— சீவகன் பூபாலரட்ணம் —
என்னடா சிப்பு, சிப்பு என்று எழுத்துப் பிழையோட கட்டுரையை ஆரம்பிக்கிறாரே என்று நீங்க நினைப்பது எனக்கு விளங்குகிறது.
சிலவேளை இது எழுத்துப் பிழையாக இருக்கலாம், ஆனால், சிம்பு (நடிகர் சிம்பு) என்பதற்கு பதிலாக நான் சிப்பு என்று எழுதிவிட்டேன் என்று மாத்திரம் நினைத்திட வேண்டாம். நான் பேசப்போவது Computer Chips பற்றி. அதை இனி சிப்ஸ் என்று வேண்டுமானால் எழுதுகிறேன்.
அடுத்து இன்னுமொரு பிரச்சினை. அரங்கம் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் என்று கொஞ்சம் நானும் நிறைய நாளாக நொந்து போய்விட்டேன். அதனால, தொழில்நுட்பம் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். அதன் விளைவுதான் இந்த அநியாயம்.
சரி எங்கே தொடங்குவது?
அறுபதினாயிரம் ஃபோர்ட் பிக்கப் டிரக்குகளும், நம்ம வீட்டு பிள்ளைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் 5ம் வெளிவர முடியாமல் தடுமாறுவதற்கும் என்ன காரணம் தெரியுமா?
உலக மட்டத்தில ஏற்பட்டிருக்கும், நான் முதலில் சொன்ன சிப்பு (Chips) தட்டுப்பாடுதான் அதற்கு காரணம். இது ஒன்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரச்சினை இல்ல அப்பனே. இது கம்பியூட்டர் சிப்ஸ் பிரச்சினை.
இப்போதெல்லாம் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் “பூச்சியத்துக்குள்ளே இருக்கும் சூட்சுமம்” இந்த சிப்ஸ்தான். உங்கள் செல்லிடத்தொலைபேசி, கம்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி எல்லாவற்றுக்கும் அடிப்படைப் பொருளில் இது முக்கியமானது.
உங்கள் காரையும் அதுதான் ஓட்டுகின்றது. நீங்கள் கிரடிட் கார்ட்டில் பணம் செலுத்தும் போதும் அதனை இயக்குவதும் இதுதான். அதேவேளை பெரிய தொழிற்சாலைகளும் அதனால்தான் இயங்குகின்றன.
இப்போது ஆயிரக்கணக்கான கார்கள் இந்த சிப்ஸ் இல்லாமல் தொழிற்சாலைகளில் காத்துக்கிடக்கின்றன. சிப்ஸ் கிடைத்தால் அவை உடனே, உற்பத்தி பூர்த்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிடும்.
ஆனால், உலகமட்டத்தில் இந்த சிப்ஸ்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உற்பத்தியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாகிவிட்டது. அது மாத்திரமல்லாமல், இந்தப் பிரச்சினை படிப்படியாகத்தான் தீரவேண்டும், ஆனால், அது உடனடியாக தீர்வதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கொவிட் கொண்டுவந்த சிக்கல்
உண்மையில் இந்த கொவிட் 19 நெருக்கடிதான் ஆரம்பத்தில் இந்த சிப்ஸ் தட்டுப்பாட்டை உலகளவில் ஆரம்பித்து வைத்தது. பெரும் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தமது விற்பனைகள் தொற்று நோய்க்காலத்தில் வீழ்ச்சியடைந்துவிடும் என்ற பயத்தில் சிப்ஸ்களை வாங்குவதற்கான தமது கொள்வனவு கோரிக்கைகளை ரத்துச் செய்துவிட்டன. இதனால், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் உற்பத்தியில் பின்வாங்கிவிட்டன.
ஆனால், நடந்ததோ வேறு.
பொருளாதரங்கள் உலகளவில் சுருங்கி கணினி விற்பனை நின்றுவிடும் என்று எதிர்பார்த்தால், நடந்தது அதற்கு எதிராகப் போய்விட்டது.
