ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்……! (காலக்கண்ணாடி 54)

ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்……! (காலக்கண்ணாடி 54)

— அழகு குணசீலன் — 

மங்கள நினைவு.! 

ஹேமாவின் பையன்! நான் மங்கள பேசுகிறேன்…!! 

( *இது மறைந்த மூத்த அரசியல்வாதி மங்கள சமரவீர, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தனது 30 ஆண்டுகால அரசியல் பயண நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வின் போது 28, பெப்ரவரி, 2019இல் ஆற்றிய உரை. முப்பது ஆண்டுகள் கடந்து வந்த பாதையை இங்கு திரும்பிப் பார்க்கிறார் அவர். அவருடைய கனவுகள் எந்தளவுக்கு நனவாகி இருக்கின்றன?  

தனது தந்தையின் வழியிலேயே இடதுசாரி அரசியல் தளத்தில் பிரவேசித்து இறுதியில் முதலாளித்துவ ஐக்கிய தேசிய மற்றும் சஜித் பிரேமதாசவின் கட்சியில் சங்கமிக்கிறார் மங்கள. இந்த நகர்வு உண்மையில் கொள்கை ரீதியானதா? அல்லது வெறுமனே தனிநபர் சுய அரசியல் நலன்சார்ந்ததா? அல்லது இரண்டும் கலந்ததா? 

ஒருவகையில் மக்களவின் அரசியல் பிரவேசமும்  குடும்ப அரசியல் சார்ந்ததாகவே உள்ளது. இது இனங்களுக்கு அப்பால் இலங்கையின் அரசியலில் ஒரு பொதுப்பண்பாகும். மங்கள தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்வதுடன், சுயவிமர்சனமும் செய்கிறார். தனக்குத்தானே தோளிலிலும் தட்டிக்கொள்கிறார்.  

ஆரம்பத்தில் சில பத்தாயிரம் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் பிரவேசித்த அவர், ஒரு காலகட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அரசியல் வாதியானார். இந்த அமோக மக்கள் ஆதரவை சாத்தியப்படுத்தியவை எவை? 

அவரது மரணம் பல பக்க அரசியல் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. சாதகமாகவும், பாதகமாகவும், ஏன்? இரண்டையும் கூட்டி இரண்டால் பிரித்தும் சிலர் பார்க்கின்றனர். மங்கள பல்வேறு முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர். இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை வேண்டி நின்றவர்(?). நல்லாட்சியின் முக்கிய பங்காளியும் கூட. இந்த நிலையில் மங்களவின் அரசியல் பற்றிய அரங்கம் வாசகர்களின் மதிப்பீடு என்ன? 

பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த இந்த உரையானது, பெருமளவுக்கு அவரது மூல உரையில் இருந்து விலகாத தழுவலாக அமைகிறது. இடையிடையே வாசகர்களின் குழப்பத்தை தவிர்ப்பதற்காக சில தகவல்கள் ஆங்காங்கே செருகப் பட்டுள்ளன. செருகல்கள் மூல உரையின் அடிப்படைக் கருத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டா.*) 

—————————-

பேரன்புக்குரிய அம்மணிகளே! மரியாதைக்குரிய பெரியவர்களே!! 

முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த மாதம் நான் முதன்முதலில் பாராளுமன்னத்திற்குள் நுழைந்தபோது என் தலையில் கனவுகள் நிறைந்திருந்தன. அவை என் அன்பான நாட்டிற்கானதும், நம் மக்களுக்கானதும், எனக்கானதுமான கனவுகள். 

அப்போது வடக்கில் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. அதற்கு சமமான துன்பகரமான இளைஞர் எழுச்சியில் தெற்கு மூழ்கியது. எல்லா இலங்கையர்களும் தங்கள் சாதி, வர்க்கம், இனம், அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் நல்லிணக்கத்துடனும், கௌரவத்துடனும் வாழக்கூடிய அமைதியை நான் பெரும்பாலும் கனவு கண்டேன். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நம்பமுடியாத ஆரம்பகால பொருளாதார முன்னேற்றங்கள் வடக்கில் ஒரு தனிநாடு, தெற்கில் ஒரு “மார்க்சிஸ்ட் வயிற்றோட்டம்” என்ற பெயரால் வீணடிக்கப்பட்டன. தினசரி கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மதிப்புமிக்க உயிர்கள் இழக்கப்பட்டன. 

பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள், மரியாதைக்குரிய மனிதர்கள் போன்றே நானும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தேன். 

நான் சிறு வயதில் இருந்தே ஒரு கனவு காண்பவனாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உண்மையில் எனது ஆரம்பகால கனவுகளில் ஒன்று பந்தய ஓட்டுனராக ஆகவேண்டும் என்பது. ஆனால் என் வாழ்க்கையில் நான் ஓட்டியதில்லை. 

