—- அகரன் —-
- இலங்கையின் கோட்டே இராசதானி (கொழும்பு) 1506இல் போர்த்துக்கேயரிடம் தாமதமின்றி சரணாகதி அடைந்தது. ஆனால் 103 ஆண்டுகள் யாழ்பாண இராசதானி எதிர்த்துநின்றது.
- முதலாம் சங்கிலிய மன்னன் உறுதியோடு போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டார் (1560). அப்போது, அவரின் மகன்களில் ஒருவரை போர்த்துக்கேயர் பிணைக்கைதியாக கோவா கொண்டு சென்றனர்.
- இரண்டாம் சங்கிலி மன்னன், போர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாண போரில் கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் உள்ள கோவாவில் (1621) தூக்கிடப்பட்டார்.
காலம் :- 1620 மார்கழி
இடம் :- கோவா போர்த்துக்கேய கோட்டை.
நேரம். :- ஓர் அடிமை இரவு.
“யாரோ அரச குலத்தவரை இழுத்து வந்திருக்கிறார்கள், இந்த தோலில் கருஞ்சத்து இல்லாதவர்கள். எங்கோ இருந்து புதுமையான கருவிகளோடு வந்து, சிலுவை மதத்தையும் பரப்பி எங்களை ஆள நினைக்கிறார்கள். எங்களிடம் வீரம் இருந்தது? கருவிகள் இல்லையே!” என்று மறுகிக்கொண்டிருந்தது ஒரு சிங்கம். ‘’டொன்பிலிப் டீசா’’ என்ற பெயரை போத்துக்கேயர் வழங்கினாலும், அதை ஒருபோதும் ஏற்காமல் எப்போதும் ‘’ஓம் சிவ சிவ’’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் அந்த இளஞ்சிங்க பண்டாரம்.
அந்த அரச குலத்தவன் யாராக இருக்கும்? அதற்கு சூரியன் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமே!. சாமம் இரண்டு நாழிகையாகியும் தூக்கம் தொலைதூரத்துக்கு ஓடிச்சென்றுவிட்டது. நினைவுகளும் எதிர்காலமும் அவரை ஆட்டிப் படைத்தது. மார்கழி குளிரும், கோவா கோட்டையின் கடற்காற்றும், அரச சிறைக்கூடத்தைக் கொடும் ஆட்சி செய்தது.
தன் நெஞ்சப்பரப்பை தடவியபோது, மெழுகு வெளிச்சத்தில் எல்லா முடிகளும் நரைத்திருந்ததைப் பார்த்தவாறே, தனக்கு எழுபத்தைந்து வயதாகி விட்டதை நினைத்தார் அவர்.
அவர்களுடைய பெயரையும், (டொன் பிலிப் டீசா) சிலுவை மதத்தையும் ஏற்றிருந்தால், இன்று கோவாவில் உள்ள கோட்டையில் சுதந்திரமாக உலாவி இருக்கலாம். அரச பரம்பரை பெண்ணை திருமணம் கூடச் செய்து வைத்திருப்பார்கள் என்று நினைத்த போது அவர் கன்னங்களில் புன்முறுவல் அலைக்கோடுகளாக வந்து போனது. உயிரோடு இருப்பதற்கு அவரிடம் இருக்கும் மூலிகை வைத்திய அறிவே காரணம்.
1560இல் 15 வயது அரசகுமாரன் ஆக இருந்தபோது, யாழ்ப்பாண இராட்சியத்தில் தந்தை முதலாம் சங்கிலியனை இடரில் இருந்து மீட்கவும், போர்த்துக்கேய ஆதிக்கத்தை தந்திரமாகத் தகர்க்கவும், பிணைக்கைதியாக போர்த்துக்கேயரிடம் சென்றார். அந்த நேரம் தந்தை சிவந்த கண்களோடு “உன்னை மீட்பேன்! அல்லது நீ மீண்டு வருவாய்” என்று சொன்ன வார்த்தைகள் மட்டுமே யாழ் இராச்சியம் சம்பந்தமாக அவரிடம் எஞ்சி நின்றது.
