— சபீனா சோமசுந்தரம் —
அந்த பினான்ஸ் நிறுவனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அன்று திங்கட்கிழமை ஆகவே அதிகளவான வாடிக்கையாளர்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
‘மனேஜர்’ என்று பெயரிடப்பட்டிருந்த கண்ணாடிக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஆதி. அவன்; அந்த பினான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றுகிறான்.
அவன் தன் இருக்கையில் அமர கதவைத்தட்டும் சத்தம் கேட்டது. ‘யெஸ் கம் இன்..’ என்று அவன் குரல் கொடுக்க உள்ளே நுழைந்தான் முரளிதரன்.
‘குட் மோர்னிங்.. முரளி..’ என்று அவன் புன்னகைக்கவும், முரளி மெல்லிய புன்னகையோடு பதிலுக்கு ‘குட் மோர்னிங் சேர்..’ என்று விட்டு எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தான்.
‘லாஸ்ட் ப்ரைடே அப்டேட் என்ன முரளி..?’ என்றான் ஆதி மடிக்கனிணியில் எதையோ பார்த்தபடி.
அவனிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஆதி நிமிர்ந்து முரளியை பார்த்தான். அவன் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.
‘முரளி..’ என்று மேஜையை தட்டினான்.
‘ஓம் சேர்.. என்ன கேட்டீங்க..’ என்று தடுமாறினான்.
அவன் ஏதோ குழப்பத்தில் இருப்பது அவனுக்கு புரிந்தது. ‘முரளி நீங்க பீல்டுக்கு வெளிக்கிடுங்க.. லஞ்ச் டைம் கதைப்பம்..
‘இப்ப எனக்கும் கொஞ்ச வேலை இருக்கு.. லஞ்ச் டைம் விரேக்ல லாஸ்ட் வீக் வேர்க் டீடெய்ல்ஸ் எடுத்திட்டு வாங்க..’ என்றான்.
‘ஓகே சேர்.. நான் வெளிக்கிடுறன்..’ என்று விட்டு எழுந்து அந்த கண்ணாடிக்கதவை தள்ளித்திறந்து கொண்டு வெளியேறினான் அவன்.
ஆதிரன் அந்த நிறுவனத்தில் கடந்த ஆறு வருடங்களாக முகாமையாளராக பணியாற்றுகின்றான். அவனுக்கு மேல் அதிகாரி ஒருவரும் அவனுக்கு கீழே எட்டு பேரும் அங்கு பணியாற்றுகின்றார்கள்.
ஆதி தனக்கு கீழே வேலை செய்யும் எல்லோரிடம் அதிக கடுமையாக நடந்து கொள்ளாவிட்டாலும் வேலை விடயத்தில் எல்லோரையும் கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பதுதான் அவனின் வழக்கம்.
ஆனாலும் அவனுக்கு முரளி மீது ஏதோ ஓர் இனம்புரியாத அன்போ அல்லது அக்கறையோ இருந்தது. ஒருவேளை தனிப்பிள்ளையாக இருக்கும் தனக்கு ஒரு தம்பி இருந்திருந்தால் அவன் முரளியை போல் இருந்திருப்பானோ என்ற எண்ணமும் ஆதிக்கு அடிக்கடி வருவதுண்டு.
சில நேரங்களில் ‘அடேய் தம்பி.. நான் சொல்லுறது உனக்கு விளங்குதா..’ என்று அவனை கடிந்து கொள்வான் ஆதி.
அப்படியாக அவனின் அன்புக்கும் அக்கறைக்கும் பாத்திரமான முரளிதரனின் முகம் சரியில்லாமல் இருந்தது ஆதிக்கு யோசனையாக இருந்தது.
அப்படியே வாடிக்கையாளர்கள் வந்து போக நேரம் போனதே தெரியாமல் மத்தியான உணவு இடைவேளையும் வந்து விட்டது.
முரளியை தொலைபேசியில் அழைத்து வரவழைத்து, பக்கத்தில் இருந்த உணவகத்துக்கு அழைத்துப் போனான் ஆதி.
இருவரும் மதிய உணவை சாப்பிட அமர்ந்தனர்.
ஆதி முரளியின் முகத்தை ஆராய்ந்தான். அவன் முகம் வாடிப்போய் இருந்தது.
‘முரளி.. என்ன பிரச்சினை..? என்றான் ஆதி.
‘ஒன்டுமில்ல சேர்.. ஒரு சின்ன பிரச்சினை.. அதான் யோசனையா இருக்கு..’ என்றாள் முரளி.
‘என்ன.. என்ன நடந்த..? என்றான் ஆதி.
‘ சேர் எங்கட வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருக்கிற வீட்டுல கஞ்சா விக்கிறாங்கள் சேர்.. அதுவும் அப்பாவும் மகனும் சேந்து செய்யிறாங்க..