பின்னர், சென்ரல் சென்.மார்டின்ஸில் ஒரு மாணவனாக லண்டன் மற்றும் பாரிஸை புயலாக  தாக்கும் வடிவமைப்பாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். எனினும், 1980இல் இலங்கையில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டபிறகு, நான் இங்கே என் வாழ்க்கையைத் தொடர முடிவுசெய்தேன். 

பொருட்களுக்கான கியூ வரிசைகள் மற்றும்  தட்டுப்பாடுகள் போய்விட்டன. புதிய தசாப்தம் தோன்றியதால் இலங்கை நம்பிக்கையும், வாக்குறுதியும் நிறைந்த நாடாக இருந்தது. இது ஒரு வெற்றிகரமான வடிவமைப்பாளராக வேண்டும் என்ற எனது கனவைத்தொடர 1981இல் வீடு திரும்ப என்னைத் தூண்டியது. 

நான் மறைந்த மாண்பு மிகு விஜயபால மெண்டிஸ் அவர்களின் புடவைத் தொழில்துறை அமைச்சின் ஆலோசகராக, இலங்கை புடவைக் கைத்தொழிலை ஊக்குவித்து வருகைதரும் விரிவுரையாளராக அழகியல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் சேர என்னை அழைத்த சிறிய ஜவுளிகள் வடிவமைப்பாளர் சந்திரா தேனுவேராவை சந்தித்தேன். 

என் தந்தை மகாநாமாவும் ஒரு கனவு காண்பவர். பிறக்கும் போதே டொன் மோர்டன் (DON MORTON) என்று பெயரிடப்பட்டு, கொழும்பிலுள்ள சென்.ஜோசப் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு இளம் வழக்கறிஞராகத் தொடங்கி ஒரு வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையின் எதிர்பார்ப்புக்காக அவரது பெயரை மகாநாமா என்று மாற்றினார்.  

அவர் அந்தக் காலத்தின் பல இளைஞர்களைப் போலவே அவரது இளமையில் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். ஒரு வக்கீலாக அவர் காவல்துறை கொடுமை மற்றும் சாதி தொடர்பான வன்முறைகளுக்கு இலவசமாக ஆஜரானார். 1952இல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். 

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் நீதித்துறை துணை அமைச்சராக எனது தந்தை 1956இல் மரண தண்டனையை ஒழிக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் மூலம் 20ம் இலக்க தண்டனைச் சட்டத்தில் ஆயுட்காலத் தண்டனை உள்வாங்கப்பட்டது. இது அவரது மரபு மற்றும் நேர்மையான, நேரடி உரையாடலுக்கான அவரது நற்பெயருக்கு காரணமாக அமைந்தது. 

1965இல் அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் டட்லி சேனநாயக்காவினால் கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது இறப்புக்கு சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் என் வரவு சாத்தியமாகியது. 

என் அம்மா ஹேமா! ஒரு கனவு காண்பவர் அல்ல. ஆனால் ஒரு நடைமுறை சார்ந்த மனிதம் மற்றும் இரக்கமுள்ள நபர். மாத்தறை மக்கள் என் தந்தையை மதித்திருந்தார்கள் என்றால் என் தாயை நேசித்தார்கள் என்று சொல்வேன். 

1950களில் மாத்தறை நகரசபை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டபோது, இலங்கையில் உள்ளூராட்சி அரசியலில் பிரவேசித்த முதல் பெண்களில் ஒருவர். இருப்பினும் அவளுடைய புதிய பாத்திரம் மிகவும் கட்டுப்பாடானது மற்றும் முறையானது என்று அவர் உணர்ந்ததால் அவர் தனது முழுப் பதவிக்காலத்தையும் நிறைவேற்றவில்லை. அவர் ஒரு மனிதர். என்னுடைய சில சிறந்த குணங்கள் அவளிடம் இருந்து பெறப்பட்டவை என்று நான் நினைவுகூர விரும்புகிறேன். 

என் அம்மா தனது விருப்பங்களை என் மீது திணிக்கவில்லை. நான் 19 வயதில் லண்டனில் இருந்து அவருக்கு ஒரு மடல் எழுதியது நினைவிருக்கிறது. நான் காதலிக்கிறேன் என்று பிரமாண்டமாக அறிவித்து ஒரு வாரம் கழித்து அம்மாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. அந்த அற்புதமான பதில் இது! 

“யார் உன்னை சந்தோஷப்படுத்துகிறாரோ அவர் எப்போதும் என்னை மகிழ்விப்பார்”. 

