மாகாணசபை குறித்த பொறுப்புணர்வின்றி தேர்தலுக்கு தயாராகும் தரப்புகள்

மாகாணசபை குறித்த பொறுப்புணர்வின்றி தேர்தலுக்கு தயாராகும் தரப்புகள்

   — கருணாகரன் — 

மறுபடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பற்றிப் பேசப்படுகிறது. தேர்தல்களையும் அதன் வழியாக அதிகாரத்தையும் குறிவைத்திருப்போருக்கு எப்போதும் இந்தச் சிந்தனையே இருக்கும். இதனால்தான் இவர்கள் முதலமைச்சர் வேட்பாளர்களைப் பற்றியும் சேர்த்துச் சிந்திக்கிறார்கள். யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என. சனங்களுக்கும் இது ஒரு கொஞ்ச நாட்களுக்குப் பொழுதுபோகும் நல்லதொரு வேடிக்கை. ஊடகங்கள் மற்றும் அதையொட்டிய அரசியல் ஆருடர்களுக்கும் இது நல்ல சரக்கு. சில வாரங்களுக்கு வியாபாரமாக்கலாம். 

மற்றும்படி மக்களுக்கான விசயமாக இதை இவர்கள் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கின்ற பக்குவமும் இவர்களிடமில்லை. அரசுக்கு எதிர்ப்பையும் அதிருப்தியையும் காட்டுவதற்கே மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் இந்த அரச வெறுப்புணர்வை தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அரசியற் சோதிடர்களும் நல்லமாதிரிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வழமையாக இதுதான் நடக்கிறது. இப்போதும் இதுதான் நடக்கிறது. இனியும் இதுதான் நடக்கும். 

இந்த இடத்தில் நீங்கள் சில கேள்விகளை எழுப்புவீர்கள் – “அரசின் மீது தமிழ் மக்களுக்கு ஏன் வெறுப்பு? ஏன் அவர்கள் அரசின் மீது தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட விரும்புகிறார்கள்? அரசு அப்படி தமிழ்மக்களின் மீது வெறுப்பாகவும் பாரபட்சமாகவும் நடப்பதால்தானே!” என. 

இது உண்மையே. இதேவேளை இதனால்தான் இதை வைத்து மேற்படி தரப்புகள் பிழைக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

அரசு பாரபட்சமாக நடத்துகிறது, ஒடுக்குகிறது என்றால் அதை எப்படி முறியடிப்பது என்றே இவை சிந்திக்க வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். அவற்றைச் செயற்படுத்த வேண்டும். அதில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கடந்து – அதை எதிர்கொண்டு பயணிக்க வேண்டும். அல்லது அரசினாலும் அரசுக்கு ஆதரவான தரப்புகளாலும் ஏற்படுத்தப்படுகின்ற நெருக்கடிகளை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். இதற்கு மக்களுடனான அரசியல் உறவு அவசியம். அதிருந்தால் அது மக்கள் போராட்டமாக மாறும். இந்த மாதிரித் தேர்தல் விளையாட்டுகளோடு மட்டும் இது நிற்காது. 

தேர்தலில் அதிகமாக ஒன்றும் கஸ்ரப்பட வேண்டியதில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வேலை செய்தால் போதும். வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம். இதிலும் பாதி வேலையை அரசாங்கம் செய்து கொடுத்துவிடும் – தன்னுடைய இனவிரோத நடவடிக்கையினால். தேர்தல் காலத்தில் இதை அது இன்னும் அதிகமாகவும் நுட்பமாகவும் செய்யும். ஏனென்றால் அதற்கும் இனவாத அலையும் தமிழ்த் தரப்பின் எதிர்ப்பும் எழுச்சியும் வேணும். அப்போதுதான் சிங்கள மக்களின் வாக்குகளை அதிகமாகக் கவரலாம். 

