— வேதநாயகம் தபேந்திரன் —
”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள்.
முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை.
பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர்.
வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள்.
மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை இளைய அண்ணா எனவும், மூன்றாமவரை சின்னண்ணா எனவும், நாலாமவரை ஆசையண்ணா எனவும் கடைசித் தம்பி அழைக்கும் குடும்பங்களும் உண்டு. குடும்பத்திற்குக் குடும்பம், ஊருக்கு ஊர் மாறுபட்ட முறைகளில் இதனை அழைப்பார்கள்.
திருகோணமலையில் சில இடங்களில் அண்ணன் என அழைக்கும் வழக்கமும் உண்டு.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் அண்ணாச்சி என அழைக்கும் கிராமிய வழக்கம் கூடுதலாக இருப்பதை அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் அண்ணை, அண்ணா எனஅழைக்கும் வழக்கம் உள்ளது.
விடுதலைப் போராட்ட இயக்கங்களை எடுத்துக் கொண்டால் ”அண்ணை, அண்ணா” என அழைக்கும் வழக்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டுமே முழுமையாக இருக்கிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்திற்குப் புறப்பட்ட ஆரம்பகாலத்தில் அவரை விட வயது கூடுதலாக உள்ளோரே அதிகமாக போராட்டத் தலைவர்களாக இருந்தார்கள். அதனால் அவரைத் ”தம்பி” என அழைத்தார்கள்.
பின்னாளில் அவர் பலமான தலைவராக உருவெடுத்த போது அவரை அவரது இயக்க உறுப்பினர்கள் ”அண்ணை” என அழைக்கும் வழக்கம் உருவானது. இடதுசாரிச் சிந்தனைகள் இந்த அமைப்பில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இதனால் போராட்ட அமைப்புகளின் வழக்கமான சொல்லாடலான”தோழர்” என்ற சொல் புலிகள் அமைப்பில் புழக்கத்தில் வரவில்லை.
அதே வேளை முதன்மைமிக்க தளபதிகளை விடுதலைப் புலிகள் ”அம்மான் (மாமா)” என அழைக்கும் வழக்கமும் உள்ளது. பொன்னம்மான், பொட்டம்மான், சொர்ணம்மான், கருணா அம்மான் போன்றவர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சி அமைப்பு (EROS), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய இயக்கங்கள் தமது உறுப்பினர்களைத் தோழர் என மட்டுமே அழைத்தார்கள். 1990இன் பின்பாக ஈபிஆர்எல்வ் அமைப்பிலிருந்து பிரிந்து உருவான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) அமைப்பும் தனது உறுப்பினர்கள் யாவரையும் தோழர்கள் என அழைக்கும் முறையையே கடைப்பிடிக்கின்றனர்.
இந்த அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்போல வழிவந்த இடதுசாரிக் கொள்கைகளை உடைய அமைப்புகள் ஆதலால் ”தோழர்” என அழைக்கும் முறையைக் கடைப்பிடித்தார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) இயக்கத்தில் உயர்மட்ட உறுப்பினர்களைச் சிறியண்ணை, தாஸ்அண்ணை, பொபி அண்ணை, செல்வமண்ணை என அழைத்தார்கள்.
கீழ் மட்ட உறுப்பினர்கள் தமக்குள் தோழர்கள் என அழைத்தார்கள். புளொட் அமைப்பில் அண்ணா முறைகள் இருந்ததாகச் சொல்வோரும் உண்டு.
சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணா என்ற கருத்து உள்ளது. 1980களில் அரச படையினர் சுற்றிவளைப்புகளை நடத்தி போராளிகள் என்ற சந்தேகத்தில் இளைஞர்களைக் கைது செய்வார்கள். பிடிபட்ட இளைஞர்களை அடித்த போது ”ஐயா அடிக்காதியுங்கோ” எனக் கதறி அழுதார்கள். இவன் என்னை அண்ணா என்று அழைக்கிறானே எனக் கோபம்கொண்டு படையினர் மேலும் அடித்தார்களாம். (சிங்களத்தில் ஐயே என்பது அண்ணன் என்று பொருள்.)
அண்ணமார் என்பது ஒரு கிராமிய குலதெய்வம். குறித்த ஒரு சமூகப்பிரிவினர் இத் தெய்வத்தைத் தமது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதிலும் ஒரு அண்ண வருகிறது. கருப்பண்ண சாமி என்பதும் தமிழக குலதெய்வம்.
”அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது” இது ஒரு பழமொழி. இதுபோல அண்ணனைக் குறிக்கும் பழமொழிகள் பல இருக்கலாம்.
” அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ……”
”அண்ணன் காட்டிய வழியம்மா ….”
”அண்ணன் என்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன…….” என்பது போல அண்ணனைக் குறிக்கும் பாடல்கள் பல சினிமாவில் உள்ளன.
அண்ணாமலை, பெரியண்ணன், அண்ணாத்த ….இப்படியே சினிமாப் படங்களின் தலைப்புகளிலும் அண்ணா எட்டிப் பார்க்கின்றார். அண்ணன் தங்கை உறவுக்குப் பேர் போன படங்களில் சிவாஜியின் பாசமலர் பிரபலமானது.
தமது பெயர்களில் ”அண்ணாச்சாமி, அண்ணாத்துரை” என அண்ணாவைக் கொண்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக 1967இல் சீ.என்.அண்ணாத்துரை தெரிவானார். இவர் அறிஞர் அண்ணா என்ற பெயரில்தான் அழைக்கப்படுகின்றார். தமிழகத்தின் சென்னையில் அண்ணாநகர் எனும் இடம் உள்ளது. அதுபோல அண்ணாசாலை எனும் பெருந்தெருவும் பிரபலமானது.
யாழ்ப்பாணம் இணுவிலில் உற்பத்தியாகி உலகப் பிரபலம் பெற்ற அண்ணா கோப்பி, அண்ணா தயாரிப்புகளிலும் அண்ணா வருகிறது.
அண்ணனைக் குறிக்கும் நாட்டார் பாடல்களும் பல புழக்கத்தில் உள்ளன.
அரச அலுவலகங்களில் சில உயரதிகாரிகள் தம்மிடம் பணி புரியும் வயதுக்கு மூத்த அதிகாரிகளுக்கு அவர்களது வயது மூப்பை மதித்து அண்ணை என மதிப்பாக அழைப்பார்கள். (இந்த நடைமுறை இலங்கையில் மட்டும்தான். இந்தியாவில் அந்த வழக்கம் கிடையாது.)
சிலரோ தனது தகப்பன் வயதிலுள்ள உத்தியோகத்தரைக் கூட ஆணவத்துடன் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வார்கள்.
ஒரு பிரச்சினையுமில்லை. ஓய்வு பெற்ற பின்பாக அண்ணா என அழைத்த அதிகாரி மதிப்பாக வாழ்வார். ஆணவத்துடன் நடந்தோர் சமூகத்தில் செல்லாக் காசாகப் போவார்கள். அவ்வளவு தான்.
இன்னும் சில கோமாளி உயரதிகாரிகள் தமக்குக் கீழ் பணியாற்றும் வயது மூத்த, இளைய உத்தியோகத்தர்கள் யாவரையும் அண்ணா, அக்கா என அழைத்துக்கட்டுப்படுத்தும் திறனை இழந்து போவார்கள்.
பல்கலைக்கழகத்தில் சக மாணவன் எத்தனை வயது மூப்பென்றாலும் கூட அண்ணா என்று அழைக்க மாட்டார்கள். அங்கு மச்சான் என அழைக்கும் ஒரு உறவு உள்ளது.
ஆனால் பாடசாலைகளில் ஒரு வயது கூடிய சிரேஸ்ட மாணவனைக் கூட அண்ணா எனத் தான் அழைப்பார்கள்.
உறவு முறைகளில் அண்ணையக்கா, அண்ணையம்மா, அண்ணை மாமா, அண்ணியக்கா என அழைக்கும் தன்மைகள் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும்.
வயது மூத்தோரை அண்ணை என்ற சொல்லுடன் வழி வந்த உறவு முறையையும் கூறுவார்கள். சொந்த மச்சான், மச்சாளாக இருந்தாலும் சின்ன வயது முதல் அண்ணன் தங்கை போலப் பழகியவர்கள் பெரியவர்களானதும் திருமணம் செய்ய மறுத்தவர்களைக்கூடக் கண்டுள்ளேன்.
அண்ணன் கதைகள் பல இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நண்பர்களே உங்களுக்குத் தெரிந்த சேதிகள் இன்னும் நிறைய இருக்கும்.
அதெல்லாம் இருக்கட்டும்
அண்ணன் மனைவியை அண்ணி என அழைப்பார்கள். அப்படியாயின் தம்பியின் மனைவியைத் தண்ணி என அழைக்கலாமோ?
விடை தெரிந்தோர் கூறுங்கள்.