபத்து விளைவிக்கவேண்டாம் என்ற வேண்டுகோளை புலிகளின் முக்கியஸ்தர் பேபி சுப்பிரமணியம் ஊடாக பிரபாகரனுக்கு அனுப்பி இருந்தபோதும் அதை பிரபாகரன் அலட்சியம் செய்தார். ரெலோ தலைவர் கொல்லப்பட்டார். இதன் மூலம் உலகத் தமிழர் தலைவர் ஒருவரின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ ஆதரவு குரல் ஒன்றையும் புலிகள் நிராகரித்தனர்.
எப்படி எம்.ஜி.ஆர். புலிகளுடன் நெருக்கமான உறவைப்பேணினாரோ அவ்வாறே ரொலோவுடனும், தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட மற்றைய அமைப்புக்களுடனும் கருணாநிதி நெருக்கமான உறவைப்பேண விரும்பினார்.. மார்க்சிஸ ரீதியான கொள்கை வேறுபாடுகள் காரணமாக புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன இருவரில் இருந்தும் சற்று விலகியே நின்றன எனலாம். எனினும் அனைத்து அமைப்புக்களினதும் ஒற்றுமையை கருணாநிதி விரும்பினார். இதனால் புலிகளைத் தவிர மற்றைய இயக்கங்களுக்கும் கருணாநிதிக்கும் இடையில் சுமுகஉறவு நிலவியது. இயலுமான உதவிகளையும் அவர் செய்யத்தவறவில்லை.
மக்கள் திலகம் எம்ஜிஆர் விடுதலைப்புலிகளுக்கு நான்கு கோடிரூபா பணம்கொடுத்தார். அவ்வப்போது மற்றைய வசதிகளையும் ஏற்பாடு செய்தார். கே.பி.யின் கருத்துப்படி புலிகளுக்கு 13 கப்பல்கள் ஓடின. எம்.ஜி.ஆர் கப்பலை கொள்வனவுசெய்து, அதிமுக அமைச்சர்களூடாக பக்குவமாக நிர்வாக ரீதியான அனைத்துச் சிக்கல்களையும் அறுத்துக்கொடுத்தார்.
ஆனால் இவற்றைச் செய்வதற்கு முன்னர் எம்ஜிஆர் பிரபாகரனுக்கு ஒரு நிபந்தனை விதித்திருந்தார். கருணாநிதியுடன் எந்த உறவும் வைக்கக் கூடாது என்பதும், அவர் தரும் பணத்தை வாங்கக்கூடாது என்பதும் அந்த நிபந்தனைகள். இதனால் பிரபாகரன் தன் வாழ்நாளில் கருணாநிதியை சந்திக்கவே இல்லை. கருணாநிதி வழங்க முன்வந்த பண உதவியை எம்ஜிஆரின் நிபந்தனையின் கீழ் புலிகள் நிராகரித்தனர்.
இங்கு கருணாநிதி எல்லா இயக்கங்களையும் ஓரளவு சமமாக மதித்து, ஒற்றுமைக்காக உழைத்த போது எம்ஜிஆர் ஒற்றுமைக்கு எதிராக புலிகளை வளர்த்து விட்டாரா?
ஒரு விடுதலை அமைப்பை பணம் கொடுத்து வாங்கி தனது கட்சி அரசியலுக்காகவும், எதிர்தரப்பு அரசியலுக்கு எதிராகவும் பயன்படுத்தினாரா? என்றகேள்விகள் எழுவது இயல்பாகிறது.
அப்படியானால் சகோதரப்படுகொலைகளுக்கும்,சகோதர இயக்க மோதல்களுக்கும் பின்னணியில் மக்கள் திலகம் இருந்துள்ளார் என்ற முடிவுக்கு வரமுடியுமா?
இன்னொரு வகையில் பார்த்தால் புலிகளை மட்டும் வளர்த்து விட்டதன் மூலம் எம்ஜிஆர் ஜனநாயக பன்னினத்தன்மை அரசியலுக்கு எதிராக ஏகபோக அரசியலை ஆதரித்து,ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் வன்முறைகள் அத்துமீறிய நிலையில் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இந்திராகாந்தியை தனித்தனியாக சந்தித்து ஈழத்தமிழர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர் என்பது இருவரும் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்துகிறது.
2005 இல் வாஜ்பாய் அரசின் பங்காளிக்கட்சியாக தி.மு.க. இருந்த போது “செக்கோசிலவாக்கியா” மாதிரியை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் கருணாநிதி. அப்போது அங்கு சமாதானமாக செக்கோசிலவாக்கியா செக்குடியரசாகவும்,சொலவாக்கியாவாகவும் இரு நாடுகளாகப் பிரிந்து சென்றன.
2012 இல் TESO தீர்மானத்தை மீள் நினைவூட்டி கோசவோ,மொன்ரனெக்ரோ, கிழக்குத்திமோர்,தென்சூடான் போன்று சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஈழம்அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார் கலைஞர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை இனத்சுத்திகரிப்பு என்றே கருணாநிதி கண்டித்தார். இந்திய படைகளின் அத்துமீறல்களை ஆட்சேபித்து வடக்குகிழக்கு முதலமைச்சர் பதவியை வரதராஜப்பெருமாள் இராஜினாமாச் செய்யவேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையிடம் கோரியவர் கலைஞர். அதேவேளை பத்மநாபா குழுவினர் கொல்லப்பட்டபோது அதை அவர் கண்டிக்கவும் தவறவில்லை. கருணாநிதி மிகவும் நாகரிகமயப்படுத்தப்பட்ட,வன்முறைகளுக்கும் எதிரான, பன்முக அரசியல் தலைவர் என்று தனது பதிவொன்றில் கூறுகிறார் என். ராம்.
இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொள்ள செய்வதற்கு ராஜீவ் அரசாங்கம் எம்ஜிஆர் உதவியை நாடியது. பிரபாகரன் எம்ஜிஆர் இன் சமாதான முயற்சியை நிராகரித்தார். 1989 யூலை 29 ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸும்,எம்ஜிஆரும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது. இதில் உரையாற்றிய எம்ஜிஆர் “இந்திய சமாதானப்படை ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்காக அங்கு சென்றிருக்கிறது” என்று அறிவித்தார்.
1991 ஜனவரி 30ம் திகதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தொங்கு ஆட்சி நடாத்திய பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில் கலைக்கப்பட்டது. காங்கிரஸும், அதிமுகவும் கொடுத்த அழுத்தத்தினாலும், தவறான தகவல்களாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 356 பிரிவை தவறாகப் பயன்படுத்தி கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதாக எழுதியுள்ளார் எஸ்.கே.மிர்ஷா.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுகிறதா? என்று தமிழக ஆளுனரிடம் பாதுகாப்பு நிலவர அறிக்கை கோரப்படாமலே இந்த முடிவை சந்திரசேகர் எடுத்திருந்தார். இது தவறானது என்றும் அழுத்தங்கள் காரணமாகவே தான் இதைச் செய்ததாகவும் சந்திரசேகர் தெரிவித்ததாக அவரது முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே .மிர்ஷா எழுதிய “FLYING IN HIGH WIND”என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1991 ஜனவரி 10ம் திகதி பிரதமர் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இது:
“I HAVE INFORMATION THAT THE CHIEF MINISTER HAS GONE TO THE LTTE HEAD QUARTERS NOT ONLY IN TAMIL NADU BUT EVEN IN JAFFNA. THIS IS SOME THING VERRY SERIOUS ”
கருணாநிதி நிதி யாழ்ப்பாணத்திற்கு வந்து புலிகளைச் சந்தித்தார் என்ற பொய்த்தகவலை அதிமுக, காங்கிரஸ் ஊடாக வழங்கியிருந்தது.
புலிகளுடன் கருணாநிதிக்கு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக அதிமுக தலைமையும், வெளியில் இருந்து சந்திரசேகர் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்த காங்கிரஸும் நடாத்திய சுய இலாப கட்சி அரசியல் இது. செய்ய வேண்டியதை எல்லாம் காங்கிரஸ் சந்திரசேகரைக் கொண்டு செய்து விட்டு பின்னர் முட்டைக்கழட்டியதால் சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது.
வி.பி.சிங் ஆட்சியில் இந்தியப்படை வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி முன்வைத்தார். “சமாதானத்தை ஏற்படுத்துவது இராணுவத்தின் வேலையல்ல. அது ஒரு இராஜதந்திர அரசியல் செயற்பாடு. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் சரியான சமாதானத்தை ஏற்படுத்தியதில்லை” என்று வி.பி.சிங் அரசுக்கு அறிக்கையிட்டவர் கலைஞர். இந்திய படையினர் இலங்கையில் நடாத்திய அனைத்து அத்துமீறல்களையும் கருணாநிதி கண்டித்தார். இதனால் அதிருப்தி அடைந்திருந்த அவர் இந்திய படையினர் நாடு திரும்பிய போது அவர்களை வரவேற்கச் செல்லவில்லை.
1991 இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் யூனில் நடக்க இருக்கையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி மே, 21ம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். திமுக கூட்டணி 1957க்குப் பின் வரலாற்றில் வெறும் 7 தொகுதிகளுடன் படுதோல்வியடைய, ராஜீவின் அனுதாப அலை அதிமுகவை 225 தொகுதிகளால் அரியணை ஏறியது.
எந்தக் கருணாநிதியை புலிகள் எம்.ஜி.ஆரின் பணத்துக்காக நிராகரித்தார்களோ, அவரின் இறப்பின் பின்னர் அந்தக் கருணாநிதியை நாடினர். வன்னிக்கு வந்திருந்த வை.கோ.விடம் பிரபாகரன் தன்கைப்பட, புலிகள் இயக்கத்தின் கடிதத்தலைப்பில் கருணாநிதிக்கு எழுதிய ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பினார்.
“22.2.1989, தமிழீழம்.” என்று திகதியிடப்பட்ட கடிதம் அது. “எனது மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய அண்ணா அவர்களுக்கு…. என்று கருணாநிதியை விழித்திருந்தார் பிரபாகரன். வாசித்தபின் கருணாநிதி அதை கிழித்தெறிந்தார்.
இதன் மூலம் ஈழப்போராட்டத்தை அனைத்து இயக்கங்களும் இந்தியாவிடமும், தமிழகத்திடமும் ஒப்படைத்திருந்தன என்பதும், மத்திய, மாநில அரசுகள் எந்த வேறுபாடுகளும் இன்றி தமது அரசியலுக்காக ஈழப்போராட்டத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கி இருந்தன என்பதையும் மறுதலிப்பது கஷ்டம். இதனால்தான் ஈழத்தமிழர்கள் வெறுமனே தமிழகத்தலைமைகளை மட்டும் நோக்கி தமது சுட்டுவிரலை நீட்டமுடியமா? மற்றைய நான்கு விரல்களும் எமது மனச்சாட்சியை குத்துகின்றனவா இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.
“வண்டியும் ஒருநள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்”