அவள் வகுப்புவாதமற்றவள். கலப்பு திருமணங்கள் வெறுக்கப்பட்ட காலத்தில் என் அத்தை மனேல் தமிழ் வழக்கறிஞரும் கின்னஸ் சாதனை படைத்தவருமான குமார் ஆனந்தனை (ஆழிக்குமரன் ஆனந்தன்) திருமணம் செய்தார். இவர் 18 வயதில் பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்தவர். புதிதாக திருமணமான தம்பதியரை திறந்த இதயத்துடனும் கரங்களுடன் வரவேற்ற முதல் குடும்ப உறுப்பினர்  என் தாய். 

1988இல் புதிதாக நியமிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக, நான் மாத்தறையில் முதன்முதலில் கட்சித் தொண்டர்களை சந்தித்தேன். அவர்களில் பலர் என்னை “ஹேமாவின் பையன்” என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். 

எனக்கு அவர்களின் ஆதரவு தேவைப்பட்டால் தங்களிடம் வருமாறு சொன்னார்கள். என் அன்னையின் பெயருடன் இணைத்து என்னை “ஹேமாவின் பையன்” என்று குறிப்பிடும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள். அப்படி அழைக்கப்படுவதில் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். 

முப்பது ஆண்டுகளுக்கு பிறகும், நான் இன்னும் கனவு காண்பவனாகவே இருக்கிறேன். எனது நாட்டிற்காக நான் கண்ட பல கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் சில சிறப்பு நபர்களை இணைக்கும் பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். அது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அனுரா பண்டாரநாயக்க ஆகியோர் உருமறைப்பின் மூலம் மறைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல்வாதியை என்னில் கண்டிருக்க வேண்டும். அவர்கள்தான் 1988இல் மாத்தறைக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக என்னை முதலில் அழைத்தார்கள். 

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள கொழும்பு டார்லி றோட்டில் நான் கலந்து கொண்ட முதல் சந்திப்பில் மகிந்த ராஜபக்சதான் என்னை முதலில் வரவேற்று மற்றைய அமைப்பாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். 

நாங்கள் மாத்தறையில் உள்ள எங்கள் வீட்டில் அன்னையர் முன்னணியை உருவாக்கினோம். அங்கு நாங்கள் இணைச் செயற்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். பின்னர் என்றென்றும் நீடிக்கும் என்று நான் நினைத்த ஒரு நட்பை உருவாக்கினோம். பல வருடங்களுக்கு பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நான் விலகியதற்கு அக்காலத்தின் சிறந்த அரசியல் நண்பரே காரணம் என்று எனக்கு அப்போது தெரியாது. 

இன்று பாலத்தின் கீழ் நிறைய தண்ணீர் பாய்கின்ற போதிலும், அரசியல் வர்ண மாலையின் எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருந்தாலும், நான் இன்னும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஒரு நண்பராக கருதுகிறேன். அவர் இப்போது எங்களுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

என் அரசியல் விளையாட்டு சாகசத்தில் மாற்றத்தை செய்தவர் சந்திரிகா குமாரதுங்க ஆவார். சோவியத்பாணி சோஷலிசம், தீவிர சிங்கள தேசியவாதம், மற்றும் மூடிய பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு ஆபத்தான அரசியல் கட்சிக்கு நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொண்டுவந்தார். 

சந்திரிகா குமாரதுங்க 1993ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில், தெற்கில் சிங்கள பௌத்த வாக்காளர்களுக்கிடையில் இன மோதலுக்கான தீர்வு சமஸ்டியே என்று துணிந்து பேசிய ஒரு முதல் அரசியல்வாதி என்பதை நான் இங்கு உரத்துச் சொல்ல விரும்புகிறேன். 

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவினார். மற்றும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை 1993இல் போர் தொடங்கிய பின் மந்தப்படுத்தினார். 1997இல் இலங்கையில் தொலைத்தொடர்பு ஒரு வளரும் நாட்டில் தனியார் மயப்படுத்தப்பட்டது. 

கொழும்பை அழகுபடுத்தவும் மற்றும் வடிவமைப்பு செய்யவும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காலிமுகத்திடலை மீண்டும் பசுமையாக்குதல், பேய்ரா ஏரியை மேம்படுத்தல் மற்றும் மாளிகாவத்தையிலுள்ள சஹாஸ்புர குடியிருப்புக்களுடன் குடிசை மறுவடிவமைப்பு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இன்று கொழும்பு ஆசியாவின் மிக அழகான நகரமாக மாறியுள்ளது. 

