— அழகு குணசீலன் —
பிரதேச வாதக் கருத்தாடல்:
வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்,துட்டுக்கு எத்தனை கொட்டைப்பாக்கு!
“தமிழ் அரசியலை முன்னேறவிடாமல் தடுப்பது பிரதேசவாதமா? ஜனநாயகப் பற்றாக்குறையா?” என்ற திரு.சிவலிங்கம் அவர்களின் பத்தியின் கருத்துக்களை மறுத்து, வரலாற்று ரீதியான ஆழமான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்ற தொடர் கருத்தாடலில், காலக்கண்ணாடி நடைமுறை அணுகுமுறை வாதங்களுடன் களத்தில் குதிக்கிறது.
தமிழர் அரசியல் வரலாறானது முழுமையான ஜனநாயக வரலாற்றை எக்காலத்திலும் கொண்டிருக்கவில்லை. இது ஆரம்பம் முதல் இன்றுவரையான பாராளுமன்ற அரசியலுக்கும், ஆயுதப்போராட்ட அரசியலுக்கும் பொருந்திப் போகின்ற ஒன்று. பேரினவாத ஜனநாயக மறுப்புக்களுக்கும், பறிப்புக்களுக்கும் எதிராக போராடப் புறப்பட்டவர்கள் அதையே தாங்களும் செய்து ஜனநாயகத்தை மறுத்து, பறித்து, ஜனநாயக பற்றாக்குறை நிறைந்த ஆயுத அரசியலையே தாங்களும் தின்று மக்களுக்கும் தீத்தினார்கள்.
இராசதுரையும், காசி ஆனந்தனும் பிரதேசவாதம் பேசவில்லை என்று பதிவு செய்கின்ற இப்பத்தியாளர், கருணாவும், பிள்ளையானும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு முன்னர் தமிழர் அரசியல் முன்னேற்றம் அடைந்தது என்று கூறவருகின்றாரா? அப்படியாயின் தமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான பிற்போக்கு தரகு முதலாளித்துவ ஜனநாயகப் பற்றாக்குறை குணாம்சத்தை அவர் ஏற்றுக்கொண்டவராகிறார்.
பிரதேசப்பற்றை, பிரதேச உணர்வை, சொந்தப் பிரதேசம் மீதான சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியில் காட்டுகின்ற அக்கறையை யாழ்.மேலாதிக்கம் பிரதேசவாதம் என்று முத்திரை குத்துகிறது. தமிழர் தாயகத்தில் சமூக பொருளாதார அரசியலில் மட்டுமன்றி கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களிலும் வேறுபட்டு நிற்கின்ற ஒரு பிரதேச மக்கள் பிரிவினரை அவர்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கானது அப்பட்டமான ஒடுக்குமுறையும், ஜனநாயகப் பற்றாக்குறையுமாகும். எனவே அதுவா? இதுவா? என்று ஒற்றை, இரட்டை பிடிக்கும் விடயமல்ல இது. முற்று முழுதாக ஜனநாயகம் அற்ற அல்லது பற்றாக்குறை நிறைந்த மேலாதிக்க தமிழர் அரசியலின் விளைவே கிழக்கில் உருவாகிவருகின்ற அரசியல் தலைமைத்துவமும் பிரதேச பற்றுணர்வுமாகும்.
மேலாதிக்கத்தை எதிர்த்து பேசுபவர்கள் பிரதேசவாதம் பேசுபவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தங்கள் சொந்த மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுப்பவர்கள். ஜனநாயக ரீதியான இந்த அணுகுமுறையை நிராகரிப்பவர்கள்தான் ஜனநாயகப் பற்றாக்குறையாளர்கள். அவர்கள் இதை மறுப்பதற்கும், மறைப்பதற்கும் மேலாதிக்கம் சார்ந்து பரப்புரைகளை தேடி அலைவதே திரு.சிவலிங்கம் அவர்களின் பதிவு சொல்லும் செய்தியாகவும் உள்ளது.
