— கருணாகரன் —
பெருந்திரள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அரசியலுக்கும், நடைமுறை யதார்த்தத்துக்குமிடையில் உள்ள இடைவெளி வரவரப் பெருத்துக் கொண்டே போகிறது. இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க நடைமுறைத் தோல்விகள் கூடிக் கொண்டே போகும். இது இயல்பு. இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. ஒரு பக்கத்தில் அது சர்வதேச சமூகத்தை – குறிப்பாக மேற்குலகத்தையும் அதன் நீதியுணர்வையும் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு சாரார் இந்தியாவையும் இந்த நம்பிக்கையில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சாரார், இந்தியாதான் இன்னும் இந்தப் பிரச்சினையின் வகிபாகமாக உள்ளதென்று நம்புகிறார்கள். மறுபக்கத்தில் இவர்களே அரசியல் என்பது நலன்களின் அடிப்படையில் நீதிக்கு அப்பால் நிகழ்கிறது என்றும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இதைப்போல இவர்களே இந்தியாவை முழுதாக நம்ப முடியாது எனவும் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே அக முரணியக்கத்தில் இவர்கள் சிக்கித் தவிப்பது ஏன்?
இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் செல்வாக்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தமிழ்ப் பெருந்திரளுடைய நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதைப்போலவே பிராந்திய சக்தி என்ற அடிப்படையில் இந்தியாவுக்கொரு வகிபங்குண்டு. ஆனால் அதில் இடையீட்டைச் செய்யுமளவுக்கு இன்று சீனாவின் உள்நுழைவும் வளர்ச்சியும் இலங்கைச் சூழலிலும் இந்தப் பிராந்திய நிலையிலும் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதிகம் ஏன், தற்போது அழுத்தப் பிரயோகத்துக்கு முற்படுத்தப்படும் போர்க்குற்ற விசாரணை அல்லது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சீனா மற்றும் அதனோடிணைந்த நாடுகளின் செல்வாக்கு எப்படித் தடையாயிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம் அல்லவா. இதைப் புரிந்து கொள்ளாமல் எப்படி சர்வதேசக் கணக்கைப் பார்க்க முடியும்?
தமிழ்ப் பெருந்திரளிடம் சில அடிப்படைக் குறைபாடுகள் அல்லது பலவீனங்களுண்டு. அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, அதீதமாக ஒன்றை நம்புவது, அதேயளவுக்கு ஒன்றைக் கடுமையாக அல்லது முழுமையாக எதிர்ப்பது, ஜனநாயகத்திலும் முற்போக்கிலும் நம்பிக்கையற்றிருப்பது அல்லது அதற்கு எதிராக இயங்குவது, கற்பனாவாதத்தில் திளைப்பது, உலக நடைமுறைகளுக்கு வெளியே நிற்பது அல்லது அதை நெருங்குவதற்குத் தயங்குவது, தன்மோகத்தில் திளைத்திருப்பது, தனக்கு சார்பாகவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என இது நீளும்.
இவையெல்லாம் விடுதலைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கும் பொருந்தாதவை. அநேகமாகச் சிறுபிள்ளைத் தனமானவை. இதில் பலவற்றை கடந்த கால அனுபவங்களின் வழியாக தமிழ்ச்சமூகம் கடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. அதுவே முதிர்ச்சி, பக்குவமாகும். குறிப்பாக இந்தியாவின் செல்வாக்கும் அக்கறையும் எவ்வளவுக்கு என்பதும் போர் நடந்த போது அந்தப் போருக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் போர்க்குற்றங்களின் போது சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகளும் எப்படி இருந்தன. இப்பொழுது கூட தமது நலனுக்காகவா எமது நலனுக்காகவா அவை முயற்சிக்கின்றன என்பதையும் பார்க்க வேணும்.
