கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்

கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும்

    — கருணாகரன் — 

“அம்பாறை மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கு கருணாவை வெற்றியடைய வைத்திருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, அம்பாறை பறிபோகிறது என்று அழுவதால் பயனில்லை. இது மாதிரித்தான் திருகோணமலையில் சம்மந்தன் வெல்லும் வரை அதைக் காப்பாற்றவே முடியாது” என்றார் நண்பர் ஒருவர். 

“இது அரசாங்கத்துக்குச் சார்பான ஒருவரின் கருத்து” என்ற எண்ணமே தமிழிரிற் பலருக்கு உடனடியாகவே ஏற்படும். அவர்கள் அப்படியான சிந்தனை முறைக்கூடாகவே பயிற்றப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் இந்தக் கருத்தையும் இதிலுள்ள நோக்கையும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முற்றாக மறுதலிப்பர். அந்த அடிப்படையிலேயே தமிழ் வாக்காளர்கள் சிந்திக்கின்றனர். தமிழ்ப் பெருந்திரளின் அரசியல் தெரிவுகள் அமைகின்றன. இது ஒரு கேள்வியற்ற மரபாகி விட்டது. மாற்றுச் சிந்தனை, மாற்று நோக்கு என்பதற்கு இடமேயில்லை.  

எத்தனை ஆண்டுகளான தோல்வி என்றாலும் அதிலே பரிசீலனையோ மறுபார்வையோ விமர்சனமோ கிடையாது. 

இதற்குக் காரணம், அரசியல் என்பது ஒரு செயல்முறை. அது ஒரு அறிவியல். அது ஒரு தந்திரோபாய நடவடிக்கை. அது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறை. அது எதிர்த்தரப்பை முறியடிப்பதற்பான பொறிமுறை. தோல்விகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்தும் மீண்டெழுவதற்கான படிக்கல். அல்லது உயர் வாய்ப்பு. அது படிப்பினைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டிய ஒன்று என்ற எண்ணமோ விளக்கமோ பெருந்திரள் தமிழ்ச்சமூகத்திடமில்லை. மட்டுமல்ல தமிழ்ப் புத்திஜீவிகளும் பத்தாம் பசலித்தனமாகவே பழைய ட்ராக்கில் பத்திரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஓடினால் இந்தப் போட்டியுலகில், இந்தச் சுழிப்புகள் நிறைந்த உலகில் எப்படித்தான் வெற்றியடைய முடியும்?எப்படித் தாக்குப் பிடித்து நிற்க இயலும்? 

நம்முடைய நண்பரின் நோக்கு நிலை சற்று வித்தியாசமானது. அவருடைய நோக்கின்படி ஒரே நேரத்தில் பல கண்ணிகளை வைப்பதாக கருணாவின் தெரிவு இருந்திருக்கும் என்பது உண்மையே. ஒன்று கருணாவை தெரிவு செய்திருந்தால் அம்பாறை என்ற தமிழர் பிரதேசத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு –கடப்பாடு கருணாவுக்கு ஏற்பட்டிருக்கும். இதற்காக கருணா சில தந்திரோபாயங்களை வகுத்திருப்பார். அது அரசாங்கத்தை ஏதோ வகையில் கருணா வசப்படுத்துவதாக இருந்திருக்கும். இதன் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை கருணா ஏதோ வகையில் இடையீடு செய்திருப்பார். இதனால் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பர். தமிழர்களுக்கு அபிவிருத்தி உள்ளிட்ட பல நன்மைகளும் ஏற்பட்டிருக்கும். இதில் சாத்தியப்பாடுகளே அதிகமுண்டு. ஏனென்றால் கருணாவை வைத்தே முஸ்லிம்களை அரசாங்கம் கையாள முற்பட்டிருக்கும். இதனால் அங்கே முஸ்லிம்களின் அரசியலிலும் வேறொரு விதமான நொதிப்பு ஏற்பட்டிருக்கும். அதாவது அம்பாறையின் அரசியல் விறுவிறுப்பும் உச்ச விழிப்பு நிலைக்குமாக மாறியிருக்கும். 

இரண்டு, இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்காமல் கருணாவை பலவீனப்படுத்தும் வகையில் –கருணாவுக்கு மாறாகச் செயற்பட்டிருந்தால் அதனால் கருணாவுக்கும் அரசாங்கத்தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கும். அதுவும் ஒரு வகையிலான நல் அரசியல் விளைவொன்றை உருவாக்கியிருக்கும். அப்போதும் முஸ்லிம்களின் அரசியலில் இன்னொரு விதமான ரச மட்டம் உயர்ந்திருக்கும். 

மூன்றாவது, கருணா அம்பாறையில் வெற்றியடைந்திருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய அரசியற் தரப்பினருக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அவர்கள் வெறும் வாய்ப்பேச்சு அரசியலைக் கைவிட்டு செயற்பாட்டு அரசியலை நோக்கி நகர வேண்டிய நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும். கருணாவின் வெற்றியும் சம்மந்தனின் தோல்வியும் இதை நிச்சயமாக உண்டாக்கியிருக்கும். 