அதாவது, எல்லோரும் உலகளாவிய லொக்டவுன்களால் வீட்டில் அடைபட, அவர்களுக்கு எல்லா வேலைகளையும் கணினிகள் மற்றும் செல்போன்கள் மூலமே செய்ய வேண்டிய நிலை. ஆகவே எலோரும் கணினிகள் மற்றும் செல்போன்களை வாங்க ஒன்லைனில் நிறைய போட்டி போட்டார்கள். இதனால், எதிர்பார்த்ததற்கு மாறாக அதிகளவு கணினிகள் மற்றும் செல்போன்களின் தேவை அதிகரித்தது. அத்தோடு, அவற்றை உற்பத்தி செய்வதற்கான அடிப்படையான சிப்ஸ்களின் தேவையும் அபரிமிதமாக அதிகரித்துவிட்டது. “நாம ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைத்திருக்கிறார் பாருங்கள்.”
இவை மாத்திரமா, மேற்கு நாடுகளில் உடற்பயிற்சி இயந்திரங்களுக்கு சிப்ஸ் தேவை, செல்போனுக்கு சிப்ஸ் தேவை, பிளேஸ்டேசனுக்கு சிப்ஸ் தேவை என்று எங்கும் எதிலும் தேவை என்பது சிப்ஸ்ஸாகிவிட்டது.
உலக சிப்ஸ் உற்பத்தி
வழமையான காலத்தில் உலகளவில் வருடத்துக்கு ஒரு டிரில்லியன் (மில்லியன், பில்லியன் அல்ல அதனிலும் பல மடங்கு இது. கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் (ஆயிரம் பில்லியனாம் அப்பு)) சிப்ஸ்கள் உற்பத்தியாகின்றன.
அது மாத்திரமல்ல ஒரு சிப்ஸை உற்பத்தி செய்ய 2 மாதங்கள் பிடிக்குமாம். அதற்கான சிலிக்கன் வேவர்ஸை செய்ய மூவாயிரம் படிமுறைகள் இருக்குதான். அது மாத்திரமல்லாமல், அதற்கு குறைந்தது இருபது முப்பது இயந்திரங்களும் தேவையாம். இது ஒரு பிரச்சினை.
உலக அரசியல் சிக்கல்
உலக அரசியல் சிக்கலும் சிப்ஸ் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகிவிட்டது. சீனாவின் தொழிற்சாலைகள் சில அமெரிக்காவில் சிப்ஸ்களை விற்க அமெரிக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துவிட்டது. இதனால் சீனாவின் எஸ் எம் ஐ சி என்னும் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் போஃர்ட் கார் உற்பத்தியாளர், ஐ பி எம் கணினி உற்பத்தி நிறுவனம், டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனம் மற்றும் அப்பிள் நிறுவனம் ஆகியவற்றுக்கு சிப்ஸ்களை விநியோகிப்பதில் சிக்கலை எதிர்கொண்டது.
இதனால், இந்த அமெரிக்க நிறுவனங்கள் வேறு நிறுவனங்களிடம் சிப்ஸ்களை வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தாய்வானின் ரி எஸ் எம் சி, சாம்ஸ்சாங் ஆகியவற்றிடம் சிப்ஸ்களை வாங்க வேண்டிய நிலை. ஆனால், இந்த நிறுவனங்களோ ஏற்கனவே தம்மால் முடியுமான அதி உச்சபட்ச நிலையில் சிப்ஸ் உறுபத்தியை செய்துவருகின்றன. அதற்கு மேல் உற்பத்தி செய்ய முடியா நிலையில் தடுமாறுகின்றன.
ரி எம் எஸ் சி ஏற்கனவே சொனி, குவொல்கொம், ஏ எம் டி, நிவ்டியா, மைக்ரோசொஃப்ட், அப்பிள் ஆகியவற்றுக்கு சிப்ஸ்களை விநியோகித்து வருகின்றது. இண்டலுக்கும்தான். அதனால், அந்த நிறுவனங்களால் மேலதிக உற்பத்தியை செய்ய முடியவில்லை. தடுமாறுகின்றன.
