— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிபயங்கரமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதலாவது அலையின் போது உண்டான எச்சரிக்கை உணர்வையும் கட்டுப்பாட்டையும் இப்பொழுது காணமுடியவில்லை. உதவியளிப்புகளும் இல்லை. முதல் அலையின்போது ஏற்பட்டிருந்த கவனத்தினால் வறிய குடும்பங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாளாந்த உணவு,அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளுர் மட்டத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளிடத்திலுமிருந்து பல விதமான உதவிகள் செய்யப்பட்டன. அரசாங்கம் கூட வறிய குடும்பங்களுக்கு ஒரு தொகை உதவிப் பணத்தைக் கொடுத்தது. அத்துடன் பொருட்களின் விலையிலும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு விலையிருந்தது. சில பொருட்களை சில வணிகர்கள் பதுக்கினாலும் சில இடங்களில் சில பொருட்களுக்கு விலை அதிகரிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் அவை கவனிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் சாதாரண சனங்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கவில்லை. கூடவே அரசாங்கமும் கூடிய கவனமெடுத்து தொற்றுக் கொத்தணிகளை இனங்கண்டு அதை முடக்கியது. ஒரு கட்டத்தில் சில இடங்களுக்கும் சில காலம் நாடு முழுவதற்கும் முடக்கத்தையும் ஊரடங்கையும் கடைப்பிடித்தது. இதனால் எதிர்பார்க்கப்பட்டதையும் விட இலங்கையில் கொரோனா அபாயம் கட்டுப்படுத்தப்பட்டது. அல்லது தவிர்க்கப்பட்டது. சனங்களும் அதிக பாதிப்பையும் கஸ்ரத்தையும் சந்திக்கவில்லை. இதனால் இலங்கையை பிற நாடுகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் பாராட்டியது. இலங்கை சில முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது சிறப்பானது என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்பொழுது அடித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது அலை அப்படியல்ல. அது ஏற்கனவே பெற்ற அனைத்தையும் போட்டுடைத்த மாதிரி ஆகியிருக்கிறது. இப்போது தொற்றுப் பயங்கரமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. மரணத்தின் விகிதமும் ஏறிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்க்காத அளவுக்கு சமூகத் தொற்றுக் கூடிக் கொண்டிருக்கிறது. நமது சுற்று வட்டத்திலுள்ளோருக்கே தொற்று என்ற நிலை வந்திருக்கிறது. அதாவது நமக்கு மிக அருகில் கொரோனா வந்துள்ளது. இதனால் இதைக்குறித்த மருத்துவத்துறையினரின் அறிவிப்புகளும் கவலையளிப்பனவாக உள்ளன. இதற்கு முதற்காரணம் சனங்களின் அசிரத்தையே அதிகம் எனலாம். அடுத்ததே அரசாங்கத்தின் நடவடிக்கைகள். சனங்கள் முகக் கவசத்தை ஒழுங்காக அணிந்து, கூட்டங்களையும் விழாக்களையும் குறைத்து அல்லது கட்டுப்பாடாக நடத்தி, கைகளையும் உடலையும் சுத்தமாகவும் வலுவுடனும் வைத்திருந்தால், பொறுப்புடன் நடந்திருந்தால் இந்தளவுக்குத் தொற்றுப் பரவியிருக்க வாய்ப்பில்லை.
யார்தான் இதையெல்லாம் பொருட்படுத்தினார்கள். எரிகிற வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்கிற மாதிரி எந்த நெருக்கடியான சூழலுக்குள்ளும் தமது லாபத்தை – நலன்களைக்குறித்துச் செயற்படுவோரே அதிகமாக உள்ளனர். இது ஒரு புறம் என்றால் அரசாங்கமும் என்ன செய்வது, அதை எப்படிச் செய்வது என்று தெரியாத குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் உள்ளது. இதுவரையிலும் அரசாங்கத்தரப்பின் அறிவிப்புகள் அசிரத்தையாகவே இருந்தன. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு செய்தி வந்திருக்கிறது – மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது எனவும். இது ஜனாதிபதியின் தீர்மானம் என்றவாறு. அப்படியென்றால் ஏன் இதை இத்தனை தாமதமாக – தொற்று இந்த அளவுக்குப் பரவித்தீவிரமடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டும்?
எழுந்தமானமாக அரசாங்கம் எல்லாவற்றையும் மூடவோ முடக்கவோ முடியாது. நாட்டின் பொருளாதாரமும் உற்பத்தியும் அந்தளவுக்குச் சிக்கலடைந்திருக்கின்றன. எனவே பொறுப்பில்லாமல் அரசு நடக்க முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். அப்படியென்றால் தொற்றுப் பரவி அதனால் ஏற்படும் மரணங்களும் நோய்த்தீவிரமும் நாட்டைப்பாதிக்கும் அல்லவா. அதுதான் மிகப் பெரிய பாதிப்பை எதிர்காலத்திற்குத் தரும் என்றால் அதற்கு எவரும் ஒழுங்காகப் பதிலளிக்கக் காணோம்.