“இன்று 1620 நான் பிணைக்கைதியாகி 60 வருடங்கள் கடந்துவிட்டது. யாழ்ப்பாண இராட்சியம் முழுவதுமாக போத்துக்கேயர் வென்று இருப்பார்களோ? அல்லது ஈழ தேசம் பூராகவும்வென்று இருப்பார்களோ? தந்தை இறந்தாலும், என் அண்ணன் ‘’புவிராஜ பண்டாரம்’’ ஆட்சி செய்வான். ஆனால், சிறுவயதில் இருந்து அவன் விவேகமானவனாக இருக்கவில்லையே? எப்போதும் அன்னையைத் தேடிக் கொண்டிருப்பானே? அப்போதெல்லாம் உணவு உண்பதில் காட்டும் அக்கறையை குருகுல பாடங்களில் அவன் காட்டவில்லையே? என்னைவிட நான்கு ஆண்டுகள் மூத்தவன், அப்படியென்றால் 79 வயதாகி இருக்கும்! என் நல்லூர் அடிமைப்பட்டிருக்குமோ?” என்று நீண்ட நாட்களின் பின் நினைவுகள் நெருப்பில் வேகும் இறைச்சித்துண்டாக இருந்தது. கருகி உருகிப்போனது தூக்கம்.
வழமையாக அதிகாலையில் சூரியனைப் பார்க்க எழுந்துவிடும் இளம்சிங்க பண்டாரம், நீண்ட காலத்தின் பின் சூரியன் வந்த பின்னும் எழும்பவில்லை. அவரிடம் மருத்துவம் கற்கும் இளம் போர்த்துக்கேயன் “டோன் பிரான்சுவா” தேடிவந்து எழுப்ப வேண்டி இருந்தது. அவர் கண்களைத் திறந்தபோது, உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அவருக்கு எறும்பு கடித்தது போலிருந்தது. டொன்பிரான்சுவாவும் ஒருவித கலவரத்தோடு இருப்பது தெரிந்தது.
‘’உங்கள் உடலுக்கு ஒன்றுமில்லையே?’’ என்றான். நீண்டிருந்த சூளியை ஒதுக்கியவாறு.
அவன் போத்துக்கேயனாக இருந்தாலும், கோவாவில் பிறந்தவன். 20 வயதை எட்டியவன். தன் மூலிகை மருத்துவ ஆசானிடம் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன்.
‘’இல்லை இல்லை’’ என்று வினோதமாக நாரைக் கொக்கின் குரலில் பதில் சொல்லி எழுந்து, கல் இருக்கையில் அமர்ந்துகொண்டார் இளம் சிங்கம் பண்டாரம். மெழுகு உருகி தீர்ந்திருப்பதையே கண்கள் குத்திப்பார்த்திருந்தது.
டொன் பிரான்சுவா அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவரருகே வந்து ‘’உங்கள் நாட்டு அரசனைத்தான் பிடித்து வந்திருக்கிறார்கள்’’ என்றான்.
‘’என்ன சொல்கிறாய்? அவன் பெயர் என்ன?’’
‘’ ஏதோ இரண்டாம் சங்கிலி என்கிறார்கள்’’
‘’ என் இராச்சியம் அடிமைப்பட்டுவிட்டதா?’’
‘’என் பிரியத்துக்குரிய பிரான்சுவா எப்படியாவது என்னை அவனுடன் பேசவைப்பாயா? எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம்!’’
‘’குருவே! அவசரம் வேண்டாம். இன்று இரவு சிறைப்பாதுகாப்பை நான் பெறுகிறேன். அப்போது அந்த கைதியிடம் அழைத்துச்செல்கிறேன்’’
இளஞ்சிங்க பண்டாரத்தின் அன்றைய பகல்பொழுது இருட்டி போயிருந்தது. “இந்தப் பகல் ஏன் இவ்வளவு நீள்கிறது?” என்று முதன்முதல் பகலைச் சபித்துக்கொண்டிருந்தார். ஜேசு பண்டிகை நெருங்கியதாலோ? மன்னன் ஒருவனை பிடித்துவந்ததாலோ என்னவோ கோட்டை எங்கும் போதை ஊறிய போர்த்துக்கேய வார்த்தைகளாக காற்று நிறைந்து கிடந்தது.
அன்றைய மாலை கோட்டையின் மேல் தளத்தில் அரபுக் கடலைப் பார்த்தவாறு இருந்தார். நல்லூர் எரிந்திருக்குமோ? இரண்டாம் சங்கிலி யாராக இருக்கும்? என்ற கேள்விகள் பெருகிக் கொண்டிருந்தது. தப்புவதற்கு தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து, இறுகிய பாதுகாப்புதான் பரிசாய்க் கிடைத்ததையும் நினைக்க தவறவில்லை. கடல் சூரியனை அருந்த ஆரம்பித்ததும், தன் இடத்திற்கு சென்று டொன்பிரான்சுவாவுக்காக காத்திருந்தார். பல ஆண்டுகளின் பின் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவதை மறந்திருந்தார்.