கடும் வறட்சியும் நெருப்பும்
சிப்ஸ் உற்பத்திக்கு பெருமளவு சுத்தமான நீர் தேவைப்படுகின்றது. தொழிற்சாலையையும் ஏனைய உபகரணங்களையும் சுத்தப்படுத்தவும் இது தேவை.
ரி எஸ் எம் சி மாத்திரம் 2019இல் ஒரு நாளைக்கு 63,000 தொன் நீரை பயன்படுத்தியது. உள்ளூரின் இரு நீர் கொள்ளிடங்களின் 10 வீதத்துக்கும் அதிகமான நீர் இதற்கு தேவைப்பட்டது. ஆனால், 2021இல் தாய்வான் கடந்த 50 வருடத்தில் இல்லாத வறட்சியை அனுபவித்தது. அந்தக் காலத்தில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
இதனைவிட ஜப்பானில் ரினேசஸ் எலக்றோனிக்ஸ்ஸின் நாக்கா என்னும் இடத்தில் உள்ள தொழிற்சாலையின் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டதே, அந்த தொழிற்சாலையில் ஓட்டோமோட்டிவ் மினி கொன்ரோலர்கள் உற்பத்தியாகும் பகுதியில். ஒவ்வொரு காரையும் உருவாக்க 1400 செமி கொண்டக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இந்த தீ கார் உற்பத்தி துறையில் பெரும் அடியாகிவிட்டது.
இந்த தொழிற்சாலையின் பகுதிகளில் 95 வீதமானவை மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அந்தத் தொழிற்சாலை இப்போது மீண்டும் செயற்படத்தொடங்கிவிட்டது. ஆனால், அது தனது முழுமையான உற்பத்தித்திறனை இன்னும் காண்பிக்கவில்லை. இதனால், சிப்ஸ்களை உற்பத்தி செய்வதற்கான கால அளவும் அங்கு கூடிவிட்டதாம். இந்தப் பிரச்சினை இப்போதைக்கு தீரும்போல் தெரியவில்லையாம்.
கார் கம்பனிகளின் நட்டம்
இந்த சிப்ஸ் தட்டுப்பாடு உலக கார் உற்பத்தியாளர்களுக்கு பெரும் கிளை மூடல்களுக்கும் பல பில்லியன் டாலர்கள் பண இழப்புக்கும் காரணமாகியுள்ளது.
ஃபோர்ட், டெஸ்லா, பி எம் டபிள்யூ மற்றும் டயம்லர் ஆகியவற்றின் விற்பனை, உதிரிப்பாகங்களை பெறுவது ஆகியன பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. உலகின் பெரும் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஜி எம் (ஜெனரல் மோட்டர்ஸ்) நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சிப்ஸ் தட்டுப்பாடு காரணமாக தமது சில தொழிற்சாலைகளை தற்காலிகமாக தாம் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அது கூறுகின்றது.
ஒட்டுமொத்தமாக உலக கார் உற்பத்தித் தொழிற்துறை திட்டமிடப்பட்டதைவிட 40 லட்சம் வாகங்களை குறைவாகவே உற்பத்தி செய்துள்ளதாக கூறுகின்றது. இதனால் விற்பனையில் ஏற்பட்ட மொத்த இழப்பு 110 பில்லியன் டாலர்கள்.
கம்யூட்டர் கேம் மற்றும் கிராபிக்ஸ்
புதிய பிளேஸ்டேசன் கொன்சோல் உயர் தரமான கிராபிக்ஸ் கார்டுகள் எல்லாம் வாங்க நினைப்பவர்கள் 2022 சிலவேளை 2023 வரை காத்திருக்கும் நிலை ஏற்படுமாம். இவற்றின் விநியோகங்கள் மட்டுப்பட்டுள்ளன. ஒன்லைனில் ஓடர் செய்யப்பட்ட இவற்றுக்கான காத்திருப்பு அதிகரிக்கும் போல் உள்ளதாம். ஈபே போன்றவற்றில் இவற்றின் விலையும் கொஞ்சம் கூடுலாமாம்.