‘வந்து வாங்குறது முழுக்க ஏ.எல், ஓ.எல் படிக்கிற பொடியள்.. பாக்க விசரா கிடக்கு சேர்..’ என்றான் முரளி, முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு.
‘இதான் பிரச்சினையா.. நானும் ஏதோ வேற பெரிய பிரச்சினையோ என்டு யோசிச்சன்டாப்பா.. இதெல்லாம் தெருவுக்கு தெரு நடக்கிறது தான்..
‘நாங்க இப்பிடி கதைக்க மட்டும்தான் ஏலும்.. இதையெல்லாம் தடுத்து நிப்பாட்ட ஏலாது..
‘அதோட இப்பிடி ஒன்டு எங்கட ஏரியால நடக்குதெண்டு பொலிஸில போய் சொல்ல யாருக்காவது தைரியம் இருக்கா..?, யாராவது சொல்லுவானா..’என்று ஆதி சொல்லி முடிப்பதற்குள்;
‘நான் சொன்னன்..’ என்றான் முரளி.
ஆதி இதை எதிர்பார்க்கவில்லைதான். முரளி இருபத்தாறு வயது நிரம்பிய இளைஞன். வாழ்க்கை அனுபவம் அவனுக்கு இல்லை.
தேவையில்லாத விடயத்தில் தலையிட்டு பிரச்சினையில் மாட்டிக் கொண்டானோ என்று ஆதிக்கு தோன்றியது.
‘என்ன முரளி.. பொலிஸ்ல கம்ளைன்ட் குடுத்தீங்களா..? ஏன்டாப்பா உனக்கு இந்த விசர் வேலை..? என்று ஆதி கோபமாக கேட்க,
‘பொலிஸ்ல சொல்லேல.. எங்கட சேர்ட்ட சொன்னன்..’ என்றான்.
ஆதிக்கு இப்போது கொஞ்சம் மனம் லேசாக இருந்தது. ஒருவேளை பொலிஸில் கம்ளைன்ட் கொடுத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் கம்ளைன்ட் கொடுத்தவனை சும்மா விடமாட்டார்கள்.
முரளி ‘எங்கட சேர்ட்ட சொன்னன்..’ என்றது அந்த ஊரில் உள்ள எம்.பி ஒருவரைத்தான். ஏனென்றால் முரளி அந்த எம்.பியின் வலது கைகளில் ஒருவன்.
அலுவலக நேரம் தவிர்ந்த வேறு எப்போது அவனை அழைத்தாலும் ‘நான் சேர்ட ஒபிஸில நிக்கிறன்..’ என்பான் முரளி.
‘சரி உங்கட சேர்ட்டத்தானே சொல்லி இருக்கு.. அவர் ஏதும் அக்ஷன் எடுப்பார் தானே..’ என்று ஆதி சொல்ல;
‘அதான் சேர் இப்ப பிரச்சினையே..’ என்றான் முரளி தலையை குனிந்தபடி.
‘என்னடாப்பா குழப்புற.. தெளிவா சொன்னால் தானே விளங்கும்..’ என்றாள் ஆதி
‘இப்பிடி ஸ்கூல் பொடியளுக்கு கஞ்சா விக்கிறாங்க எண்டு சேர்ட்ட போய் சொன்னன்.. சொல்லிட்டு வந்த பிறகு தான் தெரியும்.. இதெல்லாம் சேர் சொல்லி தான் இவங்கல்லாம் செய்யிறாங்க எண்டு..’
‘கொஞ்சம் பயமா இருக்கு சேர்.. என்னய ஏதும் செய்திடுவாங்களோ என்டு..’ என்றான் முரளி கவலையோடு.
‘மடையனாடா நீ.. எத்தன முறை நானே சொல்லியிருக்கன்.. இந்த அரசியல்வாதியளோட பழக்கம் வைக்காத என்டு..’ என்று ஆதி முரளியை கடிந்து கொள்ள;
‘எனக்கு தெரியாது… சேர் இப்பிடிபட்டவர் என்டு.. அவர் எல்லாம் ஒழுங்கான பிஸினஸ் செய்யிறார் என்டுதான் எல்லாருக்கும் தெரியும்… அவர் இப்பிடிப்பட்ட மனிசனென்டு தெரியாது எனக்கு..’ என்றான் முரளி
‘என்ன மண்ணாங்கட்டி ஒழுக்கம் அவங்களிட்ட இருக்கு.. விசர் கத கதைக்கிற தம்பி நீ.. இப்ப பார் சேரக்கூடாத இடத்தில சேர்ந்து.. ச்சே.. என்னடா நீ…’ என்று கோபத்தில் கத்தினான் ஆதி.
தாங்கள் இருப்பது பொது இடம் என்பதை உணர்ந்து,
‘சரி சாப்பிடுங்க முரளி.. பாத்துக்கலாம் ஒண்டும் பிரச்சினை வராது..’ என்று சொல்லி முரளியை சாப்பிடும்படி சொல்லிவிட்டு தானும் சாப்பிடத் தொடங்கினான் ஆதி.