ஐந்தறிவு ஜீவன்களான விலங்குகள் கூடப் பட்டறிவின்படியே நடக்கும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பதை இங்கே நினைவு கொள்ளலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டும் இந்த உயிரியல் விதிக்கு பொருந்தாத ஜந்தாக உள்ளது. இதனால்தான் அது மிக நீண்ட போராட்டத்தை மிகப் பெரிய தியாகங்களின் வழியே செய்தும் வெற்றியடைய முடியாமல் தோல்வியின் படிக்கட்டில் குந்திக் கொண்டிருக்கிறது.
இதைப் பற்றி தொடர்ந்து நான் உட்படச் சிலர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறோம். ஆனால் இதைப் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ யாரும் தயாரில்லை. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. காரணம், இதில் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல தமிழ்ப் பெருந்திரளானது அதிகமதிகம் உணர்ச்சி வசப்பட்டு, அதீத கற்பனையில் மிதப்பதால், யதார்த்தத்துக்குப் புறம்பாகச் சிந்திப்பதால் அது இப்படித்தான் செய்யும். எந்த உண்மையையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. பதிலாக கற்பனையில் திளைக்கவே விரும்பும்.
தமிழ்ப் பத்திரிகைகளிலும் தமிழ் இணைய வெளியிலும் தினமும் கொட்டப்படும் செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகளைப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியும். பெருந்திரள் தமிழ் அரசியலாளர்களும் திரும்பத்திரும்ப ஒன்றையே வாந்தியாகக் கொட்டுகின்றனர். இதனால்தான் இதை –இந்த அரசியல் உணர்ச்சியை (அறிவை அல்ல) சுய இன்பத்தின்பாற்பட்டது என்கிறோம். சுய இன்பத்தை அனுபவிக்கும்போது வேறு எதுவும் புலப்படாது. அது மட்டுமே ருசிக்கும். அதுவே அற்புதமாக இருக்கும். இதில் அதிகமதிகம் திளைப்பது தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ் மேட்டிமையினருமே. அவர்கள் அதை கீழடுக்குகளுக்கும் மிக லாவகமாகப் பரப்பி விடுகின்றனர். அதற்கு இவர்கள் பயன்படுத்துவது தமிழ் இனம், தமிழ் மொழி என்ற அடையாளங்களையும் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையுமாகும். இவை இரண்டும் இவர்களுக்கு வாய்பாக இருக்கின்றன. இவை இரண்டும் சரிசமமாக வேலை செய்கின்றன. இதைப் புரிந்து கொள்வோர் இதைக் கடந்து செல்லவே முயற்சிப்பர். புரியாதோர் இதற்குள் சிக்குண்டு அமிழ்ந்து விடுவர். இதுவே நடக்கிறது.
ஆகவே தமிழ்ப் பெருந்திரள் தன்னைத்தானே சிறை வைத்துள்ளது. அது பெருந்திரளாக இருப்பதால் விலகலாகச் சிந்திப்போரும் தவிர்க்க முடியாமல் இந்தச் சிறைக்குள் சிக்க வேண்டியிருக்கிறது. ஆட்டுக்கு உள்ளதுதான் குட்டிக்கும் என்பதைப்போல. ஊரோடு ஒத்தது என்பதைப்போல. சிறிய திரளினரால் சரியாகச் சிந்தித்தாலும் தேர்தல் அரசியலில், அது உருவாக்கியிருக்கும் அரசியல் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியாது. ஆனால் அவர்கள் சொல்வதும் வலியுறுத்துவதுமே பின்னர் நடைமுறையாகிறது. என்னவொன்று,அது காலம் பிந்தியதாக – காலம் கடந்ததாக அமைந்து விடும். எளிய உதாரணம், இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலமான மாகாணசபை முறைமை என்பது ஒரு நல்ல தொடக்கம் என்பதை தமிழ்ப்பெருந்திரள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகே அதை ஏற்றுக் கொண்டு அதில் போட்டியிடுவதற்குத் தமிழ்ப் பெருந்திரள் வந்தது. இதைப்போல ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணத் தயார் என்று சொல்லும் நிலைக்கும் அது பல இழப்புகள், பல பின்னடைவுகள், பல ஆண்டுகாலத் தாமதத்திற்குப் பின்னரே வந்திருக்கிறது.