எல்லாவற்றையும் விடப் பெரிய பகடியும் ஆபத்தான சங்கதியும் என்னவென்றால் தொற்று மற்றும் மரணம் ஆகியவற்றின் உண்மை விவரத்தை அரசாங்கம் மறைக்கிறது எனப் பலர் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வோரில் அதிகமானவர்கள் படித்தவர்கள். சில நாட்களுக்கு முன்னர் பலரும் சொன்னார்கள். “அரசாங்கம் பொது முடக்கத்தைத் தவிர்ப்பது எதற்காக என்றால் இந்தத் தடவை வெசாக் பண்டிகையை நயினாதீவில் நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆகவே அது தடைப்படக் கூடாது என்பதற்காகவே இந்த இழுத்தடிப்பு” என்றனர் அவர்கள். வேறு சிலரோ “றம்ழான் பண்டிகையை தடுப்பதற்கே தொற்றின் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்படுகிறது. மரணத்தின் விகித அதிகரிப்பும் அப்படித்தான் கூட்டிக் காட்டப்படுகிறது” என்கின்றனர். இதையெல்லாம் எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புலனாகிறது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வும் கசப்புமே இவர்களை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. இதேவேளை கொவிற் 19க்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் உடனடியாக மேற்கொள்ள வேணும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஆனாலும் எதிர்க்கட்சிகளும் சரி, அரசாங்கமும் சரி, சமூக மட்டத்திலான அமைப்புகள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் எனப் பல தரப்பினரும் சரி தமது பங்குக்கு என்ன செய்வது என்று சிந்தித்துச் செயற்படுவதாகத் தெரியவில்லை. இது ஒட்டு மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் பாகுபாடின்றி இணைந்து செயற்பட்டு முறியடிக்க வேண்டிய ஒரு பொதுப் பிரச்சினை. அதாவது இந்த வைரஸ் அசுரன் எல்லோரையும் தாக்கும். கட்சி, சாதி, பிரதேசம், இனம், மொழி, மதம், பால், பருவம் பார்த்து தாக்காது – தொற்றாது. ஆகவே எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நெருக்கடியை முறியடிக்க முடியும். ஏனென்றால் ஒரு வகையில் இது ஒரு தேசிய அச்சுறுத்தலே. ஒன்று நோய்த்தொற்று மற்றும் மரணம் என்ற வகையில். மற்றது இதனால் உண்டாகும் சமூக முடக்கம், கல்வி, பொருளதார, வாழ்க்கை நெருக்கடி என்ற வகையில்.
அப்படியென்றால் இதற்கு ஒரு முன்மாதிரியான செயற்பாட்டுப் பொறிமுறை அவசியம். அதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பு அரசுக்குரியது. அனைத்துத் தரப்பையும் இணைத்து அந்தப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். எல்லோருடைய பங்களிப்புகளையும் இதில் எடுத்துக் கொள்ளலாம். அது அரசாங்கத்துக்கும் சுமைக்குறைப்பாக அமையும். ஏறக்குறைய சுனாமி இடர்க்கால நெருக்கடிப் பணியைப்போல. அரசாங்கம் அதைச் செய்யத் தயங்கினால் பிற தரப்புகள் தமக்கியிடையில் ஒரு ஒருங்கிணைப்புக்கு வரலாம். அப்படி வந்து செயற்பட்டால் அவற்றுக்கு மக்களிடத்தில் மதிப்புண்டாகும்.
இப்போது தொற்றாளர்களைப் பராமரிப்பதற்கான அவசரகால மருத்துவ மனைகள் உருவாக்கப்படுகின்றன. தொடர் நடவடிக்கையாக தடுப்பூசியும் ஏற்றப்படுகிறது. ஆனால் தடுப்பூசி ஏற்றப்படும் வேகம் போதாது என்பது ஒரு குறையே. இதில் அரசாங்கத்துக்குச் சில சிக்கல்கள் இருக்கக் கூடும். ஆனால் அதையும் விட அதற்கு இதில் கூடுதல் பொறுப்புண்டு. அதைத் தட்டிக்கழிக்கக் கூடாது. அதாவது பொது மக்களின் உயிரோடும் வாழ்க்கையோடும் அரசாங்கம் விளையாட முடியாது. அரசு என்பது பொறுப்புடையது. இந்தப் பொறுப்பில் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒன்று மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். இவர்கள், மக்களின் நிலை நின்று நாட்டுக்கும் மக்களுக்குமாகத் தீர்மானங்களை எடுப்போர். அதற்காட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் பிரயோகச் சட்டங்களை ஆக்குவோர். அடுத்த தரப்பினர், எடுக்கப்படும் தீர்மானங்களையும் ஒதுக்கப்படும் நிதியையும் விதிக்கப்படும் சட்ட நியதி மற்றம் விதிமுறைகளையும் அமூல்படுத்தும் நிர்வாகப் பிரிவினர். அதாவது அரச நிர்வாகக் கட்டமைப்பினர். ஆகவே இருதரப்பும் முழுமையாக இணைந்தால் வினைத்திறனான பல காரியங்கள் நல்லபடி நடக்கும்.
இப்பொழுதே பல பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. இது உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. இதை ஒரு இயல்புக் காலத்தில் செய்தால் அதனால் ஏற்படும் உடனடி நெருக்கடிகளைத் தாங்கிக் கொள்ள முடியும். இதுவோ கொரோனா நெருக்கடிக் காலம். அதாவது ஒரு இடர்க்காலம். இந்த இடர்காலத்தில் எப்படி இரட்டை நெருக்கடியைக் கொடுக்க முடியும். குறிப்பாக உணவு மற்றும் நாளாந்தப் பயன்பாட்டுப் பொருட்களில் எழுந்தமானமாக கை கைக்கக் கூடாது. அது அடி நிலை மக்களையே பெரிதும் பாதிக்கும். கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் ஒப்பீட்டளவில் அடிநிலைச் சமூகத்தினரே. குறிப்பாக சந்தைகள் மற்றும் நடமாட்டத் தொழிலாளர்கள். இது எதைக் காட்டுகிறது?
நாட்டின் தேசிய வளத்தில் மனித வளமும் ஒன்று. அதுவே முக்கியமானது. உடல் மற்றும் அறிவு என இருவழியில் இந்த வளம் நாட்டுக்கு வலுச் சேர்க்கிறது. இந்த வளத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வது அவசியம். ஏனெனில், முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல இது மரணத்துடன் ஆடும் ஆட்டம்.