— சு.சிவரெத்தினம் —
என்னைப் பகிர்வதற்கு எவரும் இல்லை
என் செல்லப்பிராணிகளைத் தவிர
என் நாய்க் குட்டி
என் பூனைக் குட்டி
என் கோழிகள்
என் குருவிகள் எல்லாமே
என் கண்களினூடு
என்னை உள்வாங்கிக் கொள்கின்றன.
அன்பினால் அவற்றுடன் இரண்டறக் கலக்கின்றேன்.
அவற்றுக்கோ மொழியில்லை.
நாக்கினாலும் சொண்டினாலும் என்னைத் தடவி
தம் அன்பை எனக்குள் இறக்கி விடுகின்றன.
எனக்கோ?
என் வலிகளைச் சொல்ல முடியாமல்
சப்பித் துப்பிய கருப்புச் சக்கையாய்
காய்ந்து கிடக்கிறது மொழி.
ஓர் எறும்பு கூட
நக்கிப் பார்க்கவில்லை
என் நாயும் கோழியும்
பூனையும் குருவியும்
திரும்பியும் பார்க்கவில்லை.
வலிகளைச் சொல்லும் மொழியாய்
கண்ணீர் பிரவாகம் எடுக்கும் போது
சாவின் மேல் காதல் பிறக்கிறது.
காலனே கிட்ட வா
உன்னைக் கட்டி அணைக்கிறேன்
என்று அவாவுது நெஞ்சு.
விட்டு விடுதலையாகி
முகில் என விண்ணில் பறந்து
காய்ந்த பூமியில்
ஒரு துளி மழையாய் விழேனோ.
பூமியே என் தாய்
தாய் என்னை வெறுக்காள்
அவளின் கர்ப்பப் பையில்
உயிர்ப்பெடுத்தவன் நான்.
அவள் என்னை
மீண்டும் உயிர்ப்பிப்பாள்
கேடு கெட்ட மனிதராக அன்றி
நான் மரமாக வேண்டும் என வரம் கேட்பேன்.
கால் கடுக்க நடந்து வரும்
வஞ்சமற்ற ஏழைகளுக்கு நான்
நிழலாக வேண்டும்.
பசிக்கும் பறவைகளுக்கு நான்
கனியாக வேண்டும்.
காகமும் கொக்கும்
குருவியும் மைனாவும்
என்னில் கூடு கட்டித் தங்க வேண்டும்.
ஆமையும் நத்தையும்
என்னில் இளைப்பாறல் வேண்டும்.
பூமித் தாயே
எனக்கு வரம் அருளம்மா…