வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்

வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும்

     — வேதநாயகம் தபேந்திரன் — 

வடக்கு மாகாணத்தின் விரைவான அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணத்திற்கும், மேல் மாகாணம் கொழும்புக்கும் இரண்டு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி, வெருகல், வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு வரையான பெருந்தெரு போர் நிறைவு பெற்றதும் உருவாக்கப்பட்ட பெருந்தெரு. 

யாழ்ப்பாணத்திலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று மணலாறு (வெலிஓயா) பிரதேசம் ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதையொன்று தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தப் பாதை தூரம் கூடியது. 

அதற்கு மாற்றாகத் தூரம் குறைந்த பாதையாக முல்லைத்தீவு, சிலாவத்தை, உடுப்புக்குளம், அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், புல்மோட்டை, நிலாவெளி ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதை உள்ளது. 

கொக்கிளாய்ப் பாலம் அமைக்கப்பட்டு, அந்தக் கரையோரப் பாதை தார்ப்படுக்கை பாதையாகத் (காப்பெற் பாதை) திருத்தப்படுமாயின் திருகோணமலைக்கான பயணத் தூரம் 40 கிலோ மீற்றரால் குறைக்கப்படும். 

பயண நேரமும் ஒரு மணித்தியாலம் குறையும். வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு எல்லையாகத் திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆகவே முல்லைத்தீவு ஊடான குறுகிய பாதையைப் புனரமைப்புச் செய்வதற்கு அரசியல், நிர்வாகத் தரப்பிலுள்ள உயர்பீடங்கள் உரிய முயற்சியை எடுக்கவேண்டும். 

இதன் மூலமாக மீன்பிடி, விவசாயத்துறைகளில் பெரிதும் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டமும், திருகோணமலை மாவட்டமும் அபிவிருத்தியை நோக்கி மேலும் முன்னேற முடியும்.  

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்புக்கான குறுகிய பாதையாக இந்தப் பாதை அமைவதன் மூலமாக இந்த இரு மாகாணங்களுக்குள்ளும் சனத்தொகை நகர்வுகள் அதிகரிக்க சேவைத் துறைகளும் வளரும். 

வடக்கு மாகாணத்திலிருந்து வடமேல் மாகாணம் ஊடாக மேல் மாகாணம் கொழும்பு செல்வதற்காக இன்னொரு குறுகிய தூரப் பாதையும் உள்ளது. 

மன்னார் முருங்கனிலிருந்து, சிலாபத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, இலவங்குளம் ஊடாக புத்தளம் நகர் வரையான பாதையே அது. 

இப் பாதையைப் புனர் நிர்மாணம் செய்வதன் மூலமாக வடக்கிற்கும் மேல் மாகாணம் கொழும்புக்கும் இடையே குறுகிய தூரப் பயணமொன்று சாத்தியமாகும். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், அது போல வெளி மாவட்டங்களிலிருந்தும் நாளாந்தம் சில ஆயிரம் பேர் பயணம் செய்துவருகின்றனர். 

சனத்தொகை விகிதாசார அடிப்படையில் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் வந்து போகும் மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகி உள்ளது.  

ஆகவே யாழ்ப்பாணத்திற்கும் மேல் மாகாணத்திற்குமான குறுகிய தூரப்பாதையொன்று அமைக்கப்படுதல் பொருளாதார, பண்பாட்டு நலன் சார்ந்த ஒன்றாகும்.  

வழமையாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு எனப் பயண மார்க்கம் அமைந்து கொள்ளும். 

இது ஏறத்தாழ 400 கிலோ மீற்றர் தூரப்பயணம். 

ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி, முருங்கன் ஊடாக சிலாபத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, இலவங்குளம் ஊடாக புத்தளம் நகர்வரை பயணம் செய்து கொழும்பைச் சென்றடையும்போது 300 கிலோ மீற்றர் பயணம் செய்து கொழும்பை அடையலாம்.  

அதாவது பயணத் தூரம் 100 கிலோமீற்றரால் குறையும். அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததாக சனநெருக்கடி மிக்க நகராக புத்தளம் நகரே இருந்து கொள்ளும்.  

இதனால் வீதிப் போக்குவரத்து நெருக்கடிகளைப் பெருமளவில் சந்திக்காமல் வடக்கிலிருந்து மேற்கு மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யலாம். 

அதிகாலையில் யாழ்ப்பாணம் அல்லது கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒருவர் அல்லது ஒரு வாகனம் ஒரே நாளில் போய் வந்து தமது கருமத்தை ஆற்ற முடியும். 

இரவு தங்கும் தேவையில்லாமல் பயணத்தை மேற்கொள்ளும் நிலை வந்தால் அதிகமானோர் பயணத்தை மேற்கொள்ள முன்வருவார்கள். 

அதிகமான சனத்தொகை நகர நகர நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். 

மன்னார் முருங்கனில் இருந்து புத்தளம் செல்லும் இந்தப் பாதையில் வில்பத்து சரணாலயம் உள்ளது.  

பறவைகள், மிருகங்களுக்கு இடையூறு ஏற்பட்டு இயற்கைச் சமநிலை குழம்பும் என்ற ஒரு காரணத்தால் தான் இந்தப் பாதை பெருந்தெருவாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் காரணமொன்று சூழலியலாளர்களால் கூறப்படுகின்றது. 

ஆனால் மன்னார் நகரிலிருந்தும், புத்தளம் நகரிலிருந்தும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தப் பாதையின் இரு மருங்குமுள்ள 5000 ஏக்கர் வனப் பகுதியை முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமாக அழித்து முஸ்லீம் மக்களைக் குடியேற்ற முற்பட்டதான செய்தி ஒன்றும் உள்ளது. 

வில்பத்து சரணாலயத்தின் சூழலைச் சீர்குலைக்காதவாறு இந்தப் பாதையை தரமான ஒரு பெருந்தெருவாக அபிவிருத்தி செய்ய வேண்டும். 

மேல் மாகாணம் மட்டுமே நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை வழங்குகின்றது. ஏனைய மாகாணங்கள் அந்தளவுக்கு முன்னேறவில்லையென மத்தியவங்கி அறிக்கைகள் மூலமாக அறிய முடிகிறது. 

ஆகவே மேல் மாகாணத்தில் குவிந்துள்ள சனத்தொகையை, சேவைத் துறைகளை ஏனைய மாகாணங்களை நோக்கி நகரவைப்பதன் மூலமாக நாட்டின் அனைத்து மாகாணங்களது வளர்ச்சியையும் துரிதப்படுத்தலாம்.  

வீதி விபத்துகள் குறைவதுடன் நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்தியும் ஏற்பட்டுக்கொள்ளும். 

அதி விரைவுப் பெருந்தெருக்களே அதனை நிறைவு செய்யும். இது போன்ற தூரம் குறைந்த பாதைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் இருக்கும். அவையும் கண்டறியப்படல் வேண்டும்.  

அவை யாவும் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்.