பிரதேசப் பற்றும், உணர்வும் ஜனநாயகப் பற்றாக்குறை அல்ல மாறாக அடிப்படை ஜனநாயக உரிமை. யாழ்.மேலாதிக்க தமிழ் தேசியம் பல் வடிவங்களூடாக உருமாறி வந்த பாதையில் ஜனநாயகம் அற்ற தளம் உருவாக்கியதே பிரதேசப்பற்று. இது சமூக விஞ்ஞான இயங்கியல். பிரதேசம் சார்ந்த தனித்துவங்களும், உரிமைகளும் ஜனநாயகத்திற்கு முரணாக மறுக்கப்படும் போது அதனால் பாதிக்கப்பட்ட/ பாதிக்கப்படுகின்ற சமூகம் அதற்கு எதிராக குரல் கொடுப்பது, எந்த அரசியல் சித்தாந்தத்தில் பிற்போக்கு? பிரதேசவாதம் அப்படியென்றால் தமிழ்தேசியம் எந்த வகையில் முற்போக்கு வாதம்? எந்த வகையில் உரிமைப் போராட்டம்?
திரு.சிவலிங்கம் அவர்கள் ஒன்றின் விளைவு (ஜனநாயகப் பற்றாக்குறை) இன்னொன்றை (பிரதேச உணர்வை) உருவாக்கி இருக்கிறது என்ற ஜதார்த்தத்தை மறுத்து, தமிழர் அரசியல் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பிரதேசவாதம் என்றும், கிழக்கு மக்களின் ஜனநாயகப் பற்றாக்குறைதான் பிரதேச வாதம் என்றும் யாழ்.மேலாதிக்கத்தை பாதுகாக்க முனைகிறார்.
ஜனநாயகக் கோட்பாட்டில் உள்ள “பெரும்பான்மை முடிவு” என்ற, ஓட்டை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வக்கற்றது. இந்த ஓட்டை உண்மையில் ஒரு ஜனநாயகப் பற்றாக்குறை. ஆனால் இதன் அடிப்படையிலான முடிவுகளை ஜனநாயகமாக காட்டியே மேலாதிக்கம் புறக்கணிப்புக்களை செய்துவருகிறது. தமிழ்த்தேசிய அரசியலில் யாழ்.மேலாதிக்கம் இந்த அணுகுமுறையை மாற்றாதவரை குடாநாட்டிற்கு வெளியேயான பிரதேசங்கள் அது வன்னியாக இருந்தாலென்ன கிழக்காக இருந்தாலென்ன புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்
திரு.சிவலிங்கம் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய சில விவகாரங்களுடன் மற்றும் பல நிகழ்வுகளையும் கவனத்தில் எடுத்து ஜனநாயகப் பற்றாக்குறையூடான பிரதேசவாதம் (உணர்வு) நோக்கி நகர்கிறது இப்பதிவு.
(*) இராசதுரையும், காசி ஆனந்தனும் பிரதேசவாதம் பேசவில்லை என்ற கட்டுரையாளரின் கருத்து.
(*) கருணாவும் பிள்ளையானும் தான் பிரதேசவாத்தை தொடங்கினார்கள் என்ற கட்டுரையாளரின் பார்வை.
(*) பிரதேசவாத அரிசியலில் உள்ள உளவியல்: ஒரு தரப்பு புறக்கணிப்பை செய்தவர்கள். மறுதரப்பு அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கான உரிமைகள்.
(*) புதிய ஜனநாயகம், பின்நவீனத்துவம்: மரபுசார் கோட்பாட்டு வேலிகளைக் கடந்த சமகால நோக்கு.
(*) சமகால யாழ்.மேலாதிக்க தமிழ்த்தேசிய அரசியலும், அதன் ஜனநாயகம் குறித்த பார்வையும்.