வாசலையே பார்த்துக் கிடந்தது மனது. மெழுகு வெளிச்சம் கண்டதும், பரவசப்பட்ட தளர்ந்த உடல். ஆ.. ஆ.. அந்த மெழுகை தடித்த காற்று தின்றுவிட்டது. வருவது டொன் பிரான்சுவா தான்.
அவன் நெருங்கி வந்து- “குருவே வாருங்கள்” என்றான். இருட்டில் அவனது வெள்ளை உருவம் துணையாய் இருந்தது. அந்த அறையை அடைந்ததும் அங்கு வெளிச்சமில்லை. டொன் பிரான்சுவா மெழுகுதிரியை மூட்டினான். உலோக கயிற்றால் வலது கால் தூணில் கட்டப்பட்ட கல் இருக்கையில் இரண்டாம் சங்கிலி அமர்ந்திருந்தான். இருவரின் முகங்களையும் பார்த்ததுக்கொண்டிருந்தது மெழுகு ஒளி.
யாழ்ப்பாண அரசராக முதல் பிணைக்கைதியானவரும், அரசனாகிய பின் தண்டனைக் கைதியானவரும் சந்தித்துக்கொண்டார்கள்.
இளஞ்சிங்கம் ‘’சிவசிவ’’ என்றார்.
தன் இனத்தின் முதியவர் ஒருவர்தான்! என்று உணர்ந்த மன்னர் சங்கிலி- ‘’சிவசிவ நீவிர் யாரோ?’’ என்றார்.
‘’நானே இளஞ்சிங்கம் பண்டாரம். யாழ்ப்பாண இளவரசனாகப் பட்டவன். 1560 பிணைக்கைதியாகப்பட்டவன்.‘’
‘’யான் அறிந்தேன்! யான் அறிந்தேன்!’’ என்றவாறு எழுந்து, திருவிழாவில் தொலைத்த தாயும் பிள்ளையும் கண்டுகொண்டது போல கட்டியணைத்தார்கள். சில நிமிடங்கள் அந்தக் சிறைக் கூடத்தை ஏக்கமும், இழப்பும், வியப்பும் நிறைந்திருந்தது.
‘’மன்னரே! நம் இராச்சியம் விழ்ந்து விட்டதா? என்ன நடந்ததோ? யான் 60 ஆண்டுகளாக இந்த கோட்டையைத் தாண்ட முடியவில்லை. எந்தச் சேதியும் என்னை அண்டவில்லை.’’
சங்கிலியால் வியப்பை கட்டுபடுத்த முடியவில்லை. மன்னர்களிடையே தான் நேசித்தவரும் 40 ஆண்டுகள் போர்த்துக்கேயரை எதிர்த்து நல்லூரை ஆண்டவருமாகிய மூத்த சங்கிலி மன்னனின் நேசிப்பிற்குரியவர் என்று சொல்லப்பட்ட ‘’இளஞ்சிங்க பண்டாரத்தை’’ அவரின் முதிய தோற்றத்தில் சந்திப்பேன் என்று அவர் நினைக்கவில்லை. அவர் இறந்திருப்பார் என்று யாழ்ப்பாண இராச்சியம் நினைத்தது.
“தங்களை பிணைக்கைதியாக அனுப்பியபோது நான் பிறக்கவில்லை. ஆனால் உங்கள் கதைகளையெல்லாம் யான் அறிந்துள்ளேன். போர் குருகுலத்தில் உங்கள் சாகசங்களை அறிந்திருக்கிறேன். அந்த வயதில் தலைக்கு பின்னால் இருக்கும் மாங்காயை பார்க்காமல் வேலை எறிந்து வீழ்த்துவீர்கள் என்ற செய்தி பெருமையோடு சொல்லப்பட்டது. தங்களின் தந்தையார் தங்களைவிடுவித்து மன்னராக்க, கடும் முயற்சி எடுத்தார். அது பலிக்கவில்லை. அடுத்த ஆண்டே அவர் மனம் பேதலித்துப் போனார். ஆதலால் புவி ராசபண்டாரத்திற்கு முடிசூட்டப்பட்டது.