எனவே இப்போது நாம் வலியுறுத்துகின்ற – பேசுகின்ற எந்த விடயங்களைப் பற்றியும் கவனிக்காமல், இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கும் இந்தப் பெருந்திரள் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பின் வேறு வழியின்றிக் கதியின்றி வந்து சரணாகதியில் நிற்கும். அதுவரையிலும் அதனுடைய முட்டாள்தனமாக அலைச்சல்களில் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் சேர்ந்திழுபட வேண்டியதுதான். இதை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம். 1987க்குப் பின்னரான அரசியலில் (யுத்தத்தில்) இழப்புகளைத் தவிர அரசியல் ரீதியாக எதையும் பெற முடியாததைப்போலவே தற்போதைய கால வீணடிப்பும் நிகழப்போகிறது.
அப்படியென்றால் இதுவரையிலும் நடந்த நீதி மறுப்புகளுக்கும் இழப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் பதிலென்ன? சர்வதேச சமூகம் இலங்கைக்கு (அரசுக்கு) அழுத்தம் கொடுக்க முற்படும்போது அதை நாம் விட்டு விடலாமா? இலங்கை அரசை அல்லது சிங்கள ஆட்சியாளரை எப்படி நம்புவது? எந்த அடிப்படையில் நாம் மாற்று அரசியலை – அரசுடனான அரசியலை மேற்கொள்வது என்ற மாதிரியான கேள்விகள் உங்களுக்குள் எழும்.
நிச்சயமாக இலங்கையில் மேற்கொள்ளப்படுவது இனவாத ஒடுக்குறையே. அதில் அது பழுத்த அனுபங்களையும் பயிற்சியையும் மிகத் திறமையான நுட்பங்களையும் பெற்றிருக்கிறது. அதனால்தான் அது தமிழ்ப் பேசும் சமூகங்களை ஒன்றிணைய விடாமல் பிரித்து வைத்திருக்கிறது. மலையகத் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ்மக்கள் என. அடுத்த அடுக்கில் வடக்கும் கிழக்கும் தனித்தனி என்ற விதமாக. அடுத்த அடுக்கில் தமிழ்த் தரப்பிலேயே அரச ஆதரவுத் தரப்பு – அரச எதிர் தரப்பு என. அடுத்த அடுக்கில் அரச எதிர்த் தரப்புகளுக்குள்ளேயே பல குழுக்களாகவும் பல கட்சிகளாகவும். அடுத்த அடுக்கில் அரச ஆதரவுத் தரப்புகளையும் தனித்தனியாக – பல குழுக்களாக. இதைத் தவிர, தீர்வு யோசனைகள், அரசியலமைப்பு விடயங்கள் போன்றவற்றையும் அது பொருட்படுத்தாமல் தந்திரோபாயமாக இழுத்தடித்து வருகிறது. இப்படி ஆயிரம் நுட்பங்களோடும் தந்திரங்களோடும் அது இனவாதத்தை மேற்கொள்கிறது.
இதை முறியடிக்கக் கூடிய வினைத்திறனும் நுட்ப அறிவும் இராஜ தந்திரமும் தமிழ்ப் பெருந்திரளுக்கு வேண்டும். அதற்கான பொறிமுறைகள் வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும். அதை நோக்கி நகர வேண்டும். அத்தனையும் செய்முறைப் பயனுடையதாக இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பாக்கமும் செயலூக்கமும் வேண்டும். உழைப்பும் அர்ப்பணிப்பும் வேண்டும். இப்படிப் பல. இதொன்றும் இல்லாத வெற்றுக் கூச்சலையே தமிழ்ப்பெருந்திரள் இப்போது கொண்டுள்ளது. அதை அது அரச எதிர்ப்பு வாதப் பூச்சில் வைத்துச் செய்கிறது. இது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் படுகுழியிலேயே விழுத்தும்.