இராசதுரையும் காசி.ஆனந்தனும்:
இராசதுரையும், காசி ஆனந்தனும் மேடைபோட்டு பிரதேசவாதம் பேசவில்லைதான். அதற்காக பிரதேசவாதம் இருக்கவில்லை என்று வாதிடமுடியுமா? சமூக ரீதியான அரசியல் பிரச்சனைகள் ஒரு சமூகத்தில் எப்போதுமே இருக்கின்றன. அதற்குரிய அரசியல் சூழ்நிலை ஏற்படும் போதே அவை பேசுபொருளாகின்றன. இதற்கு வரலாற்று ரீதியான காரணங்களும், உடனடிக் காரணங்களும் காரணமாக அமையமுடியும்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய வேட்பாளர் பட்டியலில் பெண்கள் புறக்கணிக்கப்பட்ட போதுதான் அது பேசுபொருளானது. தமிழரசில் இந்த புறக்கணிப்பு காலாதிகாலமாக இருக்கின்ற ஒன்றாக இருந்தும், இது பற்றி வெளிப்படையாக பேசப்படவில்லை. பேசப்படவில்லை என்பதற்காக பிரச்சினையே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவது ஜனநாயகப் பற்றாக்குறை மட்டுமல்ல, சமூகம் குறித்த தெளிவற்ற பார்வையும் கூட.
1977இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மட்டக்களப்பு தொகுதியில் இருவரில் எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. ஆனால் இந்த முடிவை மீறி ஈழவேந்தன், கோவை மகேசன், சிவதாசன் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து காசி ஆனந்தனின் மேடையில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்கள். இவர்களுக்கு எதிராக கட்சி எடுத்த நடவடிக்கை என்ன?
அமிர்தலிங்கம் அப்போது கண்களையும், காதுகளையும், வாயையும் பொத்திக்கொண்டு தனக்கு எதுவும் தெரியாதது போன்று இருந்தார். மேலாதிக்க பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் செயற்குழு கண்டும் காணாததுமாக இருந்தது. இங்கு ஜனநாயகப் பற்றாக்குறை யாரிடம்?இராசதுரையிடமா? மேலாதிக்க கட்சியிடமா? அமிர்தலிங்கத்தின் இந்த அக்கிரமத்துக்கு எதிராகத்தான் “எஸ்.பொ.” அவர்கள் இராசதுரையின் மேடையில் ஏறினார்.
காசி ஆனந்தன் மட்டுமல்ல, இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மட்டுமன்றி, வன்னியில் உள்ள தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் வாய்திறக்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் ஜனநாயகமற்ற தனிநபர் அரசியலை பூஜிக்கின்ற அரசியல்வாதிகள். தங்கள் கதிரைகளுக்காக மேலாதிக்க தலைமைகளைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை இவர்களுக்கு இருக்கிறது. இந்த அரசியலை தமது சொந்த இருப்புக்காக காசி ஆனந்தன் போன்று இவர்களும் தொடரவேண்டிய தேவை உள்ளது.
தன்னை வளர்த்து விட்ட அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டபோது காசி ஆனந்தன் செஞ்சோற்று கடன் கூட தீர்க்கவில்லை. ஏனெனில் புலிகளின் ஜனநாயகப் பற்றாக்குறை அரசியலின் துப்பாக்கி தன் பக்கமும் திரும்பும் என்பதால். இப்படியானவரிடம் இருந்து யாழ்.மேலாதிக்கம் கிழக்கை புறக்கணிக்கிறது என்ற ஜனநாயக அரசியல் விமர்சனத்தை திரு.சிவலிங்கம் எதிர்பார்ப்பது பொதுவாக தமிழர் அரசியலையும், சிறப்பாக கிழக்கு அரசியலையும் அவர் சரியாக அறிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
கருணாவும், பிள்ளையானும்:
“அண்ணன் நீங்கள் வடக்கை பார்த்துக் கொள்ளுங்கள். நான் கிழக்கை பார்த்துக் கொள்கிறேன்” என்று கருணா பிரபாகரனிடம் கூறியது கருணாவின் ஜனநாயகப் பற்றாக்குறையா? அல்லது கருணாவின் குரலை கிழக்கின் குரலாக மதித்து இது விடயமாக ஜனநாயக தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக அதிகார மேலாதிக்க ஆயுத அடக்குமுறையை தனது சொந்த போராளிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து, அவர்களை துரோகிகளாக பிரகடனம் செய்து போர் தொடுத்தது ஜனநாயகப் பற்றாக்குறையா?
