— எழுவான் வேலன் —
(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 08 இதுவாகும்.)
இலங்கையில் அனுராதாபுரக் காலம் முதல் நீர் முகாமைத்துவத்தினையும் நிலவளப் பயன்பாட்டினையும் மக்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கான அடிப்படைகளாக இலங்கை மன்னர்களும் மக்களும் வினைத்திறனுடன் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனுடைய நீட்சியாக காலனித்துவ காலத்திலும் குளங்களை அமைத்தலும் குடியேற்றத்திட்டங்களை ஏற்படுத்துதலும் இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குடியேற்றத் திட்டங்கள் சிங்களப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட போது தமிழர்களுக்கு அது பிரச்சினையாக இருக்கவில்லை. வடகிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டபோதுதான் அது பிரச்சினையாகின்றது.
வடகிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசம் எனப்படும் நிலப்பரப்பானது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதியாகும். இந்த பெருமளவான நிலப்பரப்பில் இலங்கை மொத்த சனத்தொகையில் 11 வீதமாக இருந்த தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்ந்தனர். ஒரு அரசு என்ற வகையில் அந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி அந்நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார நலன்களை மேம்படுத்துவது கடமையும் ஆகின்றது. இந்த நிலையில் ஒரு பக்கம் சிங்களவர்கள் நிலமின்றி இருக்க மறுபக்கம் தமிழ் பிரதேசங்களில் பெருமளவான நிலங்கள் தரிசு நிலங்களாக காணப்பட்டன. இதனால் வளப்பங்கீட்டையும் வளப்பயன்பாட்டையும் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
தமிழர் தாயகம் பற்றி மிக அக்கறை கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள் தமிழ்ப் பிரதேசங்களில் காணப்பட்ட பெருமளவான தரிசு நிலங்களை தமிழ்மக்களுக்குப் பங்கிட்டு அவ்வளத்தினை தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்காகவும் அதனூடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதற்குமான எந்தவிதமான திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. இதற்குக் காரணம் தமிழ்த் தலைவர்களாக இருந்தவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் ஆங்கிலக் கல்வியைக் கற்று அதனால் கிடைக்கப்பெற்ற அரச உத்தியோகங்களினூடாக பொருளாதார மேம்பாட்டினை அடைந்து இலங்கையின் உயர் வர்க்கமாக இருந்தவர்கள். இவர்களுக்கு தமிழ்ப் பிரதேசங்களின் நிலவளம் பற்றியோ அந்த நிலவளத்தினை எவ்வாறு மக்களுக்கான பொருளாதார வளமாக மாற்றலாம் என்பது பற்றியோ அல்லது சாதாரண தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் பற்றியோ உண்மையான அக்கறையும் அறிவும் இருக்கவில்லை என்பதே உண்மையாகும். அவ்வாறு இருந்திருக்குமானால் அதற்குரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு தந்திரோபாயமாக முயற்சித்திருப்பர்.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ‘வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களாக மாற்றுவதற்கோ அல்லது அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலனுக்குப் பாதகமான முறையிலோ குடியேற்றம் என்ற கருவி உபயோகிக்கப்படக் கூடாது‘ என்றும் டட்லி – செல்வா ஒப்பந்தத்தில் ‘குடியேற்றத் திட்டங்களில் காணிகள் வழங்கப்படும்போது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கீழ்க்காணும் ஒழுங்கு முறை கவனிக்கப்படும் எனவும் திரு.சேனநாயக்கா ஏற்றுக் கொண்டார்.
(அ) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அம்மாவட்டத்திலுள்ள நிலமற்றவருக்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.