தீர்வுதான் என்ன?
சில நிறுவனங்கள் மாற்று சிப்ஸ்களை போட்டு சமாளிக்கின்றன. டெஸ்லா அதற்கு ஒரு உதாரணம். ஆனால், சிப்ஸ் தயாரிப்பாளர்கள் ஆக்கபூர்வமான மாற்று வழிகளை கண்டுபிடிக்காவிட்டால், நிலைமை இலகுவில் சீரடையாது.
அவர்கள் வேகமாக செயற்பட வேண்டும். உற்பத்தி பரப்பை அதிகரிக்க வேண்டும். அதிக ஆட்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்த வேண்டும். இதெல்லாம் அந்த உற்பத்தி நிறுவனங்கள் செய்ய வேண்டியவை. ஆனால், நாம் செய்ய வேண்டிய ஒன்றும் இருக்கிறது.
இந்த மாதிரி பிளேஸ்டேசன் 5, புது ஐபோன் என்று காத்திருந்து ஆசையை வளர்க்காமல் யதார்த்தத்தை உணர்ந்து உரிய வழியில் கொவிட் காலத்தை கழிக்க பழக வேண்டும்.
சரி இந்தச் சிக்கல் இருக்கட்டும், சிப்ஸ் சம்பந்தப்பட்ட இன்னுமொரு உபரித்தகவல்.
உபாலி விஜேவர்த்தன
இலங்கையில் 70கள் 80களில் மிகப்பெரும் பணக்காரராக கணிக்கப்பட்டவர். அதனைவிட இவர் அப்போது மிகப்பெரும் தொழில் முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. பல துறைகளில் முதலீடு செய்த இவர் திடீரென பயணித்த சொந்த விமானம் காணாமல் போக, அவரும் காணாமல் போன பட்டியலில் இணைந்துவிட்டார். இலங்கையில் காணாமல் போனோர் பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியும்தானே.
சரி சிப்ஸ்ஸுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
ஆம், கணினி துறைக்கு பேர் போன அமெரிக்காவின் Silicon valley என்னும் இடத்துக்கு 1980களில் சென்ற இவர் அங்கிருந்த பெரிய கணனி உற்பத்தி நிறுவனங்களுடன் சில ஒப்பந்தங்களை செய்து கொண்டார். அதன் மூலம் அவை இலங்கையில் உபாலியின் நிறுவனத்துடன் இணைந்து கணினி தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவது இலக்கு. அதில் ஒன்று மோட்டரோலா நிறுவனத்துடன் இணைந்து 1983இல் இலங்கையில் இந்த கணினி சிப்ஸ்களை உற்பத்தி செய்வது. ஆனால், நம்ம ஆட்களும் அறிவுந்தான் பெரிசே. 1983இல் நாம் நமது நாட்டில் உள்நாட்டுப் போரை ஆரம்பிக்க, நடந்த குண்டுவெடிப்புகளில் அந்த நிர்மாணத்தில் பணியாற்றிய சில பொறியியலாளர்கள் இறக்க, அந்த நிறுவனங்கள் பயந்துபோய் இன்னுமொரு நாட்டைப் பார்த்துப் ஓடிவிட்டன. அவை மலேசியாவுக்கு போய்விட்டன. இப்ப புரியுதா நமக்கும் இந்த சிப்ஸ்களுக்குமான சம்பந்தம்? இப்ப புரியுதா நாம் ஏன் உருப்படவில்லை என்று?
ஐயோ உலக கணினி தொழில் நுட்பம் பற்றி கதைக்கப்போனாலும் இப்பிடி வந்து இலங்கை அரசியலிலேயே நம்ம சிந்தனை முடிந்துவிடுகிறதே ஆண்டவனே!!! நம்மையெல்லாம் கடவுள்தான் காப்பாற்றணும் சாமி… சிலவேளை எதிர்காலத்தில் இந்த சிப்ஸே கடவுளாகியும் விடலாம்.