விடுதலைப்புலிகளின் அதி உயர் நிர்வாகக் கட்டமைப்பு வடக்கின் கட்டுப்பாட்டில் இருப்பது சமத்துவமற்றது என்றும், அதிகாரக் கட்டமைப்பு கிழக்கிற்கும் பரவலாக்கப்படவேண்டும் என்றும் கேட்பது எந்த அரசியல் சித்தாந்தத்தில் துரோகமாகிறது? எந்த அரசியல் சித்தாந்தத்தில் தவறாகிறது.? எந்த அரசியல் சித்தாந்தத்தில் பிரதேசவாதமாகிறது?
உள் இயக்க ஜனநாயகம் மறுக்கப்பட்ட போது அதற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும். இதற்கான சமூக, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டு ஆய்வுக்குட்படுத்துவதே ஒரு விடுதலை இயக்கத்தின் செயற்பாடாக அமையமுடியும். அதைச் செய்யாமல் ஆயுத அடக்குமுறையை பிரயோகித்து ஒரு பிரதேச மக்களின் குரலை நசுக்குவதும், அதற்கு பிரதேசவாதப் பெயர் சூட்டுவதும், ஜனநாயகப்பற்றாக்குறை கொண்ட மேலாதிக்க அரசியல் குணாம்சமும், அணுகுமுறையாகும்.
இவ்வாறான புறக்கணிப்புக்கள் தொடர்ந்த நிலையில் பிள்ளையானும், கருணாவும் கிழக்கின் குரலாக ஒலித்தார்கள். அதற்கான மனோபலமும், இராஜதந்திர அணுகுமுறையும் அவர்களுக்கு இருந்தது. பிரதேசப்பற்று, உணர்வு சார்ந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் இறங்கினார்கள். இதனை அவர்களின் ஜனநாயகப் பற்றாக்குறை என்று எப்படி வாதிடமுடியும்.? ஆயுத அதிகார மேலாதிக்கத்தின் ஜனநாயகப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டமாகவே பிள்ளையானினதும், கருணாவினதும் பிரதேசம்சார் அரசியலைப் பார்க்க வேண்டி உள்ளது.
கருணாவுக்கும், பிளையானுக்கும் நிலவிய அரசியல் சூழ்நிலை, இராஜதுரையின் அரசியல் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தனிநபர் பயங்கரவாதம் ஒரு துண்டுக் கடதாசியை வீசி விட்டு ஒருவரை சுட்டுக்கொன்றகாலம். இராஜதுரை இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் இராஜதந்திர அரசியல் அணுகுமுறையும் ஒரு காரணம். இராஜதுரை “விலகினேனா?விலக்கப்பட்டேனா” என்ற தனது நூலில் இது பற்றி பேசுகிறார். இதை திரு.சிவலிங்கம் படிப்பது காலத்தின் கட்டாயம்.
யாழ்மேலாதிக்கமும் கிழக்கின் அபிலாஷைகளும்:
உண்மையில் இங்கு பேசப்படுகின்ற சமூக விவகாரம் ஒரு உளவியல் அம்சம். இதில் இரு தரப்பினர் சம்பந்தப்படுகின்றனர். ஒரு தரப்பு பாதிப்பை ஏற்படுத்துகின்ற யாழ்.மேலாதிக்கம். மறுதரப்பு பாதிப்புக்கு உட்பட்ட கிழக்கு சமூகம். இங்கே மேலாதிக்கம் ஏற்படுத்துகின்ற உளரீதியான, உணர்வு ரீதியான பாதிப்பே அதன் தாக்கத்தை நிர்ணயிக்கிறது. பிரதேச ரீதியான புறக்கணிப்பு என்பது இனம், நிறம், மதம், பால், சாதியம் சார்ந்த புறக்கணிப்பு போன்று ஒரு வன்முறை.
அதன் அர்த்தம் இந்த புறக்கணிப்பை, தவறாக நடத்தப்பட்டதை, ஒதுக்கப்பட்டதை, உரிமைகள் மறுக்கப்பட்டதை அனுபவித்த சமூகத்தினால் மட்டுமே அந்த வலியை உணரமுடியும். வலியோடு ஒருவர் பேசுவதற்கும், வலியை கற்பனையில் கொண்டு ஒருவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாடு கறுப்புக்கும் வெள்ளைக்கும் அல்லது இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு.