ஆதி முரளியை சமாதானப்படுத்தி தானும் சாப்பிட்டானே தவிர மனம் கலக்கமாகவே இருந்தது அவனுக்கு. முரளியை பார்க்க பரிதாபமாகவும் கவலையாகவும் இருந்தது ஆதிக்கு.
முரளிக்கு மனதில் உள்ள பாரத்தை ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் மனம் லேசானது.
இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அலுவலகம் வந்தனர். மீண்டும் வேலையில் மூழ்க மாலை அலுவலகம் முடிந்து அனைவரும் வெளிக்கிட்டனர்.
அலுவலகத்தில் இருந்து வெளிக்கிடும் போது முரளியை அழைத்து அவன் தோளிள் ஆதரவாக தட்டி’ யோசிக்காதடா தம்பி.. ஒண்டும் பிரச்சினையாகாது.. ‘ என்று சொல்லி விட்டு கிளம்பினான் ஆதி.
அன்றிரவு ஆதிக்கு சரியாக தூக்கம் இல்லை. முரளி மீது இருக்கும் இனம்புரியாத ஒரு அன்பும் அக்கறையும் முரளிக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று அவன் மனதை நெருடிக்கொண்டேயிருந்தது.
ஒருவழியாக விடிந்து விட்டது. காலை எழுந்ததும் முதல் வேலையாக முரளிக்கு அழைப்பை ஏற்படுத்தினான். ஆனால் பதிலில்லை.
அலுவலகத்தில் வந்து பார்த்தான் அங்கும் அவன் இன்னும் வரவில்லை. வந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து வேலையில் மூழ்கினான் ஆதி.
நேரம் காலை 11.00 பதினொரு மணியை தாண்டிக்கொண்டிருக்கையில் ஆதியின் அறைக்கதவு தட்டப்பட்டது.
‘யெஸ் கம் இன்..’ என்றான் ஆதிரன்
கதவைத்திறந்துகொண்டு அலுவலக உதவியாளன் உள்ளே வந்தான். அவன் முகம் வெளுத்து போய் பதட்டத்தில் இருந்தான்.
‘சேர்.. நம்மட ஒபிஸில வேல செய்யிற முரளி சேர் தற்கொலை பண்ணிட்டாராம்.. ஆத்தில பொடி கரை ஒதுங்கி இருக்காம்..’ என்றான் அவன்.
ஆதிக்கு ஏதோ தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது. உடனே பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான். பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தான்.
முரளியின் உயிரற்ற உடலை அங்கு காணவும் அவனால் தாங்க முடியவில்லை. கத்தி அழ வேண்டும் போல் இருந்தது ஆதிக்கு.
முரளியின் உடல் பிரதே பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. நாளை காலை சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று வைத்தியசாலையில் தெரிவித்தார்கள்.
அதன்பின் அலுவலகம் போகாமல் வீட்டிற்கு வந்த ஆதிக்கு மனம் நிலைகொள்ளவேயில்லை. ஆதிக்கு நிச்சயமாக தெரியும் முரளி தற்கொலை செய்யவில்லை அவனை கொலை செய்திருக்கிறார்கள் என்று.
‘நேற்று ஒரு நாள் மட்டுமாவது முரளியைதன் வீட்டில் தங்க வைத்திருக்கலாம்’ என்று தோன்றியது ஆதிக்கு.
‘என்னய ஏதும் செய்திடுவாங்களோ எண்டு பயமா இருக்கு சேர்..’ என்ற முரளியின் குரல் ஆதியை துரத்தியது.
‘தெரிஞ்சும் அவன சாககுடுத்திட்டனே.. நானொரு மடையன்..’ என்று வாய்விட்டு சொல்லி தனியாக புலம்பினான்.
நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டிலிருந்து வெளியேறினான்.
முரளியின் வீட்டிற்கு பக்கத்தில் நடக்கும் போதை பொருள் வியாபாரம் குறித்தும் முரளியின் மரணத்தில்; தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தான் ஆதி.
ஆதிக்கு தெரியும் இதனால் தனக்கு வரப்போகும் பிரச்சினை என்ன என்று. ஆனாலும் தன்னால் முடிந்த தூரம் வரை போராட முடிவெடுத்தான்.
தனக்கு அத்தனை காலம் விசுவாசியாக இருந்த ஒருவனை சின்ன பொடியன் என்றும் பாராமல், இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்யும் அந்த கேவலமான மனிதனை நான் எதிர்த்தே ஆகுவேன் என்ற மனவேகத்தோடு வைத்தியசாலையை நோக்கி பைக்கை முறுக்கினான்.
ஆதி தன் ஒட்டு மொத்த கோபத்தையும் சேர்த்து பைக்கை முறுக்கிய வேகத்தில் அது வீதியில் சீறிப்பாய்ந்தது.