தங்கள் பிரிவை ஆற்றாமல் 1565இல் தங்கள் தந்தையும், எங்கள் மன்னருமான மூத்த சங்கிலி ஒரு அதிகாலைப்பொழுதில் சூரிய வணக்கத்தின் பின்னர் இறைவனடி சேர்ந்தார். தங்களின் அண்ணனின் விவேகமற்ற நிலையால் அவரை அகற்றிவிட்டு ‘’காசி நயினார்’’ 1565இல் அரசைக்கைப்பற்றினார்.
ஆனால் பெரிய பிள்ளைப் பண்டாரம் என்பார் பெரும் துரோகம் செய்தார். காசி நயினாரை அகற்ற மன்னாரிலிருந்த போர்த்துக்கேயத் தளபதியை நாடினார். ஜோர்ஜ் தெமேலோ என்பான் சூழ்ச்சியால் நஞ்சு வைத்து காசி நயினாரைக் கொன்றுவிட்டு, 1570 பெரியபிள்ளையை அரசராக்கினான். யாழ்ப்பாண இராச்சியத்தின் அவமானம் அவன். வன்னியில் மறைந்து தன் வலுவை வளர்த்த தங்கள் அண்ணன் புவிராஜ பண்டாரம் வலுவோடு மீண்டு வந்தார் 1572இல் பெரியபிள்ளையை நீக்கிவிட்டு மீண்டும் அரசரானார்.
அவர் தஞ்சை, சீதாவாக்கை, கண்டி அரசுகளோடு இரகசிய உறவைப் பேணினார். தஞ்சையிலிருந்து படைகள் கண்டிக்கும், சீதாவாக்கைக்கும் துறவி வேடமிட்டு செல்ல உதவினார். அதை துரோகிகள் காட்டிக் கொடுத்ததால், கோட்டைத் துரோகப் படைகளும் போர்த்துக்கேயரும் கருவிகளோடு கப்பல்களில் வந்து தாக்கினர். எதிர்பாராத தாக்குதலால் மன்னர் பிடிபட்டார். தங்களின் அண்ணன் தலையைக் கொய்து அவரை வேலில் நட்டு நல்லூரில் பார்வைக்கு வைத்தனர். அந்த கொடூரர்கள் கொன்று குவித்தனர். அப்போது எனக்கு 11 வயது.”
‘’மேலும், சொல்லுக மகனே.. என் மன்னனே..‘’ என்றார் கண்களும், இதயமும் அதிர்ச்சியோடு விரிந்த நிலையில் இளம்சிங்க பண்டாரம்.
‘’தாங்கள் என் தந்தைக்கும் தந்தை போன்றவர் என்று அவர் கரங்களை பற்றி முத்தமிட்டார் இரண்டாம் சங்கிலி.
“கொல்லப்படும் தறுவாயில் இருந்த, மன்னரின் படையில் பணியாற்றிய ‘எதிர்மன்னசிங்கம்’ என்பவர் இளைஞராக இருந்தார். அங்கு கொலை வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது போர்த்துக்கேய தளபதியின் காதுகளில் அந்த இளைஞர் தங்களுக்கு ஆதரவான பெரிய பிள்ளையின் மகன் என்று யாரோ குசுகுசுத்ததால், அவரை மன்னராக்கி அவரோடு நல்லூர் ஒப்பந்தத்தை 1591 போத்துக்கேயர் செய்துகொண்டார்கள்.
மன்னர் எதிர்மன்னசிங்கம் உள்ளுக்குள் போர்த்துக்கேயரை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்றே இருந்தார். ஆனால் அவரால் ஆயுதக் கருவிகளை எதிர்க்க முடியவில்லை. அவரின் படையில் நான் இருந்தேன். பல திட்டங்களை சொன்னேன். எதற்கும் பதில் இல்லாமல் இருந்தது. மன்னாரில் உறைந்த கேதீச்சரரின் திருக்கோவிலை இடித்து கொடியோர் கோட்டை கட்டியிருந்தனர்.
1615இல் மன்னர் சிவனடி சேர்ந்தார். அவருடைய இளவரசன் சிறுவனாக இருந்ததால் ‘அரசகேசரி’ என்ற மன்னரின் மாமனாரிடம் அரசு பொறுப்பில் விடப்பட்டது. அவரும் போர்த்துக்கேயரை துடைத்தெறிய முற்படவில்லை. நான் பல ஆலோசனைகளை கூறினேன். எதற்கும் செவிசாய்க்கவில்லை. இறுதியில் எதிர்மன்னசிங்கம் மன்னரின் அக்காள் மகன் ஆகிய நான் அரசகேசரியை அகற்றிவிட்டு 1617இல் ஆட்சிக்கு வர வேண்டி ஏற்பட்டது.”