1995இல் ஈழப்போர் -3 வெடித்தபோது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் வேண்டுகோளின் பேரில், “சுது நெலும்” வெண்தாமரை இயக்கம் நீடித்த சமாதானத்தை அடையும் இலக்கில் சிங்கள கிராமங்களில் ஒரு அடித்தள பிரச்சார இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது.  

யாழ்ப்பாண நூலகத்தைப் புனரமைப்பதற்கான “புத்தகம், செங்கல்” திட்டம் இந்த பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாகும். லக்ஸ்மன் கதிர்காமரும் நானும் இணைந்து செயற்பட்ட ஒரு குழுவால் நூலகம் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட பெருமையாக உள்ளது. 

கனவுகாணத் துணியாத ஒரு காலத்திற்குப்பிறகு, 2010இல் தான் நான் ஐக்கியதேசியக் கட்சியில் இணைந்தேன். பல ஆண்டுகளாக அதன் தலைவரைப்பற்றி சில முரட்டுத்தனமான “விஷயங்களை” கூறினாலும் திரு.ரணில் விக்கிரமசிங்க என்னை தனது பெரிய கட்சிக்கு அன்பாக வரவேற்றார்.   

இறுதியில் சொந்த வீட்டிற்கு வந்திருப்பதாக நான் உணர்ந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியில் எனது பல அரசியல் நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதும், ஊக்கம் அளிக்கக்கூடியதுமான தலைவரையும் ஒரு அணியையும் நான் கண்டேன். ஐக்கிய தேசியக் கட்சியில் நான் மீண்டும் “கனவு காணத்துணிந்த” ஒரு கட்சியைக் கண்டேன். 

2015இல் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் மூலம், பல தசாப்தங்களாக எங்களைத் தவிர்த்து வந்த பல கனவுகளை நிறைவேற்ற நாடு முன் எப்போதும் இல்லாத வாய்ப்பைப் பெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை தனது ஜனநாயக நற்சான்றிதழ்களை மீட்டெடுத்தது. சட்டத்தின் ஆட்சியை நிறுவி நல்லிணக்க செயல்முறையை மிக முன்னுரிமைக்கு உயர்த்தி உள்ளது. அவ்வப்போது பின்னடைவுகள் இருந்தபோதும் ஜனநாயகம், நல்லிணக்கம் என்ற அடிப்படையில் மக்களுக்கான  ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி இலங்கை நகர்கிறது. 

சமீபத்திய 51 நாள் அரசியலமைப்பு நெருக்கடியில்  நமது பாராளுமன்றம், நீதித்துறையின் சுதந்திரத்தை நாட்டிற்கும், உலகிற்கும் நிரூபித்தது. மேலும் இலங்கை இப்போது ஒரு முதிர்ந்த, நிலையான ஜனநாயகமாக மாறியுள்ளது. 

30 வருடங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் எனக்கு வருத்தமும், ஏமாற்றமும் இல்லை என்று சொன்னால் அது பொய்யானது. ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையான மனித இயல்பு. ஆனால் நம்பிக்கை இழக்காமல் இருப்பது முக்கியம். இழந்தவராக இருக்கக்கூடாது. ஒரு சிறந்த பிரகாசமான எதிர்காலத்தைக் கனவு காண்பதை நிறுத்தாமல், முன்னேற்றத்தை அடைவதில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். 

அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் அல்லாதவர்கள் எல்லோரும் நம்தேசத்தை வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றுவதற்கும், நமது தேசத்துக்கான நமது கனவுகளை நனவாக்குவதை உறுதிப்படுத்தும் உறுதியுடன் பணியாற்றுவதற்குப் பொறுப்பானவர்கள். அமைதியான, நிலையான, நல்லிணக்க மற்றும் வளமான இலங்கை அனைவரினதும் கண்ணியத்தை நிலைநாட்டுவதாக அமையவேண்டும். 

இறுதியாக, 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதியாக என்னை நம்பிக்கையுடன் இருத்திய மாத்தறை மக்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் ஆதரவு, வலிமை, உத்வேகம் என்னை நானாக மாற்றியுள்ளது. என் அத்தை மேனலின் தீவிரமான செயற்பாட்டிற்காகவும், என் அருமை சகோதரி ஜெயந்திக்கு அவரது மகத்தான வலிமைக்கும் ஆதரவிற்கும் ஒரு பெரிய ஆரத்தழுவல். ஹேமாவின் பையனை வளர்ப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர் அவர். 

————————

“மங்கள நீங்கள் இன்னும் இறக்கவில்லை. இலங்கையை கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு போராட்டத்திலும் நீங்கள் உயிர் வாழ்வீர்கள். அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராக நிற்கும் அனைவரின் இதயங்களிலும், செயல்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் …….” 

-சந்திரிகா குமாரதுங்க-