எனவே இதை எந்த வகையிலும் அனுபவிக்காத, வலி தெரியாத, ஆகக்குறைந்தது அந்தப் பிரதேசத்தையாவது சேராத திரு.சிவலிங்கம் பேசுவது செயற்கையானதும், கற்பனையானதும். உதாரணமாக பாலியல் வன்முறைக்குட்பட்ட ஒரு பெண்ணின் அனுபவத்தை ஒரு ஆண் கற்பனையில் செயற்கையாக கூறுவது போன்றது. அல்லது ஒரு தாயின் பிரசவ வேதனையை ஒரு ஆண் விளக்குவதை ஒத்தது.
இதனையே திரு.சிவலிங்கம் அவர்களின் ஒட்டு மொத்த பதிவு வெளிப்படுத்துகிறது. இத்தனைக்கும் திரு.சிவலிங்கம் ஒரு இடதுசாரியும் மேலாதிக்கத்திற்கும், ஜனநாயக மறுப்புக்களுக்கும் எதிரானவர். இங்கு அவர் கிழக்குமாகாண அரசியல், சமூக வாழ்வியலில், யாழ்.மேலாதிக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை வெறொரு கண்ணாடி போட்டு பார்க்கிறார். அந்தக் கண்ணாடி மரபு ரீநியான இடதுசாரிக் கண்ணாடியாக இருக்கவாய்ப்புண்டு. உண்மையில் இங்கு அவர் பின்நவீனத்துவ கண்ணாடி ஒன்றை அணிவதன் மூலம் தனது பார்வைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.
உலகின் பல ஜனநாயக நாடுகளின் நீதித்துறையில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே அதிக நிறையைப்பெறுகிறது. ஏனெனில் உளவியல், உணர்வு ரீதியான வன்முறைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அதன் வலியை உணரமுடியும் என்பதால். இதனால் நீதிதேவதை ஏந்தி நிற்கின்ற தராசின் தட்டுக்கள் இவ்வாறான விடயங்களில் சமமாக இருக்கமுடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்ட தரப்பின் வலியின் நிறை அதிகமானது. பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு இதனை இலகுவானதாகவே எப்போதும் எடுத்துக்கொள்ளும். ஏனெனில் அவர்களுக்கு அந்த வலியை உணரமுடியாது என்று வாதிடுகின்றனர் உளவியல் நீதியாளர்கள்.
புதிய ஜனநாயகம், பின்நவீனத்துவம்:
ஜனநாயகம் என்பது மக்களே மக்களுக்காக ஆளுகின்ற ஆட்சியியல் தத்துவம். இங்கு பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படுகின்ற முடிவுகள், தீர்மானங்கள் ஜனநாயக ரீதியானவை என்பது மரபு. ஆனால் இந்த முடிவுகள் தொகையில் சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகளுக்கு பாதகமாக அமைந்துவிடுகின்றன என்பதே சமகால ஜதார்த்தமாகும்.
இதனால்தான் புதிய ஜனநாயகம் பற்றிப் பேசப்படுகிறது. இங்கு வெறுமனே எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மையைக்கொண்டு முடிவகள் எடுக்கப்படாமல் சிறுபான்மையினரின் கருத்துக்களும், கவலைகளும், அச்சங்களும் உள்வாங்கப்பட்டு இருதரப்பு இணக்கத்தன்மையுடனான முடிகளை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் 50:50 கோரியதன் தாற்பரியமும், சோல்பரி அரசியல் அமைப்பின் 29ம் சரத்தின் இரண்டாவது பிரிவு நீக்கப்பட்டபோது எதிர்த்த தாற்பரியமும் இதுதான். இவை கிடைத்திருந்தாலும் யாழ்.மேலாதிக்கம்தான் தன் அதிகாரத்தை அதிகரித்திருக்கும் என்பது இன்றைய பார்வையில் கசப்பான உண்மை.