(ஆ) இரண்டாவதாக வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
(இ) மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் தமிழ்க் குடி மக்களுக்கு முதலிடம் கொடுத்து ஏனைய குடி மக்களுக்கும் வழங்கப்படும்.‘ (பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்)
இவ்வாறு பண்டா – செல்வா ஒப்பந்தத்திலும் டட்லி – செல்வா ஒப்பந்தத்திலும் வடகிழக்குக் குடியேற்றங்கள் பற்றித் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்துவதற்குரிய புறச்சூழலை தமிழ்த் தேசியத் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் அரசுக்கு வழங்கவில்லை என்பதை சிறி எதிர்ப்புப் போராட்டத்திலும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அரசாங்கத்திடம் தமிழர் தாயகம் பற்றிய எல்லைக் கோட்டை வரைந்தளித்து விட்டு அந்த எல்லைக் கோட்டுக்குள் மற்றவர்கள் வரக்கூடாது என்று கூறியதைத் தவிர உருப்படியான காரியம் எதையும் இவர்கள் செய்ததாக அறியமுடியவில்லை. தாங்கள் செய்ய வேண்டிய உருப்படியான காரியங்கள்செய்யாதது பற்றி எவ்வித சுயவிமர்சனங்களும் செய்யாது வெறுமனே அரசாங்கங்களை மாத்திரம் குற்றம் சொல்லி தமிழ் மக்களின் வாக்குக்கான இனவாத அரசியலையே செய்தனர். தற்போதும் இதனையே செய்கின்றனர். உதாரணத்துக்கு மட்டக்களப்பு மேச்சல்த் தரை விவகாரத்தினைக் குறிப்பிட முடியும். இது தொடர்பாக ‘மேச்சல் தரையும் அரசாங்க அதிபரின் இடமாற்றமும் ஏற்படுத்தும் அரசியல் அதிர்வலைகள்‘ எனும் தலைப்பில் 24.10.2020 அன்றைய ‘அரங்கம்‘ மின்னிதழில் எழுதியிருந்தேன். இது பிள்ளையானை துதிபாடுவதற்கு அல்ல மாறாக ஒரு உருப்படியான காரியம் செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக அதனைக் கீழே குறிப்பிடுகின்றேன்.
‘பிள்ளையான் முதலமைச்சராகி 8 மாதங்களின் பின் மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரைக்குத் தேவையான நிலத்தினை அடையாளம் கண்டு அறிக்கையிடுவதற்கான ஒரு குழுவை அமைத்திருக்கின்றார்.
அக்குழுவினர் கோறளைப் பற்று தெற்குப் பிரதேச செயலகம், மண்முனை மேற்கு பிரதேச செயலகம், கோறளைப் பற்று வடக்குப் பிரதேச செயலகம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம், ஏறாவூர் பற்று பிரதேச செயலகம், போரதீவுப் பற்று பிரதேச செயலகம் ஆகிய பிரிவுகளுக்குள் இருக்கும் மேய்ச்சல் தரைக்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். அக்குழுவினால் அடையாம் காணப்பட்ட இடங்களை நில அளவை செய்து வழங்கும் பொறுப்பை நிலஅளவைத் திணைக்களத்திடம் வழங்கியுள்ளார். அவர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாகப் பணியாற்றி மிகப் பெரும் அளவான நிலப்பரப்பினை அளவீடு செய்து வரைந்தளித்திருக்கின்றனர்.
இதன்படி மேச்சல் தரைக்கான நில ஒதுக்கீடு 28,034.34 ஹெக்டயர் ஆகும். ஆயினும் காணி அதிகாரமற்ற மாகாண சபையினால் இந்த நிலத்தினை சட்டரீதியாக ஒதுக்குவதற்கு முடியாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் தனக்கு மகிந்த தரப்புடன் இருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி அந்நிலங்களை சட்டரீதியாக ஒதுக்குவதற்கான நகர்வினை பிள்ளையான் மேற்கொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.
மாகாணசபை ஆட்சி கைமாறியதன் காரணத்தினாலும் பிள்ளையான் சிறையிலடைக்கப்பட்டதன் காரணத்தினாலும் மேற்படி விடயத்தினை பிள்ளையானால் தொடரமுடியவில்லை.