இந்த மாதிரி இணைந்த பொறிமுறையில் (உனக்கு நான் – எனக்கு நீ என்ற விதமாக) தேர்தல் என்பது இனிப்பான ஒன்றே. அதனால்தான் தேர்தலைக் குறித்து இவர்களுக்கு கரிசனை அதிகம். அதில் வரும்படிகளும் வாய்ப்புகளும் அதிகம். இதனால் அது ஒரு தொழில்துறையாக மற்றும்படி அது மக்களுக்கானதொரு நல்வாய்ப்பு. மக்களதிகாரத்துக்கான ஏற்பாடு. ஜனநாயக உரிமையை மக்கள் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்கான அடிப்படை என்ற நோக்கில் – உயர்ந்த எண்ணத்தினால் அல்ல. 

ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தல் என்பது மக்களுக்கான தேவை, மக்கள் நலன் என்பதற்காக இல்லாமல் இந்தத் தரப்புகளின் தேவைகளுக்கானது என்பது தெளிவு. இதை மேலும் உறுதிப்படுத்த வேண்டுமானால், மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பற்றி – அது மக்களுடைய ஜனநாயக உரிமை என்ற நோக்கில் இதை இவர்கள் நோக்கினால், அதனுடைய அதிகாரத்தைப் பற்றியும் ஒழுங்கைப் பற்றியும் அக்கறைப்படுவர். முக்கியமாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை, அதற்கான பொறிமுறையை, அரசியல் அழுத்தத்தை, அதற்கான ராஜதந்திரத்தைப் பற்றிச் சிந்தித்திருப்பர். இப்பொழுதுகூட அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெறுமனே அரசாங்கத்தைக் கண்டிப்பது, திட்டித்தீர்ப்பது என்ற அளவில்தான் இவர்களுடைய நடவடிக்கைகள் உள்ளன. ஒழுங்கைப் பொறுத்தும் இதுதான் நிலமை. 

மாகாண சபை நிர்வாகம் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தபோது அதனுடைய ஆட்சித் திறனும் ஒழுங்கும் சீர் கெட்டிருந்தது. முதலமைச்சர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம், அவர் மீதான எதிர்ப்பு, அமைச்சர்களின் ஊழல்  குற்றச்சாட்டு, அமைச்சர்கள் பதவி நீக்கம், மாகாண நிர்வாகத்தின் வினைத்திறனின்மை, புத்தாக்கம் குறித்த அக்கறையின்மை என ஏராளம் சீரழிவுகள் அந்த நாட்களில் நீண்டிருந்தன. இதற்காக முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரனும் வெட்கப்படவில்லை. அவரை ஆதரித்தோரும் வெட்கமடையவில்லை. கூட்டமைப்பும் அதனுடைய ஆட்களும் அக்கால ஆட்சியில்பொறுப்பு வகித்தவர்களும் கூடக் கூச்சமடையவில்லை. அப்படி வராது. காரணம், இவர்கள் ஒருபோதும் மக்களுக்குப் பொறுப்புச் சொல்லும் பக்குவத்தோடும் பொறுப்புணர்வோடும் நடந்து கொண்டவர்களில்லையே! அப்படியானோருக்கே குற்றவுணர்ச்சியும் பொறுப்புச் சொல்லும் பக்குவமும் வரும். அரசியல் வாணிபர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. என்பதால்தான் மாகாண சபைத் தேர்தல் என்றவுடன் மறுபடியும் வாலை நிமிர்த்திக் கொண்டு முன்நிற்கிறார்கள். ருசி இவர்களை லேசில் விட்டுவிடாதல்லவா! 