நான்காவது, கருணாவின் வெற்றியானது நிச்சயமாக முஸ்லிம்களுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கும். ஆகவே அவர்கள் தமது அரசியலைச் சிறதறலாக மேற்கொள்ளாமல் –பலவீனமான நிலையில் மேற்கொள்ளாமல் – பலமான முறையில் வலுவான தரப்பாக மாறுவதைப் பற்றிச் சிந்தித்திருப்பர். இது முஸ்லிம்களுக்கு அங்கே ஒரு பாதுகாப்பை எதிர்காலத்தில் உயர்ந்த பட்சம் உருவாக்கக் கூடியதாக இருந்திருக்கும். 

ஐந்தாவது, எல்லாவற்றுக்கும் அப்பால் கருணாவின் வெற்றியானது அரசாங்கத்துக்கு கூடிய நெருக்கடியையும் சிந்தனைச் சுமையையும் வழங்கியிருக்கும். 

இதெல்லாம் தமிழ் மக்களுக்கு கணிசமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கும். கூடவே அரசியலில் பல நொதிப்புகளையும் உண்டாக்கியிருக்கும். இப்போது இவை எதுவுமே நிகழாது உறைநிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கே தெரிவு செய்யப்பட்ட கலையரசன் வெறும் பொம்மையாகவே உள்ளார். அவரால் எதிர்காலத்துக்கான ஒரு புதிய பாதையைக் கூடத் திறக்க முடியாது. ஏன் ஒரு காலடியைக் கூட வைக்க முடியாது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் அங்குள்ள தமிழர்களையே முழுதாகப் பாதிக்கிறது. அரசாங்கத்துக்கு மிக வாய்பான ஒருத்தர் கிடைத்துள்ளார். ஆதரவாகவோ எதிர்த்தோ எந்த விளைவுகளையும் உண்டாக்கக் கூடிய வல்லமை கலையரசனிடம் இல்லை. 

இப்படித்தான் திருகோணமலையில் சம்மந்தன்  தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படும் வரையில் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவ நெருக்கடிகளையோ குடிப்பரம்பல் பிரச்சினைகளையோ தீர்க்க முடியாது. ஏனெனில் சம்மந்தனுடைய அரசியல் வழிமுறையிலும் தலைமைத்துவத்திலும் அவர் ஒரு போதுமே எத்தகைய செயற்பாட்டு விதிகளையும் விளைவுகளையும் உருவாக்கியவரல்ல. திருகோணமலையின் அரசியல் பிரதிநிதியாக அவர் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக நீடித்திருக்கிறார். இதுவரையான காலத்தில் திருகோணமலைக்கு அவர் இனத்துவ ரீதியிலும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றிலும் செய்திருக்கும் பங்களிப்புகள் என்ன? அதாவது எதிர்காலத்தில் சம்மந்தனை நினைவு கொள்ளக் கூடிய அளவுக்கு அவர் ஆற்றிய பணியும் பங்களிப்புகளும் என்ன? 

தொடர்ந்தும் இதேபோல திருகோணமலை வாழ் தமிழர்கள் சம்மந்தனையோ அவரைப்போன்ற வேறு ஒருவரையோ தெரிவு செய்தால் தமிழர்களின் நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிரத் தீராது, ஒழியாது. 

ஏனெனில் இவர்கள் பிரச்சினைகளை உற்பத்தி செய்யும் அரசியல் வழிமுறையைச் சேர்ந்தவர்கள். அதில் எத்தகைய இடையீட்டையும் செய்வதற்கு வழியும் வக்குமற்றவர்கள். 

இது ஒன்றும் எழுந்தமானமான குற்றச்சாட்டல்ல. வரலாற்று ஆதாரங்களை மையப்படுத்திய குற்றச்சாட்டும் உண்மை உரைத்தலுமாகும். இதை மறுத்துரைப்போர் அதற்கான ஆதரங்களோடு அறிவு பூர்வமாக உரையாட முன்வரலாம். அப்படி அவர்கள் முன்வர வேண்டும். அது கடப்பாடாகும். அது அறிவியல் ஒழுக்கத்துக்கு அழகும் கூட. 

கிழக்கின் தமிழர் நிலை மற்றும் தமிழர் அரசியல் தமிழர்களின் பாதுகாப்பு என்ற பல அம்சங்களைக் குறித்து இதையும் விட ஆழமாகப் பல கோணங்களில் விவாதிக்கவும் உரையாடல்களைச் செய்யவும் வேண்டும். இலங்கையின் பிற பிரதேசங்களையும் விட கிழக்கு வேறான சமூக நிலைகளையும் நிலைமைகளையும் வரலாற்றுப் பின்புலங்களையும் கொண்டது. அதை வடக்குடன் ஒப்பிட முடியாது. வடக்கின் கண் கொணடு பார்க்கவும் முடியாது. அதன் யதார்த்தமே வேறு. அதற்குரிய யதார்த்தத்தின் வழியேதான் சிந்திக்க வேண்டும். அதுவே சரியானது. அதில் ஒன்றுதான் நம் நண்பரின் நோக்கும். இதில் மட்டக்களப்பில் பிள்ளையானின் பாத்திரத்தையும் சமகாலத்தில் இணைத்து நோக்குவது அவசியம். அது பல பாடங்களுக்கும் அவதானங்களுக்கும் உதவும்.