பிள்ளையானுக்குப் பின்பு கிழக்கு மாகாண சபையில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கற்பனாவாத வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவர் வந்தால் தங்களது தமிழ்த் தேசியக் கனவு கலைந்து விடும் என்பதற்காகவும் கிழக்குத் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கி, அதிலே அமைச்சுப் பதவியினையும் பெற்றெடுத்தனர். அந்த அமைச்சுப் பதவிகூட விவசாய அமைச்சாகும். அவ் அமைச்சைப் பொறுப்பெடுத்து நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பற்றுடையவராக இருந்திருப்பின், பிள்ளையான் அவர்கள் தொடங்கிவிட்ட இடத்திலிருந்து தனது பணியினை ஆற்றியிருக்க முடியும். அதற்கேற்றால் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுடன் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. ஒவ்வோர் முறையும் ரணில் அரசு கவிழும் நிலைக்கு சென்றபோதெல்லாம் ஓடோடிச் சென்று அவருக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி முட்டுக் கொடுத்துக் காப்பாற்றினார்கள். மறந்தும் கூட இந்தப் பிரச்சினைகளைப் பற்றி இவர்கள் பேசியது கிடையாது.
தமிழ்த் தேசியம், வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம் என எப்போதும் மேடைப்பேச்சிலும் ஊடகங்களிலும் உரத்துக் கூறுபவர்களுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களுக்குக் கிடைத்த அரசியல் வாய்ப்பினைப் பயன்படுத்தி கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயத்தையோ அல்லது இன்று மேலெழுந்துள்ள மேய்ச்சல் தரைப் பிரச்சினையையோ கண்டு கொள்ளாமல் இருந்ததன் அரசியல் என்ன எனும் கேள்வி எழுகிறது.‘
இதே அரசியலைத்தான் அவர்கள் அன்றும் முன்னெடுத்தனர், டி.எஸ்.சேனநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தை தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கான ஒரு வஞ்சகத்தனமான திட்டம் என்று கூறி இனமுரண்பாட்டை ஊக்கப்படுத்தி சிங்களக் குடியேற்றித்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தி சிங்களப் பேரினவாதிகளுக்கு உதவினர்.
உண்மையில் கல்லோயாத் திட்டம் முடிவடைந்த போது கிழக்குமாகாண மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. குடியேற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்பதனை ஒரு வானொலியைக் கூடச் சொந்தமாக கொண்டிராத ஏழைத் தமிழ் மக்களுக்கு அச்செய்தியினைக் கூறி அவர்களை வழிப்படுத்தி காணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அவர்களை இத்தமிழ் அரசியல் தலைவர்கள் வழிப்படுத்தியிருக்க வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக காட்டிய அரசியல் பிரச்சாரத்தினை தமிழ் மக்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்து தமிழர் தாயகப் பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு அக்கறை காட்டவில்லை. இதனால் ஆறு மாதங்களாக போதிய விண்ணப்பங்கள் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடமிருந்து கிடைக்கப்பெறாமையினால் ஏனைய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்தோருக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த உண்மையினை மறைத்து தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என்ற செய்தியே மிகப் பலமாக தமிழ்மக்களிடம் பதியப்பட்டது.
தமிழ் தேசியம் பற்றியும் தமிழர் உரிமை பற்றியும் தமிழர்களின் பாரம்பரிய நிலம் பற்றியும் பேசிய /பேசும் தமிழ்த் தலைவர்கள் பெருந்தோட்டங்களில் எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி கடும் குளிரிலும், பனியிலும் நாள் கூலிக்காக உழைக்கும் மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினரை குடியேற்றி அவர்களை பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் முன்னேற்றுவதற்கான உபாயங்களை இக்குடியேற்றத்திட்டங்களை அடிப்படையாக வகுத்து செயற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அந்தத் தொழிலாளர்களை கள்ளத்தோணிகளாகக் கூறி சக தமிழர்களாக மதிக்காத யாழ்மேலாதிக்கம் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் திருப்தி கண்டிருந்தது.
மலையக மக்களை சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனும் குடியேற்றாமல் விட்டது ஒருபக்கம் இருக்க தெற்கில் ஏற்பட்ட வன்செயல்களினால் வடக்கு நோக்கி வந்த மலையகத் தமிழர்கள் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை கருணாகரன் அவர்கள் தனது கட்டுரையான வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்) — எனும் அரங்கம் மின்னிதழில் வெளிவரும் தொடர் கட்டுரையில் மிக விலாவாரியாக வெளிப்படுத்துகின்றார்.