வடக்கு மாகாணசபை விக்கினேஸ்வரனின் தலைமையில் இயங்கியபோது மேற்கொள்ளப்பட்ட மறக்க முடியாத – சிறந்த வேலைத்திட்டம் எதையாவது யாராவது இன்று சொல்லக் கூடியதாக உள்ளதா? அல்லது அப்போது எட்டப்பட்ட –உருவாக்கப்பட்ட அரசியல் அடைவுகள், பெறுபேறுகள் போன்றவற்றைச் சொல்ல முடியுமா? குறிப்பாக 38000 அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட வடக்கு மாகாணசபைக் கட்டமைப்பை ஒழுங்காக நிர்வகிக்க முடியாமல் அதைச் சீரழிவுக்குட்படுத்தியதே மாகாணசபைக் காலத்தில் நடந்தது.  

பதிலாக ஊழலும் சீரழிவுமாகவே அன்றைய நிர்வாகம் இருந்தது. இதனால் அப்பொழுது தினமும் ஏராளம் முறைப்பாடுகளும் ஏராளம் கோரிக்கைகளும் மக்களாலும் உத்தியோகத்தர்களாலும் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன. அதாவது மக்கள் தாம் தெரிவு செய்த பிரதிநிதிகளிடத்திலும் அந்தப் பிரதிநிதித்துவ சபையிலும் நம்பிக்கை இழந்து மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் நம்பிக்கை வைக்க வேண்டிய நிலை உருவானது. 

இப்படித்தான் கிழக்கு மாகாணசபையிலும் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் ஏராளம் தவறுகளை இழைத்தன.  

இது மக்களின் நம்பிக்கையையும் மாகாணசபையின் அதிகாரத்தையும் மத்தியின் கைகளில் ஒப்படைப்பதற்குச் சமம். அப்படி மத்தியின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதாயின் பிறகெதற்கு மாகாணசபையும் தேர்தலும்? 

இதனையும் ஒரு வாய்ப்பாகக் கொண்டே இப்பொழுது கோத்தபாய அரசு மாகாண சபை முறையை ஒழிப்பதைப் பற்றி யோசிக்கிறது. அல்லது மாகாணசபை முறையையும் 13 யும் ஒழிக்க முயற்சிக்கும் சிங்கள ஆதிக்கவாதிகளுக்கு நாமும் அனுசரணை வழங்கி விடுகிறோம். 

மாகாணசபை முறைமை உருவானதொன்றும் எளிய விசயமல்ல. பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகத்தினால் உருவான ஒன்று. காலத்தைச் சரியாகக் கணித்துக் கொண்ட சாதுரியத்தினால் பெற்றவெற்றி. அன்றைய அரசியற் சூழலில் அது ஒரு பெரிய அரசியல் வெற்றி. ஒரு பெரிய அரசியல் அறுவடை. ஆனாலும் அதையும் விட அதிகமாக அன்று பெரியதொரு அரசியல் தீர்வை தமிழர்களும் எதிர்பார்த்தனர். புலிகளும் எதிர்பார்த்தனர். 

கிடைத்த மாகாண சபை முறையை பலப்படுத்துவதே பெரிய சவாலாக இருந்தது. இன்றும் இது ஒரு பெரிய சவாலே. அப்படியிருக்கும்போது மிக மிக பொறுப்பாகவும் சாதுரியமாகவும் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். செய்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? 

மாகாணசபையை – 13 ஐ இப்போது வரை சிங்கள அதிகாரத் தரப்பினர் விரும்பவேயில்லை. இந்தியா கூட வடக்குக் கிழக்குக்கு என தனியாக மாகாணசபை முறையை உருவாக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. அதனால்தான் இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் அதிகாரம் என மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. இப்போதும் அனைத்து மாகாணங்களுக்குமான ஏற்பாடுகள் என்று ஒன்றோ பலவோ உருவாக்கப்பட்டால்தான் உண்டு. இல்லை என்றால் எதுவுமே இல்லை. 

இப்படிப் பலதுண்டு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தேர்தலைப் பற்றிச் சிந்திப்பதென்பது மக்கள் விரோதமானது. மகா முட்டாள்தனமானது. இவை இரண்டிலிருந்தும் மீள்வதே தமிழர்களுடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.