இலங்கை தேசிய அரசியலிலோ அல்லது தமிழ்த்தேசிய அரசியலிலோ தொகையில் சிறுபகுதியினரின் பாதுகாப்புக்கான எந்த வழிமுறையும் இல்லை. வெறுமனே பாராளுமன்ற பெரும்பான்மை அடிப்படையிலான முடிவுகள் தமிழ், முஸ்லீம் மக்களைப் புறக்கணிப்பதுடன் சிங்கள மக்களுக்கு ஆதரவாக அமைகின்றன. இதே நிலைதான் தமிழ்த்தேசியத்திலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் நிலவுகிறது.
பெரும்பான்மை வடக்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்கட்சிகளும், இயக்கங்களும் எடுக்கின்ற முடிவுகள் கிழக்கு மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக இல்லை. வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் இது பொருந்திப்போக முடியாது, என்பதன் ஜதார்த்தத்தை அவர்கள் ஏற்கமறுக்கின்றனர். சமூகங்களுக்கிடையிலான தனித்துவங்களை அங்கீகரித்து வேற்றுமையில் ஒற்றுமை காண அவர்களின் ஜனநாயகப் பற்றாக்குறை தடுக்கிறது.
இதனால் மேலாதிக்கம் இலகுவாக பிரதேசவாதம் என்று பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறது.
தனித்துவங்களையும், வேற்றுமைகளையும் அங்கிகரிக்காது “நாங்கள் தமிழர்கள் எங்கள் மொழி தமிழ் ஒன்றுபடுவோம்” என்று கூறுவது வெறும் அரசியல் பம்மாத்து. இதைத்தானே சிங்கள தேசம் கூறுகிறது. “நாங்கள் இலங்கையர்கள், எங்கள் நாடு இலங்கை”- இதை தமிழ்த்தேசியம் ஏற்றுக்கொள்கிறதா?
மரபுசார் மார்க்சிய, முதலாளித்துவ கோட்பாடுகள் வர்க்கம் குறித்தும், முதலாளியின் நலன் குறித்துமே பேசுகின்றன. இன்றைய உலகில் இந்த இரு கோட்பாடுகளும் முழுமையாக நடைமுறையில் இல்லை. முதலாளித்துவம் மார்க்சிய நல்லம்சங்களை உள்வாங்கி தன் குறைபாடுகளை திருத்திக் கொண்டு மார்க்சிய வர்கப்புரட்சியையும், அதற்கான சூழ்நிலையையும் தடுத்து நிற்கிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த வர்க்கப்பார்வைக்கப்பால் அதற்குள் புரையோடி இருக்கின்ற சாதியம், மதக்குழுக்கள், பிரதேசம், தேசியம் என்பனவற்றை பின்நவீனத்துவ அடிப்படையில் நோக்கவேண்டிய தேவை உள்ளது. ஆக, பிரதேச நலன் சார்ந்து ஒரு மக்கள் கூட்டம் செயற்படுவது பிரதேசவாதமோ, ஜனநாயகப் பற்றாக்குறையோ அல்ல. அது அவர்களின் அடிப்படை உரிமை, புதிய ஜனநாயக, பின்நவீனத்துவ அரசியல் அணுகுமுறை.
சமகால தமிழ்த்தேசியம் :
தமிழர் அரசியல் தலைமைத்துவம் யாழ்.குடாநாட்டுக்குள்ளே முடக்கப்பட்டிருப்பது ஒரு பெரும் துயரம். குடாநாட்டிற்கு வெளியே பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றபோது எந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் இது குடாநாட்டிற்குள் குடிகொண்டிருக்கிறது.? இதற்கு விடை காணப்போனால் அங்கு நிலவுகின்ற அதிகாரப்பசியை, வெறியை நாம் இனம் கண்டுகொள்ள முடியும். இவ்வளவு இழப்புக்களையும் சந்தித்த பின்னும் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தமிழ்த்தேசிய கோமாளித்தலைமைகள்.
பொத்துவில் இருந்து குடாநாட்டிற்குள் நுழையும் மட்டும் ஒன்றாக நடந்தது P2P. ஆனையிறவைத் தாண்டியதுதான் தாமதம் அதிகாரப்போட்டியில் மூன்றாகப் பிரிந்து, அதற்குள் நீங்கள் மட்டக்களப்பார், நாங்கள் யாழ்ப்பாணத்தார் என்று பேசிய வக்கிர வங்குரோத்து அரசியல் தன் குணத்தை காட்டிக்கொண்டது. இது ஜனநாயகம் என்றால், அந்த ஜனநாயகத்தை நீங்களே கட்டியணைத்துக் கொள்ளுங்கள் எங்களை விட்டு விடுங்கள்.