‘வெட்டித்துப்புரவு செய்த காட்டுக் காணிகளில் குடிசைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். வீடு கட்டுகிற வேலையை எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம்‘ என்று அப்போது கிளிநொச்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியே இந்த மக்களை எச்சரித்திருக்கிறார். இதை இன்னும் சிலர் துயரத்தோடு நினைவு கூருகிறார்கள்.
1970களில் கிளிநொச்சியில் தீவிரமான அரசியல் செயற்பாட்டில் இயங்கிய செல்லையா குமாரசூரியர் கூட இந்த மக்களுடைய நலன்களைக் குறித்து விசேட கவனமெடுக்கவில்லை. ஆனால் அவர் அப்போது ஏறக்குறைய மூவாயிரம் வரையான கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய மக்களுக்கு வேலை வாய்ப்புகள், காணி போன்றவற்றில் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த மக்கள் வாழ்கின்ற இடங்களில் பொதுக்கிணறுகளைக் கூட அமைக்கவில்லை.
இதெல்லாம் இன்று முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளல்ல. வரலாற்றுண்மைகளாகும்.‘ என்பார்.
இதே போன்று வடகிழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களாக வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு குடியிருக்கக் கூட நிலமில்லாது தங்களுடைய எஜமானர்களின் காணிகளில் குடியிருந்து அதற்கு வாடகையாக அவ் எஜமானர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் எந்தவிதக் கூலியும் இன்றி எஜமானர்களுக்காக உழைத்துக் கொடுக்க வேண்டிய கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் இம் மக்களைத்தானும் இக்குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றுவதற்கு துளியளவுதானும் சிந்திக்கவில்லை. இதற்குக் காரணம் இவர்களை இவ்வாறான இடங்களில் குடியேற்றினால் தாழ்த்தப்பட்ட மக்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் யாழ் வேளாளர்களின் தொழில்களும் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாவதோடு இந்த மக்கள் செய்த வேலைகளையும் தொண்டுகளையும் நாளாந்த சம்பளத்துக்குச் செய்வதாக இருந்தால் தங்களுடைய இலாபத்தின் ஒருபகுதி செலவாகிவிடும். அந்த மக்கள் தங்களுடைய உணவுக்காக எப்போதும் தங்களைச் சார்ந்திருந்தாலே தங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் இலாபமானதாகும். இந்த இலாபத்தில் கைவைப்பதற்கு யாழ் உயர்வர்க்கத் தலைமை விரும்பவில்லை. அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக முன்னேறுவது தங்களுடைய பொருளாதார, சமூக அந்தஸ்த்துக்கு இழுக்காகிவிடும் என்கின்ற சாதித்திமிரும் வர்க்கநலனும் இதற்குள் ஊடுபாயந்து கிடக்கின்றது.
இந்தக் குடியேற்றங்களுக்குள் மறைந்து கிடக்கும் சாதி அரசியலைப் போலவே தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது அந்தப் பிரதேச மக்களின் நலனை விட தங்களுடைய நனிநபர் நலனும் கட்சி நலனும் புதைந்து கிடப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
‘1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதியில் தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அதே போல் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் தமிழ் உறுப்பினர் ஒருவரும் தெரிவு செய்யப்படக் கூடியவாறு திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. ஆனால் இதே வாய்ப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தேர்தல் தொகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கு அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனையிட்டு அப்போது தமிழரசுக் கட்சி அக்கறை செலுத்தாதது இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் தவறாகும். குறைந்தபட்சம் கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி இப்பிரதேசத்திலிருந்து தமிழ் உறுப்பினர் ஒருவரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு இரட்டை அங்கத்துவத் தொகுதியாக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழரசுக்கட்சியின் அசமந்தம் காரணமாக இவ்வாறு ஏற்படுத்தப்படாததால் இந்தத் தவறின் காரணமாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சுதந்திர இலங்கையில் 1947இல் இருந்து 1976ம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது உருவான பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு ம.கனகரெட்ணம் அவர்கள் தெரிவு செய்யப்படும் வரை சுமார் 30 ஆண்டுகள் (1947 – 1977) தங்களுக்கென்று தங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதி ஒருவரைக் கொண்டிருக்கவில்லை.‘ (தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)