‘’மகனே! ஓ.. என் அரசகேசரி.. அவன் என்னோடு குருகுலத்தில் கற்றவன். அவனுமாவீரமிழந்தவனானான்? பெருங்கேடு.. பெருங்கேடு..‘’
“நான் அரசேற்றதும், வருணகுலத்தான் படையையும், தஞ்சை படையையும் இணைத்து மன்னாரை மீட்பதற்கு பெரும் படை தயார் செய்தேன். அவர்களுக்கு கொடுக்கும் திறையை உடனடியாக நிறத்தினேன். கடும்போர் புரிந்தோம். ஒலிவேரா என்பான் 5000 படையுடன் வந்திருந்தான். எங்கள் வேல்களை விட அவர்களின் நவீன கருவிகள் பலமானவையாக இருந்தன. என்னை நம்பிவந்த படைகளை தன்னிடம் ஒப்படைத்தால் என்னை ஆழவிடுவதாக ஆசை காட்டினான் ஒலிவேரா. தற்காப்பிற்காக தஞ்சைக்கு பின்வாங்க முடிவெடுத்தேன். அப்போது கடல் கொந்தளித்ததால் கடலில் போர்த்துக்கேயரிடம் சிறைபட்டேன்.”
‘’ஓ என் மன்னனே நீ வீரன்! நல்லூரின் வீரம் நீ! என்று மருண்டுநின்றார் இளம் சிங்கம். காலில் கட்டப்பட்ட உலோகக்கயிறு அவர்களை மௌனமாக்கியது.
திடீரென எழுந்த மன்னர் சங்கிலி தன் இடுப்பில் மடிக்கப்பட்ட ஒரு பொருளை ரகசியமாக எடுத்தார். இளம்சிங்க பண்டாரம் வியப்போடு பார்த்தார்.
“தந்தையே இது என் நல்லூர் மண். வாழை இலையால் இறுக மடித்து என் மீதும், என் மண் மீதும் பற்றுக்கொண்ட இளம் வீரன் நான் புறப்பட்டபோது இதை தந்தான். இதை நீங்கள் வைத்திருங்கள்”
‘’தங்களிடம் இருப்பதே மண்ணுக்கு சிறப்பு’’
“இல்லை, வருகிற தைத்திங்கள் இரண்டாம் நாள் என்னை தூக்கிடப்போகிறார்கள். என்னை சிலுவை மதத்துக்கு மாறினால் தூக்கிட்ட பின்னர் நடுகல் வைப்பார்களாம். அதை மறுத்துவிட்டேன். அந்நியர் முற்றத்தில் எனக்கென்ன நடுகல்? அவர்கள் என்னை எரிக்கட்டும். நான் காற்றாக சுதந்திரத்தீயாய் நல்லூருக்குச் செல்வேன்.”
இளஞ்சிங்க பண்டாரத்தின் கண்கள் பணயக்கைதியாகிய 60 ஆண்டுகளில் முதல் முதல் கண்ணீரை உற்பத்தி செய்தது. பாலைவன பகல் நீர் போல அது கொதித்து மன்னரின் தோள்ப்பட்டையில் விழுந்தது.
அப்போது சூரியன் எழுந்துவிட்டதை அதிகாலை பறவைகள் அறிவித்தன. டொன் பிரான்சுவா ‘’விடியப் போகிறது வாருங்கள் வாருங்கள்’’ என்று பீதியோடு அவர்களை பிரித்துச்சென்றான்.
**
1622 தைத் திங்கள் இரண்டாம் நாள் மன்னன் இரண்டாம் சங்கிலி தூக்கிடப்பட்ட செய்தி இளஞ்சிங்கத்தை சிதைத்துக்கொண்டிருந்தது.
சில நாட்களில், தூக்கத்தில் இருந்து மதியமாகியும் இளஞ்சிங்க பண்டாரம் எழும்பவில்லை. டொன்பிரான்சுவா அழைத்தபோது குரல் இல்லை. அருகே சென்றபோது மூச்சுப்பயிற்சி செய்வதுபோல கல் இருக்கையில் சாய்ந்திருந்தார். வெளியேறிய மூச்சை உள்ளிழுக்க அவர் மறந்துவிட்டார். வலதுகரம் மடித்து இடது நெஞ்சில் இறுகிப்போய்இருந்தது. அந்த விரல்கள் வாழை இலையால் சுற்றப்பட்ட நல்லூர் மண்ணை இறுகப் பற்றி இருந்தது.