உங்களுக்கு அரசியல் பற்றாக்குறை வரும்போதெல்லாம் எங்களை போடுகாய்களாகப் போட்டு நீங்கள் நிரப்பிக் கொள்வதற்கு உங்களின் அரசியல் வரவு செலவுத் திட்டத்திற்கான குறை நிரப்பிகள் நாங்கள் அல்ல. இதைத்தான் “இராசமாணிக்கம் முதல் இன்றைய செல்வராசா வரை” தமிழ்த்தேசிய ஜனநாயகம் செய்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டாளி மும்மூர்த்திகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த பதவிப்பேராசை ஆயுதப் போராட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. சகோதரப் படுகொலை வெறிக்கு இதை விடவும் வலுவான காரணம் கிடையாது. இது யாழ்.மேலாதிக்கத்தின் பிறப்பின் குணாம்சம் இரத்தத்தோடு கலந்துள்ள மேலாதிக்கக்கிருமி. யாழ்.குடாவுக்குள் பிறந்ததினால் நீங்கள் தலைமை தாங்குவதற்கென்றே பிறந்தவர்கள். மற்றையவர்கள் குடாநாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள் என்பதால் எல்லாவகையிலும் உங்களை விடக்குறைவானவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்ற கருத்தியல். தமிழன் என்ற வார்த்தையினால் கட்டிப்போட்டு அடிக்கும் மேலாதிக்க அரசியல் ஜனநாயக வன்முறை.
இந்த நிலையே புலம்பெயர்ந்த தேசங்களிலும் தொடர்கிறது.
புலம் பெயர்ந்தது தமிழர் மட்டுமல்ல ஒட்டு மொத்த மேலாதிக்க கருத்தியலும்தான். அதில் ஒருகூறு மட்டுமே சாதியம். இவர்கள் சுமந்து வந்த முதுகுப்பையில் அனைத்தும் பொதி செய்யப்பட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் இறக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மேற்குலக ஜனநாயக சூழலிலும் அதே பற்றாக்குறை ஜனநாயக அரசியல் இங்கும் தொடர்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னரான தேசிய பட்டியல் விவகாரத்தில் மாவையா? கலையரசனா? என்ற விவாதம் வந்த போது சம்பந்தன் ஐயா “பிரதேசவாதம்” என்ற சிக்கலுக்குள் இழுத்துவிட்டுவிடாதீர்கள் என்று எச்சரித்தார். இங்கு அவர் இல்லாத ஒன்றைச் சொன்னாரா? அல்லது இருக்கின்ற ஒன்றைச் சொன்னாரா? இருக்கின்ற யாழ்.மேலாதிக்கத்தின் கிழக்கு புறக்கணிப்பை கருத்தில் கொண்டுதான் சொன்னார் என்பதை மறுக்கமுடியாது.
வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள், இந்தியத்தரப்பு இப்படி எத்தனை சந்திப்புக்கள். இவற்றில் கிழக்கின் பிரதிநிதித்துவ வகிபாகம் என்ன?
அண்மையில் இடம்பெற்ற இந்திய இல்லச்சந்திப்பில் எத்தனை வடக்கு பிரதிநிதிகள்? எத்தனை கிழக்கு பிரதிநிதிகள்? ஆகக் குறைந்தபட்சம் இவற்றில் கூட கிழக்கின் சமபங்கை அங்கீகரிக்காமல் கிழக்கின் அரசியல் பிரதேசவாத அரசியல் என்று சொல்வதற்கு மேலாதிக்க ஜனநாயகப் பற்றாக்குறை அரசியலுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது.
இதைக்கேட்டால் எங்களுக்கு ஜனநாயகப் பற்றாக்குறை! நாங்கள் பிரதேசவாதம் பேசுபவர்கள்!!
ஆக, வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு எத்தனை கொட்டைப்பாக்கு!