இதுபோன்றே 1987ம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியினருக்கும் (TULF) இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அம்பாறை மாவட்டத்தினை விட்டு மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை வடக்குடன் இணைப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. தமிழர் பாரம்பரிய பிரதேசம் என்று அம்பாறை மாவட்டத்தை உள்வாங்கியிருந்த தமிழ்த் தேசியம் எந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தையும் அங்குள்ள தமிழர்களையும் அரசியல் அனாதைகளாக விட்டு விட்டு தங்களுக்கான ஆட்சிப்பிரதேசங்களை வரையறுத்துக் கொள்ள முடியும் என்கின்ற கேள்வி இங்குள்ள தமிழ் மக்களிடம் பலமாக எழுந்த ஒன்றாகும். ஆனால் யாழ் மேலாதிக்கம் தாம் உலகுக்குப் போதித்து வந்த தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்ற சொல்லாடலுக்குள் அம்பாறையையும் அந்த மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் தமக்குக் கிடைக்கின்ற அதிகார வரம்புகளைப் பெற்று அனுபவிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தியது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக 1986இல் பெங்களூரில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் 1990களில் இடம்பெற்ற மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழுவுடனான பேச்சுவார்தையின் போதும் மொழிவாரி மாநில அல்லது மாகாணக் கோட்பாட்டை மறந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தனியான தென்கிழக்கு அலகு தொடர்பான கோரிக்கைக்கு தமிழ்த் தலைவர்கள் எந்த நிபந்தனையுமின்றி அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தொடர்பாக எவ்விதமான அக்கறையுமின்றி முழு ஆதரவினைத் தெரிவித்திருந்தார்கள். இவ்வாறு கூறுவதின் மூலம் முஸ்லிம்களுக்குத் தனியான ஒரு நிர்வாக அலகின் இன்றியமையாத் தனத்தை மறுப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அமைய இருக்கும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அலகுக்குள் வாழும் தமிழர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக சரியான பொறிமுறை வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பொறிமுறைபற்றி தமிழர் தரப்புக்கோ அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கோ அக்கறை இருக்கவில்லை. தமிழ்த் தரப்பின் நிபந்தனையற்ற ஆதரவு தொடர்பாக அவர்களால் கூறப்பட்ட நியாயம் வடகிழக்கு இணைவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதாகும். அவ்வாறெனில் வடகிழக்கு இணைப்புக்காக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பலி கொடுக்கப்படுவதில் எவ்வித தவறும் இல்லை என்பது இவர்களுடைய வாதமாகும். இது சரி எனில் ஒன்றுபட்ட இலங்கைக்காக சிங்களப் பேரினவாதத்தால் தமிழர்கள் பலியாக்கப்படுவதும் சரியாகும்.
அம்பாறையை மட்டுமன்றி திருகோணமலைத் தமிழர்களையும் இவர்கள் பலியாக்கினார்கள். 1970ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட திரு.ரீ.சிவசிதம்பரம் வவுனியாத் தேர்தல் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் இணைந்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தை 14.05.1976 அன்று நடைபெற்றபோது அடுத்த தேர்தலில் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவாகியிருந்த திரு.எக்ஸ் செல்லத்தம்பு அவர்களை நீக்கி விட்டு சிவசிதம்பரம் அவர்களுக்கு வவுனியாத் தொகுதியினை விட்டுக்கொடுத்தால் மாத்திரம் இணையலாம் என்ற நிபந்தனை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரால் முன்வைக்கப்பட்டது. இது பற்றி இருகட்சிக்காரர்களும் கலந்துரையாடி திரு.எக்ஸ் செல்லத்தம்பு அவர்களுக்காக முல்லைத்தீவுக்கு தனியான தேர்தல் தொகுதி ஒன்றினை கோருவது என தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்துக்கமைய அன்றை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக திரு.அமிர்தலிங்கம். திரு.சிவசிதம்பரம் ஆகியோர் பங்கு கொண்டனர். ‘சந்தர்ப்பத்தினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் வல்லவரான திரு. ஜே.ஆர்.ஜயவர்த்தனா அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்திருந்தவர்களின் கருத்தினை முதலில் கேட்டறிந்தாராம். அதனைச் செவிமடுத்த ஜே.ஆர். அவர்கள் திருமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியினை ஒரு தேர்தல் தொகுதியாகப் பிரகடனப்படுத்துவதற்கு நீங்கள் உங்கள் பூரண சம்மதத்தினைத் தெரிவிப்பீர்களேயானால் முல்லைத்தீவிற்கு தனியான தேர்தல் தொகுதி ஒன்றினை வழங்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாதென்னும் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தபோது மேற்படி பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்கள் தமது சம்மதத்தினை தெரிவித்ததற்கமைய மூதூர் தேர்தல் தொகுதி இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சேருவில என்னும் புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது.
அன்றைய நிலையில் (2,529 ச.கி.மீற்றர்) நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக இருந்த திருகோணமலை மாவட்டத்தின் செழிப்பு மிக்க பகுதிகளான (1598 ச.கி.மீற்றர்) நிலப்பரப்பினை சேருவில தொகுதிக்கு கையளித்துவிட்டே முல்லைத்தீவுத் தொகுதியினை வடமாகாண அரசியல்வாதிகள் பெற்றனர் என்பது முக்கியமான விடயமாகும்‘ ( குமாரதுரை அருணாசலம்)
இதன் விளைவாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைந்தது. சேருவில தேர்தல் தொகுதிப்பிரிப்புக்கு முன்பு திருகோணமலைத் தொகுதியில் இருந்து ஒருவரும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து ஒருவருமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரு தமிழர்கள் தெரிவாகி வந்தனர். வடக்குத் தலைவர்களின் பதவி ஆசைக்காக பலிகொடுக்கபட்டவர்கள் திருகோணமலை தமிழ் மக்களாகும்.
இவற்றை விளங்காது அல்லது அறியாது ‘தமிழ்த் தேசியம்‘ எனும் பெயரில் தமது சொந்த மக்களைச் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சுரண்டும் தமிழ்த் தலைவர்களின் சாதிய அரசியலையும் கையாலாகாத் தனத்தையும் தூரநோக்கற்ற பார்வையையும் எவ்வித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொண்டு அவர்களால் கூறப்பட்ட இனவாதக் கருத்துகளுக்குள் கண்டுண்டு அவற்றிலிருந்து மீண்டுவரமுடியாத அறிவிலிகளாக்கப்பட்டு அவர்களின் அடிமைகளாக்கப்பட்டிருக்கின்றோம். இனவாதத்தை வளர்த்து தமிழர்களை அடிமையாக்கியதில் சிங்கள அரசின் பங்களிப்பை விட இவ் மேட்டுக்குடி தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது என்பதை தமிழ் அரசியல் தலைவர்களின் வரலாறு முழுவதும் காணக்கூடியதாக இருக்கின்றது. கிழக்கு மக்களின் தலை மீதும் வடக்கிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் தலை மீதும் மலையகத் தமிழ் மக்களின் தலை மீதும் மோதிரம் போட்ட கையினால் குட்டியவர்கள்தான் இந்தத் தமிழ்த் தலைவர்களாகும். தாங்கள் குட்டினால் சிரித்து தங்களை கட்டி அணைத்து முத்தமிடும்படியும் சிங்கள பேரினவாதம் குட்டினால் அழுது சண்டை போடும்படியும் எங்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றது. மாறி மோதிரம் போட்ட கையினால் குட்டுவதும் வலிக்குது என்று நாம் சொன்னால் அவ்வாறு கூறுபவர்களை பிரதேசவாதிகளாக்கி தமிழ்த் தேசியத் துரோகிகளாக பட்டம் கட்டி விடுவதில் யாழ் மேலாதிக்கமும் அவைசார்ந்த ஊடகங்களும் மிகக் கவனமாகச் செயற்படுகின்றன.
(பலிகள் தொடரும்…….)